Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சிங்கள மக்களுடன் சேர்ந்து போராட நாங்கள் தயாராக இருக்கின்றோமா?

சிங்கள மக்களுடன் இணைந்து போராடுவதையும், அவர்கள் தமிழ் மக்களுக்காக போராட முற்படுவதையும், பலரும் தங்கள் தங்கள் நிலை அவர்களால் அங்கீகரிக்கப்படுதல் என்ற குறுகிய பார்வையூடாக அணுகுகின்றனர். நாங்கள் சரியாக தான் இருந்தோம், இருக்கின்றோம், அவர்கள் தான் தவறாக இருந்ததாக கருதிக்கொண்டு, காட்டிக்கொண்டு அணுக முற்படுகின்றனர்.

 

தமிழ்மக்களின் மேலான ஒடுக்குமுறையை சிங்கள புரட்சிகர பிரிவுகள் இனங்கண்டு போராட முனையும் அரசியல் உள்ளடக்கத்தில், தமிழ் தரப்பு தன்னை அரசியல்மயமாக்கிவிடவில்லை. இந்த உண்மையை நாங்கள் இனங்கண்டுகொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். இதை மாற்றியமைக்க, தங்கள் தங்கள் கடந்தகால அரசியலை மறுக்காமல் இந்த மாறுதல் நிகழமுடியாது. சிங்களப் புரட்சிகரக் கூறுகள் தங்கள் கடந்தகால அரசியல் வழிமுறைகளை மறுத்ததுடன், அதை சுயவிமர்சனம் செய்தபடி விமர்சனம் செய்ததன் மூலம் புரட்சிகர மாற்றம் நடந்தது. புதியதொரு புரட்சிகர அரசியல்வழி மூலம் தான், தமிழ்மக்கள் மேலான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடவேண்டிய சமூகப் பொறுப்புடன், அதற்கான காலடியை எடுத்து வைத்திருக்கின்றனர்.

தமிழர் தரப்பில் இப்படி நடக்கவில்லை. இது நடக்காமல் உண்மையான நேர்மையான செயற்பாட்டை எம்மில் நாம் எதிர்பார்க்க முடியாது. இன்று சிங்களப் புரட்சிகர சக்திகளின் முன்முயற்சியுடன் கூடிய இந்த முயற்சியை வரவேற்கும், பங்கேற்க முனைபவர்கள், தங்கள் கடந்தகால நிலையில் நின்று இதை அணுக முற்படுகின்றனர். இது அரசுக்கு எதிரான போராட்டத்தை பலவீனமாக்கி சிதைக்கும். எம்மை நாம் தீவிரமாக மாற்றியாக வேண்டும்.

கடந்தகாலத்தில் புலியாக, புலியெதிர்ப்பாக, இரண்டையும் எதிர்க்கும் ஜனநாயகவாதியாகவே தம்மைக் காட்டிக் கொண்டு பலரும் இருந்தனர். இங்கு கூட அங்குமிங்குமாக இணைந்தும், விலகியும் நின்றனர். புரட்சிகர அரசியல் கூறாக தம்மை வெளிப்படுத்தியிருக்கவில்லை. இது உண்மையில் தமிழ்மக்களுக்கு எதிராக இருந்ததுடன், இலங்கை மக்களுக்கு எதிரானதாகவும் இருந்தது. உண்மையில் சொந்த மக்களைச் சார்ந்தும், அந்த மக்களின் அரசியலை உயர்த்தி நிற்பதை மறுத்தும் நின்றதன் மூலம், தங்களை அடையாளப்படுத்தியவர்கள் என்பதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

இங்கு தான் இந்திய உளவாளிகள் முதல் இதை வைத்துப் பிழைக்கும் அரசியல் பிரமுகர்கள் வரையான, பல வண்ணம் கொண்டவர்களாக தமிழ் தரப்பு சமூகப் பொறுப்பற்று இருந்தது, இருந்திருக்கின்றது. சிங்களப் புரட்சிகரக் கூறுகள் தங்கள் கடந்தகாலத்தை மறுத்து உருவானது போல், தமிழ்தரப்பு புரட்சிகர கூறாக தன்னை புடம் போட்டு வெளிப்படுத்தவில்லை.

இன்று சிங்கள மக்களுடன் தமிழர்கள் இணைந்து போராடுவது என்பது, தங்கள் கடந்தகால அரசியல் மற்றும் தம்மைச் சுற்றிய இந்த போக்குகளை மறுத்தல் மூலம், தங்களை மீளக் கட்டமைத்தல் தான். இதுதான் சிங்கள மக்களுடன் இணைந்து போராடுதல் என்பதன் சாரமாகும்.

சிங்கள மக்களுடன் இணைந்து போராடுதல் என்பது, எங்களுடைய கடந்தகால நிலையில் நின்று எங்களை அவர்களை ஏற்கவைப்பதல்ல. அவர்களுக்குள் நடந்த மாற்றத்தைப் போன்று எம்மை நாம் மீட்டு உருவாக்குதல் தான்.

சாதாரண தமிழ் மக்கள் சிங்கள மக்களைப் புரிந்துகொள்ளும் வண்ணம் தமிழ்மக்கள் மத்தியில் மாற்றத்தை உருவாக்க வேண்டிய எமது வரலாற்றுப் பொறுப்பில் நின்றபடி தான், இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எம்மை நாம் மாற்றாமல், எமது கடந்தகால நிலையில் நின்று இதைச் சாதிக்க முடியாது. மக்களை விழிப்பூட்டுவது, அவர்கள் தமக்காக தங்களைத் தாங்கள் அணிதிரட்ட வழிகாட்டுவது என்பது, அர்த்தமுள்ள உண்மையான அரசியல் உணர்வாக எம்மில் மாறவேண்டும். எமக்குத் தெரிந்ததை வைத்து, எமது தெரிந்த செயலை வைத்து இதை முன் நகர்த்த முடியாது. மாற்றம் என்பது, எமது அரசியலில், எமது அறிவில், எமது எழுத்தில், எமது நடத்தையில்… என எங்கும் தொடர்ந்து இடைவிடாது எம்மில் நடக்கவேண்டும்.

நாங்கள் எம்மில் உள்ள அனைத்துவிதமான சமூக ஒடுக்குமுறையையும் முரணற்ற வகையில் எதிர்த்துப் போராடுபவராக இருந்தபடிதான், மக்களை வழிகாட்டி அழைத்துச்செல்ல முடியும். நாங்கள் நேர்மையானவராக, உண்மை உள்ளவராக, வெளிப்படையானவராக இருக்கவேண்டும்.

சிங்கள மக்களுடன் ஐக்கியம் என்பது, சிங்கள ஓடுக்கப்பட்ட மக்களுடனான ஒருங்கிணைந்த போராட்டம் தான். எமது எதிரியும், அவனின் எதிரியும் ஓன்று என்பதை இனம் காணும் அளவுக்கு, இதை நாம் புரிந்து கொள்ளும் அளவுக்கு, நாங்கள் எங்களை மாற்றியாக வேண்டும். இலங்கையில் புரட்சிகர மாற்றம் என்பது, வெளியில் இருந்தல்ல எம்மில் இருந்து தொடங்க வேண்டும். அதுதான் இலங்கை மக்களின் புரட்சிகரமான மாற்றத்துக்கான முதல்படி.

பி.இரயாகரன்

20.10.2012