Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இனவாதம் ஏன் ஒழிக்கப்பட வேண்டும்?

மனித வாழ்வுக்கு உதவாத இனவாதத்தை கட்டியழத்தான் வேண்டுமா? மனித துன்பத்தை வாழ்வாக்கும் இனவாதத்தைப் போற்றத்தான் வேண்டுமா? இனவாதத்தை ஒழிக்க இனவாதம் என்பது, பகுத்தறிவுபூர்வமானதா?

மனிதன் பகுத்தறிவுள்ளவன். தன்செயலுக்கு தானே பொறுப்புள்ளவன். இனவாதம் சார்ந்த அனைத்துக்கும் அவனே பொறுப்பாளி. அவனுக்கு வெளியில், பொறுப்பைச் சுமத்த முடியாது. தன் நடைமுறை விளைவுக்கு, அவனே பதில் சொல்ல வேண்டும். இது தான் மனித அறம்.

இனவாதத்தைக் கொண்டிருப்பதால், சமூகத்துக்கு நன்மையா!? இனவாதம் அறிவு பூர்வமானதா!? இனவாதம் மூலம் முரண்பாடுகளைத் தீர்க்கத்தான் முடியுமா!? இதற்குப் பதில் சொல்லியாக வேண்டும். இதன் விளைவுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

இங்கு ஒடுக்கும் இனவாதமும் சரி, ஒடுக்குவதற்கு எதிரான இனவாதமும் சரி, இந்த இரண்டு இனவாதத்திற்கும் வேறுபாடு கிடையாது. இனவாதம் என்பது பகுத்தறிவுபூர்வமானதல்ல. மனிதத் தன்மை கொண்டதல்ல. இயற்கையானதல்ல. மனித அறிவுக்கு முரணாது. பழைமைவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. மூடநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. இனவாதத்தின் நடைமுறை காட்டுமிராண்டித்தனமானது. வன்முறையானது.

எந்த முற்போக்கான கூறையும் இனவாதம் கொண்டிருப்பதில்லை. பிற்போக்கான சமூகக் கூறைக்கொண்டது. இது சுயநலமிக்கது. சமூகநலனுக்கு எதிரானதும். தனிமனித குறுகிய நலன் சார்ந்தது. பிற்போக்காளனின் இருப்புக்கான ஒன்று தான் இனவாதம். சமூகத்தின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தவே இனவாதம் பயன்படுகின்றது.

இனவாதம் பிற இன மக்களை எதிரியாகப் பார்க்கின்றது. சொந்த இனத்தை ஒடுக்கி ஒருங்கிணைக்கின்றது. இனமுரண்பாடு போன்று, சமூகத்தின் பிற முரண்பாடுகளை களைவதில்லை. அதை தனக்குள் முன்னிறுத்தி, அதைப் பாதுகாக்கின்றது.

இன ஒடுக்குமுறைக்கு எதிரான இனவாதம், அறிவுபூர்வமான அடிப்படையைக் கொண்டிருப்பதில்லை. இனவாதம் தன்னைத் தான் தனக்குள் குறுக்கிக் கொண்டு தான், தன்னை வெளிப்படுத்த முடியும். பரந்த சமூகக் கூறாக தன்னை ஒரு நாளும் வெளிப்படுத்த முடியாது. அதற்கான விரிவான தளம் இனவாதத்துக்குள் இருப்பதில்லை. இதனாலேயே அது சுயமற்றது. மற்றைய இனத்தை இழிவுபடுத்தி பெருமை பேசும் மனித விரோதம் சார்ந்தது. இதனாலேயே வன்முறை சார்ந்து தன்னை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. குறுகிய தனிமனித கூறாகத்தான், தன்னைக் குறுக்கி வெளிப்படுத்த முடியும். இதனால் மற்றொரு பிற்போக்கைச் சார்ந்து தான், தன்னை முதன்மைப்படுத்தும்.  ஒட்டுண்ணித்தனமானது.

தன்னை நியாயப்படுத்த முடியாதது, தன்னை சுயமாக நிலைநிறுத்த முடியாதது, அனைத்து பிற்போக்கான கூறுகளுடனும், தன்னை பினைத்துக் கொள்கின்றது. ஜனநாயகத்தை, தனிமனித சுதந்திரத்தை மறுப்பதை ஆதாரமாகக் கொண்டது.

இந்த வகையில் மனிதன் அறிவுபூர்வமாக இனவாதத்தை கேள்வி கேட்டாக வேண்டும். இனவாதம் இருக்க வேண்டும் என்றால், அதை பகுத்தறிவு மூலம் நியாயப்படுத்த வேண்டும். இல்லையேல் அது அழித்தொழிக்கப்பட வேண்டும். இனவாதத்தை அழித்தொழிக்க வேண்டும் என்றால், இனவாதத்தை எதிர்த்து இனவாதத்தை பதிலாக கொண்டு செயற்படுவதையும் தான். மற்றும்படி இனவாதமல்லாத மாற்று வழியில், இனவாதத்தை எதிர்கொண்டு போராட வேண்டும். இதில் ஒன்றை மட்டும் செய்வதல்ல. இரண்டையும் ஒருங்கே செய்ய வேண்டும். இதன் அர்த்தம் பிற இனவாதத்தை மட்டுமல்ல, தன் இனவாதத்தையும் ஒழித்துக்கட்டக் கோருகின்றது.

இந்த வகையில் பகுத்தறியக்கூடிய வகையில் அறிவு இருக்கின்றது. இங்கு அறிவு இனவாதத்தை பகுத்தறியும் அளவுகோலாக இருக்கின்றது. இதைக் கடந்த பிற்போக்கான மனித செயல்களும், மனிதவிரோத உறவுகளும், பகுத்தறிவற்ற அறிவும் சேர்ந்து உருவான சிந்தனைகள் இணைந்து தான், இனவாதக் கோட்பாடுகளுக்கான அடிப்படையாக இருக்கின்றது. இந்த இனவாத கோட்பாடுகளின் நடைமுறை விளைவு மக்கள் விரோதத் தன்மை கொண்டது.

இனவாதம் மூலம் இனவாதம் ஒழிக்கப்பட்டதா? இல்லை. இனவாத ஒடுக்குமுறையில் இருந்து மனிதனை பாதுகாக்க முடிந்ததா? இல்லை. இனவாதத்துக்கு பதில் இனவாதம், தீமையைத்தான் தருகின்றது. இது தான் இனவாதத்தின் அனுபவம். இனவாதம் சார்ந்த உலக அனுபவமும் இதுதான்.

இனவாதக் கோட்பாடுகள் பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒரு தலைப்பட்சமான கருத்துக்களால் வழிநடத்தப்படுகின்றது. பழைய கருத்துகளால் ஆனது. பிற்போக்குக் கூறுகளாலானது. அறிவுக்கு ஒவ்வாத ஒன்றாக இருக்கின்றது. இதன் கோட்பாடு வெறுப்புக்குரியதாக இருக்கின்றது. மூடபக்திக்குரிய ஒன்றாகவே, தன்னைத்தான் வெளிப்படுத்தி வந்திருக்கின்றது.

பகுத்தறிவுள்ளவனும், அதற்கு பொறுப்பு கூற வேண்டியவனுமான மனிதன், இதை நியாயப்படுத்த முடியாது. இனவாதம் ஒழித்துக்கட்டப்பட வேண்டிய ஒன்றாகவே இருக்கின்றது. அறிவை சமூக அறிவாக்க வேண்டும். அதாவது இனவாதம் சமூக அறிவு சார்ந்ததல்ல. தனிமனித அறிவாக, சமூக அறிவுக்கு எதிரானதாக இருக்கின்றது.

பகுத்தறிவு கொண்ட உண்மை, மனித அறம் சார்ந்த நீதி, இயற்கையான சமத்துவம், மனிதனிலிருந்து பிரிக்க முடியாத உரிமை சார்ந்ததல்ல இனவாதம். இந்த வகையில் இனவாதத்தை மறுத்து, மனிதன் செயலாற்ற வேண்டியிருக்கின்றது. இனவாதம் ஒழித்துக்கட்டப்பட வேண்டும்.

பி.இரயாகரன்

22.12.2012