Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

ஆள்வோரையும், ஆள விரும்புவோரையும் தோற்கடிக்க வேண்டும்!

ஆட்சி மாற்றத்தைக் கோரி ஆள்வோரை 1948 முதல் மாறி மாறி தெரிவு செய்கின்றோம். நடப்பது என்ன? ஆள்வோர் மாறுகின்றனரே ஓழிய, மாற்றம் நடப்பதில்லை. மக்கள் ஒடுக்கப்படுவதும், வாழ்வு சீரழிக்கப்படுவதும் எந்த மாற்றமுமின்றி தொடர்ந்து அதிகரித்தே வருகின்றது.

இதுதான் வாக்களிப்பு மூலம் தெரிவு செய்கின்ற ஆட்சி முறையாக இருக்கின்றது. இம்முறை மட்டும் புதிதாக மாறிவிடுமா? எதற்காக, ஏன் வாக்களிகின்றோம்? இதற்கு நாம் பதில் சொல்லியாக வேண்டும்.

ஒவ்வொரு முறையும் மக்களை கவர கோசங்களை வைப்பதன் மூலம் மக்களை பிரிப்பதும் வாக்கை பெறுவதும் நடந்தேறுகின்றது. உதாரணமாக 24 மணி நேரத்தில் சிங்கள மட்டும் ஆட்சி மொழி என்று கூறி தமிழ் - சிங்கள மொழி பேசும் மக்களை பிளந்த இனவாத கோசமாகட்டும், இன்று 100 நாளில் ஜனாதிபதி முறை நீக்கம் என்ற கோசமாகட்டும், இவை அனைத்தும் மக்களை ஏமாற்றி அதிகாரத்தை கைப்பற்ற விரும்புகின்றவர்களின் அரசியல் பித்தலாட்டமாகும்.

இன்று ஆள்வோரும், ஆள விரும்புவோரும் எதை மக்களுக்கு முன்வைக்கின்றனர்? மக்களின் சமூக பொருளாதார வாழ்க்கை சார்ந்து எதையாவது முன்வைக்கின்றனரா எனின், இல்லை. மாறாக மற்றைய கட்சிக்குள் இருந்து ஆட்களை விலை பேசி பிடித்தல் மூலம் ஆட்சியில் தொடருதலும், ஆட்சிக்கு வருதலுமாக அரங்கேறுகின்றது. இந்த வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், கட்சிகளுக்கும் பெரும் தொகை பணம் கைமாறுகின்றது. பதவிகளைக் கொடுப்பதும், எதிர்கால பதவிகள் பற்றிய உத்தவாரதங்கள் கொடுப்பதன் மூலம், தங்கள் ஆள்வோராக இருக்க முனைகின்றனர்.

இப்படி தான் ஆட்சி அமைப்பது நடந்தேறுகின்றது. இதை தான் "ஜனநாயகம்" என்று நம்புமளவுக்கு, இவை இன்று சர்வசாதாரணமாகி இருக்கின்றது. ஆட்சியில் இருப்போரும், ஆட்சியை அமைக்க விரும்புவோரின் அரசியலும் இதுவாக இருப்பதையே, நாளாந்த செய்திகள் எடுத்துக் காட்டுகின்றன.

1. இங்கு மக்கள் வாக்களிக்கின்றனர் என்ற உண்மை, ஆட்சியை அமைப்பதில் எவ்வளவு பொய்யானது என்பதை நடப்பு நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றது. வாக்களிப்பு யார் வெல்வது தோற்பது என்பதை தீர்மானிப்பதில்லை என்பதையும், இன்று அரசியலில் நடந்து வரும் பேரங்களும் கூத்துக்களும் தான் இதை தீர்மானிக்கின்றது.

2. இன்று எதற்காக ஆட்சியை அமைக்கின்றனர் என்பதும், எதற்காக வெல்ல முனைகின்றனர் என்பதும், மக்களுக்காகவல்ல என்பதையே இன்றைய பேரங்களும் கூத்துகளும் அப்பட்டமாக எடுத்துக் காட்டுகின்றன.

3. ஆள்வோரும், ஆள விரும்புவோரும் மக்களின் சமூக பொருளாதார வாழ்க்கை சார்ந்து உரிமைகளையோ, போரட்டங்களையோ முன்வைத்து மக்களிடம் வாக்கு கேட்;பதில்லை என்பது உண்மையாக இருகின்றது.

4. வேட்பாளர்களை விலைக்கு வாங்குவது போல், மக்களுக்கு பணத்தையும், பொருட்களையும் கொடுப்பதன் மூலம் வாக்கை வாங்க முடியும் என்பதே, கட்சிகளின் அரசியல் கொள்கையாகி இருக்கின்றது. இதற்கு அமைவாகவே கட்சி உறுப்பினர்களும், கட்சி அணிசேர்க்கைகளும் நடந்தேறுகின்றன. வாக்கை பெறக் கூடிய ரவுடிகள், பண முதலைகள், ஊழல் பேர் வழிகள், சாதிவாதி, இனவாதி.. என்று தகமைகள் கொண்ட அணிதான், தேர்தலை வெல்லும் தகமைகளைக் கொண்டு தேர்தலை வெல்லும் கட்சியாக மாறி இருக்கின்றது.

5. இன - மத - சாதி.. உணர்வுகளைத் தட்டியெழுப்பி, மற்றவரை இழிவுபடுத்தியும் ஓடுக்கியும் வாக்கைப் பெறுவதுமாக தேர்தல் அரசியல் குறுகி இருக்கின்றது.

6. தேர்தல் வாக்களிப்பு முடிவு எதுவாக இருந்தாலும், அதிகாரத்தையும் பணத்தையும் கொண்டு தேர்தல் மோசடிகள் மூலம் வெற்றியை பெறுவது என்பது இன்று வெளிப்படையான உண்மையாக மாறி இருக்கின்றது.

இன்று இவை தான் தேர்தல் அரசியலில் நடந்தேறுகின்ற உண்மைகள். மக்கள் வக்களிப்பது என்பது, சடங்குகளாக மாற்றப்பட்டு இருக்கின்றது. தெரிந்தவன், ரவுடி, பணக்காரன், சாதிக்காரன், இனக்காரன், மதக்காரன்... என்று குறுகிய எல்லைக்குள் மக்களை கொண்டு வந்து வாக்கைக் கறப்பது அரசியலாகி இருக்கின்றது.

ஊழல் - லஞ்சம் - மோசடி - ரவடி தனம் - மபியத்தனம்... மூலம் சொத்தைக் குவித்தவர்களே ஆள்வோராக இருக்கும் அதே நேரம், அதில் ஒரு பகுதியை முதலிட்டு தொடர்ந்து ஆள விரும்புகின்றனர். இன்று விலைக்கு வாங்கப்படும் பராளுமன்ற மற்றும் கட்சி உறுப்பினர்கள் தொடங்கி மக்களின் வாக்கை பெறவும் இவர்களின் பணமே உதவுகின்றது.

ஆள்வோருக்கு பதில் ஆளவிரும்புவோர் வேறு யாருமல்ல. முன்பு ஆண்டவர்கள் தான். இதே ஊழல் - லஞ்சம் - மோசடி, ரவடி தனம் - மபியாத்தனம்.. மூலம் கொழுத்தவர்கள் தான். தொடர்ந்து ஆளும் தரப்பாக இருந்து சொத்தை குவிக்க முடியமால் போனவர்கள் தான். இன்று அதற்காக தங்களை ஆளுதரப்பாக மாற்ற பொது வேட்பாளர் தேசிய அரசாங்கம் என்ற முகமுடிகளைப் போடுகின்றனர்.

இதை மூடிமறைக்கும் கோசம் தான் ஜனாதிபதி என்ற சர்வாதிகார முறைக்கு பதில், பிரதமர் என்ற பாராளுமன்ற சர்வாதிகாரத்தை கொண்டு வருவதாகும். குடும்ப ஆட்சிக்கு பதில் தேசிய அரசாங்கம் என்ற புதிய கொள்ளையர்களை ஆட்சிக்கு கொண்டு வருவது. இதன் மூலம் ஜனநாயகம் பூத்துக் குலுங்கும் என்ற விம்பத்தை, உருவாக்கிவிட முனைகின்றனர்.

இவர்கள் அனைவரும் ஒரே குட்டையில் உறிய மட்டைகள் தான். மலையகத்தில் மண்ணுக்குள் புதைந்த மக்களை மீட்கவும் போராட்டவும் முடியதவர்கள் தான். நவதாரளமயத்துக்கு நிலங்கள் சுவிகரிப்பை நடத்துகின்றவர்களும் அதை தடுத்து நிறுத்த எதையும் செய்யாதவர்களே இவர்கள். யுத்தம் முடிந்து ஐந்து வருடமாகி இனப்பிரச்சனை தீர்க்க மறுப்பவர்களும் அதற்காக எதையும் முன்வைக்க முடியாதவர்களுமே இவர்கள். இப்படி எத்தனையோ மக்கள் பிரச்சனைகள் இருக்க, அதை முன்வைத்து அதை தீர்க்கும் ஆட்சியாளர்களாக தம்மை தெரிவு செய்யுமாறு மக்களிடம் கோரவில்லை.

ஜனாதிபதிக்கு பதில் பிரதமர், குடும்ப ஆட்சிக்கு பதில் தேசிய அரசு என்பது, எதையும் மாற்றிவிடாது. பழையவர்களுக்கு பதில் வேறு பெயர்களில் புதியவர்கள் மாறுவார்களே ஓழிய, மக்களின் சமூக பொருளாதார அவலங்கள் மற்றும் சிறுபான்மை தேசிய இனங்கள் மீதான இன, மத ரீதியிலான அடக்கு ஒடுக்கு முறைகள் தொடரும். இதற்கு எதிரான மக்களின் போராட்டத்தை, ஒடுக்குமுறை மூலம் தான் தீர்வு காண்பார்கள். இதை தான் ஆளுவோரும், ஆள விரும்புவோரும் செய்வர்கள் என்பது அனைவருக்கும் நன்கு தெரிந்த உண்மையாகும்.

மக்களை ஒடுக்கி ஆள்வோரையும் ஆள விரும்புவோரையும் தோற்கடிக்க வேண்டும். இந்த ஆட்சி அமைப்பு முறைக்கு எதிராக மாற்றத்தை கோருகின்ற இடதுசாரிய அரசியலின் பின்னால் அணிதிரள்வதே எம்முன்னுள்ள ஒரே தெரிவு. சுயமரியாதையுள்ள நேர்மையான மனிதர்களின் தெரிவாக இது தான் இருக்க முடியுமே ஒழிய, இதற்கு வெளியில் வேறு தீர்வு கிடையாது.