Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தேர்தலில் தோற்கடிக்க முன்வைக்கப்படும் இனவாதம்!

தேர்தலை வெல்வதற்கான இனவாதம் போல், தோற்கடிக்கவும் இனவாதம். இந்த வகையில் தேர்தலில் யாரை ஆதாரிப்பது அல்லது தோற்கடிப்பது பற்றி, இன்று இனத்தின் பெயரால் அறிக்கைககள் வெளி வருகின்றன. இன்று இனவாதம் என்பது பெரும்பான்மையை மட்டும் சார்ந்தல்ல, மாறாக சிறுபான்மையைச் சார்ந்தும் வெளிப்படுகின்றது.

இந்த வகையில் இன முரண்பாட்டால் பாதிக்கப்பட்ட சிறுபான்மை இனத்தின் இனவாதத்தை "முற்போக்கானதாக" முன்னிறுத்தி, படுபிற்போக்கான இனவாதம் தேர்தலில் முன்தள்ளப்படுகின்றது.

தேர்தல் மூலம் மேலேழும் இனவாதமானது, பெரும்பான்மையை மட்டும் சார்ந்தல்ல. குறுந்தேசிய இனவாதமானது, தன்னை மற்றைய இன மக்களில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு முன்னிலைக்கு வருகின்றது. ஆள்வோரும், ஆள விரும்புவோரும் இனவாத அடிப்படையிலேயே பிரச்சாரங்களை முன்னெடுப்பதும், பேரங்களை நடத்துவதும் நடந்தேறுகின்றது. சிறுபான்மை சேர்ந்த இனவாதமோ இந்தப் பேரத்தை தம்முடன் நடத்துமாறு பெரும்பான்மை இனவாதத்திடம் கோருவதும், இனம் சார்ந்து அறிக்கைகளை விடுவதும் அங்குமிங்குமாக அரங்கேறுகின்றது. இந்த இனவாதத்தை கேள்விக்கு உள்ளாக்காத சந்தர்ப்பவாத போக்குகளே, அங்குமிங்குமாக காண முடிகின்றது.

இலங்கையில் தமிழ் கிறிஸ்துவ ஆயர்மார்களோ தங்கள் மதத்தின் மூலம், இனவாத காய் நகர்த்தலை நடத்துகின்றனர். கூட்டமைப்பின் முரண்பட்ட பிரிவை உள்ளடக்கிய வண்ணம், புலம்பெயர் நாடுகள் வரை, தமிழ் மக்களை மத ரீதியாக பிரிக்கும் வண்ணம் இனவாதத்தை முன்தள்ளி வருக்கின்றது. அதாவது தங்கள் மதம் சார்ந்த மக்களை தமிழ் இனவாதத்தின் காவலராக முன்னிறுத்தி, மகிந்தாவை தோற்கடிக்கும் இனவாதத்தை முன்தள்ளுகின்றனர்.

இது போன்று "புலம்பெயர்ந்து வாழ்கின்ற இலங்கை முஸ்லிம் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த அடிப்படையில்" வாக்களிப்பது பற்றிய அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருக்கின்றது. இது முஸ்லிம் மக்களை புலம்பெயர் இலங்கை மக்களில் இருந்து இன-மத ரீதியாக பிளக்கின்ற நடவடிக்கையாகும். இது புலம்பெயர் புலி இனவாதத்துக்கும், அதன் இருப்புக்கும் ஊக்கமளிப்பதாகும். இலங்கை மக்கள் ஒன்றுபட்டு தங்கள் விரோதிகளை தோற்கடிக்கும் அரசியலுக்கு எதிரானதுமாகும். இது போன்ற கருத்துகள் மற்றும் அறிக்கைகள் வெறுமனே முஸ்லிம் தரப்பிடமிருந்து மட்டுமல்ல, தமிழ் தரப்புகளில் இருந்தும் வெளிவருவதைக் காண முடிகின்றது.

இனவாதத்துக்கு எதிராக வாக்களிக்க கோராததும், மகிந்தாவை தோற்க்கடிக்க மற்றொரு இனவாதி மைத்திரியை ஆதாரிக்க கோரும் இனவாத பித்தலாட்டங்களே மக்கள் முன்னால் முன்வைக்கப்படுகின்றன.

இலங்கையில் சிங்கள மக்களை தமக்கு வாக்ளிக்கக் கோருகின்ற ஆள்வோரினதும் - ஆள விரும்புவோரினதும் இனவாத அரசியல் உள்ளடக்கத்தையே அடிப்படையாகக் கொண்டு, பிற இன மக்களை தன் இனம் சார்ந்து வாக்களிக்க கோருவது எந்த வகையிலும் முன்னையதில் இருந்து முரண்பட்டதல்ல. தங்களை முஸ்லீமாக முன்னிறுத்திக் கொண்டும், தமிழராக முன்னிறுத்திக் கொண்டும் முன்னெடுக்கும் செயல்கள், சிங்களவராக தம்மை முன்னிறுத்தி கொண்ட அரசியலுக்கு எந்த வித்திலும் குறைந்தல்ல, வேறுபட்டதுமல்ல. இவை ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.

தேர்தலில் தோற்கடித்தல் என்று கூறுவதில் உள்ள அரசியல் அர்த்தம் என்ன? எமது இன - மத ரீதியான சிந்தனை முறையையும், இந்த முதலாளித்துவ அமைப்பு பற்றிய எமது மூட நம்பிக்கையையும் தோற்கடித்தல் தான். இதைத் எம்மிடமிருந்து நாம் தோற்கடிக்காமல், இனரீதியான இந்தத் தேர்தலில் யாரையும் தோற்கடிக்க முடியாது. நாங்கள் இனவாதியாக இருந்து கொண்டு, மற்றவனின் இனவாதத்தை தோற்கடித்தல் என்பது, எப்படி தான் சாத்தியமாக முடியும்!?

இனவாத மற்றும் நவதாரள சிந்தனை முறையை நாம் முன்னிறுத்திக் கொண்டு, மற்றவனை இனவாதியாக காட்டி முன்னெடுக்கும் பிரச்சாரம் மோசடியானது. தங்கள் இனம் சார்ந்த இனவாதம் மூலம், மற்றவர்களை தோற்கடிப்பது பற்றி உபதேசம் செய்கின்றனர். இது பொது வேட்பாளரின் கொள்கை மட்டுமின்றி, இன - மத மூலம் அணுகும் அனைத்து தரப்பினரதும் பொதுக் கொள்கையும் கூட.

அண்மையில் முஸ்லிம் மக்களை நோக்கி விடுத்த அறிக்கை ஒன்றில் "மகிந்த தலைமையிலான ஜனநாயக விரோத, இனவாத, சர்வதிகார குடும்ப அரசாங்கம் தோற்கடிக்கப்படல் வேண்டும்" என்ற கோசத்தை காண முடிகின்றது. இதன் மூலம் இனவாதி மைத்திரியை வெல்ல வைக்கும் இனவாத பிரச்சாரத்தை தொடங்கியதையும் காண முடிகின்றது. இது சாதாரண முஸ்லிம் மக்களை இனவாதத்தின் கீழ் அணிதிரட்டுகின்ற செயற்பாடாகும்.

மகிந்தாவுக்கு எதிரான இந்த அறை கூவல், பொது வேட்பாளர்களின் கோசத்திற்கு சற்று வேறுபட்டதாகும். இந்தக் கோசம் பொது வேட்பாளரின் கோசத்துக்கு மேலாக "இனவாதம்" பற்றி பேசுகின்றது. இதன் மூலம் தனது சிறுபான்மை அடையாளத்தை முன்னிறுத்தி, இனவாத சலுகையைக் கோரி நிற்கின்றது. அதேநேரம் இந்த நவதாரளவாத பொருளாதார அமைப்பை தோற்கடிப்பதை மறுத்து நிற்கின்றது. சராம்சத்தில் உழைத்து வாழும் இலங்கை மக்களுக்கு எதிரான, ஆளும் வர்க்கம் சார்ந்த பிற்போக்கான கோசமாகும்.

இலங்கையில் சிறுபான்மையாக வாழுகின்ற தமிழ் - முஸ்லிம் - மலையக மக்களை, அவர்களது குறுகிய இன - மத - மொழி அடையாளங்களை முன்னிறுத்திக் கொண்டு அணுகின்ற போக்கு, அடிப்படையில் பெருபான்மை சார்ந்த இனவாததுக்கு நிகரானது. இலங்கையில் ஓட்டு மொத்த இன-மத சார்ந்த அரசியல் அணுகுமுறையை தோற்கடிக்காத மாற்றம், எந்த மாற்றத்தை தந்துவிடாது.

தமது குறுகிய இன அடையாளத்தை முன்னிறுத்திக் கொண்டு "இனங்கள், மதங்களிடையே சமத்துவமும் பரஸ்பர உறவும் நம்பிக்கையும் உடனடியாக கட்டியெழுப்பப்படல்" வேண்டும் என்பது அரசியல் முரண். இது சதாரண முஸ்லிம் மக்களை, மற்றைய இன மக்களில் பிரித்து சொந்த பிழைப்புவாதத்துக்கு பயன்படுத்தும் சந்தர்ப்பவாதமாகும்.

இதற்கு மாறாக அனைத்து மக்களும் இணைந்த, "சமத்துவமும் பரஸ்பர உறவும் நம்பிக்கையை கட்டியெழுப்பும்" எமது சொந்த அரசியல் நடைமுறையாக வேண்டும். மைதிரியின் பின்னால் அணிதிரள்வதன் மூலமல்ல. இனவாதம் - நவதாரளவாதம் இரண்டுக்கு எதிராக, தன்னை முன்னிறுத்திக் கொண்டு, அதை செயலுக்கு கொண்ட வரவேண்டும்.

இந்த வகையில்

1.பொருளாரதார ஜனநாயகத்தை கோராது, தேர்தலில் ஜனநாயகத்தை உச்சரிப்பது அரசியல் மோசடியாகும். இது முன்பு (பயங்கரவாதத்தை) புலிகளை அழித்த பின் தீர்வு என்று அரசும், தமிழீழத்தை பெற்ற பின் ஜனநாயகம் என்று புலிகளும் சொன்னதுக்கு நிகரானது.

2.அனைத்து இன-மத வாதத்தையும் எதிர்த்து, இலங்கையின் ஒட்டு மொத்த மக்களை சார்ந்து நின்று தேர்தலை அணுகாத, அனைத்துப் பார்வையும் படுபிற்போக்கானவையாகும்.

இதை தங்கள் அரசியல் நடைமுறையாக கொள்ளாது, வாக்குப் போடுவதை மட்டும் அரசியலாக முன்னிறுத்தி கொண்ட சந்தர்ப்பவாத அறிகைகளும், கொள்கைகளும் பிழைப்புவாதத்துக்கே உதவும். இது எதையும் மக்களுக்கு வழங்காது. அரசியல் ரீதியாக எதையும் தோற்கடிக்காது.

இதில் உள்ள மாற்றொரு அரசியல் மோசடி, "இனப்பிரச்சினைக்கான நியாயமான அரசியல் தீர்வும், இன சமத்துவம், ஜனநாயக அடித்தளம் உறுதிப்படுத்த" பொது வேட்பாளரை நோக்கி எழுத்து பூர்வமான உத்தரவாதங்களை கோரியதாகும். எழுத்து பூர்வமான பொது வேட்பாளார் எதையாவது முன்வைப்பதன் மூலம், மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டி, வாக்கு போடவைக்கும் மோசடி இதுவாகும்.

கடந்த காலத்தில் சர்வதேசம் வரை வழங்கிய வாக்குறுதிகள், எழுத்து பூர்வமாக இல்லாதால் தான், அவை நடமுறையாகவில்லை என்று கூறி இந்த அரசியல் அமைப்பை பாதுகாக்க முனைவதாகும். எழுத்து பூர்வமாக வைத்து விட்டால் பொது வேட்பாளரை ஆதாரித்து, மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்று அரசியல் கபடத்தை முன்னெடுக்கின்றனர். இறுதியில் எழுத்து பூர்வமான அறிக்கை எதுமின்றி, சாதாரண முஸ்லிம் மக்களின் பெயரில் மைத்திரியை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் அரசியல் மோசடிகளையும் காண முடிகின்றது.

மக்கள் சார்ந்த எந்த கொள்கையும் முடிவுகளும், மக்களின் சொந்த அரசியல் நடைமுறைக்கு வெளியில் சாத்தியமில்லை. எந்தத் தீர்வையும் அரசு மூலம் மேல் இருந்து கீழாக மக்கள் மேல் திணிக்க முடியாது. அப்படி கொண்டு வருவது ஜனநாயகமல்ல, சர்வாதிகாரமாகும்.

இலங்கை வாழ் அனைத்து மக்களையும் இந்த அரசுக்கும், அரச அமைப்புக்கும் எதிராக அணிதிரட்டாது, மகிந்தாவுக்கு எதிராக அணிதிரட்டுவதும், தங்கள் கோரிகைகளை மைத்திரியை அமூல் செய்யக் கோருவதும் ஜனநாயக விரோத செயலாகும். இனத்தின் பெயரில் இதை செய்யுமாறு அரசிடம் கோருவதும், நடப்பதுமே, அரசியலாக அங்குமிங்குமாக அரங்கேறுகின்றதே ஒழிய, இனவாத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டுவது கிடையாது.