Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

நவதாரள - தமிழினவாத, சைவ வேளாள யாழ் மையவாதத்தின் பிரதிநிதியே எஸ்.பொ!

இலக்கியம் - மொழி - பேச்சாற்றல்... என எஸ்.பொ திறமையும் அறிவும் கொண்டவர். அடிபணிய மறுக்கும் திமிரும், ஒடுக்கபட்ட சாதியில் பிறந்தவர்... என்ற அடையாளங்களையும் கொண்டவர். இதனாலேயே அவர் கொண்டாடப்படுவதானது, சமூகம் பற்றிய பொது அக்கறையை கேள்விக்கு உள்ளாக்கி விடுகின்றது. முதலாளித்துவத்தை போற்றுகின்றதைத் தாண்டி, சமூகம் பற்றி எந்த மனித அறத்தையும் கொண்டதல்ல.

முதலாளித்துவ அறிஞர்கள் இல்லாத அமைப்பு பற்றிய கற்பனையில் இருந்து, சமூகம் பற்றி மதிப்பீடுகள் செய்யப்படுவதில்லை. முதலாளித்துவ சார்ந்த அறிவு- திறமையை, சமூகம் சார்ந்த ஒன்றாக முன்னிறுத்துவதானது, சமூகத்தையே எறி மிதிப்பதாகும். முதலாளித்துவ அமைப்பின் அறிவு, திறமை தொடங்கி அதற்கே உரிய திமிர் வரையான அனைத்தும், சமூகத்தை மறுதளிக்கின்ற தன்னலம் சார்ந்தவை. இதையே எஸ்.பொவிலும் காண முடியும்.

எஸ்.பொ உழைக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களில் இருந்து தன்னைத் தானே அன்னியமாக்கிக் கொண்டவர். இந்த மக்களை ஒடுக்கியவர்க்களுடன் இணைந்து பயணித்தவரே. இந்த வகையில் முலாளித்துவ அறிஞர்களுக்கு இருக்கக் கூடிய, குறைந்தபட்ச நேர்மை கூட அவரிடம் இருந்தது கிடையாது. சமூகத்தை நேசிக்காதவராக, மற்றவர்களை மதிக்காதவராக, முதலாளித்துவ அமைப்பிற்கே உரிய தனிமனித வக்கிரத்தை கொண்ட ஒருவராக தன்னை வெளிபடுத்திக் கொண்டவர். முதலாளித்துவத்தில் திறமை, பணம், அதிகாரம்... போன்றவற்றை அடிப்படையாக்கக் கொண்டு மனிதர்களை அடிமைப்படுத்தி மிதிக்கும் பண்பாட்டு அடிப்படையில், எஸ்.பொ தன் அறிவு திறமையைக் கொண்டு சமூகத்ததையும் மற்றவர்களையும் எள்ளி நகையாடியவர்.

இந்த தனிமனித வக்கிரத்தை "கலக்கக்காரனின் குரலாக" கொண்டாடுவதும், அதை முன் மாதிரியாக கொள்வதானது சமூகத்துக்கு எதிரானது. தன்னை சமூகத்தில் இருந்தும் அன்னியமாக்கிக் கொள்ளும் தனிமனிதவாதமும், மற்றவர்களில் இருந்த தன்னை வேறுபடுத்திக் கொள்ளும் வாழ்கை முறையுமாகும். இது தன்னகங்காரம் கொண்டது. இதை போற்றுவதா சமூகப்பார்வை? சமூகம் சார்ந்தவர்களாக தம்மை காட்டிக் கொள்ளுகின்றவர்கள், முதலாளித்துவ தனிமனித அறிவையும், அது சார்ந்த தன்னல வக்கிரத்தையும் முன்னிறுத்திக் கொள்வதானது முதலாளித்துவ சிந்தனை முறையாகும்.

மதிப்பீடு என்பது சமூகம் சார்ந்தா? தனிமனிதன் சார்ந்தா?

மதிப்பீடு என்பது சமூகச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டது. தனிமனிதனை சார்ந்தவை முதலாளித்துவ சிந்தனை முறையாகும். இந்த வகையில் தமிழனின் சிந்தனை முறை என்ன என்று எடுத்துக் காட்டி பேசும் போது, அனைவருக்கும் கோபம் வருகின்றது. "சிங்கள பேரினவாத பௌத்த சிந்தனை" பற்றி பேசும் போது, "தமிழனாக" அதை கொண்டாடும் தமிழனின் சிந்தனை முறை "நவதாரள சிங்கள பேரினவாத பௌத்த கொவிகம சிந்தனை" முறை பற்றி பேசும் போது, அதை சந்தர்ப்பவாதமாக ஆதாரிக்கவும் கூடச் செய்கின்றனர்.

"சிங்கள பேரினவாத பௌத்த சிந்தனை" பற்றிய தமிழனின் சிந்தனை முறையைப் பற்றி பேசும் போது, அதை மறுதளிக்கின்றனர். நவதாரள சைவ வேளாள யாழ் மையவாத தமிழினவாத சிந்தனை முறையே தமிழனின் சிந்தனை முறை என்று கூறும் போது, அதை மறுக்கின்றவர்கள், தமிழனின் சிந்தனை முறை என்ன என்று கூறுவதில்லை.

இங்கு சைவ வேளாள சிந்தனை முறைபற்றி நாம் பேசும் போது, பிறப்பு சார்ந்த சாதிய அடையாளங்கள் குறித்தல்ல. இந்த சிந்தனை முறை சாதி கடந்தது. அதாவது நிறம், சாதி, பால்... என்று உயிரியல் சார்ந்த வேறுபாட்டை குறித்து, இந்த சமூகம் கொண்டு இருக்கக் கூடிய மனித விரோத சிந்தனை முறை பற்றி இங்கு பேசுகின்றோம்.

இது நிலவும் இந்த சமூக அமைப்பிலான சிந்தனை முறையானது. அது இன்று முதலாளித்துவதாகும். குறிப்பாக எமது தமிழ் சமூக சிந்தனை முறையானது, நவதாரள தமிழினவாத சைவ வேளாள யாழ் மையவாத சிந்தனையாக இருக்கின்றது. இதை வெறுமனே நடைமுறையற்ற வெற்றுக் கருத்தால் மறுத்தல் கூட, இந்த சிந்தனையையே அடிப்படையாகக் கொண்டது. அதாவது நடைமுறையில் மாற்ற மறுக்கின்ற சிந்தனை முறையாகும்.

இது தன்னை மற்றவர்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டக் கூடிய திறமையை, பணம் சம்பாதிக்கக் கூடிய தகுதியை, புகழ் பெறக் கூடிய சுய அடையாளத்தை, சாதி அடையாளத்தை... சார்ந்து தன்னை முதன்மைப்படுத்தியே வெளிப்படுத்துகின்றது. இதற்கு நேர்மாறான சமூகம் சார்ந்த மதிப்பீடுகளானது, வெறும் கருத்துகளைக் கடந்து சமூகத்துக்காக வாழ்ந்தலையே மதிப்பீடாகக் கொள்கின்றது. எஸ்.பொவை இன்று மதிபீடுபவர்கள் எதை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடுகின்றனர்.

எஸ்.பொ மதிப்பிட கையாளும் பொது சிந்தனை முறை எதுவாக இருக்கின்றது?

ஒடுக்கப்பட்ட அவரின் சாதியைச் சார்ந்தோ, "தூய" இலக்கியத்தைச் சார்ந்தோ, "வெறும்" மொழியைச் சார்ந்தோ, தேசியத்தைச் சார்ந்தோ, தமிழ் இனவாதத்தைச் சார்ந்தோ, அவரின் உழைக்கும் வர்க்க விரோத நிலை சார்ந்தோ, அவரின் மரணம் என்னும் துயரத்தைச் சார்ந்தோ, தனிமனித முதன்மையாகக் கொள்ளும் முதலாளித்துவ திமிரைச் சார்ந்தோ... அவரைப் போற்றுவதும் மதிப்பீடுவதும் இன்று நடந்தேறுகின்றது.

உழைக்கும் மக்களையும் - ஒடுக்கப்பட்ட மக்களையும் சார்ந்து நிற்காத, அதற்கான நடைமுறையை உயர்த்தாத எந்த மதிப்பீடுகளும், சமூகத் தன்மை கொண்டவையல்ல. முதலாளித்துவ தன்மை கொண்டது. அதாவது நவதாரள தமிழினவாத சைவ வேளாள யாழ் மையவாதம் சார்ந்தது.

அவர் வாழ்ந்த போது அவரின் அரசியல் - இலக்கியம் சார்ந்து அவரை நெருங்காதவர்கள் முதல் அதற்காக அவரை வெறுத்தவர்கள் வரை, மரணத்தின் பின் அவரை அணுகுவது, தூக்கி நிறுத்துவதை உள்ளடகமற்ற சுயவிமர்சனமாக புரிந்து கொள்வதா அல்லது அவரின் மரணத்தை முன்னிறுத்திப் பிழைக்கும் சந்தர்ப்பவாதமாகப் புரிந்து கொள்வதா?

இதனால் இங்கு இரண்டு மதிப்பீடுகள் அவசியமாகின்றது.

1.எஸ்.பொ பற்றிய மதிப்பீடு

2.எஸ்.பொ முன்னிறுத்திக் கொண்டு செயற்படுபவர்கள் பற்றிய மதிப்பீடு

ஒடுக்கப்பட்ட மற்றும் உழைக்கும் மக்களைச் சார்ந்த நடைமுறையைக் கொள்ளாத மதிப்பீடுகளானது தனிவுடமை அமைப்புக்கேயுரியது. இதை சமூகத்தன்மை கொண்டதாகவும், புத்திஜீவித்தனமாக புரிந்து கொள்ளப்படும், நவதாரள யாழ் வெள்ளாள சாதிய மேலாதிக்க சிந்தனை அமைப்பில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். சமூக நடைமுறைக்கு வெளியில் வெறும் கருத்துகளை காட்டி, பிழைக்கும் சந்தர்ப்பவாதமே பொது மதிபீடுகளாக இருக்கின்றது. எமது அறிவு – சமூக செயற்பாடு அனைத்தும் வெறுமையான இடதுசாரிய பூச்சாக, வெற்றுக் கோசமாகவும், நவதாரள யாழ் வெள்ளாள சாதிய மேலாதிக்க சிந்தனை முறையாகவும் இருக்கின்றது.

எஸ்.பொ வாழ்ந்த காலத்தில்…

உழைக்கும் - ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்தா, அவர் தன் புலமையை, அறிவை, இலக்கிய ஆளுமையை… வெளிப்படுத்தினார்? அதை தன் நடைமுறையாகக் கொண்டு இருந்தாரா என்பதே எம்முன்னுள்ள கேள்வியாகும்.

இன்றைய தனிவுடமை சமூக அமைப்பில், மனிதன் தனக்காக வாழ்தல் போற்றத்தக்கதாகவும், தற்புகழுக்காக தன்னை வெளிப்படுத்தலே சமூக சேவையாகவும் முன்னிறுத்துகின்றது. இந்த தனிவுடமை சமூக அடிப்படையிலேயே எஸ்.பொ தன்னைத்தான் வெளிப்படுத்திக் கொண்டவர் என்றால் மிகையாகாது. அவர் தன் குழந்தை பருவம் தொடங்கி இளமைக் காலத்தில் தான் வாழ்ந்த சமூகத்தையே கைவிட்டு விட்ட ஒருவராக வாழ்ந்தவர். அவர் தன் அறிவால், தன் நடைமுறையால் தான் வாழ்ந்த சமூகத்துக்கு சேவை செய்தவரால்ல. இப்படி வாழ்ந்தவர்கள் பலர் இருக்கின்றனர்.

நிலப்பிரபுத்துவ தமிழினவாத சைவ வேளாள யாழ் மையவாத மேலாதிக்கச் சமூக அமைப்பினால், ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்திலேயே எஸ்.பொ பிறந்தவர். காலகாலமாக கல்வி மறுக்கபட்ட சமூகத்தில் இருந்து, கல்வியாளனாகவும், சமூக சார்ந்த புத்திஐPவியாக முன்னிலைக்கு வந்த ஒருவர்.

காட்டுமிராண்டித்தனமான சாதிய அமைப்பின் ஒடுக்குமுறைகள் மற்றும் சமூகப் புறக்கணிப்புகளை கடந்து, தன்னை அறிவீஜீவியாகவும் கல்வி கற்ற மனிதனாக ஒரு சாதிய சமூக அமைப்பில் முன்னிறுத்திக் கொள்வது என்பது, போராட்டம் இன்றி சாதியமில்லை. இந்த வகையில் அவரின் அக்கால உறவினர்கள் சிலர், சமூகம் சார்ந்த முன்னுக்கு வந்ததும், தம் சமூகத்துக்காகவும் உழைத்து இருக்கிக்கின்றனர்.

குறிப்பாக 1940 - 1950 களில் யாழ்ப்பாணத்தில் இறுக்கமாக கணப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதிய சமூகங்களில் இருந்து தோற்றம் பெற்ற, சமூகம் சார்ந்த புத்திஜீவிகளை அங்குமிங்குமாக வரலாறு வெளிப்படுத்தி நிற்பதை இன்று காண முடியும். 1950 - 1960 களில் நிலப்பிரபுத்துவ நவதாரள தமிழினவாத சைவ வேளாள யாழ் மையவாத மேலாதிக்க சமூக அமைப்புக்கு எதிரான சமூக விழிப்புணர்வு மற்றும் கம்யூனிசக் கட்சியின் போராட்டங்களுடன் எஸ்.பொ தன்னை இணைத்துக் கொண்டதன் மூலம், தன்னை சமூகம் சார்ந்த புத்திஜீவியாக வரலாறுக்கு முன் அறிமுகமாகிக் கொள்கின்றார்.

சோசலிச எதார்த்தத்தை முன்னிறுத்தி 1954 இல் உருவான இலங்கை முற்போக்களார் எழுத்தாளர் சங்கத்திலும் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டதன் மூலம், உழைக்கும் வர்க்கம் மற்றும் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்திய சமூக எழுச்சியுடன் பயணிக்கின்றார்.

இந்த வகையில் கைலாசபதி – சிவத்தம்பி போன்ற கலை- இலக்கியவாதிகளுடன் கூடிய வரலாற்று போக்கில் தன்னையும் இணைத்துக் கொள்கின்றார்.

1960 இல் சர்வதேச ரீதியாக உழைக்கும் வர்க்கத்தின் தத்துவ ரீதியான கோட்பாட்டு விவாதமும், அதைத் தொடர்ந்த அரசியல் பிளவுகள், இலக்கிய ரீதியான பிளவுகளை உருவாக்கின்றது. இந்த வரலாற்று ஓட்டத்தில், எஸ்.பொ தன்னை தன் சமூகத்தில் இருந்த பிரித்து செல்லும் வரலாற்றைக் காணமுடியும்.

புரட்சிகரமான உழைக்கும் அரசியல் மற்றும் சாதிய போராட்டங்களில் தீவிரமான அணி சோக்கையுடன் கூடிய சமூக பாய்சலும் போராட்டமும் யாழ்பாணத்தில் தோற்றம் பெற்ற போது, அதற்கு எதிர் திசையில் எஸ்.பொ மட்டுமல்ல சிவத்தம்பியும் கூட பயணிக்கின்றனர்.

அது வரை காலமும் உழைக்கும் மற்றும் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்து பயணித்த எஸ்.பொவின் அரசியல் - இலக்கியம் திசைமாறத் தொடங்கியது.

அது வரையான காலத்தில் நிலப்பிரபுத்துவ யாழ் வெள்ளாள சாதிய மேலாதிக்க அமைப்பு முறைக்கு எதிரான (மார்க்சிய கலந்த குட்டி பூர்சுவா சிந்தனை) குட்டிபூர்சுவா விமர்சன முறையை கைவிட்டத் தொடங்கியவர்கள் 1970 களில் நவதாரள முதலாளித்துவத்தை சார்ந்த இலக்கியத்தை வெளிப்படுத்தத் தொடங்கினர்.

2000 இல் தமிழ் தேசியம் அதன் சீராழிவாக உருவான இனத்தேசியத்தை முன்னிறுத்தத் தொடங்கியதன் மூலம், சிவத்தம்பி முதல் எஸ்.பொ வரை நவதாரள தமிழினவாத சைவ வேளாள யாழ் மையவாத சிந்தனை முறையை பாதுகாக்கின்றவாகளாக மாறினர். இந்த வகையில் எஸ.பொ தன் சமூகத்தை ஒடுக்கும் சிந்தனைமுறையை ஆதாரிக்கவும், அதை முண்டு கொடுக்கவும் தொடங்கினார்.

இலக்கியம் - அரசியல் மூலம் அதை பாதுகாக்கின்ற, அதை தன் சிந்தனை முறையாக்கியதே எஸ்.பொவின் இறுதி கால சிந்தனை முறையாகும். தன் சமூகத்துக்கு எதிரான சிந்தனையை எஸ்.பொ தனதாக்கிக் கொண்டு அதற்கு செக்கு மாடாக உழைத்தார்.

தமிழ் தேசியம் இனத்தேசியமாக வீங்கி வெம்பி அழுகிய போது, தேசியமானது வியாபரிகளினது விளம்பரத்துக்குரிய பொருளாகியது. அதே போல் எஸ்.பொ கூட தனது நூல் - வெளியீட்டகத்தை அடிப்படையாகக் கொண்ட இலக்கிய வியாபாரத்தை செய்வதற்காக, குறுந்தேசிய இனவாதத்தை கூவிக்கூவி கடை விரித்தார். அவரின் தன்நலன் சார்ந்த "கலக்கார" முதலாளித்துவ திமிர் என்பது, புலிக்கு பின் நக்கிப் பிழைக்கும் பிழைப்புவாதமாகியது.

எந்த நிலப்பிரபுத்துவ தமிழினவாத சைவ வேளாள யாழ் மையவாத மேலாதிக்க அமைப்புக்கு எதிராக போராடி தன்னை அடையாளப்படுத்தினரோ, அந்த தமிழினவாத சைவ வேளாள யாழ் மையவாத அமைப்பை பாதுகாக்கும் நவதாரள இன தேசியவாதத்தை முன்னிறுத்திக் கொண்டவர் எஸ்.பொ.

தனது சொந்த ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் விடுதலைக்காக அல்லாமல், அதை ஒடுக்கியவர்களுடன் தன்னை இணைத்து கொண்டு, தற்புகழுக்காகவும் - வியாபரத்துக்காகவும் எல்லாவிதமான அரசியல் கேலிக் கூத்தையும் இலக்கியத்தின் பெயரில் நடத்தினார்.

இடதுசாரிய முரண்பாடுகளும் - அதன் விமானசனங்களும் தான், தன்னை அன்னியப்படுத்தியது என்ற அவரின் சுயதர்க்கமானது அடிப்படையில் சுயமுரண்பாடனது. தேசியம் - இனவாதம் பின்னான அவரின் பயணமாகட்டும், அவரின் சொந்த தெரிவு மட்டுமின்றி தன்னை புத்திஜீவியாக கூறிக்கொள்ளும் ஒருவரின் சொந்த முடிவும் கூடத் தான். 1960 -1970 களிலும், இதுதான் அடிப்படையாக இருந்தது.

சுய தம்பட்டம் - தனிமனித நலனைக் கடந்து, தன்னை சமூகத்தின் பிரநிதியாக வாழ்ந்து காட்ட முடியாத சுய விளம்பர விரும்பியே எஸ்.பொ. தன் திறமையைக் கொண்டு தன் சுய பிழைப்புக்கு எற்ற ஒன்றாகவே சமூகத்தை இழிவாக்கியபடி வாழ்ந்தவர்.