Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

புங்குடுதீவு மாணவியின் கொலை - பாலியல் வன்முறையின் பின்னணியில் .....

குரூரமாக பாலியல் வன்முறைக்குள்ளாக்கி கொல்லப்பட்ட புங்குடுதீவு மாணவியின் மரணமும், இந்தக் குற்றப் பின்னணியில் கைது செய்யப்பட்டவர்கள், சுற்றுவட்டார அயலவர்களும் - உறவினர்களும் என்பதும், சமூகம் குறித்தான பொதுக் கேள்வியை எழுப்புகின்றது. மனித விரோத குற்றங்களுக்கு தண்டனையை நாம் கோருவதும், அதற்காக போராடுவதுடன் எமது கடமை முடிந்துவிடாது. குற்றங்களுக்கு தண்டனை அவசியமானது தவிர்க்க முடியாது என்பது, குற்றங்கள் தோன்றுவதை தடுப்பதற்குரிய தீர்வாகிவிடாது. சமூகப் பொறுப்பற்ற தனிமனிதர்களின் இந்த குற்றப் பின்னணியைக் குறித்து தெரிந்து கொள்வதன் மூலமே, சமுதாய ரீதியான மாற்றம் குறித்து உண்மையாக நாம் ஈடுபடமுடியும்.

இந்த நிகழ்வு குறித்து பிழைப்புவாத அரசியல்வாதிகள், தங்கள் அரசியல் பிழைப்புக்கு ஏற்ப இந்த குற்றத்தை திசை திரித்துக் காட்டுகின்றனர். குறிப்பாக பேரினவாதத்துக்கு எதிரான குறுந்தேசிய இனவாத அரசியலாக்க முற்பபடும் விதம், இந்த குற்ற பின்னணிக்கு நிகாரனதும், கேவலமானதுமாகும். அவர்கள் இந்தக் குற்றத்தை சிங்கள மொழி பேசுகின்ற, அதிலும் பாதுகாப்பு படையினரே இது போன்ற செயல்களை செய்திருக்க முடியும் என்ற கருத்துப்பட மக்களை வழிநடத்த முற்படுவதுடன், அவர்கள் இது போன்றவற்றை செய்வதன் மூலம் தான் அவர்களால் அரசியல் செய்ய முடியும் என்றவளவில் இதை விரும்புவதுமே, அவர்களின் அரசியலாக வெளிப்படுகின்றது. இதைத்தான் "தமிழ்" ஊடகங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன.

இந்த பின்னனியில்

1. பாதுகப்பு படைகள் சூழந்த பிரதேசத்தில் இது நிகழ்ந்தாக கூறி மறைமுகமாக அவர்களை குற்றம் சாட்டுவதன் மூலம் - அதாவது

1.1. இதை பாதுகாப்பு படைகளே செய்தாக காட்ட முனைவதும்.

1.2. இது போன்றவற்றை தமிழன் செய்து இருந்தால், அது பாதுகாப்பு படையுடன் தொடர்புபட்டவர்களாகவே இருக்க முடியும் என்ற விதத்தில் கருத்துக் கூறுவதும்.

2. இந்த கொலை மற்றும் பாலியல் வன்முறைக்காக உறவினர்களையும், தமிழ் மொழி பேசியவர்களை பொலிசார் கைது செய்த போது, "ஊடகங்கள்" இது திசை திருப்புகின்ற கைதாக்க காட்டியது உட்பட, இப்படி உண்மையை மூடிமறைக்கவும், மக்களை தவறான போராட்டங்கள் மூலம் வழி நடத்திக் கொண்டுள்ளனர். இந்த பின்னணியில் இந்த குற்றங்கள் தமிழனால் தமிழனுக்கு நிகழ்வதை, அரசியல் ரீதியாக மூடிமறைக்கின்ற பொது உளவியல் போக்கை இனம் காண முடியும்.

ஒருவரின் மரணத்தையும் - அதுசார்ந்த உணர்ச்சியையும் முன்னிறுத்திய போராட்டங்கள், அறிவுக்கும் - பகுத்தறிவுக்கும் வேட்டு வைக்கின்றது. இனம் - ஆணாதிக்க உணர்ச்சி வழிப்பட்ட எல்லைக்குள் முடக்கப்பட்டுவிட்டு விடுகின்ற பொது அவலம் நிகழ்கின்றது.

என்றுமில்லாதவாறு எமது சமூகத்தில் குற்றங்கள் சமூகத்தில் பெருகுவதும், அந்த குற்றங்கள் கொடூரமான வடிவம் பெறுவது ஏன் என்ற கேள்வியை, இவர்களின் தவறான போராட்டங்கள் எழுப்புவதில்லை.

தவறான போராட்டங்கள் தோற்கடிக்கப்படும்

வடக்கிழக்கில் பேரினவாதமே இதை திட்டமிட்டு உருவாக்குவதாகவும், அவர்கள் இது போன்றவற்றை ஊக்குவித்து அவர்களின் துணையுடன் நிகழ்வதாகவும், இதில் ஈடுபடுவர்களை அவர்களின் எடுபிடியாகக் கூறுவது எந்த வகையில் சரியானது? இதன் மூலம் இதற்கு தீர்வு காண முடியுமா?

அரசு, அரசு படைகள் என்பது குற்றங்களின் பிறப்பிடம் என்பதும், குற்றங்களே அதன் மூலம் என்பது வெளிப்படையான உண்மைதான். ஆனால் குற்றங்களுக்கு அதை மட்டும் காரணமாக காட்டுவதன் மூலம், உண்மைகளை மூடிமறைக்க முடியாது. சமூகத்தில் இது போன்ற குற்றங்கள் பெருகுவதற்கு சமூகமும் காரணமாக இருப்பதில் இருந்து தப்பிச் செல்ல முடியாது. அதாவது அரசு - தனிமனிதன் என்ற அடிப்படையில் மட்டும் குற்றம் சாட்டி, அதில் இருந்து சமூகம் தன்னை விடுவிக்க முடியாது. உங்கள் குழந்தைகள் குறித்தும் - வாக்களித்து நீங்கள் தெரிவு செய்யும் அரசு குறித்தும், அதாவது இந்த சமூகம் குறித்தும் பொது அக்கறை மூலம் தீர்வு காண முடியும். இந்த வகையில்

1. கடந்த யுத்ததுக்கு முன்பான ஜனநாயகமற்ற சூழலும், அதற்காக கையாண்ட வன்முறை வடிவங்களும் குறித்து, இன்று சிந்தித்தாக வேண்டும்.

யுத்தம் நடந்த காலத்தில் முரண்பட்ட ஒரு விடையத்தையும், விரும்பியதையும் அடைய கையாண்ட வழிமுறையானது, வன்முறையை அடிப்படையாகக் கொண்டது. அந்த வன்முறையானது கொடூரமானது மட்டுமல்ல, அதை சமூகம் நியாயப்படுத்தியது. இந்த சமூதாயத்தின் தனிமனிதன் தான் விரும்பியதை அடைவற்கு, இதுவே பொது வழிமுறையாகி விடுகின்றது. கடந்த இந்த போக்கு குறித்து, சமூக ரீதியாக தன்னை கேள்விக்குள்ளாகி அதை மறுதளிப்பதன் மூலம் சமூக ரீதியாக அதிகரிக்கும் குற்ற பின்புலத்தை மாற்ற முடியும்.

2. இன்று எமது சமூகத்தை முற்று முழுதாகக் கட்டுப்படுத்திவரும் உலகமயமாக்கம் என்பது, பொருளாதாரத்தை மட்டுமல்ல பண்பாட்டுக் கூறுகளையும் கூட அழித்து புதியதை உருவாக்கின்றது. பழைய பண்பாட்டுக் கூறுகள் அழித்து, உருவாக்கிய வரும் புதிய பாண்பாடு என்ன? குற்றத்துக்கும் புதிய பாண்பாடுகளுக்கும் தொடர்பு உண்டா என்பது முக்கியமாக அலசிப் பார்க்க வேண்டியுள்ளது..

குறிப்பாக யுத்தத்தின் பின்னான சூழல், உலகமயமாக்கத்தை வடக்கு- கிழக்கில் திறந்து விட்டு இருக்கின்றது. இது இன்று பாரிய சமூக மாற்றத்தைக் கொண்டு வருகின்றது. முன்பு குடும்பம் - சமூகம் என்று கூடி வாழ்ந்த தன்மை அழிந்து, தனிமனிதனை முதன்மையாக்க கொண்ட நுகர்வு பண்பாட்டை உருவாக்கி வருகின்றது.

பொருளை மட்டும் நுகர்வதல்ல, மற்றொரு மனித உறவையும் கூட நுகர்வுக்கு உட்பட்டதாக குறுக்கி விடுகின்றது. பெண் என்பவள் பாலியல் நுகர்வுக்குரியவளாக, அவளின் உடல் அங்கங்கள் அதைத்தான் பிரதிபலிப்பதான எல்லைக்குள், ஆண் - பெண் உறவுகள் மாறிவிடுகின்றது.

யுத்ததுக்கு பின் வீங்கி வெம்பிய வடிவில் உலகமயமாதல் வடகிழக்கில் நுழைந்தது என்பது, தனிமனித குற்றங்கள் வீரியம் பெறுவதற்குரிய களத்தை உருவாக்கி இருக்கின்றது. உலகமயமாதல் பண்பாட்டு - காலச்சாரம் குறித்த சமூக விழிப்புணர்ச்சி இன்று அவசியமானது.

3. பெண் குறித்த ஆணாதிக்க பார்வைகள், பெண் மீதான வன்முறையின் மூலமாகும். பெண்கள் பாலியல் பொருளாக பார்க்கின்றதும், அதை நுகர்வதை நோக்காகக் கொண்ட சமூதாய பின்புலத்தில் இருந்து குற்றங்கள் அதிகரிக்கின்றதை சமூக ரீதியாக நாம் இனம் கண்பதன் மூலம் புதிய சமூதாயத்தை நோக்கிப் பயணிக்க முடியும்.

முடிவாக

குற்றவாளிக்கு தண்டனையை கோரி நாம் போராடும் போது குற்றவாளியைத் தண்டிக்க முடியுமே ஒழிய, குற்றங்களைத் தடுப்பதற்கு இது தீர்வல்ல. குற்றத்துக்கு எதிராக மட்டும் போராடுவதல்ல, குற்றம் நடக்க ஏதுவாக உள்ள சமூதாயத்தை மாற்றுவதற்காகவும் நாம் போராட வேண்டும்.