Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஏகாதிபத்திய கொள்கைகளே - அகதிகளின் மரணத்துக்கு காரணமாகும்

தொடரும் நூற்றுக்கணக்கான அகதிகளின் மரணமும் - பல்வேறு தேச மக்கள் பல முனைகளில் அகதிகளாக மேற்கு நோக்கிய படையெடுப்பும், ஐரோப்பாவையே குலுக்கி வருகின்றது. மேற்கின் ஜனநாயகமும் - மனிதாபிமானமும் காணாமல் போக - இன, நிறவாத அரசியல் முன்னுக்கு வருகின்றது. நாசிக் கட்சிகளின் செல்வாக்குகள் அதிகரிக்கின்றது. மேற்கில் மூலதனமும் - செல்வமும் சிலரிடம் குவிவதால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியானது, அகதிகளின் வருகையுடன் மேலும் தீவிரமாகி வருகின்றது. மேற்கில் அமைதி என்பதை- இந்த அமைப்பு முறை இனி சாத்தியமற்றதாகி இருக்கின்றது.

மேற்கு நோக்கி படையெடுக்கும் அகதிகள் - அவர்களின் சொந்தத் தேர்வல்ல. சொந்த மண்ணையும் - சொந்தங்களையும் விட்டு அகதிகளாக மேற்கு நோக்கி நகர்வது என்பது - ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் கொடுமையான கொள்ளைக்காரத்தனமும் - அதன் அடக்குமுறையுமே அடிப்படைக் காரணமாகும். இந்த வகையில்

1. உலகைக் கொள்ளையிடவும் - தங்கள் செல்வாக்கு மண்டலங்களை உருவாக்கவும் நடத்துகின்ற உள்நாட்டு யுத்தங்கள் - ஆட்சிக் கவிழ்ப்புகள், யுத்த அகதிகளை உருவாக்கி வருகின்றது.

2. மேற்கு நோக்கி செல்வம் குவிகின்ற இன்றைய நவதாராளவாதப் பொருளாதாரக் கொள்கை, பொருளாதார அகதிகளையும் உருவாக்கி வருகின்றது.

3. இயற்கையை வரைமுறையின்றி சூறையாடி குவிக்கும் செல்வத்தால் இயற்கை அழிவானது இயற்கை சார்ந்த அகதிகளை உருவாக்கி வருகின்றது.

இப்படி ஏகாதிபத்தியமல்லாத நாடுகளின் செல்வம் - மேற்கில் விரல்விட்டு எண்ணக்கூடிய தனிநபர்கள் சொத்தாக குவிந்து வருகின்றது.

உதரணமாக 2014 ஆண்டு 100 கோடி டொலருக்கு மேல் செல்வம் வைத்திருந்தவர்கள் எண்ணிக்கை 1826 பேராவர். இது 2013 இல் இருந்ததை விட 290 பேரால் அதிகமாகும். 2013 இல் மொத்தம் 6.5 ரிலியன் (6.5 000 000 000 000 000 000) டொலரை இவர்கள் சொந்தமாக கொண்டிருந்தவர்கள், 2014 இல் 7.05 ரிலியன் (7.0 500 000 000 000 000 000)யாக அதிகரித்துள்ளது. அதாவது 0.55 ரிலியன் அதிகமாகும்.

இப்படி உலகத்தின் செல்வம் சிலரிடம் குவிவதும் - அதை மேற்கு ஏகாதிபத்தியங்களில் குவிப்பதும் - இதற்காக உலகை அடிமைப்படுத்துவதும் - இன்று பெருமளவில் யுத்த - பொருளாதார - இயற்கை சார்ந்த அகதிகள் உருவாவதற்கான அடிப்படைக் காரணமாகும்.

இதில் இருந்து மீளவது என்பதும் - அமைதியான சுரண்டல் என்பதும் முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றது. மக்கள் வாழ முடியாத அளவுக்கு - தங்கள் வாழ்க்கை (செல்வங்களை) சிலரிடம் இழந்து வருகின்றனர்.

இதில் இருந்த மீள்வது என்பது பொதுவுடமையாவதும் - அனைவருக்கும் அவர் அவர் தேவைக்கு எற்ப செல்வம் பகிரப்படுவதனால் விளையக்கூடியதான ஒரேயொரு தீர்வாக இருக்கின்றது. இதற்கு வெளியில் எந்தக் குறுக்க வழியும் இனி கிடையாது. அதை விடுத்து உலகப் பொருளாதாரக் கொள்கையானது சுரண்டும் பொருளாதாரத்துக்கு நாலுகால் பாய்ச்சலில் செல்வதால், வகைதொகையின்றி அகதிகளை பலி எடுக்கின்றது.