Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

"யாழ் வீதியில் தனியாக நடமாடக் கூட முடியாத நிலையில் உள்ளேன்" அரசியல் கைதியின் மனைவி

12.09.2015 அன்று அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி யாழ்ப்பாணத்தில் நடந்த போராட்டத்தின் போது, கைதிகளின் மனைவி ஒருவரின் இக் கூற்று - இரண்டு அடிப்படை விடையங்களை பறைசாற்றுகின்றது.

1. அரசியல் கைதிகள் என்று யாரும் இலங்கையில் கிடையாது என்ற முகமாற்ற "நல்லாட்சி" அரசாங்கத்தின் நிலையையும் - கைதிகளுக்காக தேர்தலுக்கு முன்பு சமவுரிமை இயக்கம் போராடிய போது - சுமத்திரன் கைதிகள் விரைவில் விடுவிக்கப்பபட்டு விடுவார்கள் என்று கூறி - போராட்டத்தை தேர்தல் காலத்தில் தொடர்ந்து முன்னெடுப்பதை முடக்கியதையும் - இன்றைய இந்தப் போராட்டத்துடன் இனம் கண்டு கொள்ளக் கோருகின்றது.

2. "யாழ் வீதியில் தனியாக நடமாட கூட முடியாத நிலையில் உள்ளேன்" என்று பெண்ணின் அவலம் - இதற்குக் காரணம் வேறு யாருமல்ல கூட்டமைப்பினால் தலைமை தாங்கப்படும் யாழ் மேலாதிக்க தமிழ் தேசிய ஆணாதிக்க அமைப்புத் தான் என்பதை மறைமுகமாக தோலுரித்துக் காட்டிவிடுகின்றது.

தேர்தலுக்கு பின் கைதிகளின் போராட்டம் - தேர்தலுக்கு முன் கூட்டமைப்பின் காட்டிக் கொடுப்பின் பொது அரசியல் விளைவாகும். தாங்கள் தேசிய அரசாங்கத்துடன் இணைந்தும் பேசியும் - மேற்கு நாடுகளின் காலில் வீழ்ந்தும் - மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கின்ற மோசடிக்கு வாக்கு கேட்டு - மக்களை ஏமாற்றிக் கிடைத்த அதிகாரத்துடன் மக்கள் போராட்டங்களை முடக்கும் அரசியலை முன்னெடுத்துள்ளனர்.

2009 பின்பும் - தேர்தலுக்கு முன்பும் அரசியல் கைதிகள் விவகாரத்தை சமவுரிமை இயக்கம் கையில் எடுத்ததுடன், இலங்கை - புலம்பெயர் நாடுகளிலும் போராட்டத்தை நடத்தியது. இதன் போது முகமாற்ற "நல்லாட்சி" கைதிகள் விரைவில் விடுதலை என்றும் - இறுதியில் அப்படிக் கைதிகள் யாரும் இல்லை என்று பம்மியது.

இதற்கு தளம் போட்ட சுமந்திரன் கூட்டமைப்பு சார்பாக - கைதிகள் விடுதலை விரைவில் நடக்கும் என்றும் - அவர்கள் தொடர்பாக தங்கள் பேசிவருவதாகவும் - ஆகவே கைதிகளுக்காக போராட வேண்டியதில்லை என்று கூறி - சமவுரிமை இயக்கத்தின் கீழ் போராடிய கைதிகளின் உறவினர்களை போராட்டத்தில் இருந்தும் அகற்றி தனிமைப்படுத்தினர்.

ஆனால் இன்று மீண்டும் அரசியல் கைதிக்காக, போராடுகின்ற அவலம் தொடருகின்றது.

இந்த அவலத்தின் பின் குடும்ப உறுப்பினர்களின் வாழ்வியல் சோகங்கள் - பொருளாதார ரீதியான வாழ்க்கைச் சிரமங்கள் ஒருபுறம் இருக்க - பெண் பெண்ணாக வாழ முடியாத தன்மை கொடுமையானது, கொடூரமானது. இந்த நிலைமையானது "தமிழ்" மேலாதிக்க ஆணாதிக்க சமூக அமைப்பால் ஏற்படுகின்றது. பாலியல் ரீதியாக பெண்ணைப் பார்க்கின்ற - அணுகுகின்ற - குதற முனைகின்ற சமூக அமைப்பாகவே "தமிழ்" சமூக அமைப்பு இருக்கின்றது. தமிழ் பெண் என்பதால், தன் இனப் பெண்ணை அது விட்டுவிடவில்லை. "தமிழன்" என்று கூறி தன் சொந்த "இன - சாதி" என்ற தனது தூய்மைவாதம் சார்ந்த யாழ் மேலாதிக்க தேசிய வாதத்துடன் ஆணாதிக்கவாதியாக அலைவதால் - பெண் அதற்கு எதிராக போராட்டமின்றி பெண்ணாக வாழ்வது என்பது சாத்தியமில்லை.

"யாழ் வீதியில் தனியாக நடமாட கூட முடியாத நிலையில் உள்ளேன்" என்று பெண்ணின் கூற்றின் பின் உள்ள உண்மை, ஆண் துணையின்றி இந்த ஆணாதிக்க அமைப்பில் பெண் தனித்து வாழ்வதை "தமிழ்" பெண் என்பதால் மட்டும் வாழ்ந்துவிட முடியாது என்பதும் - பெண்ணாக இருப்பதால் வாழ்வதற்காக ஆணாதிக்க தமிழ்ச் சமூகத்துடன் போராட வேண்டி இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம். தமிழ் கைதிகளின் விடுதலைக்காக மட்டும் என்று மட்டுமில்லாமல் ஆணாதிக்க அமைப்புக்கு எதிராக போராடுவதன் மூலமே, தேசியத்துக்கும் - மானிட விடுதலைக்கு உண்மையாக இருக்கவும் - உழைக்க முடியும்.