Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இன ஐக்கியத்தை முன்னிறுத்திய டென்மார்க் கலைவிழா

கலையை ரசிக்கத் தெரிந்த மனிதன், எந்த மொழியைச் சேர்ந்த கலை என்று அதனைக்குறுக்கி ரசிப்பது கிடையாது. அப்போது மனிதம் முதன்மை பெற்று, மனிதனை மனிதன் நேசிக்க வைக்கின்றது. சமவுரிமை இயக்கம் மனிதத்தன்மை ஊடாக தமக்குள் ஒன்றுபட்டு - தமது முரண்பாடுகளை தாமே தீர்க்கும் ஜனநாயகப் பண்பாட்டை முதன்மையாகக் கொண்டு இயங்குகின்றது. இதற்கு அமைய புதிய கலைகளை அறிமுகம் செய்யவும் - படைக்கவும் முனைகின்றது. இதன் கன்னி முயற்சிகளே கலைவிழாக்கள்.

காலாகாலமாக இலங்கையிலும் - புலம்பெயர் நாட்டிலும் இனவாதம் ஊட்டப்பட்ட சமூகத்தில் "சிங்களவர் - தமிழர் - முஸ்லிம்கள் -மலையகத்தவர்" என்று பிரிந்து கிடக்கும் சமூகத்தில் நாம் வாழ்கின்றோம். சமவுரிமை இயக்கம் கலைகள் மூலம் மக்களை இணைக்கும் முயற்சி தான், “வசந்தத்தைத் தேடுகின்றோம்” என்கின்ற கலைவிழாவாகும்.

டென்மார்க் கலைவிழாவில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் இருந்து அவதானத்துக்கு வந்த இரு விடையத்தை எடுத்துக்காட்ட முடியும்.

1. புலம்பெயர் நாடுகளில் பிறந்த தமிழ்க் குழந்தைகளுக்கு - பெற்றோரால் சிங்களவர்கள் எம்மைப் போல் மனிதர்களல்ல, எமது எதிரி என்று ஊட்டப்பட்ட நஞ்சுகளை இந்த விழாவில் கலந்து கொண்ட குழந்தைகள் மத்தியில் தகர்த்தது. தமிழ் குழந்தைகள் தமிழைப் போல் - சிங்கள மொழியைப் படிக்கவும், அதன் மூலம் கலையை நெருக்கமாக ரசிக்கும் தமது விருப்பை வெளிப்படுத்தியதாகட்டும்

2. தமிழ் - சிங்கள மொழி வேறுபாடு இன்றி - மொழி புரியாத சூழலிலும், ஒட்டுமொத்தமாக நிகழ்வுகளை கூர்ந்து அவதானித்தும் - தங்கள் நடத்தைகள் மூலம் அதைக் கொண்டாடியதாகட்டும்

இப்படியாக இந்த நிகழ்வில் பற்பல. சமூக மாற்றத்தின் முதல்படியை இந்த நிகழ்வு வெளிப்படுத்தி நின்றது.

டென்மார்க் கிராமம் ஒன்றில் ஐரோப்பிய சமவுரிமை இயக்கமும் - டென்மார்க் சமவுரிமை இயக்கமும் ஒன்று இணைந்து நடத்திய இந்தக்கலைவிழாவில், விழா மண்டபத்தை நிரப்பும் அளவிற்கு மக்கள் கலந்து கொண்டார்கள். சிங்கள - தமிழ் - டெனிஸ் மொழிகள் பேசக்கூடிய மக்கள், அரங்கில் இணைந்து ரசித்தனர்.

இப்படி மூன்று மொழி பேசக்கூடிய மக்கள் ஒன்றாக கூடியிருக்க, இத்தாலி - பிரான்ஸ் கலைஞர்களுடன் டென்மார்க் கலைஞர்களும் மேடையேற - சமவுரிமை இயக்கம் மக்களை இணைக்கும் பாலமாக கலையை மாற்றியது.

இந்தவகையில் டென்மார்க் மற்றும் கனடா சமவுரிமை இயக்கம் நடத்திய முந்தைய கலைவிழாக்களும் - ஐரோப்பிய சமவுரிமை இயக்கம் பாரிசைத் தொடர்ந்து டென்மார்க்கில் நடாத்திய தனது இந்த இரண்டாவது நிகழ்வும் - கலை மூலம் மக்கள் ஐக்கியத்தை நோக்கிய தனது பயணத்தில் முதல் காலடியை முன்வைத்திருக்கின்றனர்.

இந்த நோக்கில் விரைவில் இலங்கையில் சமவுரிமை இயக்கம் முன்னெடுக்கவுள்ள கலைவிழாக்களில், ஐரோப்பிய சமவுரிமை இயக்கமும் இணைந்து முன்னெடுக்க இருக்கின்றது. அதற்க்கான உங்களின் பங்களிப்பையும் - ஆதரவையும் சமவுரிமை இயக்கம் கோரி நிற்கின்றது.