Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

கைதிகளின் விடுதலையின் பெயரில் கூட்டமைப்புக்கு எதிரான ஹர்த்தால்

அண்மையில் வடகிழக்கில் கைதிகளின் விடுதலையை முன்வைத்து, ஹர்த்தால் நடந்தப்பட்டது. இந்தக் ஹர்த்தாலானது அரசுக்கு எதிராகப் போராடக்கூடிய புதிய மனநிலையை உருவாக்கியதைத் தாண்டி - கைதிகள் மீதான உண்மையான அக்கறையுடனோ, அந்த உணர்வுடனோ முன்னெடுக்கப்படவில்லை. மாறாக கூட்டமைப்பில் தமக்கான ஒரு இடத்தைக் கோரி நிற்கின்ற தரப்புகளே - கூட்டமைப்புக்கு எதிரான ஹர்த்தாலை கைதிகளின் பெயரில் நடத்தினர். இந்தப் பின்னணியில்

1. அரசியல் கைதிகளின் விடுதலை மீதான சமூக அக்கறையின் பால் - சமூகத்தை அதன் பால் அணிதிரட்டும் வண்ணம் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவில்லை. ஹர்த்தாலை நடத்தியவர்களின் நோக்கம் இதுவாக இருக்கவில்லை. மாறாக தங்கள் சுயநலத்துடன் கூடிய ஒன்றாக - கூட்டமைப்புக்கு எதிராக நடத்தியிருந்தனர்.

2. கூட்டமைப்பின் மக்கள் விரோத அரசியலை அம்பலப்படுத்தாது அதை பாதுகாத்துக் கொண்டு - அதே அரசியலை முன்வைத்து தமக்கான ஒரு இடத்தை பெறுவதற்காக கைதிகளின் போராட்டத்தைப் பயன்படுத்தி இருந்தனர்.

காலகாலமாக தமிழ்மக்களை ஏமாற்றி பிழைக்கும் தங்கள் சொந்த அரசியல் வழியில் - கைதிகளின் போராட்டத்தை பயன்படுத்தி பிழைக்க - கூட்டமைப்புக்கு எதிராக கூட்டமைப்பின் அரசியல் வழியில் ஹர்த்தாலை நடத்தி இருந்தனர்.

கடந்த காலத்தில் தமிழ் மக்களின் பெயரில் தமிழ் மக்களுக்கு எதிராகவே போராட்டங்களை நடத்திய புலிகள் உள்ளிட்ட அனைத்து தமிழ் இனவாதிகளும் - போராட்டத்தின் பெயரில் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையை மறுத்து - இறுதியில் தமிழ் மக்களை கொல்ல உதவினர். தங்கள் சுயநலத்துகாக செய்ததை எல்லாம் விடுதலைப் போராட்டமாகவும் - இதன் மூலம் சிலர் இலாபம் அடைந்ததுமே எம்முன்னான வரலாறு.

புலிக்குப் பின்பும், இதேபோன்று தமிழ் மக்களின் பெயரில் வாக்குக் கேட்டு வென்ற கூட்டமைப்பு - கைதிகள் போராட்டத்தை முறியடித்துப் பிழைக்கும் அதே பிழைப்புவாதத்தையே தொடருகின்றது மறுபக்கத்தில் இந்த பிழைப்புவாதத்தில் தனக்கான பங்கைக் கோரி - கூட்டமைப்புக்கு எதிராக கைதிகளின் பெயரில் ஒரு ஹர்த்தாலாக அரங்கேற்றினர்.

இந்தக் ஹர்த்தால் ஏன் நடந்தது என்று கூட தெரியாத அளவுக்கு மக்களை மந்தையாக மாற்றி - என்ன நடக்குமோ என்று இனந்தெரியாத பொதுவான அச்ச உளவியலுக்குள் - ஹர்த்தாலை நடத்தி முடித்திருக்கின்றனர்.

தமிழ் இனவாதத்தை முன்வைத்து செயற்படும் கூட்டமைப்பில் தமக்கான ஒரு இடத்தைக்; கோரியும் - கூட்டமைப்பினுள்ளே அதிருப்தியுற்றவர்கள் தமக்கான அதிகாரத்தையும் முன்வைத்து தான் ஹர்த்தாலை நடத்தினர்.

கூட்டமைப்பின் அதே அரசியலைக் கொண்டதும் தங்கள் சுயநலத்திற்காக கைதிகளை முன்னிறுத்தி கூட்டடைப்புக்கு எதிராக நடத்திய கீழ்த்தரமான அரசியல் தான் இந்த ஹர்த்தால். அரசியற்கைதிகளின் பின் சமூகமாக அணிதிரண்டு உணர்வுபூர்வமாக முன்னெடுக்காத இந்தக் ஹர்த்தால், உண்மையில் கைதிகளின் போராட்டத்தை கேலிசெய்துவிடுகின்றதும் - அதை வலுவிழக்கச் செய்கின்றதைத் தாண்டி, சமூகத்தில் எந்த உணர்வையும் உணர்ச்சியையும் உருவாக்கவில்லை.

இப்படி கைதிகளுக்காகப் போராட வேண்டும் என்ற சமூக உணர்வற்ற - சமூதாய நோக்கற்ற அரசியல் என்பது, மக்களை தொடர்ந்து ஏமாற்றி பிழைப்பதற்கே முனைகின்றது.

இங்கு மக்கள் பற்றிய உண்மையான அரசியலும் - அக்கறையும் இருப்பதில்லை. சமூக உணர்வைத் தட்டியெழுப்புகின்றதும், சமூகம் அதற்காக போராட வழிகாட்டுகின்ற அரசியலே உணர்வுபூர்வமானது, உண்மையானதுமாகும். நடந்த ஹர்த்தால் முதல், கைதிகள் பற்றி கூட்டமைப்பின் அதிருப்தியுற்ற தரப்பின் அரசியல், கூட்டடைப்பின் காட்டிக்கொடுக்கும் அதே அரசியலானது. இதை இன்று இனம் கண்டு அரசியல் ரீதியாக போராடுவதன் மூலமே - உண்மையான போராட்டத்தை வலுப்படுத்தி மக்களின் ஜனநாயகக் கோரிக்கையை வென்று எடுக்க முடியும்.