Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஜனநாயகம் குறித்த பித்தலாட்டங்கள்...

கடந்த 25 முதல் 30 வருடங்களாக (புலிகள் இருந்த வரை) வடகிழக்கு தமிழர்கள் மத்தியில், ஜனநாயகம் என்பது புலியெதிர்ப்பாகவே திரிபடைந்து காணப்பட்டது. புலியெதிர்ப்பும், புலியொழிப்பும் "ஜனநாயகமாக", ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்த அரசியலைக் கொண்டிராதா புலியல்லாத பெரும்பான்மையினரால் முன்வைக்கப்பட்டது. இதனால் புலி ஆதரவு கொண்ட பொது தளத்தில், புலியெதிர்ப்பாகவே ஜனநாயகம் பற்றிய புரிதல் காணப்பட்டது.

புலிகளைச் சார்ந்திருந்த பெரும்பான்மையினர் மத்தியில், ஜனநாயகம் என்பது தேர்தலில் வாக்குபோடுவதாகவே புரிந்து கொண்டதுடன், தொடர்ந்து அதையே "ஜனநாயமாக" கருதி வாக்கு போடுவதுடன் தங்கள் அரசியலை கடமையை நிறைவு செய்கின்றனர்.

புலி அழிந்த பின்பு புலியெதிர்ப்பு, புலியொழிப்பு "ஜனநாயகத்தை" முன்வைத்த "ஜனநாயகவாதிகள்", தனிநபர் கருத்தை முன்வைக்கும் முதலாளித்துவ சுதந்திரத்தையே "ஜனநாயமாகவும், ஜனநாயக" உரிமையாகவும் முன்னிறுத்துகின்றனர். வாக்குப் போடுவதே ஜனநாயகமானது போல், தனிமனிதன் கருத்துரிமையே ஜனநாயகமாகத் திரிபடைந்து இருக்கின்றது.

சமூகத்தின் பொது வாழ்வியலின் அங்கமே ஜனநாயகம் என்பதை மறுத்து, தனிநபர் விவகாரமாக்கி ஜனநாயகத்தை மறுத்து விடுகின்றனர். அனைவருக்கும் ஜனநாயகம் இருந்தால், ஜனநாயகம் பொருளற்றதாகிவிடும். ஜனநாயகம் என்பதை தனிமனித உரிமையாக விளங்கிக் கொள்ளும் போது, ஜனநாயகத்தை மற்றவருக்கும் மறுப்பதாகி விடுகின்றது.

தமிழர் வரலாற்றில் "தமிழர்" என்ற அடையாளம் மேலோங்கிய 1980களில், ஜனநாயகம் குறித்து இயக்;கங்களிடமும், இயக்கத்துக்குள்ளும் நடத்திய போராட்டத்தின் அரசியல் சாரத்தை மறுத்ததன் மூலமே, ஜனநாயகம் திரிபுபட்டதுடன் அது இன்று மறுதளிக்கப்படுகின்றது.

இன்று நடக்கும் எல்லா சமூக விடையங்களிலும், அது சார்ந்த பொதுக் கருத்துகள், சிந்தனை முறைகள், நடைமுறைகளிலும் பிரதிபலிக்கின்றது.

குறிப்பாக யாழ் பல்கலைக்கழக வன்முறையை எடுப்போம். வன்முறையை ஆதரித்தும் – எதிர்த்தும் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் இரண்டிலும், ஜனநாயக விரோதத் தன்மையைக் காணமுடியும்;.

யாழ் பல்கலைக்கழக வன்முறையை நியாயப்படுத்தியோ - இரண்டு இனவாதத்தையும் பொதுமைப்படுத்தியோ - ஒடுக்கும் இனவாதத்துக்கு எதிராக சிங்கள மொழி பேசும் மக்களிடையே முன்வைக்கும் ஒடுக்கும் இனவாதத்துக்கு எதிரான பிரச்சாரத்தை, தமிழ் இனவாதத்துக்கு சார்பாக முன்வைத்தோ… ஒடுக்கும் தமிழ் இனவாதத்தையும் நியாயப்படுத்திவிடுவது நடக்கின்றது.

வன்முறையை ஆதரித்தவர்கள் தங்கள் சொந்த தமிழ் இனவாதத்தை ஒடுக்கப்பட்டவர்களின் "ஜனநாயகப்" போராட்டமாகவும், அதை ஒடுக்கும் சிங்கள இனவாதத்துக்கு எதிரான ஒன்றாகக் காட்டி ஆதரித்தனர்.

வன்முறை எதிர்த்தவர்களில் பலர் வெளிப்படையான வெளித்தோற்றத்திலான பொது வன்முறையை எதிர்த்தார்களே ஒழிய, வன்முறையில் ஈடுபடும் தமிழ் சமூக அமைப்பின் உட்சாரத்தில் இருந்து எதிர்க்கவில்லை.

அதாவது ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் போராட்டத்துக்கு பதில் ஒடுக்கும் இனவாதமாக இருப்பதையும், அதற்கு அடிப்படையாக தமிழனின் சாதிய சமூக அமைப்பு செயற்படுவதையும் கண்டு கொள்ளவில்லை. இங்கு சாதியை தன்னகத்தே கொண்ட தமிழ் சமூகம், அதைக் கடந்து மனிதத் தன்மையையோ, ஜனநாயகத்தையோ கொண்டு இருப்பதில்லை. தமிழன் என்ற இன அடையாளம் சாதியை உள்ளடக்கியதாக, அதை பாதுகாக்கின்றதாகவே இருக்கின்றது.

பொருளின் உட்சாரத்தை ஆராயாது, உருவத்தைக் கொண்ட கருத்துகள் மூலம் சமூகத்தை தொடர்ந்து முடமாக்கி விடுகின்றனர்.

இங்கு இதற்கான அடிப்படையானது ஜனநாயகத்தின் உட்சாரத்துக்கு பதில் வெளித்தோற்றத்தை ஜனநாயகமாக கருதுவதாகும். அதாவது வாக்குரிமை, தனி மனிதவுரிமை என்று வெளித்தோற்;றத்தை ஜனநாயகமாக கோருவதன் பின்னணியில் இருந்து, இவை இனம் காணப்பட வேண்டியிருக்கின்றது.

ஆயுதம் ஏந்திய தமிழ் இயக்கங்கள் தோன்றிய காலங்களில், ஜனநாயகத்துக்கான போராட்டங்கள் அக்கம்பக்கமாக நிகழத் தொடங்கியது எமது கடந்த வரலாறு. இங்கு ஜனநாயகமாக முன்வைத்து கோரியது, புலி எதிர்ப்பையல்ல, தனிநபர்களின் கருத்துச் சுதந்திரத்தையுமல்ல, மாறாக அனைத்து சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை நடத்துவதற்கான, அதற்கான கருத்துக்களை முன்வைப்பதற்கும், அதற்காக நடைமுறையில் போராடுவதற்குமான மனித உரிமையைத் தான் ஜனநாயகமாகக் கோரினர். 1980 களில் தொடங்கிய ஜனநாயகத்துக்கான போராட்டத்தின் வரலாறு இது தான்.

சமூக (சாதியம், ஆணாதிக்கம், வர்க்கம் …) ஒடுக்குமுறைக்கு எதிரான கருத்துகளை முன்வைக்கவும், போராட்டங்களை நடத்தவும் இயக்கங்களிடம் ஜனநாயகம் கோரப்பட்டது. இந்த உண்மை காலப்போக்கில் காணாமல் போனது. அதாவது சாதியம், ஆணாதிக்கம், வர்க்கம் … போன்றன, மக்களுடன் மக்களாக இணைந்து போராடுவதற்கல்ல, இதை தனிநபர் கருத்தாக வைத்திருக்கும் உரிமையாக குறுகிப் போனது. போராடும் உரிமையும், அதற்கான நடைமுறையும் தான் ஜனநாயகம் என்பது கைவிடப்பட்டு, தமக்கு தாமே அதை மறுப்பவராக மாறி, மற்றவர்களுக்கும் அதை தங்கள் நடைமுறை மூலம் இல்லாதாக்கினர். ஒடுக்குமுறையை ஒழித்துக் கட்டும் ஜனநாயகத்துக்காக நடைமுறையில் ஈடுபடாதவன், தனக்கான கருத்து சுதந்திரமே ஜனநாயகமாக கருதுமளவுக்கு ஜனநாயகத்தை நலமடித்தனர்.

சமூகத்தின் அடிப்படை ஜனநாயக உரிமையாக, வாழ்வின் அங்கமாக ஜனநாயகத்தை கருதி போராடுவதற்குப் பதில். தன் இருப்புக்கும், பிழைப்புக்குமே "ஜனநாயகம்" என்ற அளவுமட்டத்தில் ஜனநாயகத்தினை செயலற்ற ஒன்றாக மாற்றியுள்ளனர். ஜனநாயகத்தை வெறும் தனிமனித கருத்துரிமையாக, அது சமூகத்தின் வாழ்வியலுக்கானதல்ல என்பதே ஜனநாயகத்தை பற்றி பீற்றிக் கொள்ளுகின்ற பலரின் பொதுவறிவாகவும் அளவுகோலாகவும் இருக்கின்றது.

மனித வாழ்க்கையின் பொது அளவுகோலாக கொண்டு ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தாத, செயலற்ற வெறும் கருத்தாகவும், தங்களின் தனிப்பட்ட தனிமனித உரிமையாக கருதுகின்றதன் மூலம், அடிப்படையில் கருத்து முதல்வாதிகளாகவும் இருக்கின்றனர். ஜனநாயகத்தின் பொருள்முதல் பார்வை என்பது, அது சமூகத்தில் வாழ்வுடன் செயற்படும் செயல்பூர்வமான நடைமுறைதான்.

அறிவுத் துறையினராக தம்மை முன்னிறுத்திக் கொள்ளும் தரப்பிடம், ஜனநாயகம் பற்றிய புரிதலும், ஜனநாயகம் குறித்த பொது நடைமுறையும் கிடையாது. அறிவுத்துறையே இப்படி செயற்படும் போது, சாதிய சமூகத்தில் வன்முறையைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. அறிவுதுறையினர் யாழ் பல்கலைக்கழக வன்முறையை வெறும் கருத்தாக கண்டிப்பதன் மூலம், சாதிய சமூகத்தின் வன்முறைப் போக்கை மாற்றிவிட முடியாது. நடைமுறையில் எப்படி மக்களுடன் மக்களாக இணைந்து சமூகத்தை ஜனநாயகப்படுத்த போகின்றோம் என்பது குறித்து நாம் சிந்திப்பதும், அதற்கான சமூக ஜனநாயக நடைமுறையில் ஒன்றிணைந்து வாழ்வதுமே ஜனநாயகமாகும்.