Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

"ஜனநாயகமாக" முன்னிறுத்தப்படுவது ஜனநாயக மறுப்பே!

தனிவுடமைச் சமூக அமைப்பு உருவாக்கும் தனிநபர்வாதமே, "ஜனநாயகமாகத்" திரிந்திருக்கின்றது. அதாவது இது தனிநபரின் கருத்துரிமையாக "ஜனநாயகத்தைப்" புரிந்துகொள்ள வைக்கின்றது. இது இயல்பாகவே தனிநபர்வாதமல்லாத கருத்தை மறுப்பதுடன், சமூகத்தினது பொது ஜனநாயகத்தையே மறுக்கின்றது.

சமூகத்திற்கு ஜனநாயகம் இருக்கும் போதே, தனிமனிதனின் ஜனநாயகம் உறுதி செய்யப்படும்;. இல்லாது தனிமனித "ஜனநாயகம்" என்பது, சமூகத்துக்கான ஜனநாயக மறுப்பாகும். தனிமனித உரிமைகள் சமூகத்திற்கு இல்லாத வரை, தனிமனித "உரிமை" என்பது சமூகத்துக்கு எதிரானதாகவே செயற்படுகின்றது.

தனிநபரின் கருத்துரிமையே "ஜனநாயகம்" என்று சிந்திக்கின்ற, அதைச் செயற்படுத்துகின்ற முறையானது, அடிப்படையில் சமூகத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்கின்ற தனிவுடமை சிந்தனை முறையாகும். தனிநபர்களின் "கருத்துரிமை" என்பது ஜனநாயக மறுப்பை அடிப்படையாகக் கொண்டது. அதாவது தனிநபர் "கருத்துரிமையை" நடைமுறையில் செயற்படுத்த முடியாது. தனிநபர்கள் தனித்தனியாக கருத்தாக வைப்பதும், அதை முரண்பாடாகக் காண்பதும் கருத்து (மனித) ஒன்றிணைவதை மறுக்கின்றது. இதன் அர்த்தம் கருத்து கருத்தாகவே இருக்கும், ஒன்றிணைந்த கருத்தாக (சமூகமாக) மாறாது என்பதையே இது முன்வைக்கின்றது.

இதற்கு மாறாக கருத்துகளுக்கு ஜனநாயகம் என்று சிந்திக்கின்ற செயற்படுத்துகின்ற முறைமையானது, சமூகத்தின் பொதுக் கருத்து சார்ந்ததாக கருத்தை வகைப்படுத்துகின்றது. இது தனியுடமைக்கு முரணான சமூகச் சிந்தனை முறையுமாகும். கருத்துச் சுதந்திரம் என்பது கருத்துகளை மத்தியத்துவப்படுத்தி, கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்வதாகும்;. இதைத்தான் ஜனநாயக மத்தியத்துவம்; என்கின்றோம்.

தனிமனித உரிமைகளைக் கோரும் போது, நடைமுறைப்படுத்தும் போது, சமூகத்தில் இருந்து அணுக வேண்டும். இதைவிடுத்து தனிமனித உரிமையாக "ஜனநாயகத்தை" முன்னெடுக்கும் பொது அணுகுமுறை, ஜனநாயகத்துக்கு முரணாகவே செயற்படுகின்றது.

இந்த தனிமனித சிந்தனை முறையிலான பொதுப்புத்தியிலான ஜனநாயக மறுப்பே "ஜனநாயகமாகி" இருக்கின்றது. ஜனநாயகம் குறித்த பொதுப் புரிதல் தொடங்கி அறிவு சார்ந்த விளக்கம் வரை, ஜனநாயக மறுப்பையே "ஜனநாயகமாக்கி" இருக்கின்றனர்.

இது சாராம்சத்தில் தனிநபர் நலன்களைப் பூர்த்தி செய்யக்கூடிய கோசமாகவே "ஜனநாயகம்" திரிந்து இருக்கின்றது. ஜனநாயக மறுப்புக்கு எதிராக, அறிவுத்துறையினராக தம்மைக் காட்டிக் கொள்கின்றவர்கள் முன்வைக்கும் "ஜனநாயகமும்" இது தான்.

பொதுவாக ஜனநாயகம் குறித்து அதிகம் பேசுகின்ற பாராளுமன்ற அரசியல்வாதிகளோ, ஜனநாயகம் மக்களுக்கானது என்பதை ஏற்றுக்கொண்டு அதை நடைமுறைப்படுத்துவதில்லை. மாறாக "ஜனநாயகம்" தங்களை ஆளும் வர்க்கமாக மாற்றவும், அதன் மூலம் சுரண்டப்படும் வர்க்கங்களுக்கு எதிராக அதிகாரத்தைச் செலுத்தி சொத்தைச் சேர்க்கவும், சுரண்டும் வர்க்கத்தின் நலனை பாதுகாக்கவுமே.. "ஜனநாயகம்" என்பதே அவர்களின் கொள்கையும் நடைமுறையுமாகும். இதற்காக மக்களை வாக்குப் போட வைப்பதன் மூலம், மக்களின் ஜனநாயகக் கடமை முடிந்து விடுகின்றது என்று தூக்கிப் போடுகின்றனர்.

சமூக நடைமுறையில் இருந்து விலகிய தனிநபர்கள் ஜனநாயகம் குறித்து பேசுகின்ற போது, "ஜனநாயகத்தை" சமூக நடைமுறையாக முன்னிறுத்துவதில்லை. மாறாக தன்னிலை சார்ந்த தனிநபர்வாதமாக ஜனநாயகத்தைக் காண்கின்றனர். இவர்கள் "ஜனநாயகம்" குறித்து பேசுகின்ற போது, ஜனநாயகத்தை பரந்துபட்ட மக்களுடன் நடைமுறைப்படுத்துவது எப்படி என்பது குறித்துக் கூட அக்கறைப்படுவதில்லை. இதனால் ஜனநாயகத்தை நடைமுறையில் பயன்படுத்துவது குறித்து எந்த அக்கறையும் பொதுவாக கொண்டிருப்பது இல்லை, அத்துடன் ஜனநாயகம் குறித்தான புரிதலும் இருப்பதில்லை.

தனிநபரின் கருத்துரிமையாக ஜனநாயகத்தை முன்னிறுத்துகின்ற போது, தன்னை அறிவாளியாக முன்னிலைப்படுத்தி பிரமுகராக நிலைநிறுத்துவதையும் இதன் மூலம் கிடைக்கும் லாபங்களையுமே நோக்காகக் கொள்கின்றனர். இதனாலேயே அது ஜனநாயகத்தை மறுப்பதை தனக்குள் அடிப்படையாகக் கொண்டு செயற்படுகின்றது.

இந்த தனிமனிதவாதமானது தனிநபருக்கான கருத்துச் சுதந்திரமாக, "ஜனநாயகத்தை" திரித்து விடுகின்றனர். ஜனநாயகம் கருத்துக்கானதல்ல, தனிநபருக்கு என்ற பிரமையை உருவாக்கி விடுகின்றது. தனிநபர் கருத்து சொல்லும் உரி;மையே ஜனநாயகம் என்று திரிந்து விடுகின்றது.

கருத்துக்கா அல்லது தனிநபருக்கா ஜனநாயகம் என்ற அடிப்படைக் கேள்வியை எழுப்பி, வெவ்வேறு வழிமுறைகளையும் உருவாக்கிவிடுகின்றது. அதாவது ஜனநாயகமும் ஜனநாயக மறுப்புமாக மாறுகின்றது.

மக்களை அவர்களின் சொந்த வாழ்வியல் முரண்பாடுகளுடாக அணிதிரளுகின்ற நடைமுறையின் போது தான், ஜனநாயகம் என்பது உண்மையாகவே செயற்படுகின்றது. மக்கள் அணிதிரளும் நடைமுறையில், ஜனநாயக நடைமுறையாக இருக்கவில்லை என்றால், மக்கள் அணிதிரளமாட்டார்கள். ஜனநாயகத்தின் உண்மையான நடைமுறை என்பது, மக்கள் திரள் போராட்டங்களிலும், அதற்காக மக்களை ஓருங்கிணைக்கும் வடிவங்களிலும் தான் காணமுடியும். இதற்கு வெளியில் அல்ல.

நடைமுறையில் இருந்து விலகிய தனிநபர்வாத அறிவுத்துறையினர் ஜனநாயகத்தை பேசும் பொருளாகக் கொள்ளும் போது, கருத்துப் போக்குகளுக்கு ஜனநாயகம் என்பதை மறுத்து விடுகின்றனர். தனிநபரின் கருத்துரிமையாக ஜனநாயகத்தைத் திரித்து, கருத்துப் போக்குக்கான ஜனநாயகத்தை மறுதளித்து விடுகின்றனர்.

மக்கள் திரள் ஜனநாயகமானது கருத்துப் போக்குகளாகவே கருத்துரிமையைக் காண்கின்றது. முரண்பட்ட கருத்துகளை ஜனநாயக மத்தியப்படுத்துவதன் மூலமே, ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்துகின்றது. இதன் மூலம் தனிமனிதனின் ஜனநாயகத்தை உறுதிசெய்கின்றது. எந்த தனிநபரும் தனக்கான ஒரு கருத்துப் போக்குடன் இணைந்து கொள்கின்றனர். அதாவது தனது கருத்தை முன்வைக்கும் செயல்முறையுடன் தன்னை இணைத்துக் கொள்கின்றனர்.

இங்கு தான் உண்மையான ஜனநாயகம் நிலவுகின்றது. இதற்கான வழிமுறைகள் தான், ஜனநாயக நடைமுறைக்கான பொறிமுறையாகும்.