Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சந்தா தொழிற்சங்கங்களைக் காப்பாற்றவே ஒப்பந்தம்

தோட்ட தொழிலாளர்களின் கூலிக்கான ஒப்பந்தம் என்பது கண்துடைப்பாகும். மாறாக சந்தா தொழிற்சங்கங்களை தொழிலாளர்களிடம் இருந்து காப்பாற்ற, அரசு – முதலாளிகள் - மலையகத் தலைவர்கள் தமக்குள் செய்து கொண்ட ஒப்பந்தம். அதாவது காலாகாலமாக தொழிலாளர்களை ஏமாற்றி வந்த சந்தா தொழிற்சங்கங்களை தொழிலாளர்கள் தோற்கடிப்பதை தடுப்பதற்காக, செய்து கொண்ட ஒப்பந்தமே இது.

பலர் பொதுவில் கருதுவதுபோல் தோட்டத் தொழிலாளர்கள், கூலிப் போராட்டங்களை மட்டும் வெறுமனே நடத்தவில்லை. தொழிலாளர்களின் வாழ்க்கையை நகரவிடாத விலங்காக மாறிவிட்ட சந்தா தொழிற்சங்கங்களையும், நவதாராளமயத்தை முன்னெடுக்கும் மலையக பாராளுமன்றவாதிகளையும் தோற்கடிக்கும் போராட்டமாகவே கூலிக்கான போராட்டம் வளர்ச்சி பெற்று இருந்தது. ஒப்பந்தம் மூலம், மலையக மக்களின் பிரச்சனைகள் தீர்ந்துவிட்டதாக கூறி, சந்தா தொழிற்சங்கங்கள் போராட்டத்தினை நிறுத்திவிட முனைகின்றனர்.

1000 ரூபா நாள் கூலியையும், 6 நாள் வேலை நாளையும், ஒப்பந்தம் காலாவதியான காலம் முதலான மேலதிக சம்பளத்தையும் கோரி நடந்த தொடர்போராட்டம், தற்காலிகமாக பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது. மலையக மக்கள் யாருக்கு வாக்குப் போட்டார்களோ, யாருக்கு சந்தா கொடுக்கின்றனரோ, அவர்களால் தான் முடிவுக்கு வந்திருக்கின்றது.

யார் எமக்காக போராடவில்லை என்று மலையக மக்கள் உணர்ந்தார்களோ, அவர்கள் உருவாக்கிய ஒப்பந்தத்தில் அவர்களே கையெழுத்திட்டு உள்ளனர். இதன் மூலம் மலையக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் ஆழமாகி கூர்மை அடைந்திருக்கின்றது.

அறவிடும் கட்டாய சந்தா தொடங்கி சம்பளத்தில் ஒரு பகுதியை பிடித்தபின் கொடுக்கும் கூலியான, இருக்கின்ற இன்றைய வாழ்க்கையைக் கூட தக்க வைக்க முடியாது. அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு, பண வீக்கம் மூலம் அதிகரிக்கும் விலையேற்றங்கள், வரியற்ற சந்தை மூலம் மேற்குக்கு நிகராக பொருட்களின் விலை அதிகரிப்பு, பெரும்பான்மை இலங்கை மக்களை வறுமையை நோக்கி வழிநடத்துகின்றது.

மலையக மக்களுக்கு வழங்கும் குறைவான கூலி, உத்தரவாதமற்ற வேலைநாட்கள், மாத சம்பளத்துக்குப் பதில் நாட்கூலி முறைமை இவை அனைத்தும், காலனிய கால மலையக அடிமை நிலையை தொடர்ந்து தக்கவைக்க உதவுகின்றது.

நாட்டின் பொது சிவில் சட்டம் தொழிலாளர்களுக்கு வழங்கும் பொது உத்தரவாதங்கள், மலையக மக்களுக்கு வழங்க மறுக்கின்ற சட்டவிரோதமான மனிதவிரோத ஆட்சிமுறை, உழைக்கும் வர்க்கத்தை நவீன அடிமையாக தொடர்ந்து வைத்திருக்க விரும்புகின்ற ஆளும் வர்க்கத்தின் கொள்ளையும் நடைமுறையுமாகும்.

மலையக தமிழர் என்று கூறி, இனரீதியாக மக்களை பிரித்து வாக்கு பெறும் நவதாராள பாராளுமன்ற அரசியல்வாதிகளின் துணையுடன் தான், நவீன அடிமைத்தனத்தை அடிப்படையாகக் கொண்ட, அதிகுறைந்த கூலி உழைப்பினை தொடர்ந்து தக்க வைக்க முடிகின்றது.

நவதாராளவாத அரசு- முதலாளிகள் - மலையக தலைவர்கள் ஒன்றிணைந்து தொழிலாளர்களை தோற்கடிக்கின்ற போது, அவர்கள் தமக்குள் இனம் மதம் சாதி பார்ப்பதில்லை. இனம் மதம் சாதி கடந்து ஒன்றுபட்டு நிற்கின்றனர்.

இதை நாம் முறியடிக்க - இனம் மதம் சாதி கடந்து, இலங்கையின் அனைத்தும் உழைக்கும் மக்களும் ஆளும் வர்க்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்த போராட்டத்தை முன்னெடுப்பது அவசியமானது. சந்தா தொழிற்சங்கங்களுக்கு எதிராக நின்று போராட்டங்களை முன்னின்று நடத்திய தொழிலாளர்கள், எதிர்காலத்தில் இன்று நடந்தது போல் நடக்காது இருக்க, இலங்கை தழுவிய அனைத்து தொழிலாளர்களுடன் இணைந்து கொள்வதும் - ஒன்றுபட்ட பலத்தை கட்டியெழுப்புவதையும் நோக்கி தங்கள் கவனத்தை செலுத்த வேண்டும். இதன் மூலம் மலையக தொழிலாளர்கள் நவீன அடிமைத்தனத்தில் இருந்து மீள முடியும்.