Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பிராஜவுரிமைக்கான போராட்டத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

பிறப்புரிமையான பிரஜாவுரிமையை மறுக்கும் இலங்கை அரசின் ஜனநாயக விரோதக் கொள்கைக்கு எதிரான போராட்டம் தான், குமாருக்கான போராட்டமாகும்;. தனிப்பட்ட குமாரின் உரிமைக்கானதல்ல. ஒருவன் வாழ்வு சார்ந்த போராட்டத்தினால், இன்னொரு நாட்டின் பிரஜாவுரிமையைப் பெற்றுவிடுவது என்பது ஜனநாயக விரோதமானதல்ல. இதை ஜனநாயக விரோதமாக கருதி, பிறந்த நாட்டின் பிரஜாவுரிமையை மறுக்கும் ஜனநாயக விரோத அரசியல் அமைப்பு முறைக்கு எதிரான போராட்டமே, குமாருக்கான போராட்டமாகும். 

இலங்கையில் நிலவும் பிரஜாவுரிமைச் சட்டமானது, 1948 இல் இனவாத அடிப்படையில் பிரஜாவுரிமையை பறிக்கும் சட்டமாக மாறியது. இவை காலத்துக்கு காலம் திருத்தப்பட்ட போதும், தொடர்ந்து இனவாத உள்ளடக்கத்தைக் கொண்டதாகவும், தங்கள் வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்யக் கூடிய, சொத்துடையவர்களுக்கு மட்டும் சலுகை கொடுக்கின்ற சட்டமாக மாறி இருக்கின்றது. 

இந்தப் பின்னணியிலேயே குமாரின் போராட்டம் தொடங்கியது. நிலவுகின்ற சட்டத்தை முன்னிறுத்தி போராட்டத்தை எதிர்த்தவர்களையும், இடதுசாரியத்துக்கு எதிரான அவதூறுகளை பரப்பியவர்களையும் கடந்து போராட்டம் தொடங்கியது. எதிர்க்கட்சியாக இருந்தவர்கள் பாராளுமன்றத்தில் இதைப் பேசமறுத்த சூழலில், தமிழரைப் பிரதிநிதித்துவம் செய்யும் தரப்பாக இருந்தபடி, இப் போராட்டத்தை இனவாதம் மூலம் மூடிமறைக்கப்பட்ட பொதுப் பின்னணியில் போராட்டம் தொடர்ந்தது. இடதுசாரிய குழுவாதத்துக்குள் பொதுப் போராட்டங்களை மழுங்கடித்த பொதுப்  பின்னணியில்.. நாடு தழுவிய போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

சட்டரீதியாக தொடங்கிய போராட்டமானது, சிறைக்குள்ளான போராட்டமாக மாறியது. சிறைக்கு சமாந்தரமாக கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் தொடங்கிய அடையாளப்  போராட்டமானது, சிறைவாழ்க்கை போல் ஒரு வருடத்துக்கு மேலாக நீடித்தது. 

இப் போராட்டத்துக்கு  வலுச்சேர்க்கும் வண்ணம் நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்கள், துண்டுப்பிரசுர விநியோகம், போஸ்டர்கள் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது. வேறு நாடுகளிலும், தொடரான போராட்டங்கள் நடத்தப்பட்டது.

இந்தத் தொடர் போராட்டங்களானது சிறைக்கு பின்பு நாடு கடத்துவதை தடுத்து நிறுத்தியுள்ளது. தற்காலிக விசாவையும், பிரஜாவுரிமையை மீள வழங்கும் வாக்குறுதியையும் பெற்று  இருக்கின்றது. 

இப் போராட்டத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? 

1.போராட்டம் மூலம் தான் உரிமைகளைப் பெற முடியும் என்பதையும் 

2.நாம் எப்படிப் போராட்ட வேண்டும் என்பதையும் 

இது எமக்கு வழிகாட்டுகின்றது. நீண்டதும், விட்டுக் கொடுக்காததுமான சரியான போராட்டங்கள் மூலமே, மனித குலத்தின் அவலங்களுக்கு விடிவு காண முடியும். 

கற்றுக்கொள்ள வேண்டியவை

1.இந்தப் போராட்டமானது பாரியளவிலான நிதி ரீதியான நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்த போதும், மக்களுடன் இணைந்து கொண்டதன் மூலம் வெற்றிகொள்ளப்பட்டது.

2.இந்தப் போராட்டத்துக்கு சமாந்தரமாக, சமூகத்தின் முரண்பாடுகள் சார்ந்த வேறு போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தியதன் மூலம், இடதுசாரிய புரட்சிகர அரசியலை முன்னெடுப்பதில், புதிய அனுபவத்தைக் கற்றுக்கொள்ளக் கோருகின்றது.

3.இடதுசாரிய குறுங்குழுவாத அரசியலும், கோட்பாட்டுவாத முடக்கல்வாதிகளும், தனிநபர்வாத இடதுசாரிய கொசிப்புவாதிகளும் தங்கள் குறுகிய போக்கில் இருந்து விடுபட்டு வெளிவர வேண்டிய அரசியல் உண்மைகளை இடித்துரைக்கின்றது.

மக்களை நேசித்து போராடுவதும், குறுங்குழுவாதங்களுக்கு எதிராக அணிதிரள்வதன் மூலமே புரட்சிக்கு வழிகாட்ட முடியும்;. 20 ம் நூற்றாண்டின் மக்களின் வளர்ச்சிக்கு ஏற்ப ஒரு கட்சி மூலமான புரட்சி சாத்தியமானதாக இருந்த சூழல் இன்று இல்லை. மனிதகுலத்தின் வளர்ச்சியும், சமூக முரண்பாடுகள் மீதான போராட்டங்களும், முந்தைய ஒரு கட்சி மூலமான புரட்சியை நடத்த முடியாது. மாறாக முரண்பாடுகள் மீது போராடும் சக்திகளை ஒன்றிணைத்து போராடுவதற்கு கற்றுக்கொள்வதே, புரட்சிகர கட்சிகளின் முன்னுள்ள கடமையாகும். 

முந்தைய ஒரு கட்சி மூலமான புரட்சி என்பது, அன்றைய வரலாற்று இயங்கியலுக்கு உட்பட்டது. இன்றைய இயங்கியலுக்கு பொருந்தாத போது, அன்றைய போக்கை குறுங்குழுவாதமாக குறுக்குவது என்பது, போராட்டங்களை மட்டுப்படுத்தி விடுகின்றது.                 

போராட்டங்களுக்கு எதிரான மனநிலை

கடந்த அனுபவத்தின் எதிர்வினையாக இருக்கலாம் அல்லது தப்பிச் செல்லும் குட்டிபூர்சுவா வர்க்க மனநிலையாக இருக்கலாம். தாங்கள் போராடாமல் இருப்பதுடன், போராட்டங்களை கொச்சைப்படுத்தி விடுகின்றனர். இதில் ஒரு ரகம் தான், கோட்பாட்டுவாதிகளும், தனிநபர் தர்க்கவாதிகளும் என்றால் மிகையாகாது.   

கைதிகளின் விடுதலை, காணாமல் போனவர்கள் எங்கே என்ற நீண்ட போராட்டத்தை தொடர்ச்சியாக சமவுரிமை இயக்கம் மட்டும் இன்று தொடருகின்றது. இனரீதியான முரண்பாடுகள் மீது, மக்களை சார்ந்து சமவுரிமை இயக்கம் மட்டும்தான் இயங்குகின்றது. பிறப்புரிமையிலான பிரஜாவுரிமைக்கான போராட்டம் போல், கைதிகள் மற்றும் காணாமல் போன விடையங்கள் மீதான போராட்டங்களுடன், உணர்வுபூர்வமாக இணைந்து கொள்வதன் மூலம் இதையும் வெற்றிகொள்ள முடியும்.              

வாழ்வதற்கான மனித முயற்சி தான் போராட்டம். இயற்கை உயிர் வாழ்கின்ற எல்லா உயிரினங்களும், உயிர் வாழ்வதற்கான போராட்டமின்றி வாழ்வதில்லை. உயிரினங்கள் பொதுவாக இயற்கையுடனும், பிற உயிரினங்களுக்கும் எதிராக போராடுகின்றது. விதிவிலக்காக மனிதன் இதைவிட, மேலதிகமாக தனக்குள் தான் போராடுகின்றான்.

வர்க்க சமூக அமைப்பானது வர்க்க அடிப்படையில் மனிதனை மனிதன் ஒடுக்குவதை மூடிமறைக்கவே பால், இனம், சாதி, நிறம், பிரதேசம், மதம் என்று மக்களைப் பிரித்து வைத்து மோத வைக்கின்றது. இதைக் கடந்து மனிதனாக எம்மை முன்னிறுத்தி போராடுவதே, மனிதசாரம். இந்த வகையில் நாம் உணர்வது, உணர்வு கொண்டு விட்டுக் கொடுக்காது போராடுவதே மனித அறம். இதற்காக வாழ்வதே மனிதத்தன்மையாக இருக்க முடியுமே ஒழிய, சுயநலமல்ல. பிறப்புரிமையான பிரஜாவுரிமைக்கான போராட்டமும், இதைத்தான் உணர்த்தி நிற்கின்றது.