Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஏகாதிபத்திய யுத்தத்திற்கு பலியாகும் சிரியா மக்கள்

சிரியாவில் நடப்பது உள்நாட்டு யுத்தமல்ல. சிரியாவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான மக்கள் யுத்தமுமல்ல. அங்கு வாழும் சன்னி, சியா, அலாவி மதப்பிரிவுகளுக்கு இடையிலான மத யுத்தமுமல்ல. அமெரிக்கா - ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகள், சிரியாவைச் சூறையாடத் தொடங்கிய யுத்தமாகும்

இன்றைய மனித அவலங்களுக்கு யுத்தத்தை நடத்தும் சிரியாவும் - ருசியாவுமே காரணம் என்று, இவர்கள் உருவாக்கிய போரில் அகப்பட்டு உயிரிழக்கும் மக்கள் பிணங்களைக் காட்டி யார் பிரச்சாரத்தைச் முன்னெடுக்கின்;றனரோ, அவர்கள் தான் இதற்கு முழுப் பொறுப்பு. மனித உரிமை மீறலையும் - பிணத்தையும் காட்டியும் உலகெங்கும் தலையிடும் அமெரிக்கா தலைமையிலான மேற்கு ஏகாதிபத்திய நலன்களின் பின்னணியில், அமெரிக்க சார்பு கூலிக்கும்பல்கள் மக்களை பலிகொடுக்க - சிரியாவும் - ருசியாவும் பலியெடுக்கின்றது.

 

2009 இல் இலங்கையில் புலிகள் மக்களைப் பலிகொடுத்து பிணத்தை அரசியலாக்க, அரசு பலியெடுத்த அதே அரசியல் பின்னணியே சிரியாவிலும் நடந்தேறுகின்றது. யுத்தத்தில் ருசியா பலியெடுக்க, அமெரிக்கா தலைமையிலான மேற்கு பலி கொடுப்பதுமே நடந்தேறுகின்றது.

யுத்தம் மூலம், அமெரிக்கா – மேற்கு சார்புக் குழுக்களை அழிக்கும் இறுதி யுத்தத்தை, ருசிய ஏகாதிபத்தியத் தலைமையில் நடப்பதும், அங்கு நடக்கும் மனித அவலங்களையும் - அழிவுகளையும் ருசியா ஏகாதிபத்தியத்துக்கு எதிரான பிரச்சார நோக்கில் அமெரிக்கா தலைமையில் முன்னெக்கப்படுகின்றது. இந்த பின்னணியில் இருந்து அமெரிக்கச் சார்பு கருத்துக்களும், மனித அவலம் குறித்த பொது உளவியலும் - கருத்துகளும் கட்டமைக்கப்படுகின்றது.  மேற்கு ஏகாதிபத்தியங்கள் சிரிய குழந்தைகளை பலியிட்டு, தங்கள் மேற்கத்தைய நலனை சிரியாவில் தற்காத்துக் கொள்ள முனைகின்றனர். இது தான் இன்றைய யுத்தத்தின் உள்ளடக்கமும் - சாரமுமாகும். 

அரபு பிராந்தியம் முழுக்க மக்களைப் பிரித்தாளும் மேற்கின் சதிகளே யுத்தம்

இது உள்நாட்டுப் போர் என்பதே பொய். இந்த யுத்தத்தின் இது முதல் பலியுமல்ல. கடந்த ஐந்தாண்டுகளில் மூன்றரை இலட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அடிப்படைவாத இஸ்லாமிய அரசை அமைத்த ஐ.எஸ்.ஐ.எஸ் யை அழிக்கும் நோக்கில், ருசியாவுக்கு நிகராக  மேற்குநாடுகள் நடத்திய குண்டு வீச்சுகளின் போது, குழந்தைகள் உட்பட சிரிய மக்கள் பல பத்தாயிரம் பேர் கொல்லப்பட்டனர். அப்போது எல்லாம் கவலைப்படாத ஊடகங்கள், "பயங்கரவாதத்துக்கு" எதிரான யுத்தத்தின் அவசியத்தை முன்வைத்து மக்களை கொத்துக் கொத்தாக கொல்வதை ஊக்குவித்தனர்.

விவாதம் என்று பார்த்தால், ஐ.எஸ்.ஐ.எஸ் சுக்கு எதிரான மேற்கின் யுத்தம் சரி என்றால் ருசியா தலைமையிலான இன்றைய யுத்தமும் சரி தான். இதில் வெவ்வேறு அளவுகோல் இருக்கமுடியாது.

ஏகாதிபத்திய யுத்தத்தைத் தொடங்கி 2015 ம் ஆண்டு வரையான காலத்தில் 94 ஆயிரத்துக்கும் அதிகமான சிரிய ராணுவத்தினரும், 85 ஆயிரத்துக்கும் அதிகமான அமெரிக்க சார்பு கைக்கூலிப்படையும் இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களும், 127 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்களும் கொல்லப்பட்டனர். சுமார் 70 லட்சம் மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாகினர். மேற்கு நோக்கி 10 இலட்சத்துக்கு மேற்பட்ட அகதிகள் சென்றதுடன், பல ஆயிரம் அகதிகள் கடலில் பலியானார்கள்.

இந்த யுத்தப் பின்னணியில் இயங்கிய மேற்குநாடுகள் தமது கூலிக்குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கியதுடன், சன்னி, சியா, அலாவி மதப்பிளவுகளையும் உருவாக்கியது. பெரும்பான்மையாக உள்ள சன்னி மதப்பிரிவை, சிறுபான்மையான  சியா - அலாவி மதப்பிரிவைச் சேர்ந்த ஆசாத் ஆள்வதா என்ற மதப் பிரிவினையைத் தூண்டி யுத்தத்தை கூர்மையாக்கியது. இந்த மதப்பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ் இஸ்லாமிய அமைப்பும், இஸ்லாமிய அடிப்படைவாதத்தைத் தோற்றுவித்ததுடன் சிரிய மக்களை வகைதொகையின்றி பலிகொள்ளத் தொடங்கியது.

இந்த யுத்தத்தை மத யுத்தமாக வழிநடத்திய மேற்கு, சன்னி, சியா பிரிவுகளுக்கு இடையிலான பிராந்திய யுத்தமாக மாற்றியது. சியா மதப்பிரிவைச் சேர்ந்த ஈரான் ஒருபுறம் சிரிய அரசை ஆதரிக்க, சன்னி பிரிவை சவூதி அரேபியா, கத்தார் ஆதரித்ததுடன், ஆயுதரீதியாக பலப்படுத்தியது. அரபு பிராந்தியத்தியத்தையே மதப்பிரிவுகளின் முரண்பாடுகளாக மாற்றியதுடன், ஒன்றுபட்டு வாழ்ந்த முஸ்லீம் மதப்பிரிவுகளுக்கு இடையில் மோதல்களையும் ஒடுக்குமுறைகளையும் தூண்டி, மக்களுக்கு எதிரான நவதாராளவாத மேற்கு சார்பு அரசுகளை பலப்படுத்தியதுடன்  -  பிராந்தியம் முழுக்க மக்களைப் பிரிக்கும் புதிய முரண்பாட்டுக்குள் தள்ளிவிட்டு இருக்கின்றது.

இந்தப் பின்னணியில் உலக பன்னாட்டு நிறுவனங்கள் அரபு பிராந்திய எண்ணை வளங்களைச் சூறையாடி, கொழுத்து வருகின்றது.

மேற்கு ஏகாதிபத்தியம் நடத்தும் யுத்தத்தின் குறிப்பான நோக்கம் என்ன?

அரபு பிராந்தியம் என்பது பன்னாட்டு மூலதனத்தை கொழுக்க வைக்கும் வளங்களைக் கொண்டுள்ள்து. அதை யார் கட்டுப்படுத்துகின்றனரோ அவர்களது நாட்டு முதலாளிகளின் செல்வம் பெருக்கெடுக்கும். இந்த பின்னணியில் தான்

1.இந்தப் பிராந்தியத்தில் மேற்கு ஏகாதிபத்திய மேலாதிக்கம் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றால், நாடுகளுக்கு இடையில் முரண்பாட்டையும், மக்களுக்கு இடையில் பிரிவினையையும் உருவாக்க வேண்டும். இதுதான் மேற்குலகின் அரபுக் கொள்கையாகும். இiதான் இன்று செய்திருக்கின்றது.

2.சந்தைப் பெறுமதி அடிப்படையில் அதிக செல்வத்தை கொண்ட இந்தப் பிராந்திய நாடுகள்,  அரைகுறையான சுயபொருளாதார ஆதாரங்களைக் கொண்ட அரசுகளாக இருப்பதையும் - நீடிப்பதையும் மேற்கு அழிக்க விரும்பியது. சர்வதேசக் கடன் நிதி மூலதனத்தை பெற்று வாழும் நாடுகளாகவும், வட்டி கட்டும் பொருளாதாரத்தைக் கொண்ட உலக கட்டமைப்புக்குள் இப்பிராந்திய நாடுகள் வரவேண்டும் என்று விரும்பியது. அதாவது உலகளாவில் செல்வம் ஒருசில தனிநபர்களிடம் குவிந்து வரும் இன்றைய உலகில், அதில் பெரும்பகுதி நிதிமூலதனமாக இருக்கின்றது. நிதிமூலதனத்தைப் பெருக்க நாடுகள் கடனை வாங்குவதும், வட்டி கட்டுவதுமே உலக நாடுகளின் பொருளாதார நடைமுறையாக இருக்கவேண்டும். இந்த பின்னணியில் அரபு உலகின் சுயபொருளாதாரக் கட்டமைப்பை அழித்து, கடன் வாங்கும் நாடுகளாக மாற்றி அமைக்கப்படுகின்றது.

3.மேற்கு ஏகாதிபத்தியம் தனது செல்வாக்குக்கு உட்படாத பிராந்தியங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர, யுத்தங்களையும் - மனிதவுரிமை மீறல்களையும் திட்டமிட்டு திணிப்பதும் - அந்தந்த நாடுகளின் மீறல்களை காட்டி தனது தலையீட்டை நடத்தி வரும் பொதுப் பின்னணியில் இந்த யுத்தம் திட்டமிட்டே தொடங்கப்பட்டது.                      

4.அரபு உலகத்தில் பிராந்திய மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் மேற்கு சார்பு இஸ்ரேலின் மேலாதிக்கத்தை உறுதி செய்யவும், இஸ்ரேலின் பிராந்திய ஆக்கிரமிப்புக்களை பாதுகாக்கவும், பிராந்திய நாடுகளை பலவீனப்படுத்தி நாடுகளுக்கு இடையில் யுத்தங்களையும், உள்நாட்டு யுத்தங்களையும் மேற்குலகம் திட்டமிட்டு நடத்தி வருகின்றது.

முடிவாக

பல மதப்பிரிவுகள், இனக் குழுக்கள் சேர்ந்து வாழ்ந்த நாடுகளில் நிலவிய அமைதியான சூழலை தகர்த்து, மனித அவலத்துக்கு வித்திட்டது அமெரிக்கா தலைமையிலான மேற்கு ஏகாதிபத்தியங்களே. இந்த வகையில் மேற்கு முன்வைக்கும் போலியான மனிதவுரிமைகளை இனம்கண்டு கொள்வதும், மனித அவலங்களுக்கு காரணமான மேற்குக்கு எதிராக அணிதிரள்வதன் மூலமே மக்கள் சார்ந்த அதிகாரங்கள் உண்மையான அமைதியையும் மனிதவுரிமைகளையும்; கொண்டுவரமுடியும். இதுவே எம்முன் உள்ள அரசியலாகவும் தேர்வாகவும் இருக்க முடியும். இதுதான் உலக அளவிலான அரசியலும் கூட.