Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பரீட்சை (G.C.E O/L) முடிவுகள் குறித்த சமூக மனப்பாங்குகள்

கல்வி குறித்த அரசின் கொள்கைகளைக் கொண்டாடுவதன் பொது வெளிப்பாடுதான், பரீட்சை முடிவுகள் குறித்த பொதுக் கண்ணோட்டமாகும்;. பரீட்சை முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட தனிநபர் கல்விக்கொள்கையானது, அனைவருக்குமான சம கல்வி வாய்ப்பையும் - பொது சமூக அறிவையும் மறுதளிக்கின்றது. அதேநேரம் பரீட்சையில் சித்தி பெறுவதற்கான வியாபாரத்தையே கல்வியாக்கி வருகின்றது. பரீட்சைச் சித்தியை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் பிரிதாளப்படுவது நடந்தேறுகின்றது. பரீட்சையில்  தோற்றவர்களை புறக்கணிப்பதும் - இழிவுபடுத்துவதும், பொதுவான சமூக நடத்தையாகின்றது. சமூக உணர்வுள்ளதாகக் கருதப்படும் பழைய மாணவ சங்கங்கள் கூட, இதற்கு விதிவிலக்கில்லை.

இந்த சமூகப் பின்னணியில் பரீட்சையில் "அதி உயர்" சித்தி பெற்ற மாணவர்களை முன்னிறுத்தி, கொண்டாட்டங்களை நடத்துகின்றனர். அதிபர்கள் முதற் கொண்டு பரீட்சையில் வென்றவர்களுடன் சேர்ந்து போட்டோக்;களை எடுப்பதும், அதை பாடசாலை வாசல்களில் விளம்பரப்படுத்துவதும் நடந்தேறுகின்றது. பழைய மாணவர் சங்கங்கள் இதைக் காட்டி தங்களைப்  பெருமைப்படுத்திக் கொள்வதும் - பரிசில்களை வழங்குவதும் நடந்தேறுகின்றது. தனியார் (ரியூசன் சென்றர்கள்) கல்வி நிறுவனங்கள்; போட்டி போட்டுக் கொண்டு, தங்கள் கல்வி வியாபாரத்துக்கு ஏற்ப இதை விளம்பரப்படுத்துகின்றனர். பரீட்சையில் வெற்றி பெறும் கல்வி வியாபாரத்தை முன்னெடுக்கும் புத்தகக் கடைகள் தொடங்கி பரீட்சைக் கேள்விகளை முன்கூட்டியே ஊகித்து அதை மாணவர்களுக்கு கொடுக்கும் வியாபாரிகள் பரீட்சைமுறை மூலம் கொழுக்கின்றனர். தன் இன, மத, சாதி, பிரதேச, ஊர்.. பெருமைகளைப் பீற்றிக் கொள்ளும் தங்கள் குறுகிய அடிப்படைவாதங்களுக்கு ஏற்ப, பரீட்சை முடிவுகளைக் காட்டி பெருமைப்படுகின்றனர்.

வியாபாரமும் அதற்கு ஏற்ப விளம்பரங்களும், பரீட்சை முடிவுகளைத் தொடர்ந்து  நடந்தேறுகின்றது. இதை முதன்மையாக்கிக் கொள்ளும் தனிமனித செயற்பாடே, சமூக உணர்வாகி விடுகின்றது.

 

இது தான் சமூகத்தின் பொது நடத்தையும், கண்ணோட்டமாகியும் வருகின்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற, பெற்றோர்கள் குழந்தைகளை வறுத்தெடுக்கின்றனர். வென்றவர்கள் சமூகத்தில் உயர்ந்தவராக முன்னிறுத்தபட்டு, தோற்றவர்கள் சமூகத்தில் வாழத் தகுதியற்றவராக்கப்பட்டு, இழிந்தவராக்கப்படுகின்றனர். இது தான் பரீட்சை முடிவுகளின் பின்னான மாணவர்களின் பொது உளவியல். இது தான் இன்றைய கல்விக்கொள்கை. இதை நோக்கி நாலு காலில் ஓடுவது நடந்தேறுகின்றது.

இந்த கல்விக் கொள்கை மூலம் வென்ற பாடசாலைகளைத் தேர்ந்தெடுக்கும் ஒரு போட்டிக் கல்விமுறை உருவாக்கப்படுகின்றது. இதன் மூலம் சமச்சீரான பாடசாலைகள் அழிக்கப்பட்டு, ஏற்றத்தாழ்வான பாடசாலைகள் திட்டமிட்டே உருவாக்கப்படுகின்றது. மாணவர்களுக்கு இடையிலான  போட்டி மட்டுமல்ல, பாடசாலைகளுக்கு இடையிலான போட்டியும் உருவாக்கப்பட்டு, பாடசாலைகள் தரமிறக்கப்படுகின்றது. பாடசாலையின் தகுதிக்கு ஏற்ப, பாடசாலைகளில் பணம் சம்பாதிக்கும் கொள்கைகள் உருவாக்கப்படுகின்றது. பரீட்சை மூலம் "தரம் உயர்ந்த" பாடசாலையில் இணைந்து கொள்ள, பணம் அவசியமாக்கப்படுகின்றது. பாடசாலையின் நிகழ்ச்சிநிரல்களுக்கு ஏற்ப, மாணவர்களிடம் பணம் பெறுவது, அடிப்படைக் கொள்கையாகின்றது.

கற்றல், கற்பித்தல் நடவடிக்கை என்பது பணம் சார்ந்ததாக மாறுகின்றது. பாடசாலை நிர்வாகமும், அதன் செயற்திறனும் பணம் சார்ந்ததாக மாற்றப்படுகின்றது. இதுவே  கவ்விச் சிந்தனையாக மாறுகின்றது. அதிபர், ஆசிரியர் தொடங்கி பெற்றோர்கள் வரை, சமூக உணர்வற்றவராக மாற்றுகின்றது. தனிமனித முன்னேற்றமே சமூக இலக்காகின்றது. இந்தப் பின்னணியில் கல்வி நடவடிக்கை, பணம் சார்ந்ததாக குறுகி விடுகின்றது. இப்படி கல்வி நடவடிக்கை பணம் சார்ந்து புளுக்கும் அதேநேரம், ஊழல், லஞ்சம், மோசடிகளுக்கு அப்பாற்பட்டதாக கல்வியும், கல்விக் கொள்கையும் இருப்பதில்லை. கல்வி என்பது பணம் சம்பாதிக்கும் தொழிலாகவும், தனிமனித முன்னேற்றத்தினதும் - தனிமனித புகழ் அடைவதற்கும் ஏற்ற வியாபார நிறுவனமாக்கப்பட்டு வருகின்றது.

பணம் சார்ந்ததாக கல்வி குறுகி, தனிமனித வெற்றி - புகழ் சார்ந்து விடுகின்றது. அதிபர்கள் தொடங்கி மாணவர்கள் வரை வெறிபிடித்த இந்தப் போட்டியை கல்வியாக முன்னிறுத்துகின்றனர். இதில் யார் விதிவிலக்காக இருக்கின்றனரோ, அவர்கள் மட்டுமே சமூகம் குறித்து சிந்திக்கின்றவராக இருக்க முடிகின்றது.

பரீட்சை முடிவுகள் மூலம், கல்வி தனியார் மயமாக்கப்படுகின்றது. உயர் பரீட்சை பெறுபேறுகளைத் தரும் பாடசாலைகளில், ஏழை மாணவனோ, சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவனோ.. கல்வி கற்க முடியாதவனாகி விடுகின்றது. கல்வித் தகுதி, பொருளாதார அந்தஸ்து, சமூகத்தில் உயர் (இனம், சாதி, மதம், பிரதேசம்.. ) நிலைத் தகுதி, சமூகத்தின் செல்வாக்கு போன்ற ஏதுமற்ற ஒரு மாணவன், பரீட்சை மூலம் "தரம் உயர்ந்த" பாடசாலைகளில் கற்க முடியாது. இங்கு இலவசக் கல்வி என்பது பொய்;யாகி, போலியாக இருப்பதையே நடைமுறையாக மாறி இருக்கின்றது.  

அரசாங்கம் பரீட்சைகளில் பெறும் சித்தியை அடிப்படையாகக் கொண்டு, தனிவுடமையை பெருக்கும் முதலாளித்துவத்தை தாங்கிப் பிடிக்கின்றது. இதற்கு ஏற்ற மாணவர்களைத் தயாரிக்கின்றது. 

தனிமனிதர்களை முதன்மையாக்கி பணம் சம்பாதிக்கும் அரசின் கல்விக் கொள்கையையும், அதற்கு ஏற்ப சேவை செய்யும் கல்வி முறைமையை எதிர்த்து, நடைமுறையில் சமூகத்தின் பொது கல்வியையும் சமூகத்தின் முன்னேற்றத்தையும் யார் முன்னிறுத்துகின்றனரோ, அங்கு தான் உண்மையான சமூக உணர்வையும் - சமுதாய உள்ளடக்கத்தையும் காண முடியும். சமூக உணர்வுள்ளவர்களும் - கல்விக்கு உதவுகின்றவர்களும் தனிநபர்களை உருவாக்கும் கல்விக் கொள்கைக்கு வால் பிடிப்பதா? அல்லது அதை எதிர்த்து சமூதாயத்தின் பொதுக் கல்விக்கு உழைப்பதா? என்பதை, தெரிவு செய்தாக வேண்டும்.