Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

அமெரிக்கா – புலி – அரசு எதற்காக ஜெனிவாவில் கூடுகின்றனர்?

வன்னி யுத்தம் குறித்த ராணுவ நடவடிக்கையினை திட்டமிட்டு வழிநடத்திய சர்வதேசம்

மனிதவுரிமையை நிலைநாட்டவா? தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளுக்கு தீர்வு காணவா? தமிழ் மக்களின் மீதான குற்றங்களுக்கு நீதி வழங்கவா? ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவா? தேசத்தின் சுயாதிபத்தியத்தை பாதுகாக்கவா? சொல்லுங்கள்? இதனால் எதற்காவது நியாயம் கிடைக்குமா? இல்லை நியாயம் கிடைக்கும் என்று கூறுகின்ற, காட்டுகின்ற அனைத்தும், ஏன் இந்த மோசடியை அம்பலப்படுத்தாத அனைத்தும் பொய்யானது புரட்டுத்தனமானது. இதை ஒட்டுமொத்தமாக முன்வைத்துக் கோராத, போராடாத அனைத்தும் மோசடியானது.

 

இதன் பின்னணியில் அமெரிக்காவுக்கு ஆதரவாகவும், இலங்கைக்கு ஆதரவாகவும் கொடிபிடிக்கும் காட்சிகள், செய்திகள், விவாதங்கள் முதல் அன்பான மிரட்டல்கள் வரை அரங்கேறுகின்றது. இப்படி எல்லா மனிதவிரோதிகளும் அங்குமிங்குமாக தம்மை கன்னை பிரித்து நிற்கின்றனர். இந்த பின்னணியில், இதற்குள் மனிதவுரிமை முதல் ஏகாதிபத்தியம் வரை பேசுகின்ற அரசியல் கேலிக்கூத்தை நாம் பார்க்கின்றோம். போலித் தேசியவாதிகள் முதல் போலிக் கம்யூனிஸ்ட்டுக்கள் வரை, அங்குமிங்குமாக ஆளுக்கொரு நியாயம்.


தங்கள் சொந்தத் தரப்பு மனிதவிரோதத்தை கேள்விக்குள்ளாக்காத தங்கள் அரசியல் பின்புலத்தில், மனிதவுரிமை பற்றிய வாய்ச்சவடால்கள். தீர்வுகள் பற்றிய எதிர்வு கூறல்கள். அரசியல் ஆய்வுகள் முதல் ஆர்ப்பாட்டங்கள் வரை ஜெனிவாவைச் சுற்றிக் காட்டப்படுகின்றது. இதனால் மக்களுக்கு என்ன தான் நன்மை? இதனால் தீர்வுதான் மக்களுக்குக் கிடைக்குமா?

இலங்கை மக்களின் மேலான எண்ணை விலையேற்றத்திலான அவலம் குறைந்துதான் விடுமா? அரசின்; அடக்குமுறை நின்றுதான் விடுமா? அமெரிக்காவின் உலக ஆதிக்கம் குறைந்துதான் விடுமா? சொல்லுங்கள். மக்களுக்கு வெளியில் மக்களை ஒடுக்கும் அரசியல் கூத்தாடிகள் மக்களின் பெயரில் கூத்தாடுகின்றனர்.

பாரிய குற்றங்களை மக்கள் மேல் இழைத்த அரசும் சரி, அதையே செய்த புலிகளும் சரி, எந்தவிதத்திலும் எவரும் பாதுகாக்க முடியாத குற்றக் கும்பல்கள். கடத்தல், கைது செய்தவர்களைக் கொல்லுதல், சரணடைந்தவர்களைக் கொல்லுதல் வரை, அனைத்துவிதமான மனிதவிரோத குற்றத்திலும் இருதரப்பும் ஈடுபட்டது. இதில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. ஆனால் இதில் ஒன்றைச் சொல்லி மட்டும் அரசியல் நடத்துபவர்கள் முதல் தரமான குற்றவாளிகள். இவர்கள் தான் முதல்தரமான மனிதவிரோதிகள்.

இந்த வகையில் இரண்டையும் அம்பலப்படுத்தி முன்னெடுக்காத அரசியல், பிரமுகர்த்தன இருப்புக்கான ஆய்வுகள் மனிதவிரோதத் தன்மை கொண்டவை. பொது அரசியல் தளத்தில் இதில் ஒன்றை பயன்படுத்துகின்ற அரசியல் மோசடியை நாம் காண்கி;றோம். இப்படியான அரசியல், எந்த விதமான கேள்விக்கும் இடமின்றி மனிதவிரோதத் தன்மை கொண்டவை.

இந்தக் குற்றங்களுக்கு வக்காலத்து வாங்குகின்ற அரசியல் பின்னணியில், மக்களுக்கு நீதி கிடைக்கக் போவதில்லை. இரண்டையும் எதிர்த்து மக்களைச் சார்ந்து நின்று நீதியைக் கோரிப் போராடாத அரசியல், தொடர்ந்து மனிதவிரோத குற்றத்தின் பின்னால் நின்று வேஷம் கட்டி அரங்கேற்றும் மனிதவிரோதக் கூத்துதான்.

இன்று அமெரிக்கா தலைமையிலான மேற்கின் உலகளாவிய குற்றங்கள் கூட இதற்கு நிகரானது தான். ஆக இங்கு புலி – அரசு – அமெரிக்கா பின்னணியில் அரங்கேறும் ஜெனிவா அரசியல், மக்களின் நியாயங்கள் மீதோ நீதியின் பாலானதோ அல்ல.

அமெரிக்காவோ தன் உலக மேலாதிக்கத்தை நிறுவ, இலங்கை அரசின் தொடர்ச்சியான மனித விரோத செயற்பாட்டை முன்னிறுத்தி காய் நகர்த்துகின்றது. இலங்கை அரசோ மக்கள் மேலான தன் ஒடுக்குமுறையை தக்கவைக்க, புலியின் மனித விரோத பக்கத்தை முன்னிறுத்தி கொய்யோ முறையோவெனக் குளறியபடி ஜெனிவா நோக்கி நாலுகாலில் ஓடுகின்றது.

இப்படி எண்ணையை விலையேற்றி மக்களைக் கொள்ளையடித்த பணத்துடன், வண்டி வண்டியாக இலங்கை அரச எடுபிடிகள் ஜெனிவாவில் இறங்குகின்றனர். அங்கு பணத்தை கொட்டி விலைக்கு வாங்கும் விருந்துகளும், அரசியல் விபச்சாரமும் ஒருங்கே அரங்கேறுகின்றது. சொந்த மண்ணில் சுதந்திரமாக வாய் பேச முடியாத ஊமைகள் எல்லாம் அணிவகுத்து நிற்க, அரங்கேறும் மனிதவிரோத விருந்துகளும் உரையாடல்களும்.

மொத்தத்தில் அனைத்து மனிதவிரோதிகளும் ஒன்றாகக் கூடி, தங்கள் மனிதவிரோத வக்கிரங்களையெல்லாம் கொட்டி அதை அரங்கேற்றத் துடிக்கின்றனர்.

அரச மற்றும் புலிப் பாசிசத்தினால் மக்கள் சந்தித்த துயரங்களுக்கும், இழப்புகளுக்கும், அவலங்களுக்கும் இந்த ஜெனிவா கூட்டம் ஒரு நாளும் தீர்வு காணாது. அரசோ – அமெரிக்காவோ இந்த அடிப்படையில், எதிரெதிராக ஜெனிவாவில் கூடவில்லை. மாறாக தங்கள் மனிதவிரோத சுயநலத்தின் அடிப்படையில் தான், இதை தங்கள் நலனுக்கு ஏற்ப பயன்படுத்துகின்றனர்.

இதற்கு பின்னால் மக்களை வழிகாட்டுகின்றவர்கள், இதை அம்பலப்படுத்த தவறுகின்றவர்கள் துணையுடன் தான், இந்த மனிதவிரோதம் மீண்டும் ஜெனீவாவில் அரங்கேறுகின்றது. இந்த வகையில் இதை எதிர்த்து எம்மை நாம் அணிதிரட்டுவதன் மூலம் தான் இந்த மனித விரோத அரசியல் மேடையில் இருந்து எம்மையும், எம் மக்களையும் விடுவிக்கமுடியும்.

 

பி.இரயாகரன்

26.02.2012