Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இனவெறி வசந்தத்தின் தென்றல் பாரும் தேவியரே கேளும்!

எட சாகும்போது கூட டக்கிளஸைக் கேட்டுத்தான் சாகவேண்டும்!?

முன்பு சாதிவெறிக் காவலர்களிடம்! இப்போ இனவெறிக் காவலர்களிடம்!

கீரிமலையில் மரணமடைந்த ஒருவரின் சடலத்துடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!.

கீரிமலை பொதுமயானத்தைப் தமது பாவனைக்கு விடுமாறு கோரி இன்று கீரிமலைச் சந்தியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கீரிமலைப் பிரதேசம் கடந்த பலவருடகாலமாக உயர்பாதுகாப்பு வலயமாக மாறியிருந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதமே இப்பகுதியில் பொதுமக்கள் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். எனினும், கீரிமலையின் கடற்கரையோரத்தை அண்டியபிரதேசத்தில் மக்களை மீள்குடியேற அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் கீரிமலை மயானமும் கடற்படையினரின் வசமாகியிருந்தது. இதன் காரணமாக மக்களது பாவனைக்கு குறித்த மயானத்தை கடற்படை வழங்கவில்லை.

இந்த நிலையில் அப்பிரதேசமக்களுக்கு ஒரு மயானம் இல்லாத நிலையிலேயே அவர்கள் இன்று இறந்த சடலத்துடன் மயானத்தைப் பாவனைக்கு விடுமாறுகோரி இவர்கள் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தையடுத்து வலி.வடக்கு தலைவர் சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு கடற்படையினருடன் கலந்துரையாடியுள்ளார். அதன் பின்னர் கடற்கரைப் பகுதியினூடாக குறித்த மயானத்திற்கு மக்கள் செல்வதற்கு கடற்படையினால் அனுமதிக்கப்பட்டு குறித்த சடலமும் தகனம் செய்யப்பட்டது.

நீண்ட காலத்திற்குப் பின்னர் கடற்படையினர் மக்களின் பாவனைக்காக மயானத்தை வழங்கியுள்ளனர். கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் வலி.வடக்கு தலைவர் மயானத்தை மக்கள் பாவனைக்கு விடும்படி கடற்படையினருடன் கலந்துரையாடியுள்ளார்.

அதன் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைக் கேட்கும்படியும் அவர் சம்மதித்தால் தாம் மக்களின் பாவனைக்கு மயானத்தை வழங்குவதாகவும் கடற்படையினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேநீர்க் கடைகளிலும் சாதி பார்ப்பார் தேவியரே கேளும்!

சுடலைகளிலும் சாதி பார்ப்பார் தேவியரே கேளும்!

இது 66-67-காலகட்டத்தில சாதியப் போராட்டம் உச்சக்கட்டத்தில் இருந்த நேரத்தில், “கந்தன் கருணை” எனும் (சாதி எதிர்ப்பு)  நாடகத்தில் கேட்ட வரிகள். இவ்வரிகளை இப்போ எங்கும் எதிலும் இனவெறி பார்க்கின்றார் தேவியரே கேளும்! எனப் பாடத் தோன்றுகின்றது! ஆனால் இங்கு பாடலாம்! ஆனால் அங்கு…“மகிந்தாவின் மகிமை பாரும் தேவியரே! கேளும்…..இனவெறி வசந்தத்தின் தென்றல் பாரும் தேவியரே கேளும்! என்று தான் பாடலாம். பாடவேண்டும்!

சங்கானையில் சாதிப்போராட்டத்தின் போது சாதி வெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட வன்னியர் குமரேசு எனும் போராளியின் உடலை வழமையான பாதையால் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட வேளையில், (காங்கேசன்துறை உதவிப் போலீஸ் அதிபரின் தலைமையில் வந்த போலீஸ் குழு) தடுத்து நிறுத்தி  குறுக்குப் பாதையால் செல்லுங்கள் என ஆலோசனை கூறியது. இதை நிச்சாம மக்கள் மேற்கண்ட “எதிர்ப்பு நிலை” கொண்டு மறுத்து விட்டனர்! கடைசியில் தற்போது இங்கு எது நடந்ததோ, அது தான் அன்றும் நடந்தது!

உடலை வழமையான பாதையினூடாகவே கொண்டுசென்று இறுதி நிகழ்வை செய்தனர்!

அன்று காங்கேசன்துறைப் போலீசார் சாதி வெறிக்கு துணையானார்கள்!

இன்று காங்கேசன்துறையின் கடற்படை இனவெறிக்கு துணையாகின்றனர்!

இதில் வேடிக்கை இப்பகுதியில் சாவதற்கு–எட, அடக்கம் செய்வதற்கு கூட டக்கிளஸிடம் “பெமிசன்” வாங்கவேண்டியுள்ளது!   

அண்மையில் யாழில் இருந்து வந்த ஓர் நண்பரிடம் கதைத்துக் கொண்டிருந்த வேளை, இப்போ சாதிவெறி ஓர் மூலையில் முடங்கி விட்டது என்றார்! இன்றைய யாழப்பாணக் கட்டுமானத்தில்,  “நோ சாதி வெறி! சாதி வெறி!,  அது இன வெறி!  இனவெறி! அதனின் கொலை வெறி! , கொலை வெறி! என்றார் வேடிக்கையாக!.

 

என்னால், என்னுடன் இருந்த நணபர்களால், சிரிப்பு அடக்கவே முடியவில்லை! உண்மையில் இந்தப் பாட்டின் மகிமையாலோ என்னவோ  இந்தியப் பிரதமரே தனுசுவிற்கு விருந்தளிக்கப்  போகின்றார். இது அரசின் அரசியல் கிண்டலுக்கும் அல்லவா வலுச் சேர்க்கின்றது! இவ்வரிகள் விரைவில் மன்மோகன் சிங்கின் அரசின் இனவெறிக்கெதிராகவும் பாடப்படுமென்பதிலும் ஐயமில்லை!

அகிலன்

27/12/2011