Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சாதி-தீண்டாமைக்கெதிரான 66-அக்டோபர் 21- எழுச்சியின் நினைவாக….

கோவில்களிலும்     –சாதி பார்ப்பார் தேவியரே கேளும்!

தேனீர்க்கடைகளிலும்  –சாதி பார்ப்பார் தேவியரே கேளும்!

சுடலைகளிலும்      –சாதி பார்ப்பார் தேவியரே கேளும்!

சுடும் பிணங்களையும் பிரித்து வைப்பார் தேவியரே கேளும்!

“இவ்வரிகள்”  சாதியத்திற்கு எதிராக 1966-ல் நடைபெற்ற போராட்டங்களின்  போது, அதன் பிரச்சாரத்திற்காக மேடையேற்றப்பட்ட “கந்தன் கருணை” எனும் குறியீட்டு ; நாடகத்தில் நாரதர் முருகனின் மனைவியான வள்ளிக்கு சாதி-தீண்டாமை பற்றி சொல்லும் காட்சியின் போது.

ஆம்! சுடும் பிணங்களையும் பிரித்து வைக்கும் உயர்-இந்து வேளாள சாதியவெறி!

1940-ம் ஆண்டளவில் யாழ்-ஆரியகுளம பகுதியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஓர் வயோதிபத் தாய் காலமானார். அத்தாயின் இறுதிக் கிரிகைகள் யாழ்-வில்லூண்டி மயானத்தில் நடைபெற வேண்டும். அன்றைய அம்மயானத்தின் சாதிய நடைமுறை உயர் சாதியினரை எரிக்கும் இடத்தில் மற்றவர்களை வைத்து எரிக்கக்கூடாது. அச் சமயம் எம்.சி. சுப்பிரமணியம் போன்ற சாதியத்திற்கு எதிரான போராளிகள் இவ்வயோதிபத் தாயின் உடலை உயர் சாதியினரை வைத்து எரிக்கும் இடத்தில் எரிக்கத் தீர்மானித்தனர். இதையறிந்த சாதிவெறியர்கள் வில்லூன்றி மயானத்திற்கு சென்று இறுதிக் கிரிகைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். அதில் முதலி சின்னத்தம்பி என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அந் நேரத்தில் (நாற்பதுகளில்) வில்லூன்றி மயான சாதிப் படுகொலை பற்றி முதற் தடவையாகத் துணிச்சலுடன் குரல் கொடுத்த கவிஞன்.   அ.ந. கந்தசாமி அவர்களே! அவர் அன்று துணிச்சலுடன் குரல் கொடுத்த கவிதை.

வில்லூன்றி மயானம்!

நாட்டினர் நீர் அறிவீர் வில்லூன்றி தன்னில்

நாம் கண்ட  ஈமத் தீ வெறுந்தீ அன்று

கேட்டினிலே உளபிணத்தை உண்பதற்குக்

கிளர்ந்தெழுந்த தீயன்று நெடுநாளெங்கள்

நாட்டினிலே கிளைபரப்பும் சாதி என்னும்

நச்சுமர வீழ்ச்சியினைக் காண்பதற்காய்க்

வாட்டமுற்ற மக்களுளம் கனன்று பொங்கும்

வல்லதொரு புரட்சித்தீ  வாழ்க வஃது.

மக்கள்குல மன்றோநாம் மரமோ கீிழாம்

மாடுகளோ விலங்குகளோ கூறும் என்று

திக்கற்றான் நெஞ்சினிலே பிறந்த வைரத்

தீ அதுவாம் திசை எங்கும் பரவுதற்கு

மக்கள்நாம் மறுப்பதெவர் என்று கூறி

மாவுரிமைப் போர்தொடங்கி விட்டான் அந்தத்

திக்கதனை வில்லூன்றித் திருத்த லத்தைச்

சிர்ந்தாழ்த்தி வணங்குவோம் புனித பூமி.

கேளீர் ஓர் வீரமிகு காதை ஈது.

கிளரின்பம் நல்குமொரு சேதி யன்றோ?

பாழினிலே பயந்திருந்த பாம ரர்கள்

பலகாலந் துயில்நீங்கி எழுந்துவிட்டார்

வாழியரோ வரப்போகும் நவயு கத்தின்

வளக்காலை ­ளம்பருதி வரவு ணர்த்தும்

கோழியது சிலம்பலிது  வெற்றி ஓங்கல்

கொள்கைக்காதரவு நல்குவோம் நாம்.

பரம்பரையாய்ப் பேணிவந்த பழக்கமென்று

பழங்கதைகள் பேசுகின்றார் மனிதர் பார்ப்பின்

பரம்பரையாய்ப்  பேணிடினும் தீயதான

பழக்கமெனப் பகுத்தறிவாற் கண்ட பின்னும்

சிரங்குவிப்பதோ அதற்கு? மூடச் செய்கைச்

சிறுமைஎன்று செகமெல்லாம் நகை நகைத்துச்

சிரிபபதற்குச் செவிதாரீர் தீண்டாய்ப் பேயின்

சிரங்கொய்தே புகைத்திடுவோம் வாரீர் வாரீர்!!

சிறுகுறிப்பு: தலைவர் மாவோ அவர்கள் இயற்கை எய்திய வேளை அவரின் அஞ்சலிக் கூட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் (யாழ் மத்திய கல்லூரி மைதாபத்திற்கு அருகாமையில்) நடைபெற்றது. கூட்ட முடிவில் கூட்ட மண்டபத்திற்கு வெளியில் பேராசிரியர் கைலாசபதி அவர்களோடு டானியல் என்.கே. ரகுநாதன் கந்தன் கருணை நாடகத்தில் நாரதராக நடிக்கும் நெல்லியடி சிவராசா- சிவம் (தேடகம்-கனடா) சில்லையூர் செல்வராஐனும் என நினைக்கின்றேன். கூட்டமாக கதைத்துக் கொண்டிருந்தார்கள். அச்சமயம் டானியல், அ.ந. கந்தசாமி மாவோவையும் சீனப் புரட்சியையும் கருவாக வைத்து எழுதிய சிறுகதை பற்றி சில குறிப்புகள் சொன்னபொழுது, நான் இதோடு கந்தசாமி அவர்கள் அன்று தினகரனில் எழுதிய வில்லூண்டி மயான கவிதையையும் (வில்லூன்றி மயானப் பக்கமாக கைகாட்டி) அவரின் துணிவையும் எண்ணிப்பார்க்கின்றேன் என்றார்,  கைலாசபதி அவர்கள்! அன்று கூட்டமாக நின்றவர்களில் இன்று ரகுநாதனைத் தவிர மற்றையோர்கள் எம்மிடம் இல்லை!