Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

என்று தணியும் இந்த இந்திய அடிமை மோகம்!

செய்தியும் செய்திக்கண்ணோட்டமும் 25-07-2010

கூட்டமைப்பின் கூத்தாட்ட அரசியல்!

என்று தணியும் இந்த இந்திய அடிமை மோகம்!

சிந்திய இரத்தம் காயும் முன்னே, சிந்த வைத்தவர்களின் காலடியில்….!

வன்னி நிலப்பரப்பில் கடந்த ஆண்டில் செய்யப்பட்ட மனிதப் படுகொலைகளுக் கூடே சிந்தப்பட்ட இரத்தம் காயவேயில்லை. மனித உடல்கள்-உக்காத முணட்ங்களாகவும்-எலும்புக் கூடுகளாகவும் உள்ளன. மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் முட்கம்பி வேலிக்குள்ளும்-குடியேற்றப்பட்ட பகுதிகளுக்குள்ளும் பரிதவிக்கின்றனர். இவையனைத்தையும்  நேரில் சென்று பார்த்து, பரிதவித்துப்-பதறியவர்கள் தான், இக்‘கூத்தமைப்பினர்’ இவையனைத்தையும் செய்வித்த,  இக்காந்திய தேச “கசாப்புக்கடைக்காரர்”கள் தான் தமிழ் மக்களின் இரட்சகர்களாம்! இவர்களை விட்டால்,  தமிழ்மக்களுக்கு விடிவே இல்லலையாம்! என்குதுகள், இந்த இந்திய மோகம் கொண்ட ‘நவீன அடிமைகள்’!

இந்தியாவினால் மட்டுமே இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்தித் தர முடியும்: சுரேஸ் பா.உ.

இலங்கையின் இனப் பிரச்சினை தீர இந்திய அரசை விட்டால் வேறு வழியில்லை. இந்திய அரசால் மட்டுமே இலங்கை அரசை வற்புறுத்தி ஒரு நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்தித்தர முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இந்தியத் தலைவர்களுடனான சந்திப்பு மற்றும் இலங்கையின் இப்போதைய நிலவரம் குறித்து இந்திய ஊடகமான தினமணி இதழுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் இன்னும் சுமார் 40 ஆயிரம் தமிழர்கள் முகாம்களில் அடைக்கப் பட்டுள்ளனர். முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் தங்கள் சொந்த இடங்களில் குடியேற முடியாமல் இராணுவத்தின் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர்.

அடியோடு இடிந்து சிதிலமான வீடுகளைப் புதுப்பித்து தர இலங்கை அரசு எந்த உதவியும் செய்யவில்லை. இந்திய அரசு அளித்த நிதியில், குடில் அமைக்கத் தேவையான 10 தகரம், 3 மூட்டை சிமெந்து மட்டும் தமிழ் மக்களுக்கு அளிக்கப்படுகிறது. எனவே தமிழ் மக்கள் பலரும் இப்போது வீதிகளிலும், மர நிழல்களிலும் வசிக்கும் அவல நிலை வடக்குப் பகுதியில் உள்ளது. தமிழ் மக்களின் மறுவாழ்வுக்கு எந்த உதவியும் செய்யாத இலங்கை அரசு, தமிழர்களின் சொந்த மண்ணில் சிங்கள குடியேற்றங்களை அமைப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இப்போது இலங்கையின் வடக்குப் பகுதியில் 1 இலட்சம் இராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை அங்கேயே குடும்பத்துடன் குடியமர்த்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 4 இலட்சம் சிங்களவர்களை வடக்குப் பகுதியில் குடியமர்த்துவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

தமிழர்களின் விவசாய நிலங்களைப் பிடுங்கி, சிங்களவர்களிடம் கொடுக்கும் அவலம் நடைபெறுகிறது. மொத்தத்தில் இப்போது முழுமையான தமிழர் பூமியாக உள்ள இலங்கையின் வடக்குப் பகுதியை, இன்னும் பத்தாண்டுகளுக்குள் சிங்கள மக்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக மாற்ற இலங்கை அரசு திட்டமிட்டு செயற்பட்டு வருகிறது.

தமிழ் மக்களின் மண்ணைப் பாதுகாப்பது தான், இப்போது அவசரத் தேவையாக உள்ளது. எனவே போரின் போது இடம் பெயர்ந்து சென்ற தமிழ் மக்கள் அனைவரையும் அவரவர் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தவும், தமிழ் மக்களின் வீடு, விவசாய நிலங்களைப் பாதுகாக்கவும் இந்திய அரசு தலையிடுவது மிக அவசியமாக உள்ளது.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை குறித்து பல வெளிநாட்டு தூதுவர்கள், தலைவர்களிடம் நாங்கள் முறையிட்டுள்ளோம். அவர்கள் அனைவருமே இந்தப் பிரச்சினையில் இந்திய அரசு என்ன நிலைப்பாடு கொண்டுள்ளது என்ற கேள்வியையே கேட்கின்றனர். இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளை ஆதரிக்க சர்வதேச சமுதாயம் தயாராக உள்ளது.

தேர்தல் காலங்களில் தமிழ்மக்களின் நாடி பிடித்தறிந்து, (இந்திய எதிர்ப்பு) தங்களின் அரசியல்-கொள்கை-கோட்பாடு, நிகழ்ச்சிநிரல் அத்தனையும் தங்களது சுயம் கொண்டது.  இந்திய தரப்பின் ஏவலின் பாற்பட்டதல்ல என்றவர்கள், இன்று “இந்திய-மந்திகளாகி”  மத்திய—மாநிலங்களுக்கு மாறி மாறித் தாவுகின்றனர். பாராளுமன்றத் தேர்தல் முடிந்த ஆறுமாதங்களில் தமிழ்மக்கள்பிரச்சினைக்கு தீர்வில்லையென்றால், போராட்டம் என்றவர்கள், இப்போ இலங்கைக்கு ‘மந்தியாகி வந்து அப்பம் றியுங்கள்’ என்கின்றனர்.

மகிந்தப் பேரினவாதம் தொடராய்ச் செய்யும் தமிழின விரோத நடவடிக்கைக்ளுக்கு எதிராக, தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பெரும்பான்மைப் பிரதிநிதிகள் என்ற வகையில், வடகிழக்கில் ஐக்கியப்படக் கூடிய சகல சக்திகளையும், ஐக்கியப்படுத்தி ஜனநாயக வழியிலான, சிறு-சிறு தொடர் போராட்டங்களை கூட்டமைப்பினர் முன்னெடுக்க வேண்டும். ஓர் சிங்களப் பிரதிநிதியை  பாராளுமன்ற உறுப்பினராக்க முடியுமெனில், இதை சாதகமாக்கி, ஏன் சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் மெது – மெதுவாக சென்று தமிழ்மக்கள் பிரச்சினைகளை எடுத்துச் சொல்ல முடியாது. இதுபோன்று சர்வதேச சமூகத்திற்கும், எம் பிரச்சினைகளை ஏன் தெரியப்படுத்த முடியாது! இதை நோக்கிய பயிலலும், சொந்தக் கால்களில் நின்று போராடுதலுமே இன்றைய சமகாலத்தேவை. இதனூடாகவே மக்களை வெகுஜனப் போராட்ட மார்க்கம் நோக்கி நகர்த்த முடியும். இது கூட்டமைப்பினருக்கு மாத்திரமல்ல, மக்கள் நலன் சார்ந்த சகல போராட்ட சக்திகளுக்கும் கூட.

******

ஜனாதிபதியை கொலை செய்ய முயற்சித்த மூவரை தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவு!

ஜனாதிபதியை கொலை செய்ய திட்டமிட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று தமிழ் இளைஞர்களையும் தடுத்து வைத்து விசாணை செய்வதற்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் புலனாய்வுத் துறையினருக்கு அனுமதி வழங்கியுள்ளது .

கொழும்பு பிரதான நீதிமன்ற நீதிவான் ரஸ்மி வெங்கப்புலி முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருந்து ஒருகோடி ரூபாய்களை பெற்றுக் கொண்டு இவர்கள், ஜனாதிபதியை கொலை செய்ய முயற்சித்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக புலனாய்வுத் துறையினர் மன்றில் தெரிவித்தனர்.

இந்த சந்தேகநபர்களின் மூவரில் ஒருவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றினார் என்றும் புலனாய்வுத் துறையினர் குறிப்பிட்டனர்.

குட்டிக்கழுதை:- இதென்ன இப்பிடியொரு செய்தி. எங்கள் தலைவரை கொலை செய்ய ஒரு   கோடி லஞ்சமாம்!

தாய்க்கழுதை:- எங்கள் தலைவரை கொலை செய்ய இந்தப்பெடியள் திட்டமிட்டார்களோ, அல்லது இந்தப் பெடியளை கொலை செய்வதென்று, புலனாய்வுத்துறை திட்டமிட்டுள்ளதோ? பிள்ளாய்! ஓர் சினிமாப் பாட்டுக் கேள்: யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் புரியல்லே! அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே!

குட்டிக்கழுதை:- ஆகா… இப்ப விளங்குதம்மா எம்நாட்டின் அரசியல் சாணக்கியம்!

********

மக்கள் முன் அரசாங்கம் முளங்காலிடும் நாள் தொலைவிலில்லை: அனோமா பொன்சேகா.

தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னனாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமான ஜெனரல் பொன்சேகவை விடுதலை செய் இ நாட்டில் ஜனநாயகத்தை நிலை நாட்டு என்கின்ற கோரிக்கைகளை முன்வைத்து நேற்று கொழும்பு நகரில் ஜனநாயக மக்கள் முன்னணியினரால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டு பேசிய திருமதி அனோமா பொன்சேகாஇ நாட்டு மக்களின் பலதின் முன்னால் ஆட்சியில் உள்ள அரசாங்கம் முளங்காலிடுவதற்கான நாள் தொலைவிலில்லை என தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான தமது போராட்டங்களினால் தாம் எதிர்கொள்ளும் எந்த சவால்களுக்கும் முகம் கொடுக்க தாம் தயாராக இருப்பதாக தெரிவித்த அவர், சிலர் தாம் பலவீனமடைந்துள்ளதாக கருதுவதாகவும், அவர்களுக்கு இங்கு திரண்டுள்ள ஜனத்திரள் பதில் சொல்லும் எனவும், இன்றைய ஆட்சியின் முன்னால் தான் இவ்வாறானதொரு ஜன வெள்ளத்தை எதிர்பார்த்திருக்கவில்லை எனவும் தெரிவித்தார். அத்துடன் சுதந்திரமானதும் நீதியானதுமான முடிவுகளை எடுப்பதற்கு இன்று நீதித்துறைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதனை சொல்லி தெரிந்து கொள்ளத் தேவையில்லை என கூறிய, அவர் அரச அதிகாரம் இன்று நீதித்துறையில் தலையீடுகளை செய்கின்றது எனவும் கூறினார்.

-மனிதகுல வரலாற்றின் உந்துசக்தி மக்களே! அவசரப்பாட்டில் அல்ல, நீண்டகாலநோக்கில் அவர்களே வரலாற்றைப் படைப்பர். எத்தனையோ மேடு-பள்ளம் வழியிலே, அத்தனையும் தாண்டி…..!

*******

நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை வரையறுக்காது, பெயரை மாத்திரம் மாற்றுவதனால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது ‐ டியூ.குணசேகர

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை வரையறுக்காது, அதன் பெயரை மாத்திரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் என மாற்றம் செய்வதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது என அமைச்சரும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளருமான டியூ.குணசேகர தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை தமது கட்சி எதிர்ப்பதை போல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் பதவியை எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் ஒரு நபரிடம் அதிகளவான அதிகாரங்கள் குவிந்து கிடக்கின்றன. இந்த அதிகாரங்கள் அப்படியே நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமரிடம் செல்லுமானால் ஏற்படுத்தப்படும் மாற்றங்களில் எந்த பிரயோசனமுமில்லை எனவும் அமைச்சர் டியூ.குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை கருத்தரங்களில் உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் மேல் மாகாண சபையின் அமைச்சர் உதய கம்மன்பில,  அமைச்சர் குணசேகரவின் கருத்துக்களை ஆமோதித்ததுடன் நீதிமன்றத்திற்கு பொறுப்புக் கூறாத அதிகாரத்தை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியில் மாத்திரமல்ல, பிரதமர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

கனகாலத்திற்குப் பிறகு காலாவதியாகிப்போன ஓர் ‘பொதுவுடமைக்காரரின்’ பொத்தாம் பொதுவான குரலொன்று கேட்கின்றதே! 72-ல் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன வந்த், சிறிமா அரசிற்கு புதிய இனவாத- அரசியலமைப்பு வரைந்துதவியவர்கள்.  நீங்களும், உங்கள்-ரொட்ஸிசக் கூட்டாளிகளும் அல்லவோ!. அன்றில் இருந்து  இன்றுவரை ‘பேரினவாத நிறைவேற்று அதிகாரத்திற்கு’ துணைபோன அசல் ‘கழிவுப் பொதுவுடமைவாதிகளும்’ நீங்கள்தான்!.  உங்களின் சாக்கடை அரசியலால்த் தானே, மக்கள் தங்களின் விடிவிற்கான, செங்கொடி-அரசியலையும், உண்மை-மாக்சிஸ்ட்-லெனினிஸ்ட்டுக்களையும் இனங் காண விரும்பாமல், சகலரையும் வெறுத்து-ஒதுக்குகின்றார்கள்.  இந்நிலையில் தொடர்ந்தும் மகிந்தக்-குடும்ப–பாசிச சர்வாதிகார-அரசின்-அடிமைகளாயிருந்து, ‘விலாங்கு மீனாட்டம்’ விமர்சனங்களு;ம்-விவாதங்களும்…! இது சாத்தானின் வேதம் ஓதுதல் போலுள்ளது,

******

மகிந்த குடும்பம்பத்தின் கடனும் உள்நாட்டு உற்பத்தியின் பின்னடைவும்

இங்கையின் அபிவிருத்திக்கு, அரசின் கடன் சுமை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பின்னடைவு என்பன மிக முக்கிய தடைகளாக இருக்கின்றன. 2009 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் அறிக்கையின் படி இலங்கையின் மொத்த வெளி நாட்டு கொடுகடனாக 1448.7 பில்லியன் காணப்படுகின்றது. இதில் 37% சர்வதேச நாணய நிதியத்திற்கு வழங்கப்பட வேண்டியது.

நாட்டின் மொத்த திரண்ட கடன்தொகை கடந்த வருடத்தில் 4000 பில்லியனையும் தாண்டியி ருந்தது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80% இற்கும் அதிகமானதாகும். இதனை 2013 ஆம் ஆண்டு 60% ஆக கொண்டுவர வேண்டுமென குறிப்பிட்டபோதும், அது எட்ட முடியாத தொலைவிலே காணப் படுகின்றது. அரசினால் தொடர்ந்தும் வரவு செலவு திட்டத்தில் துண்டு  விழும் தொகையை ஈடுசெய்ய முடியாதுள்ளது. இதனால் வெளிநாட்டுக் கடன்களைப் பெற வேண்டிய நிலை ஏற்படுகின்றது. கடந்தவருடம் மொத்த செலவுக்காக 119.7 பில்லியன் ரூபாய் ஒதுக்கிய போதும் முதல் எட்டு மாதத்திற்கான செலவு 844.7 பில்லியனாக இருந்தது. கடன் தொகையினை அடைப்பது இன்று அரசுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. அதிகமான வட்டியையும் செலுத்த வேண்டியுள்ளது. 2008 இல் அரசு மீள செலுத்திய 592 பில்லியன் கடன்தொகையில் 212.5 பில்லியன் வட்டியாக செலுத்தப்பட்டுள்ளது. இது செலுத்திய தொகையின் 36% ஆகும்.

அரசு எதிர்நோக்குகின்ற மற்று மொரு சவால் அரச நிறுவனங்களிலும், திணைக்களங்களிலும் காணப்படும் ஊழலும் முறையற்ற நிருவாகமுமாகும். இதனால் பல கோடிக்கணக்கான அரச சொத்துக்கள் வீண்விரயமாக்கப்படுகின் றன. இலங்கை மின்சார சபை கடந்த வருடம் 7400 மில்லியன் ரூபா நட்டத்தில் செயற்பட்டுள்ளது என்பது இதற்கான சிறந்த உதார ணமாகும். இதேபோன்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், தபால் திணைக்களம், ரயில்வே திணைக்களம், மிஹின் லங்கா, போக்குவரத்து சபை என்பனவும் பாரிய நட்டத்திலே இயங்கி வருகின்றன.

இலங்கை மனித உரிமைகள் மீறப்படும் நாடுகளில் ஒன் றாக சர்வதேச கணிப்பீடுகள் காட்டுகின்றன.

கடந்த வருடம் நிறைவடைந்த போரின்போது நடை பெற்ற குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்யப்பட வேண்டுமென சர்வதேச நிறுவனங்கள் பிடியாக நிற்பது இன்னும் இதனை பாதிப்புக்கு உட்படுத்தும்.  இதன் போது EFW சுட்டி குறைவடையும். இது வெளிநாட்டு முதலீடுகளினைத் தடுத்து விடும். அரசு தொடர்ந்து போர்க் குற்ற விசாரணை அவசியமில்லை என்றிருப்பதும் ஐ.நா.வின் செயலாளர் இலங்கை தொடர்பான அவருக்கான ஆலோசனைக் குழு அமைப்பதில் ஈடுபடுவதும் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியைப் பிற்போடுகின்றது.

இந்த சவால்களைக் கடந்து அரசு பொருளாதார அபிவிருத்தியை அடைய வேண்டியுள்ளது. அரசு தனது பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை மக்கள் மயப்படுத்த வேண்டியுள்ளது. பொருளாதார அபிவிருத்தியை அரச மட்டங்களில் மாத்திரம் அடைய முடியாது. மாற்றமாக நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் அதற்கு பங்காற்ற வேண்டும் என்ற உணர்வினை ஏற்படுத்த வேண்டும். அத்துடன் இன்றைய இலங்கையின் கல்வி நிலையும் பொருளாதார அபிவிருத்திக்கு சவாலாக அமைந்துள்ளது. இலங்கையில் நவீன தொழில் நுட்ப வல்லுனர்கள் குறைவாகவே உள்ளனர். எனவே கல்வித் திட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப் பட வேண்டும். அறிவுள்ளோரே இன்று மூலவளமாக கணிக்கப்படுகின்றனர்

மகிந்த சிந்தனை பற்றி அவரை விட, அவரின் ரசிகர்களே அதிகம் விதந்துரைப்பர். டக்கிளஸ் தேவானந்தா கூட, பெரும் பொருளாதார நிபுணராட்டம், ஏதேதோவெல்லாம் சொன்னார். இலங்கை மூன்றாம் உலக நாடல்ல, ஓர் ‘செல்வந்த நாடாட்டம்’  வீருநடை போடுகின்றது என்றார். பார்த்தால் ‘பேச்சுப் பல்லக்கு தம்பி பொடிநடை’ என்ற பாங்கிலேயே இலங்கையின் அரசியல்-பொருளாதார அபிவருத்தி உள்ளது!.  பாமரத்தனம் கொண்ட, எதேச்சதிகார-அநாகரிக சண்டித்தன அரசியலால், அண்ணன-தம்பிகள்-முதல்-அண்டியுள்ள மந்தி(ரி)களுமல்லவோ நாட்டை–அல்லோல-கல்லப் -படுத்துதுகள்! இதனால் சர்வதேச சமூகத்திடம் இருந்து (மானம்-மரியாதை) பெறவற்றைக்கூட பெறமுடியாமல் இருக்கின்றது.

*******

பயங்கரவாதத்திற்கு  எதிரான யுத்தம்: இஸ்ரேலுக்கு இலங்கை ஆதரவு

பாலஸ்தீனத்தில் நிலவும் பயங்கரவாதத்திற்கு எதிரான இஸ்ரேலின் யுத்தத்திற்கு இலங்கை ஆதரவளிக்கும். இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவரும் முன்னாள் கூட்டுப் படையதிகாரியுமான டொனால்ட் பெரேரா இவ்வாறு தெரிவித்தார். வைநெட் நியூஸுக்கு(Ynetnews) அளித்த செவ்வியொன்றின் போதே டொனால்ட் பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் “நிபந்தனை எதுவுமின்றி நேரடி பேச்சுவார்த்தைக்கு பலஸ்தீனர்கள் முன்வர வேண்டும். பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பினரும் உடன்படிக்கையொன்றில் கையெழுத்திடுவதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். எமது நாட்டின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின் போது தகவல்கள் பரிமாற்றம், இராணுவத் தொழில்நுட்பங்கள், கருவிகள் போன்றவற்றை இஸ்ரேல் தந்துதவியது.

எமது வான்படையில் 17 கிபீர் யுத்த விமானங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. எமது விமானிகள் இஸ்ரேலில் பயிற்றுவிக்கப்பட்டனர். கடந்த சில வருடங்களில் பில்லியன் கணக்கான டொலர் உதவிகளும் எமக்குக் கிடைத்தன. அதனால்தான் நான் இஸ்ரேலில் பணியாற்றுவதற்கு நியமிக்கப்பட்டிருக்கிறேன் எனக் கருதுகிறேன்” என்றார்.

டொனால்ட் பெரேரா முன்னாள் கூட்டுப்படை அதிகாரி, இவர் பிரபாகரனை ‘சட்டென்று’ அடையாளம் கண்ட ‘பெரும்’ கண்டுபிடிப்பாளனனும் கூட. கூட்டுப்படை அதிகாரியாக இருந்தபோது,  நிபந்தனை எதுவுமின்றி சகலதையும் செய்யுங்கள் என்ற பேரினவாதப் பழக்க தோஷத்தில், பலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேலிய ‘ஒற்றனாக’ இருந்து ஓடர் போடுகின்றார். ஒற்றர்களுக்கு அடக்கி-ஓடுக்கலின், விடுதலையின் வலி எப்படிப் புரியும். போரின் போது அடக்கி-ஒடுக்கக் கொடுத்ததுகள் தான்,  (இந்தப் ‘பப்பிக்கு’) ஞாபகத்தில் நன்றியாயும் வரும். அதற்காக வாலை ஆட்டுது. இதில் என்ன தப்பு. அத்தோடு இச் சிதம்பர சக்கரத்தில், மகிந்தா பலஸ்தீன-இலங்கை நட்புறவுச் சங்கத்தலைவர். பெரேரா கூற்றிற்கு நட்புறவுச்சங்கம் கண்டனம். மகிந்தா மௌனம். ஆகா.. என்னே என்பது! இந்த ‘சோஷல் சைன்ஸ்’ அரசியலை!

******

தனக்கு தன் கல்லறையினை தெரிவு செய்த மந்தி(ரி) மேர்வின

பிரதி நெடுஞ்சாலைகள் அமைச்சர் மேர்வின் சில்வா  புகழ்பெற்ற பாடகர் எச்.ஆர்.ஜோதிபாலவின் 23ஆவது ஞாபகார்த்த தினத்தை நினைவு கூருவதற்காக பொரளை கனத்தை மயானத்திற்குச் சென்றபோது, தமது கல்லறையையும் ஒதுக்கிக் கொண்டார். காலம் சென்ற பாடகரின் கல்லறைக்கு அருகில் நின்று கொண்டிருந்த அமைச்சர் சில்வா திடீரென அனைவரினதும் ஆச்சரியத்திற்கு மத்தியில், எதிர்காலத்தை பற்றி யாருமே நிர்ணயிக்க முடியாது என்று கூறிக் கொண்டே தமது கல்லறையை தாம் இப்போதே ஒதுக்கி கொள்வதாக கூறினார்.

இதன் பின்னர் காலஞ் சென்ற பாடகரின் கல்லறைக்கு சமீபமாக ஒரு வெற்றிடத்தை காண்பித்து, அதனை தமக்கு ஒதுக்கப் போவதாக தெரிவித்த அமைச்சர் தமது செயலாளரிடம் கொழும்பு மாநகர விசேட ஆணையாளர் ஒமார் கமீலுக்கு தொலைபேசி அழைப்பு எடுக்குமாறு கூறினார். ஆணையாளர் கமீலுடன் சிறிது தூரத்தில் நின்று கொண்டு தொலைபேசியில் தனிப்பட்ட முறையில் பேசிய பின்னர் அங்கு குழுமியிருந்தவர்களிடம் திரும்பிய அமைச்சர் சில்வா தாம் ஒதுக்கிய கல்லறையை மாநகர சபைக்கு அறிவித்து விட்டதாக தெரிவித்தார்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ உயிரிழக்கும் போது, நானும் உயிரிழந்து விடுவேன்!… –சொல்பவர் அதே ஆள்த்தான்.

‘பகுத்தறிவற்ற’– நான் ஜனாதிபதியைக் கேட்கின்றேன்! இவர் எங்கும் எதிலும்  “தெள்ளத்-தெளிவுடன்” .உள்ளார். உங்கள் உயிர் பிரியும்போது, இவருக்கு எப்படி என்ன ‘சிக்னல்’ கொடுக்கப் போகின்றீர்கள்! அல்லது தேசிய-சர்வதேசிய குற்றவாளிகள் ஆகும் போது இருவருக்கும், ஓரே நேரத் தண்டனை கேட்பாரோ? இவர் இருக்கும் போதும்-இறக்கும் போதும் உங்களுக்கு உபத்திரவம் உள்ளவர் ஆச்சே!

******

போர் ஒத்திகை எதிரொலி, அணுகுண்டு வீசவும் தயங்க மாட்டோம்: வட கொரியா எச்சரிக்கை

சியோல்  ஜூலை 24:  அமெரிக்கா, தென் கொரியா ஆகிய இரு நாடுகள் மீது அணு குண்டுகளை வீசி பதிலடி கொடுக்கவும் தயங்கமாட்டோம் என்று வட கொரியா கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

தென் கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு கடற்படை ஒத்திகையை செய்யத் திட்டமிட்டுள்ளது. இதற்காக அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் போர்க்கப்பல் தென் கொரியாவுக்கு வருகை தந்துள்ளது.

இந்தக் கப்பல் முழுவதும் போர் விமானங்கள் இடம்பெற்றுள்ளன. தென் கொரியாவும் கடல் பகுதியில் போர்க் கப்பலை நிறுத்தியுள்ளது. இரு நாடுகளின் கூட்டு கடற்படை ஒத்திகை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 25) தொடங்குகிறது.

தொடர்ந்து அத்துமீறி நடந்து வரும் வட கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தான் இரு நாடுகளும் இந்தக் கூட்டு கடற்படை ஒத்திகையை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் வட கொரியா கோபம் அடைந்துள்ளது. அமெரிக்காவுக்கும், தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

“”ஒருவேளை அமெரிக்காவும், தென் கொரியாவும் எங்களை தாக்கினால் நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம். இரு நாடுகளின் தாக்குதலுக்கு பயந்து எங்களது ராணுவ வீரர்களோ, மக்களோ ஓடமாட்டார்கள். எதிர்த்து பதிலடி கொடுப்பார்கள்” என்று வட கொரியா தெரிவித்துள்ளது.

தேவைப்பட்டால் எங்கள் வசம் உள்ள அணு குண்டுகளை வீசித் தாக்கவும் தயங்கமாட்டோம் என்றும் அந்நாடு கடுமையாக எச்சரித்துள்ளது.

“”தென் கொரியாவும், அமெரிக்காவும் போர்க்கப்பலை நிறுத்தி வைத்திருப்பதை கவனித்து வரும் வட கொரியா கோபத்தின் உச்சத்துக்கே சென்றுள்ளது. இரு நாடுகளும் தங்கள் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் தொடுக்கலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டது.

இதைக் கருத்தில் கொண்டு எத்தகையை சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் வட கொரியா ராணுவத்தை ஆயத்தப்படுத்தியுள்ளது” என்று அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த எச்சரிக்கையை அடுத்து வட கொரியா- தென் கொரியா இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.