Mon06142021

Last updateSun, 19 Apr 2020 8am

நமக்கு வாய்த்த இலக்கியவாதிகள் மிகவும் திறமைசாலிகள்!

அண்மையில் கவிஞர் தீபச்செல்வன் திருவாய் மலர்ந்து அருள்வாக்கு ஒன்றை சொல்லியிருக்கிறார். இந்திரா காந்தியும், எம்.ஜி.ஆரும் இருந்திருந்தால் அவர் தமிழீழத்தில் வாழ்ந்திருப்பாராம். இத்தகைய பிதற்றல்களிற்கு "வங்கம் தந்த பாடம்","முறிந்தபனை" முதல் எத்தனையோ அரசியல் கட்டுரைகளும் ஈழ மக்களினதும், இந்திய மக்களினதும் வாழ்வுமே மறுமொழி சொன்னாலும் நமக்கு வாய்த்த தலைவர்களிற்கும், இலக்கியவாதிகளிற்கும் இந்த அசட்டுத்தனங்களும், அடிமைப்புத்திகளும் என்றைக்குமே மாறுவதில்லை.

பெயரளவிற்கேனும் இந்தியாவிலே இருந்த முதலாளித்துவ ஜனநாயகத்தையும் அவசரகாலச்சட்டம் மூலம் இல்லாமல் செய்த இந்திரா, தீபச்செல்வனுக்கு தமிழீழத்தை தங்கத் தாம்பாளத்திலே வைச்சுக் கொடுத்திருப்பாவாம். வங்கதேசத்திலே இருந்த உண்மையான தேசபக்தர்களையும், இடதுசாரிகளையும் கொன்று குவித்து விட்டு, தங்களின் நலன்களிற்கேற்ப ஒத்து ஊதக்கூடிய வலதுசாரிக்கும்பலாக முக்திபாகினி விடுதலை இயக்கத்தை மாற்றி வங்கதேசத்தையே பிணக்காடாக்கிய இந்திரா, கொத்துச்சாவியோடு கொழுவி வைத்திருந்த ஈழத்தை இடுப்பிலே இருந்து எடுத்து தராமலே மறைந்து போய் விட்டாவே என்று கவிஞர் கவலைப்படுகிறார்.

இந்திரா காந்தியை அவசரகாலச்சட்டத்தின் போது கூட ஆதரித்த ஒரு கட்சித்தலைவர் என்றால் அது நம்ம வீராதிவீரன் எம்.ஜி.ஆர் தான். அதற்கு அடுத்த தேர்தலில் மொரார்ஜி தேசாய் பிரதமராக வந்த போது மொரார்ஜியின் காலிலே விழுந்த தன்மானச்சிங்கம் நம்ம வாத்தியார். மொரார்ஜியை கவிழ்த்து விட்டு சரண்சிங் ஆட்சிக்கு வந்தவுடன், சிங்குடன் கூட்டு என்று ஆட்சிக்கு யார் வந்தாலும் நின்னையே கதியென்று சரணடைந்தவர் நம்ம ஆளு. அவர் புலிகளிற்கு மத்திய அரசையும் மீறி கோடி, கோடியாகக் கொடுத்த கொடைவள்ளல் என்று சிலர் சிந்து பாடுவதுண்டு. எந்த மத்திய அரசையும் மறந்தும் கூட பகைக்காத இந்த சுத்த வீரன் மத்திய அரசின் ஆணையின்றி தனது பணத்தை கொடுத்தாராம். தனது படங்களிலே நடிப்பு என்றால் என்னவன்றே தெரியாமல் ஓடித்திரியும் வாத்தி, றோவினது உளவு நாடகங்களிலே, சும்மா சொல்லக்கூடாது நல்லாவே நடிச்சிருக்கு.

இவரின் ஈழ ஆதரவிற்கு உதாரணமாக எண்பதுகளின் ஆரம்பத்தில் மதுரை உலகத்தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டின் போது நடந்த நிகழ்வொன்றை குறிப்பிடலாம். யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களான பட்டிமன்ற புகழ் ஜெயராஜ் (நால்வருணக் கோட்பாடு,சைவசமயம் என்பவை புனிதமானவை என்று பேசித்திரிகிறாரே அவர்தான்), குமரகுருபரன் போன்றவர்களால் அகில இலங்கை கம்பன் கழகம் தொடங்கப்பட்டது. (இது ராமாயணம் பாடிய கம்பன்). இந்த கழகத்திற்கும் மாநாட்டிற்கு அழைப்பு கிடைத்தது. அந்த மேடையிலே எம்.ஜி.ஆர் முன்பு ஜெயராஜ் பேசிய போது ஈழத்தமிழர்களிற்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

"மக்களிற்கு ஜனநாயக உரிமையை கொடுத்தால் அரசியல் அனாதைகள் ஆகி விடுவோம்" என்று மாவீரன், யாழ் மாவட்ட ஜனாதிபதி கிட்டு சொன்னதை எல்லாம்விட அசத்தலான ஒரு மறுமொழியை அரசியலறிவு மிகுந்த நம்ம வாத்தியார் கொடுத்தார். நீங்கள் என்னை கேட்டா போராட வெளிக்கிட்டீர்கள்? ஒரு வாசகம் என்றாலும் திருவாசகம். மதுரையே கலங்கிப்போச்சு. மறுநாள் இலங்கை, இந்திய பத்திரிகைகள் எல்லாம் கோபால் பல்பொடி விளம்பரத்தைக் கூட ஒதுக்கி வைத்து விட்டு வாத்தியின் அரசியலறிவையும், ராசதந்திரத்தையும் கொட்டை எழுத்துக்களில் வெளிப்படுத்தினார்கள். இலங்கை முழுவதும் வாத்தியின் கொடும்பாவிகள் கொழுத்தப்பட்டன. இந்த அரசியல் கோமாளி தான் நம்ம மீட்பராம்.

கவிஞர் இப்படி என்றால் கதாசிரியர் சோபாசக்தி, நான் மட்டும் என்ன குறைந்தவனா என்கிறார். கீழே உள்ளவை அவரின் பொன்மொழிகள்.


"திங்கட்கிழமை பிரதமர் இல்லத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நிகழும் என்று புதிய ஜனநாயக மக்கள் முன்னணியினரின் இணையத்தில் தகவலறிந்து குறித்த நேரத்திற்கு பிரதமர் இல்லம் முன்பு சென்றால் என்னையும் என்னோடு வந்த தோழரையும் தவிர ஈ காக்காய் அங்கில்லை. பிரதமர் இல்லத்துக் காவல்காரனிடம் விசாரித்தால் அப்படியொரு நிகழ்வு குறித்து தகவலே இல்லையென சொல்லிவிட்டான். கண்களை தூர எறிந்து துப்பறிந்ததில் பிரதமர் இல்லத்திலிருந்து அரை மைல் தூரத்தில் மூவர் தெருவோரமாகப் பதுங்கி நிற்பது தெரிந்தது. அவர்கள்தான் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்த புதிய ஜனநாயக மக்கள் முன்னணிக்காரர்களாம். அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை. பின்பு ஆர்ப்பாட்டம் பாதுகாப்புக் காரணங்களால் ரத்துச் செய்யப்பட்டது என புதிய ஜனநாயக மக்கள் முன்னணி இணையத்தில் அறிவிப்பு வந்தது. அட சீரழிவே! அங்கே என்ன பாதுகாப்புப் பிரச்சினை என்பது எனக்குத் தெரியவில்லை".

இவர் ஒரு எழுத்தாளராம், ஆனால் முன்ணணியின் இணையத்தளத்தில் வந்த அறிவிப்பை பாவம் அவரால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. தோழர் குமார் குணரத்தினம், தோழி திமுது கடத்தப்பட்டபோது முன்னிலை சோசலிசக்கட்சி, பிரித்தானிய பிரதமர் இல்லத்தின் முன்பு சித்திரை ஒன்பதாம் திகதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தது. முன்ணணி இணையத்தளம் அந்த அறிவிப்பை பிரசுரித்திருந்தது. முன்னிலை சோசலிசக்கட்சியின் அறிவிப்பு பரவலாக போய்ச்சேரவேண்டும் என்பதற்காகவும், கடத்தலிற்கு எதிரான எமது குரலாகவும் நாம் அதை பிரசுரித்திருந்தோமே தவிர அந்த போராட்டத்தை ஒழுங்கு செய்தது நாம் அல்ல.

பிரதமர் இல்லத்திற்கு அவர் சென்ற போது அவரையும், அவரது தோழரையும் தவிர ஈ, காக்காய் கூட அங்கில்லையாம். பிரித்தானிய பாராளுமன்றம், பிக்பென் (BigBen) மணிக்கூட்டுக்கோபுரம், பிரதமர் இல்லம் என்ற முக்கியமான இடங்கள் அருகருகே இருக்கும் அந்த இடத்தில் எந்த நேரமும் சனக்கூட்டம் நிரம்பி வழியும். உலகத்தில் உள்ள எல்லா நாட்டுக்காரர்களும் வந்து போகும் இடம் அது. இவரிற்கு மட்டும் ஈ கூட அங்கில்லாமல் போய் விட்டது. பிரதமர் வீட்டுக்காவல்காரரிடம் விசாரித்தாராம். எதோ கந்தையா அண்ணை வீட்டுக்கதவை தட்டி விசாரித்தது போல கதை சொல்கிறார்.

கண்களைத் தூர எறிந்து துப்பறிந்ததில் அரைமைல் தூரத்தில் மூவர் பதுங்கி நிற்பது தெரிந்தது. ஆகா, என்ன ஒரு ஞானக்கண். 10, Downing Street இலிருந்து அரைமைல் தூரம் என்றால் பாராளுமன்றம், பிக்பென் (BigBen) எல்லாம் தாண்டி வெஸ்ட்மினிஸ்டர் (Westminster) பேராலயம் வரை பார்த்திருக்கிறார். நல்லகாலம் இதை C.I.A காரனுகள் ஒருத்தனும் வாசிக்கவில்லை. வாசித்திருந்தால் அரைமைல் தூரம் வெறும் கண்ணாலேயே துப்பறிந்து பார்க்கக்கூடிய அதிசயப்பிறவி என்று அப்படியே அள்ளிப்போட்டுக் கொண்டு போயிருப்பான். தமிழ் கூறும் இலக்கிய உலகு தன் தவப்புதல்வர்களில் ஒருவனை இழந்திருக்கும்.

ஜெயமோகன் என்னும் இந்துமத வெறியன், இந்திய அழிவுப்படை ஈழத்தில் கொலை செய்யவில்லை, கொள்ளை அடிக்கவில்லை, பெண்களை வன்புணர்ச்சி செய்யவில்லை என்கிறது. வேதங்களின் மேன்மை, சாமிமார்களின் அருட்பெரும் கருணைகள் என்று உளறித் திரியும் இது, இப்படித்தான் பேசும். தன்னுடைய கதை ஒன்றில் இது சொல்கிறது. தான் ஒரு பெரிய காவியம் ஒன்றை படைத்துக் கொண்டிருக்குதாம். அதை வெளியிட ஆள் வேண்டுமாம். ஆனால் தன்னுடைய ஈழத்தமிழ் நண்பர்கள் இருக்கும் வரை அதைப்பற்றி யோசிக்கத்தேவையில்லை என்கிறது. இந்த ஈழத்தமிழ் நண்பர்களை நினைத்தால் தான் பரிதாபமாக இருக்கிறது.

நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள் என்பான் இம்சை அரசன். அப்ப நமக்கு வாய்த்த இலக்கியவாதிகள்....!!

--16/06/2012