Mon06212021

Last updateSun, 19 Apr 2020 8am

வெள்ளாள மார்க்சிஸ்ட்டு


கையை பிளேட்டால் வெட்டி, கூட்டணிக்காரரிற்கு பொட்டு வைத்து விட்டு தமிழீழம் கிடைக்கும் வரை கலியாணம் கட்ட மாட்டேன் என்று அறுவைதாசன் சபதம் எதுவும் செய்யவில்லை  அவனின்ரை தாய் தான் பரம்பரையின்ரை பேர் உன்னோடை முடியிறதோ எண்டு அழுது குழறி பொம்பிளை பார்த்துக்கொண்டு இருந்தாள் . சலரோகம். ரத்தக்கொதிப்பு தான் உங்கடை பரம்பரைச்சொத்து இதுவெல்லாம் ஒரு பரம்பரை என்று அறுவை தாயிடம் எரிந்து விழுந்தாலும் யாழினியின் படத்தைக் கண்டதும் அப்பிடியே கவிண்டு போய் விட்டான்.

விமானநிலையத்தில் யாழினி வந்து இறங்கிய போது நடந்தது தான் அறுவையின் வாழ்க்கையையே மாற்றி விட்டது. யாழினியை கண்டதும் அறுவை வாய் காது வரை விரிய சிரிச்சுக் கொண்டே பக்கத்திலே போனான். ஆனால் யாழினி இவனை ஏறெடுத்தும் பாராமல் யாரையோ தேடினாள். என்ன தேடுறீர் நான் தான் சிவா என்றான் அறுவை. உம்மடை அம்மா மகன் வெள்ளை எண்டு சொன்னா,அது தான் அந்த வெள்ளை ஆளைத்தேடினேன் என்று ஒரு நக்கல்சிரிப்பு முகத்தில் மலர்ந்தபடி யாழினி சொன்னாள். இந்த மனிசி எப்பவும் இப்பிடித்தான் கழுத்தறுக்கும் என்று தாயை நினைத்து பல்லைக் கடிச்ச அறுவையின் நல்லெண்ணெய் கறுப்புமுகம் இன்னும் கறுப்பானது. அன்றைக்கு யாழினியின் முகத்தில் மலர்ந்த நக்கல்புன்னகை பிறகு எந்தக்காலத்திலும் வாடவேயில்லை.

அறுவையின் பேச்சுகளும்,போக்குகளும் யாழினியின் சிரிப்பை இன்னும் கூட்டிகொண்டே போனது. அறுவைக்கு ஒவ்வொரு நாளும் அவனது கூட்டாளிகள் போன் எடுத்து உலகத்து பிரச்சனை முழுக்க அலசுவார்கள், இடைக்கிடையே வீட்டை வந்தும் விவாதங்கள் நடக்கும். அவையளிற்கு ஒரு கட்சி வேறு இருந்தது. இவனுகள் முப்பது வருசங்களிற்கு மேலே கரடியாக கத்தி வந்தாலும் கட்சியிலே ஏழரை பேர்தான் இருக்கினம். ஒருவர் கட்சியிலே இருக்கிறாரா இல்லையா என்று கட்சிக்கும் தெரியாது, அவருக்கும் தெரியாது. அப்பப்ப வந்து போய்க்கொண்டு இருப்பார் அதாலே அவரை அரைக்கணக்கில் அறுவை சேர்த்திருந்தான். இந்த லட்சணத்திலே ஏன் பொதுமக்கள் மனித விரோதிகளையே ஆதரிக்கிறார்கள் என்று ஒரு ஆராய்ச்சி வேறு நடக்கும். பொறுத்து,பொறுத்து பார்த்த யாழினி ஒருநாள் பொங்கி எழுந்தாள். நீங்கள் கதைக்கிறது மற்றவைக்கு விளங்கினால் தானே ஆட்கள் உங்களோடு சேருவினம். முதலிலே என்னை மாதிரி பொதுமக்களுக்கு விளங்கக் கூடிய மாதிரி கதைக்கப்பழகிக் கொள்ளுங்கோ என்றாள்.

கனநாளாக அறுவைக்கு ஒரு சந்தேகம். எஸ்.பொன்னுத்துரை சொன்ன மாதிரி யாழினி தானும் புருசனும் தட்டாருமாக வாழ வேண்டும் என்ற யாழ்ப்பாணப்பாரம்பரியத்திலே வந்த பெட்டை. அதன்படி புருசன் மற்றவர்களுடன் சேர்ந்தால் கெட்டுப்போய் விடுவான், வீண்செலவுகள் செய்வான் என்ற ஒப்பற்ற கொள்கைகளை சொல்லிச் சொல்லி வளர்த்த சமுதாயத்தில் வளர்ந்தவள். அவள் எப்படி அவனது தோழர்கள் போன் எடுத்தாலோ, வீட்டை வந்தாலோ முகம் சுளிக்காமல் இருப்பது மட்டுமல்லாமல் அவர்களை வரவேற்று உபசரிக்கவும் செய்கிறாளே என்று பாண்டியன் ஒருவனிற்கு பெண்டாட்டியின் கூந்தலிற்கு வாசம் இயற்கையா, செயற்கையா என்று வந்ததை போல ஒரு சந்தேகம் வந்தது.ஒருநாள் அவள் சந்தோசமாக இருந்த நேரத்திலே தன்ரை சந்தேகத்தைக் கேட்டும் விட்டான். அவளின்ரை முகத்திலே அந்த புன்சிரிப்பு தன்ரைபாட்டிலே பூத்தது. நான் வந்த புதிதிலே உமக்கு மண்டை கழன்டு போனதை பார்த்து கவலைப்பட்டேன் பிறகு இவையளை பார்த்த பிறகு உம்மை மாதிரி இன்னும் நாலு பேர் இருக்கினம் எண்டு ஆறுதல் வந்தது என்றாள்.

அவனிற்கு மண்டை கிறுகிறுத்துப்போனது. தாங்கள் உலகத்தையே மாற்ற பாடுபட்டுக் கொண்டிருக்க இவள் இப்படி இருக்கிறாளே என்று கவலைப்பட்டான். இவளை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று யோசித்து தங்களுடைய இணையங்களை வாசிக்கச் சொன்னான். அதிலேயிருந்து அவளுடைய மொழிநடையே மாறிவிட்டது. மயிர்,கோவணம்,தூமை, எல்லாம் சர்வ சாதாரணமா அவளின்ரை வாயிலே இருந்து வந்தது. ஒருநாள் அவள் வைத்த சொதி நல்லாயில்லை என்று அறுவை ஒரு விமர்சனம் வைத்தான். நீர் நான் வைச்ச சொதியின் மேலே ஒண்ணுக்கடிக்கிறீர் என்று அவனுகளின் இணையத்தமிழ் நடையிலேயே மறுமொழி சொன்னாள் அவள். சொதியை குடிக்கும் போதே அப்பிடித்தான் இருந்திச்சுது என்று முனகினான் அவன்.

மறுபடியும் வேதாளம் முருங்கை மரத்திலே ஏறியது என்று நீண்டு கொண்டே போகும் விக்கிரமாதித்தன் கதைகளை போலே நீளமான தமிழ்சீரியல்களை பார்த்துக் கொண்டிருந்த யாழினி இப்ப அதுகளை விட்டுவிட்டு இணையத்தளச் சண்டைகளையும்,தொலைக்காட்சிகளில்
வரும் அரசியல் விவாதங்களையும் ஆர்வமாக பார்க்கத் தொடங்கினாள். சீரியல்களில் வரும் மாமியார்-மருமகள் சண் டைகளை விட இவையளின்ரை சண்டை பார்க்க நல்லாயிருக்கு என்று ஒரு காரணம் வேறு சொன்னாள்.

அவர்களின் பிள்ளைகள் சங்கீதம் பழகுகிறார்கள். வெளிநாட்டில் வளரும் பிள்ளைகளிற்கு தமிழ்பாட்டு படிப்பதே கஸ்டம் இதிலே தெலுங்குகீர்த்தனைகளை எதுக்கு சொல்லிக்கொடுத்து சிரமப்படுத்த வேண்டும் என்று அவன் அடிக்கடி சண்டை போடுவான். அன்றைக்கு நின்னுக்கோரி வர்ணம் என்ற கீர்த்தனையை அவள் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க பிள்ளைகள் விளங்கி கொள்ள முடியாமல் சிரமப் பட்டார்கள். தியாகராஜர் ஒரு தெலுங்கு பிராமணர்,அவர் தெலுங்கிலே தான் பாடுவார். நீர் ஏன் தமிழ்பிள்ளைகளிற்கு தெலுங்கு பிராமணனின் பாட்டுகளை திணிக்கிறீர் என்று விட்டு நின்னுக்கோரி என்பதை கொஞ்சம் மாத்தியும் பாடினான். ஆத்திரத்தின் உச்சிக்கு போன யாழினி சட்டென்று சொன்னாள்,பிராமண எதிர்ப்பு கதைக்கும் நீர் ஒரு வெள்ளாள மார்க்சிஸ்ட்டு.