Mon06212021

Last updateSun, 19 Apr 2020 8am

உடலாலும், சொல்லாலும் காயப்படுத்தப்படும் உயிரினம்

தாய், மனைவி, சகோதரி, மகள், பூமித்தாய், கடல் அன்னை, நிலம் என்னும் நல்லாள், தாயின் மணிக்கொடி, கல்வித்தெய்வம் இன்னும் என்னவெல்லாமோ சொல்லுவார்கள். ஆனால் பட்டப்பலில் பலர் சேர்ந்து அவளின் உடல், மானம்,உயிர் உறிஞ்சி எடுப்பார்கள். ஆனால் அதுவும் அவளின் குற்றம் தான். அவள் ஒழுங்காக உடை உடுத்தவில்லை, சேலை இடையைக் காட்டும், பாவாடை தொடையைக் காட்டும். பாலைவனத்தில் காற்று மணலை வீசி அடிக்கையில் மணல் மழையில் இருந்து தப்புவதற்காக உடல் முழுதும் மூடி கண்கள் மட்டும் வெளியே தெரிய போடப்பட்ட உடையை பெண்களிற்கான சர்வதேச உடையாக்குங்கள். கண்ட நேரத்திலும் வெளியே சுற்றலாமா, பொது இடத்தில் காதலனுடனோ, கணவனுடனோ கரம் கோர்த்து நடக்கலாமா, கட்டிப்பிடிப்பது ஆபாசத்தின் உச்சமல்லவா, உங்களது அன்பை வெளிப்படுத்துவதென்றால் அதை நாலு சுவர்களிற்குள் வெளிப்படுத்துங்கள்.

வீட்டில் வேறு ஆண்கள் இருக்கக்கூடும் எனவே வெளியே சத்தம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் அனிச்சம்பூவிலும் மெல்லியவர்கள் அவர்கள் மனம் கெட்டு விடக்கூடும். வெளியில் செல்லும் போது காதலாகி, கசிந்து அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்ற நிலை வந்தால் அவசரப்படதீர்கள். கலாச்சாரக்காவலர்கள் கண் இமைக்காமல் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள், மயிர் நீப்பினும் வாழா கவரிமான் போல பெண் இருக்க வேண்டும். காதலோ, காமமோ வந்தால் அவள் றூம் போட்டுத் தான் எதுவும் செய்ய வேண்டும்.

பதி இறந்தால் அவள் சதியாகி எரிக்கப்பட வேண்டும். அவள் அவனின் உடமை. அவனே போன பிறகு அவளிற்கு இங்கே என்ன வேலை. அவள் வாழக்கூடாது. பால்வற்றின பசுமாடு போலே வைத்திருந்தால் நட்டம் தான் மிஞ்சும். அவள் பெண்ணாகி வந்ததொரு மாயப்பிசாசம். மூத்த சங்கராச்சாரி திருவாய் மலர்ந்தது போல தரிசு நிலம். ஜெகத் குரு, அகில உலக வாத்தியார் அவரே சொல்லிவிட்டார் தரிசு நிலத்திலே பயிரிட முடியாது. எரிப்பதற்கு தடை வந்தது. அதனாலென்ன மொட்டை அடி, வெள்ளைப் புடவை கட்டு, உப்பு போடாமல் சாப்பிட்டு உணர்ச்சிகளை கட்டுப்படுத்து, மூலையிலே முடங்கு. சிதையிலே பாய்ந்து சதியானால் ஒரு நாளில் சாவு இருந்தால் ஒவ்வொரு நாளும் சாவு போன்ற வாழ்வு.

இறைவன் முதல் இறைத்தூதுவர்கள் வரை ஆண்கள் தான். ஆண்கள் மட்டும் தான் ஆண்டவனின் இல்லத்தில் தொழலாம். அவள் பக்கத்திலும் வரக்கூடாது. அவள் அவனின் மனதை, ஆண்டவனை நினைத்து உருகும் பச்சைக்குழந்தையின் பால் போன்ற மனதை கெடுத்து விடுவாள். சொர்க்கத்திற்கு போகும் பாதை அவனிற்கு அடைபட்டுவிடும். ஒரு பெண் மீது குற்றம் சாட்டப்பட்டால் ஆண்களால் விசாரிக்கப்பட்டு, ஆண்களால் தீர்ப்பு வழங்கப்பட்டு, ஆண்களால் தண்டனை வழங்கப்படும். அவன் தான் நீதிபதி.அவன் தான் அரசன் ஏனென்றால் கடவுள் ஆண் தான்.

தாயின் உயிருக்கு ஆபத்து என்றாலும் பரவாயில்லை, விடு சாகட்டும். கருவை மட்டும் கொல்லக்கூடாது. உலகம் உருண்டை என்று சொன்னவனை கொலை செய்த அவர்களிற்கு தெரியாத விஞ்ஞானமா, உயிரியலா? அதுவம் தேவனின் கருணையை போதிப்பவர்கள் திருமணம் செய்யக்கூடாது என்பதை ஆண்டவன் கட்டளையாக ஏற்றுக்கொண்டு குடும்ப வாழ்க்கை என்னவென்று தெரியாமல் வாழும் அவர்களிற்கு தெரியாதா தாய்மை என்றால் என்ன, கரு என்றால் என்ன என்று.

மாதவிடாய் பெண்களிற்கு மாதம் தோறும் வருவதால், அவர்கள் அசுத்தமானவர்கள். அவர்கள் குருவாக முடியாது, பூஜை செய்ய முடியாது. ஆலயத்திற்குள்ளே வர முடியாது. ஆனால் அவளின் கர்ப்பப்பையில் இருந்து வந்த ஆண் புனிதமானவன். ஆண்மை வாழ்க.