Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

நாங்க இதுவும் சொல்லுவோம் இதுக்கு மேலேயும் சொல்லுவோம்!

பிரித்தானிய தமிழர் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்திற்கு இலங்கையில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் பென்னாம் பெரிய தலைகளும், அறிஞர் பெருமக்களும் வந்திருந்தார்கள். அவர்களின் வரலாற்று முக்கியம் வாய்ந்த சந்திப்பினையும், அவர்கள் அள்ளிவிட்ட அரும்பெரும் உரைகளையும் பிரித்தானிய தமிழர் பேரவையின் ஆதரவு இணையத்தளமான லங்காசிறி, "டாப்ஸியை புகழ்ந்து தள்ளும் ஆதி", "பரதேசியால் தன்ஷிகாவிற்கு அடித்த அதிஸ்டம்" போன்ற ஈழமக்கள் கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளுடன் சேர்த்து இலவச இணைப்பாக வெளியிட்டிருந்தது. குறுகத் தறித்த குறள்போல அவர்கள் ஆற்றிய உரைகளையும், வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தை இன்றித் தவிக்கின்றேன் என்பது போல அவர்கள் சொல்லாமல் விட்ட வார்த்தைகளையும் இங்கு பதிவு செய்யாவிட்டால் வருங்காலம் எம்மை கேள்விக்கு மேலே கேள்வியாக கேட்கும் என்பதால் சொல்வெட்டாக இங்கு பொறிக்கிறேன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக இந்திய பாராளுமன்ற உறுப்பினர் திரு.N.ராஜா, மாநில தலைவர் தா.பாண்டியன் ஆகியோர் இலங்கையில் நடைபெற்றது திட்டமிடப்பட்ட கட்டங்கட்டமான இனப் படுகொலை என்ற வாதத்தை பதிவு செய்தனர். அத்தோடை அன்னை இந்திரா பங்களாதேசத்தில் கொலை செய்தபோதும், மக்கள் விடுதலை முன்ணணியின் முதலாவது எழுச்சியின் போது சிறிமாவோடு சேர்ந்து இலங்கையின் நதிகளில் தண்ணீரை விட செந்நீரை கூடுதலாக ஓடவைத்த போதும் கூட இந்திராவின் காலைக் கழுவிய போலிக் கம்யுனிஸ்ட்டுக்கள் நாங்கள் என்பதையும் சேர்த்துச் சொல்லியிருக்கலாம். ஈழ மக்களைக் கொன்று, ஈழப் பெண்களின் மேல் பாலியல் வன்முறைகள் செய்து, சிறுவர்களை பலாத்காரமாக கூலிப்படைகளாக்கி உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் ஊனமுற்றவர்களாக்கிய காடையர் கூட்டத்தை அமைதிப்படை என்ற பெயரில் அனுப்பிய ராஜீவ் காந்தியின் உற்ற தோழர்கள் என்பதும் சொல்ல மறந்த கதை.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக திரு. ஜி.கே.மணி அவர்கள் பேசும்போது, பிரித்தானிய தமிழர் பேரவையோடு இணைந்து தாம் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கவுன்ஸிலில் பணியாற்றுவது குறித்து பேசினார். வன்னியர் வாக்கு அன்னியருக்கு இல்லை என்று தமிழ்நாட்டுத் தமிழரையே சாதியின் அடிப்படையில் பிரித்துப் பேசும் இவர்கள், ஈழத் தமிழர்களிற்காக பேசப்போகிறார்களாம். வன்னியர் சாதிப் பெண் ஒருவர் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த இளைஞரை காதலித்து மணம் செய்ததிற்காக தருமபுரியில் தாழ்த்தப்பட்ட மக்களது வீடுகளை இவரின் வன்னியர் சாதிவெறியர்கள் எரித்து வன்முறை செய்த போது எதிர்த்து ஒரு வார்த்தை பேசாத பாட்டாளி மக்கள் கட்சி, ஈழ மக்களின் அவலம் பற்றி பேசுகிறதாம்.

நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் சார்பாக இம் மாநாடுக்கு வருகை தந்த திரு. கா.அய்யநாதன் அவர்கள், தாம் இலங்கை மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என்ற செய்தியை பதிவு செய்தார். அண்ணே, நீங்கதான் தமிழ்நாட்டுக்கு பயணிகளாக வந்த சிங்கள மக்களை தாக்கினீங்க. தஞ்சாவூர் பூண்டிமாதா கோவிலிற்கு வந்த கத்தோலிக்க மக்களை துரத்தினீங்க. இப்படியே இனவெறி பிடிச்சு அலைஞ்சீங்க என்றால், இலங்கையில் எரிகிற இனவெறிக்கு எண்ணெயை தான் ஓயாமல் ஊத்துவீங்க.

திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக பேசிய திரு. மு.க.ஸ்டாலின் “டெசோ” மாநாட்டின் தீர்மானங்களும் அதன் பின்னரான தமது செயற்பாடுகள் குறித்தும் பேசினார். ஆகா, வந்துட்டாரைய்யா அரை மணிநேர உண்ணாவிரதத்துடன் தமிழ்மக்களின் இனப் படுகொலையை தீர்த்து வைத்த தமிழினத் தலைவர் கருணாநிதியின் வாரிசு. இனப் படுகொலையை பேரினவாதிகளுடன் சேர்ந்து செய்த காங்கிரஸ் கயவர்களுடன் இன்றைவரைக்கும் கூட்டு வைத்திருக்கும் இவர்கள் தான் வெட்கம், மானம் எதுவுமின்றி பேசுகிறார்கள் என்றால், இவர்களை ஒரு தமிழர் அமைப்பு மாநாட்டிற்கு கூப்பிடுகிறதே அவர்களை எந்தச் செருப்பால் அடிக்கலாம்?

பிரித்தானிய தமிழர்பேரவை போன்ற அமைப்புக்கள் என்றைக்குமே அதிகாரத்தில் இருப்பவர்களும், தேவதூதர்களும் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பார்கள் என்று மக்களை நம்ப வைப்பதின் மூலம் மக்களின் எதிரிகளை ரட்சகர்களாக காட்டும் அரசியலை செய்பவர்கள். முள்ளிவாய்க்காலில் மடிந்த மக்களின் மரண ஓலங்கள் மறையும் முன்பே சோனியாவைச் சந்தித்தவர்கள். "இலங்கைத் தமிழர் பக்கமே நாங்கள் இருக்கிறோம்" என்று அவ தன்னுடைய கண்களை நேருக்கு நேராகப் பார்த்து சொன்னா என்று புல்லரிச்சுப் போய் வந்தவர்கள்.

மக்கள் தமக்கான பிரச்சினைகளை தாம் போராடுவதன் மூலந்தான் தீர்க்க முடியும். மலையகத்தின் குருதியை உறைய வைக்கும் குளிரில் தேயிலைத் தோட்டங்களில் உழைப்பவர்களும், வடக்கிலும் கிழக்கிலும் கொழுத்தும் வெய்யிலில் வியர்வை சிந்துபவர்களும், தென்னிலங்கையில் அலையடிக்கும் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் கடற் தொழிலாளர்களும், ஆற்றங்கரைச் சமவெளிகளில் பயிர் செய்யும் விவசாயிகளும், நாடெங்கும் தொழிற்சாலைகளில் தமது இரத்தத்தைப் பிழிந்து கொடுக்கும் தொழிலாளர்களும் இணைவதன் மூலமே இலங்கை மக்கள் தமக்கு ஒரு தீர்வைக் கொண்டு வரமுடியும். இந்த இணைவின் மூலமே நாட்டின் பொருளாதார, தேசிய இனப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்.

இலங்கை மக்கள் எல்லோரிற்கும் ஒரு பொது எதிரிதான். அது ஏழை உழைப்பாளர்களை ஒடுக்கும் இலங்கையில் ஆளும் வர்க்கம். அதனது அயோக்கியத்தனமான தேசிய, இன, மத, பிரதேச வாதங்களில் மக்கள் சிக்கிக் கொள்ளாதவாறு, அதனை முழுமையாக எதிர்க்கும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது இலங்கையின் முற்போக்கு சக்திகளினது வரலாற்றுக் கடமையாகும்.