Sun06132021

Last updateSun, 19 Apr 2020 8am

என் கடவுளே, என் கடவுளே ஏன் என்னைக் கை விட்டீர்!

எல்லாம் வல்ல தேவனின் உலகபிரதிநிதி, ஆண்டவனுடைய ராச்சியத்தை பூமியிலே வரப்பண்ணுகிற ஏஜெண்ட்டு, போப்பு உடல்நிலை காரணமாக பதவி விலகுகிறார். இளம் வயதிலே கிட்லரின் நாசியாக இருந்தவர் பின்பு கத்தோலிக்க துறவியாகிறார். இரண்டுமே தொடர்ச்சியானவை தான். சொல்லப் போனால் நாசிகள் ஒரு குறிப்பிட்ட பத்தாண்டுகளிற்கு தான் தமது அரசியல் மூலம் கொன்றார்கள். மதவாதிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கொல்கிறார்கள். கொலைகாரர்களிற்கு ஆதரவு கொடுக்கிறார்கள். ஆன்மீகம் என்ற மயக்க மருந்து மூலம் மூளைச்சலவை செய்கிறார்கள். வெளிநாடுகளிற்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சிக்காரன் பத்து பேரில் ஒருத்தனையாவது அனுப்பி வைப்பான். ஆனால் சொர்க்கலோகத்திற்கு ஆட்களை அனுப்புவோம் என்று வாக்குறுதி கொடுக்கும் சோம்பேறி மடத்துக்காரர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வெறும் வாய்ப்பேச்சிலேயே மக்களை மயக்கி வைத்திருக்கிறார்கள். ஊசியின் துவாரத்தினூடாக ஒட்டகம் நுழைந்தாலும் பணக்காரனால் சொர்க்கம் போக முடியாது என்றொரு வசனம் பைபிளில் வருகிறது. அந்த பைபிளை புனிதவேதம் என்று சொல்லும் இந்த போப்புகள், பிசப்புகள் மாளிகைகளில் பட்டாடை உடுத்தி பவனி வருகிறார்கள்.

பெயரளவில் சோசலிசம் என்று போலந்தில் நடந்த ஆட்சியை கவிழ்ப்பதற்காக இந்த போப்பிற்கு முந்திய போப்பு போலந்துக்காரரான இரண்டாம் ஜோன் போல், C.I.A உடனும் லெக் வலேசாவுடனும் கள்ளக்கூட்டணி சேர்ந்தார். நாத்திகர்களான கம்யுனிஸ்டுக்களை கலைத்து விட்டு பரலோகத்தில் இருப்பது போல பூலோகத்தில் போலந்தை சொர்க்கபூமி ஆக்குவோம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. இருந்த கொஞ்ச உரிமைகளையும், வேலைவாய்ப்புக்களையும் இழந்தது தான் மிச்சம். அன்னிய நாட்டு நிதிகள், வேலை வாய்ப்புக்கள் வாக்களிக்கப்பட்ட பூமியான போலந்தின் மக்களிற்கு வந்து சேரவில்லை. போலந்து கத்தோலிக்கர்கள் இயேசுவின் இரண்டாம் வருகைக்கு காத்திருக்கவில்லை. ஜரோப்பிய யூனியனின் கதவு திறப்பதற்கே காத்திருந்தார்கள். மேற்கு நாடுகளின் அடிமட்ட வேலைகளிற்கு குறைந்தளவு ஊதியத்திற்கு வேலை செய்கிறார்கள். மேற்கு நாடுகளின் பொருளாதார வீழ்ச்சியிற்கு பிறகு வீடிழந்து நகரவீதிகளில் உறங்குபவர்களில் பெரும்பான்மையாக போலந்து நாட்டை சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளார்கள்.

Peter Mullen என்ற இயக்குனரால் படமாக்கப்பட்ட "Magdalene Sisters" என்னும் படம் அயர்லாந்தில் 1970 வரை மக்தலின் அகதிகள் இல்லம் என்னும் பெண்களிற்கான இல்லத்தில் நடந்த பாலியல் கொடுமைகளையும், அடிமைகள் போல நடத்தப்பட்டு அவர்களின் உழைப்பை சுரண்டியதையும் ஆவணமாக முன்வைக்கிறது. அயர்லாந்தின் ஏழைப்பெண்கள், பெரும்பாலும் பாலியல் வன்முறைக்கு ஆளானவர்கள். இந்த இல்லங்களில் தடுத்து வைக்கப்பட்டார்கள். ஒழுங்காக உடை உடுத்தவில்லை, கண்ட நேரத்திலும் ஊர் சுற்றினால் இப்படித் தான் நடக்கும் என்று இன்று இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறைகளிற்கு மதவேறுபாடின்றி இந்து, கிறீஸ்தவ, முஸ்லீம் மதவெறியர்கள் காரணம் கற்பிப்பது போலவே பாலியல் வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட அயர்லாந்து பெண்கள் நடத்தை கெட்டவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு இந்த இல்லங்களில் தடுப்புகாவலில் வைக்கப்பட்டனர். அருட்சகோதரிகள் எனப்படும் கத்தோலிக்க பெண்துறவிகளால் நடத்தப்பட்ட இந்த இல்லங்களில் மிகசமீப காலம் வரை நடந்த இந்த கொடுமைகளிற்காக எந்த போப்பும் இது வரை மன்னிப்பு கேட்டது கிடையாது.

கத்தோலிக்க மதகுருக்கள் (Fathers), அருட்சகோதரர்கள் (Brothers), அருட்சகோதரிகள் (Sisters) திருமணம் செய்யக்கூடாது என்பது கட்டாய விதி. மனிதர்களின் அடிப்படை உணர்வான பாலியல் உணர்வை இயற்கைக்கு மாறாக தடை செய்ததால் பாலியல் வன்முறைகள், தன்னினச்சேர்க்கை விருப்பு என்பன எதிர்வினையாக எழுந்தன. ஆலயங்களிற்கு, அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பாடசாலைகளிற்கு வரும் சிறுவர்கள் பாலியல் வன்முறைக்கு பலியாக்கப்பட்டனர். இக்குற்றங்கள் தொடர்பாக பல நாடுகளில் கத்தோலிக்க மத குருமார் மீது வழக்குகள் தொடரப்பட்டு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன. ஆனால் வத்திக்கான் இது பற்றி ஒரு போதும் மன்னிப்பு கேட்டதோ வாய் திறந்ததோ கிடையாது.

கடவுளால் மனிதன் படைக்கப்பட்டான் என்று கதை விடும் இவர்கள், போப்பாக தேர்ந்தெடுப்பது ஜரோப்பிய வெள்ளை மனிதனைத் தான். அதன் தொடர்ச்சி தான் இலங்கையின் தமிழ் கத்தோலிக்கர்களில் பெரும்பான்மையினர் கடல்தொழில் சமுதாயத்தினராகவும், தாழ்த்தப்பட்ட மக்களாகவும் இருக்கும் போது பிசப்புகள் வேளாளராகவே இருப்பார்கள். தற்போதைய யாழ்ப்பாண பிசப் தோமஸ் செளந்தரநாயகம் மட்டுமே  தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர். அதற்கு கூட இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது இலங்கையின் கத்தோலிக்க திருட்சபை வாயே திறக்கவில்லை நிறவெறி, இனவெறி, சாதிவெறி கொண்ட இவர்கள் தான் அன்பையும், அமைதியையும் உலகில் பரப்பப் போகிறார்களாம்.