Sun06132021

Last updateSun, 19 Apr 2020 8am

எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்

நான் தாகமாய் இருந்தேன், நீர் தண்ணீர் தந்தீர்

நான் பசியாய் இருந்தேன், நீர் உணவு தந்தீர்

நான் சிறையில் இருந்தேன், நீர் பார்க்க வந்தீர்

அருமைநாயகம் போதகர் பைபிள் வசனங்களை அள்ளி வீசிக்கொண்டிருந்தார். குமாரிற்கு கொதி உச்சிக்கேறியது. கை தன்ரை பாட்டில் கன்னத்தை தடவிக் கொண்டது. ஒரு ஞாயிற்றுக்கிழமை சேர்ச் முடிந்த பிறகு நடக்கும் பைபிள் வகுப்பில் அருமைநாயகம் போதகர் இப்படித்தான் ஒரு வசனத்தை எடுத்து விட்டார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அன்பே உருவானவர். பகைவனுக்கும் அருள்வாய் என்ற பண்பு கொண்டவர், ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டு என்றதொரு அரிய தத்துவத்தை எங்களிற்கு தந்து விட்டு விண்ணுலகு சென்றவர். அவர் வழி நடக்கும் நாங்கள் அதை வாழ்நாள் முழுக்க கடைப்பிடிக்க வேண்டும் என்றார். அது எம்.ஜி.ஆர் நம்பியாரிற்கு விட்ட அடி போல குமாரின் மனதிலே ஆழமாக பதிஞ்சு விட்டுது.

ஒரு நாள் குமார் எதோ குழப்படி செய்தான் என்று தகப்பன் கன்னத்தை பொத்தி ஒன்று கொடுத்தார். அந்த நேரம் பார்த்து அருமைநாயகம் போதகரின் குரல் ஸ்டீரியோ ஒலியில் ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தையும் காட்டு என்று echo பண்ணி சொல்லிச்சிது. குமார் சட்டென்று மற்றக்கன்னத்தை தகப்பனிற்கு காட்டினான். அவரிற்கு கொதி மண்டைக்கேறியது. குழப்படி செய்ததுக்கு அடிச்சால் திமிரா மற்ற கன்னத்தையும் காட்டுறியோ என்று மற்றக் கன்னத்திலேயும் ஒரு அறைவிட்டார். யேசுவும் மயிரும் என்று அழுதபடி ஓடிய குமார் அன்றிலேயிருந்து நாத்திகவாதியாகி விட்டான். பிறகு வாசித்த புத்தகங்கள், சந்திச்ச தோழர்கள் எல்லாம் சேர்த்து அவன், தேவன், ஆனந்தன், சுரேஸ் எல்லோருக்குமே கடவுள் நம்பிக்கை என்பது அறவே இல்லாமல் போய் விட்டது.

அவர்களிற்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் போய் விட்டாலும் ஞாயிற்றுக்கிழமை தவறாமல் சேர்ச்சிற்கும், பைபிள் வகுப்பிற்கும் போய் வருவார்கள். ஊர்ப்பெட்டைகளை சைட் அடிப்பதற்கும், கடலை போடுவதற்கும் சேர்ச்சை விட்டால் வேறு இடம் தேடினாலும் கிடைக்காது. அடுத்தது பூசை முடிந்த பிறகு அனேகமாக "தேவபிதா எந்தன் மீட்பர் அன்றோ" என்று பாடிக்கொண்டு காணிக்கை சேர்ப்பார்கள். ஒரு சின்ன பிரம்புக்கூடையில் சில்லறைகளும், தாள்காசுகளும் காணிக்கைகளாக விழுந்து கிடக்கும். காணிக்கைக்கூடை இவர்களின் பக்கத்தில் வரும் போது சில்லறையை போடுவது போல போட்டு மெதுவாக தாள் காசுகளை சுட்டு விடுவார்கள். பின்னேரம் சிகரட் குடிப்பதற்கும், கள்ளடிப்பதற்கும் கர்த்தரின் கருணை கிடைத்து விடும்.

போதகர் ஒரு ஜாலியான மனிசன். யாராவது பெட்டைகள் சேர்ச்சிற்கோ, வகுப்பிற்கோ ஒழுங்காக வராவிட்டால் பூசைக்கும் வாறதில்லை, வகுப்பிற்கும் வாறதில்லை கள்ளி என்று கன்னத்தில் கிள்ளுவார். சேர்ச்சில் கூட்டுதல், அலங்காரம் பண்ணுதல் என்று ஓடித்திரியும் பெட்டைகளிடப் போய் நல்லா வேலை செய்யிறாள் கள்ளி என்று அதற்கும் கன்னத்தில் ஒரு கிள்ளு கிள்ளுவார். போதகரும், மனிசியும் ஆளுக்கொரு லேடிஸ் சைக்கிள் வைத்திருந்தார்கள். பார் இல்லாத சைக்கிள் என்றால் அவருடைய வெள்ளை அங்கியோடை ஒடுவதற்கு சுகமாக இருக்கும் என்று லேடிஸ் சைக்கிள் ஓடுவதற்கு காரணம் சொல்லுவார். ஒருமுறை பியானோ ரீச்சர் வருவதற்கு பஸ் இல்லை என்று சொன்னதால் ஒரு ஜென்ட் சைக்கிளில் போதகர் ரீச்சரை முன்னுக்கு வைத்து கூட்டிக் கொண்டு வந்தார். அது வேறை சைக்கிள் எண்டு தெரியாத ஒரு சின்னப்பொடியன் போதகரின் லேடிஸ் சைக்கிளிற்கு திடீரெண்டு பார் வந்திட்டுது எண்டு அதிசயப்பட்டான். பியானோ ரீச்சரை ஏத்திக் கொண்டு வரேக்கை போதகரின் சைக்கிளிற்கு பார் வந்திட்டுது என்று ஊர் முழுக்க கதை பரவி விட்டது.

பைபிள் வகுப்பிலே போதகர் எந்த கேள்வி என்றாலும் கேட்கலாம் என்று சொல்லி தனக்கு தானே சூனியம் வைப்பார். பெட்டைகளுக்கு முன்னலே தங்கடை அறிவுக்கூர்மையை காட்டுவதற்காக விழுந்தடிச்சு கேள்வி கேட்பான்கள். கத்தோலிக்கம் போத்துக்கீசர் வந்த பிறகு வந்திச்சுது. எங்கடை புரட்டஸ்தாந்து கிறீஸ்தவம் ஒல்லாந்தர், இங்கிலாந்துக்காரர்கள் வந்த பிறகு வந்திச்சுது. கடவுள் தான் உலகத்தை படைச்சார் என்றால் அவர் இலங்கைக்கு வாறதுக்கு ஏன் அவ்வளவு நாள் எடுத்திச்சுது. நாட்டை கொள்ளையடிச்சு, சனத்தை கொலை செய்தவங்கள் தங்கடை சமயத்தை ஏன் எங்களுக்கு பரப்ப வேணும் என்று கேள்விகள் யேசுவின் தலையில் போடப்பட்ட முள்முடியை போல போதகரை குத்திக் கிழிக்கும். எல்லாத்துக்கும் நேரகாலம் இருக்கு, தேவனுடைய சித்தப்படியே எல்லாம் நடக்கும் என்று சடைஞ்சு விட்டு போதகர் பெருங்குரல் எடுத்துப் பாடத் தொடங்குவார்.

எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்

நன்றியால் உம்மை நான் துதிப்பேன்

இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்

எந்த வேளையிலும் துதிப்பேன்

 

ஆதியும் நீரே - அந்தமும் நீரே

ஜோதியும் நீரே - என் சொந்தமும் நீரே

 

தாய் தந்தை நீரே - தாழ்விலும் நீரே

தாபரம் நீரே - என் தாரகம் நீரே

 

வாழ்விலும் நீரே - தாழ்விலும் நீரே

வாதையில் நீரே - என் பாதையில் நீரே

 

வானிலும் நீரே - பூவிலும் நீரே

ஆழியில் நீரே - என் ஆபத்தில் நீரே

 

துன்ப நேரத்தில் - இன்பமும் நீரே

இன்னல் வேளையில் மாறாதவர் நீரே

 

இவனுகள் ஆதியும் நீரே, அந்தமும் நீரே என்று பெட்டைகளை பாத்து வழிஞ்சு கொண்டே பாடுவான்கள். அவளுகள் பார்த்ததும் பாராததுமாக ஒரு கள்ளச்சிரிப்போடு வெட்கப்படுவாள்கள். குமாரிற்கு கனவுகளில் நினைவாகவும், நினைவுகளில் கனவாகவும் வதனி இருந்தாள். வதனிக்கு கடிதம் கொடுக்க முடிவெடுத்தான். காதல் கடிதம் எழுதி கொடுக்கிற வேலையை நேசன் தான் அப்ப செய்து கொண்டிருந்தான். நேசன் தமிழ்பட பாட்டுகளிற்கிடையே மானே, தேனே போட்டு விட்டு தான் எழுதின பாட்டு மாதிரி எடுத்து விடுவான். அதோடை அவன்ரை கையெழுத்தும் வடிவாய் இருக்கும். அந்த மட்டத்து ஆட்களுக்குள்ளே நேசனிற்கு தான் வயதும் குறைவு. அதாலே பெட்டையளின்ரை கையிலே கடிதம் கொடுக்கிற வேலையையும் அவன் தான் பார்த்துக் கொண்டிருந்தான். நேசனுக்கு ஒரு Goldleaf சிகரட் வாங்கி கொடுத்து விட்டு வதனிக்கு ஒரு கடிதம் எழுத சொன்னான். பைபிள்வகுப்பிலே அவளிட்டை நேசன் கடிதம் கொடுப்பது என்று முடிவெடுத்தார்கள்.

நல்லா மினுக்கின உடுப்பு போட்டுக்கொண்டு சந்தனாதி தைலம் தலைக்கு வைச்சுக் கொண்டு நெத்தியிலே ஒரு சுருள் வந்து விழுகிற மாதிரி தலையை இழுத்து கொண்டு குமார் வந்தான். வதனியை அணில் ஏற விட்ட நாய் மாதிரி ஏற இறங்க பார்த்து கொண்டு அசடு வழிய சிரிச்சான். அவளும் சிரிச்ச மாதிரி தான் இருந்தது. எல்லாம் சரி வரும் மாதிரி இருந்தது. Goldleaf வாங்கி கொடுத்த நன்றிக்கடனிற்கு நேசன் சரியான நேரத்திற்கு வந்து வதனியிட்டை கடிதத்தை கொடுத்தான். வகுப்பு முடிந்து வெளியே போகேக்குள்ளே வதனி இங்கை வாரும் என்று நேசனைக் கூப்பிட்டாள். குமாரைப் பார்த்து கண்ணடித்து விட்டு வதனிக்கு பக்கத்திலே போன நேசனிற்கு காதைப் பொத்தி அடி விழுந்தது. தம்பி, தம்பி எண்டு பழகினால் நீர் என்னை காதலிக்கிறேன் எண்டு கடிதம் தாறீரோ என்று கடிதத்தை விட்டெறிந்தாள். படுபாவி, கடிதத்தை எழுதினவன் ஞாபகமறதியில் இப்படிக்கு குமார் என்று போடாமல் நேசன் என்று தன்ரை பெயரையே போட்டுவிட்டான். தூதுவனால் காதல் கை கூடாமல் போனது உலக வரலாற்றிலேயே குமாரிற்கு மட்டும் தான் நடந்திருக்கும்.

பிரேமதாசா யாழ்ப்பாணம் வரப் போகிறான் என்று வீதிகளிற்கெல்லாம் தார் போட்டார்கள். யாழ்ப்பாண வரலாற்றிலேயே முதல் தடைவையாக லைற்போஸ்ட்டிற்கெல்லாம் வெள்ளை அடிச்சான்கள். இந்த கொலைகாரனிற்கு வரவேற்பா என்று பெடியன்கள் கோவப்பட்டான்கள். அன்றிரவே மணியண்ணனின் கராஜ்சில் இருந்த கழிவு எண்ணெயை எடுத்துக் கொண்டு வந்து வெள்ளையாய் இருந்த லைற்போஸ்ட்டை எல்லாம் கறுப்பாக்கி விட்டான்கள். அடுத்தநாள் காலையில் பள்ளிக்கூடம் போகிறவர்கள், வேலைக்கு போகிறவர்கள் என்று நிறையப்பேர் சந்தியிலே நின்று கறுப்பாயிருந்த லைற்போஸ்ட்டுகளை பார்த்து கதைச்சு சிரிச்சு கொண்டு நின்றார்கள். பொலிஸ் ஜீப் வேகமாய் வந்து நின்றது.

வந்தவன்,போனவன் எல்லோருக்கும் அடி, பூட்ஸ் காலால் உதை, துவக்கு பிடியாலே மண்டைகள் பிளக்கப்பட்டன. எங்கேயோ போக வந்த போதகர் ஏன் எல்லாருக்கும் அடிக்கிறியள் என்று கேட்டுக் கொண்டே ஓடி வந்தார். அவருக்கும் சடாரென்று ஒரு அடி விழுந்தது. மற்றக்கன்னத்தை காட்டினாரா இல்லையா என்று தெரியாமல் குமார் இரத்தம் வழிய மயங்கிய படி விழுந்து கிடந்தான்.