Mon06142021

Last updateSun, 19 Apr 2020 8am

உதயசூரியன் உதிக்கப்போவதுமில்லை, இலை மலரப்போவதுமில்லை

குண்டுவீச்சினால் இலைகள் உதிர்ந்து மொட்டையாகி, எரிந்து, கரிந்து போன மரங்களின் வேருக்கு மண்ணில் வீழ்ந்த மனிதர்களின் குருதி நீர் வார்க்கும். குவிந்து கிடக்கும் உடலங்களிற்குள்ளே சிறுகுஞ்சொன்று அம்மா என்று விம்மும். ஒரு மரணத்திற்கு ஊரே கூடி அழும், ஆனால் ஊரே மரணித்து விட்டபோது உலகமே ஊமையாக போனது. ஏனென்று கேட்க யாருமில்லை. ஆள், அம்பு, படை வைத்திருக்கும் அய்க்கிய நாடுகள் சபை, அகிம்சையின் மொத்தகுத்தகைகாரன் அகண்ட பாரதம், பினாச்செட் தொடங்கி பின்லாடன் வரையான அத்தனை "ஜனநாயக போராளிகளினதும்" வாழ்நாள் போசகர்கள், பெற்றோல் இருக்குமிடங்களில் எல்லாம் கேஸ் இல்லாமலே, அழைப்பில்லாமலே ஆஜராகும் உலகத்து பொலிஸ்காரர்கள் அமெரிக்கா என்று யாருமே கேட்கவில்லை. கேட்கவும் மாட்டார்கள் ஏனென்றால் கூட நின்று கொன்றவர்கள் அவர்கள் தானே. கொலையாளிகளில் சிறுகொலை செய்தவன், பெருங்கொலை செய்தவன் என்று உண்டோ?

ஒரு காலத்தில் தமிழீழப்பிரகடனம் செய்த தமிழர் விடுதலை கூட்டணியின் அடுத்தவாரிசுகள் தமிழர் கூட்டமைப்பினர் அமெரிக்காவிற்கு,அய்ரோப்பாவிற்கு காவடி எடுக்கிறார்கள். ஈழ விடுதலையின் அடுத்த கட்டத்தை அய்ரோப்பாவிற்கு கடத்தி கொண்டு வந்து களமாடப் போவதாக கயிறுவிடும் பிரித்தானிய தமிழர் பேரவையினர் அன்னை சோனியாவினதும், அண்ணன் டேவிட் கமரோனினதும் பாதாரவிந்தங்களில் பணிந்து வணங்குகிறார்கள். இத்தனை அழிவுகள், இத்தனை மரணங்கள் இன்னும் இவர்களை நம்புவதா என்றால் ரிஸ்க் எடுப்பது எங்களிற்கு ரஸ்க் சாப்பிடுவது போல என்று வருத்தப்படாத வாலிபர் சங்கத்திற்கு வெளிநாடுகளில் கிளை திறக்கிறார்கள்.

இந்த பிழைப்புவாதிகளின் பிதற்றல்களை, வீணர்களின் வெட்டிப்பேச்சுக்களை விலக்கி வைத்து விட்டு வீறு கொண்டு எழுகிறது தமிழக மாணவர்களின் போராட்டம். எங்கள் மக்களை கொன்றவர்களை, ஈழ மண்ணை அழித்தவர்களை நீதிக்கு முன்னால் நிறுத்த வேண்டும் என்று அவர்கள் போராடுகிறார்கள். காட்டுத்தீயாய் அது கனன்று எரிகிறது. இளைஞர்கள், பெண்கள், வேறு மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள். மனவுறுதி கொண்ட மாற்றுத்திறனாளி என்று மதம், இனம், சாதி கடந்து போராடுகிறார்கள். தெரிந்தோ, தெரியாமலோ தமிழ்நாடு தமிழரிற்கே என்று இனவாதம் பேசுபவர்கள் இந்த மாணவர்களின் போராட்டத்தில் இருந்து படிப்பினையை கற்றுக்கொள்ள வேண்டும். அடக்கப்படுவர்கள் ஒரு இனம், அடக்குபவர்கள் வேறொரு இனம் என்ற படிப்பினையை இனியாவது கற்றுக்கொள்ள வேண்டும்.

தெலுங்குமொழி பேசும் குடும்பத்து மாணவி இலங்கைத்தமிழருக்காக உண்ணாவிரதம் இருக்கும் போது தமிழினத்தலைவர், முத்தமிழ் வித்தகர் கருணாநிதி காங்கிரசுக் கொலைகாரர்களுடன் கலவி செய்கிறார். தமிழீழ போராட்டக்காரர்கள் விலக்கி வைத்த இஸ்லாமிய இளைஞர்கள் கொலைகளிற்கு நீதி கேட்கையில் பட்டையும், கொட்டையும் போடும் காங்கிரசு கோமாளிகள் எத்தனையோ ஈழத்தாய்மாரைக் கொன்ற சோனியா அம்மா புராணம் பாடுகிறார்கள். சீமான் தொடங்கி வை.கோ வரை இலை விரியவில்லை என்றாலும் புகை போட்டு விரியவைப்போம் என்று பாசிச, பார்ப்பனிய ஜெயலலிதாவின் முந்தானையை பிடித்து தொங்கினார்கள். இன்று உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களை அடித்து உதைத்து சிறையில் போட்டு தன் கோரமுகத்தை காட்டுகிறார் சீமானின் ஈழத்தாய்.

தங்களை தெரிவு செய்யும் தமிழ்நாட்டு மக்களையே ஒடுக்கும், ஊழல் செய்து பொதுச்சொத்தை கொள்ளையடிக்கும் இவர்கள் இலங்கைத் தமிழ்மக்களிற்காக குரல் கொடுப்பார்கள் என்பதைப் போன்ற முட்டாள்தனத்தை, அயோக்கியத்தனத்தை பரப்பும் பிழைப்புவாதிகளை மாணவர்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும். வியட்நாமிய போராட்டம், இராக் யுத்தம், அப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு என்று எல்லாப்பிரச்சனைகளிலும் ஏகாதிபத்தியங்களிற்கு, மக்கள் விரோதிகளிற்கு சார்பாக நிலைப்பாடுகளை எடுத்த அய்க்கிய நாடுகள் சபை, ஆயிரக்கணக்கில் தமிழ்மக்கள் கொலை செய்யப்பட்டபோது ஒரு மசிர் கூட புடுங்காத சர்வதேசம் இனி எதாவது செய்யும் என்பது அயோக்கியர்களின் மற்றொரு பொய்.

தமிழக மாணவர்களின் போராட்டம் மக்கள் விரோத தமிழக அரசிற்கு எதிராக எழ வேண்டும். கூட்டுக் கொலையாளிகளான இந்திய மத்திய அரசிற்கு எதிராக எழ வேண்டும். இலங்கையின் இனப்படுகொலை கொலையாளிகளிற்கு எதிராக களத்தில் நின்று போராடும் முற்போக்கு சக்திகளிற்கு ஆதரவாக எழ வேண்டும். உலகினையே உறிஞ்சத் துடிக்கும் தீவட்டிக்கொள்ளைக்காரர்களான மேற்குநாடுகளின் முதலாளித்துவ அரசுகளிற்கு எதிராக எழ வேண்டும். அம்மா செய்வார், அய்யா புடுங்குவார், அன்னை வழிகாட்டுவார், ஜ.நா.சபை ஆணை வழங்கும் என்று பசப்பி திரியும் பொய்யர்களிற்கு எதிராக எழ வேண்டும்.{jcomments on}