Mon06142021

Last updateSun, 19 Apr 2020 8am

மே தினம் கொண்டாடிய மேதகு பிள்ளையான் வாழ்க!

அண்ணே, நம்பவே முடியவில்லை. சிவப்புக்கொடி சடசடத்து பறக்குது. அண்ணனும், அண்ணனின் பாசக்கார பயலுகளும் சிவப்புச்சட்டை, சிவப்பு காற்சட்டை போட்டுக்கொண்டு சின்னப்பிள்ளைத்தனமா திரியிறீங்க. மன்னிச்சுக் கொள்ளுங்கோ சிங்கம் மாதிரி போறீங்க. அண்ணே நீங்க எதையும் ஒரு குறை விடாமல் செய்யிற ஆள், அதனாலே கோவணம் கூட சிவப்பிலே தான் கட்டியிருப்பிங்க. ஆனா சில பொறாமை பிடிச்ச நாய்கள், மண்டை கழண்ட மடையனுகள் கேக்கிறானுகள் இதெல்லாம் ஒரு பிழைப்பா, தொழிலாளர் தினம் கொண்டாட ஒரு விவஸ்தை வேண்டாமா? மகிந்துவோடை கூட்டு வைச்சுக் கொண்டு தொழிலாளர்களின் உரிமைகளை பற்றி கோசம் போடுறது ரொம்ப கேவலமா இருக்கு. கேக்கிறவன் கேனைப்பயலா இருந்தா கோத்தபாயாவின் மண்டையிலே சன் ரீ.வி தெரியுது எண்டு சொன்னாலும் சொல்லுவீங்க என்கிறானுகள்.

அண்ணே நீங்க எதைப்பற்றியும் கவலைப்படாத ஆள். இவனுகளிற்கெல்லாம் மறுமொழி சொல்லத் தேவையில்லை. மண்டையிலே போடுறது, வெள்ளை வானிலே கடத்துறது எண்டு இருபத்தினாலு மணி நேரமும் கட்சிப்பணி செய்யவே உங்களுக்கு நேரமில்லை. அதனாலே உங்களுக்காக சில பொயின்டுகளை இந்த லூசுப்பயலுகளிற்கு சொல்ல விரும்புறேன். உங்க தலைவர் மகிந்து ஜம்பதினாயிரம் பேரைக் கொன்றார். அவருக்கும் அவரை மாதிரி மலைவிழுங்கி மகாதேவனுகளுக்கும் அப்பனான லட்சம் தலை வாங்கிய அபூர்வசிந்தாமணி கிட்லர் தன்னை தேசிய சோசலிஸ்ட் என்று சொன்னார். அவ்வளவு பேரை போட்டு தள்ளின அவரே தன்னை சோசலிஸ்ட்டு என்று சொல்லும் போது எதோ ஒரு கொஞ்சப் பேரை போட்டு தள்ளின நீங்க சிவப்புக்கொடி பிடிக்கக் கூடாதா?

தகரத்திலே கூட கத்தி செய்யாமல் கடுதாசி மட்டையிலே கத்தி சுத்தின எம்.ஜி.ஆரை புரட்சிதலை என்று சொன்னாங்களே. அது கூட பரவாயில்லை. அவரு அண்ணா, கருணாநிதி கூட சேர்ந்து திராவிட முன்னேற்ற கழகத்திலே திராவிடம், பகுத்தறிவு என்று எழுதிக்கொடுத்த வசனங்களை மனப்பாடம் பண்ணி சமாளிச்சிட்டு இருந்தார். எம்.ஜி.ஆர் கட்சியிலே சேர்ந்து இருந்தார். ஜெயலலிதா எம்.ஜி.ஆரோடை சேர்ந்து இருந்தார். எம்.ஜி.ஆர் கூட இருந்த ஒரே காரணத்திற்காக ஜெயலலிதாவை புரட்சிதலைவி என்கிறானுகளே. இது எந்த ஊரு நியாயம். பட்டையும், கொட்டையும் போட்டவனுகள், பெண்டாட்டிமாரின் குங்குமப்பொட்டை விட பெரிசா பொட்டு போட்டவனுகள் எல்லாம் ஜெயலலிதாவின் காலை பிடிச்சுக் கொண்டு நாங்களும் பெரியாரின் பேரன்கள் தான் என்கிறானுகளே. இதையெல்லாம் இவனுகள் கேக்க மாட்டானுகளா? இதெல்லாம் புரட்சி என்றால் நீங்க செய்யிறது உலக மகாபுரட்சி.

வன்னியிலே குழந்தைகள், குஞ்சுகளை கூட விட்டு வைக்காமல் துடிக்க துடிக்க கொலை செய்த இலங்கை ராணுவத்தை உலகத்துக்கே நீதி சொல்லுற ஜக்கிய நாடுகள் சபை கூப்பிட்டு ஆபிரிக்காவிலே அமைதிகாக்க அனுப்பியிருக்குது. அவனுகள் அங்கே போய் இலங்கை இராணுவத்தின் ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் உலகத்திற்கே எடுத்து காட்டியிருக்கிறாங்க. ஆனா ஆபிரிக்கப்பெண்கள் தான் அவங்களை பாலியல் பயங்கரவாதிகள் என்கிறார்கள். இலங்கை இராணுவத்திலே இதெல்லாம் சகஜம் என்று பாவம் அந்த அப்பாவி பெண்ணுகளுக்கு தான் தெரியவில்லை. இவங்களை எல்லாம் அமைதிப்படை என்னும் போது உங்க படையை அழிவுப்படை என்று சொல்லுறது உலகத்திற்கே அடுக்காது.

அரசுடன் இணைந்து அபிவிருத்தியை மாத்திரம்தான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி செய்கின்றது என்ற கருத்தினை பொய்ப்பிக்கச் செய்ததுடன், அபிவிருத்தி மட்டுமன்றி சிறுபான்மை தமிழ் பேசும் மக்களின் அதிகாரத்திற்கும் குரல்கொடுக்கும் ஒரே ஒரு தனித்துவக்கட்சி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிஎன்பதனை இந்த மேதின நிகழ்வுகள் பறைசாற்றியுள்ளன என்றால் அது மிகையில்லை. அப்பிடி நீங்க சொல்றீங்க, ஆனா இவங்க சொல்லுறாங்க மட்டக்களப்பிலே வசிக்கிற யாழ்ப்பாண தமிழ்மக்களை நீங்க வெளியேறச் சொல்லி கொலை செய்தீங்க, கொள்ளையடிச்சீங்க. இப்ப எந்த மூஞ்சியை வைச்சுக் கொண்டு தமிழ்மக்களிற்காக குரல் கொடுக்கிறோம் என்று சவுண்டு விடுறீங்க என்கிறானுகள். அது போன வருசம், இது இந்த வருசம் என்கிறது கூட தெரியவில்லை இவங்களிற்கு.

உலகத்தொழிலாளர்களே ஒன்று படுங்கள் என்று கைகளை உயர்த்தி நரம்புகள் புடைக்க சிங்கம் சிங்கிளாய் கர்ச்சித்த போது புல்லரிச்சு போச்சுதண்ணே. உடம்பு முழுக்க அரிச்சு போச்சுது என்று சொன்ன போது இவனுகள் சொல்லுறானுகள் மகிந்தாவுக்கு சொறிந்து விடுகிறவர் தொண்டன் உனக்கு சொறிந்து விட மாட்டாரா என்று. முதலமைச்சர் பதவி வேணும், முடியேல்லை என்றால் மகிந்துவுக்கே ஆலோசகர் என்கிற பதவி வேணும் என்கிறதிற்காகவா நீங்க சொறிஞ்சு விடுகிறீங்க. தமிழ் மக்களின் உரிமைகளிற்காகத் தான் இவ்வளவும் செய்கிறீங்க என்கிறது என்னை போல உண்மை தொண்டர்களிற்கு எப்பவோ தெரியும். அதை விட எனக்கு சொறிஞ்சு விடுகிறதுக்காக கருணாவைப் போல, கள்ள பாஸ்போர்ட்டிலே வெளிநாடு வாற மொள்ளமாரித்தனம் எல்லாம் நீங்கள் கனவிலே கூட செய்யமாட்டீங்க. அதனாலே எனக்கு நானே சொறிந்து கொள்கிறேன்

அன்புத் தொண்டன்

அய்யாமுத்து.