Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தாய் அழுத கண்ணீர்!

யாழ்ப்பாணத்து புழுதி மண்ணிலே புரண்டு அழுகிறாள் அன்னை. மார்போடு சேர்த்தணைத்து உதிரத்தோடு தன் உயிரையும் சேர்த்துப் புகட்டியவள் தன் உடல் சோர மயங்கி விழுகிறாள். தன் கருவிலே உரு கொண்ட தன் உயிரின் உயிர் தேடி அழுகிறாள். பத்து மாதம் மணிவயிறு சுமந்தவள் என்ன நடந்திருக்குமோ என்று பலதையும் எண்ணி பதறுகிறாள். சிந்தும் முத்தங்களால் தன் சிந்தை குளிர்வித்தவர்கள் எங்கு மறைந்தனரோ என்று சித்தம் கலங்கி அழுகிறாள் அன்னை. யார், யாரிடமோ கெஞ்சி கேட்டவள், தன் கண்மணியை கண்டு தாருங்கள் என்று கண்டவன் காலில் விழுந்தாலும் பரவாயில்லை என்று விழுந்தவள் இன்று தன் கடைசி நம்பிக்கையாக நவநீதம்பிள்ளையை காண்கிறாள்.

நவநீதம்பிள்ளை ஒரு பெண்ணின் துயர் அறிந்த பெண்ணாக இருக்கலாம். ஒரு தாயின் தவிப்பினை விளங்கி கொண்ட தாயாக இருக்கலாம். ஒரு கொடியில் பூத்த தன் தமிழ் இனத்தின் இன்னல்களை எல்லாவற்றையும் இழந்து நிற்கும் கையறு நிலையை எண்ணிக் கலங்கும் ஒரு தமிழச்சியாக இருக்கலாம். மனிதர்களின் உதிரம் ஊறிச்சிவந்து போன வன்னி மண்ணின் இனப்படுகொலை கண்டு மனம் கலங்கிய ஒரு மனிதாபிமானியாக இருக்கலாம். ஆனால் உண்மையில் அவர் யார்? ஆயிரம் ஆயிரம் மக்களை கொத்துக் கொத்தாக கொலை செய்த போது ஆடாமல், அசையாமல், வாய் மூடி மெளனமாக நின்ற ஜக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி.

பொதுமக்களின் மீது தாக்குதல் நடத்த வேண்டாம், கனரக ஆயுதங்களை பாவிக்க வேண்டாம் என்று இவர்கள் கேட்டுக் கொண்டார்களாம். இலங்கை அரசும் நாங்களும் அகிம்சைவாதிகள் தான் என்று உறுதிமொழி அளித்ததாம். வெடித்துச் சிதறிய பீரங்கி குண்டுகளின் பேரோசையை மீறி மக்களின் வேதனைக்குரல் காற்று முழுக்க கலந்திருந்த வேளையிலும், இந்த உலகம் முழுக்க இருக்கும் மக்களிற்கான அமைப்பு என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள், அதை நம்பினார்களாம். அழுவதற்கு கண்ணீர் கூட இல்லாமல் அத்தனையும் இழந்து போயிருந்த மக்களை கொன்ற கொலையாளிகளை இனப்படுகொலையின் பின்பு கூட ஏதிர்த்து எதுவும் கேட்காத அமைப்பின் பிரதிநிதி. ஆதிக்க நாடுகள் போர் வேண்டும் என்னும் போது போர் என்று வழிமொழியும் பொம்மை அமைப்பின் பிரதிநிதி. இந்த அமைப்பின் பிரதிநிதியால் என்ன செய்ய முடியும். சில ஆறுதல் வார்த்தைகள். சில பொய் நம்பிக்கைகள். இதை மீறி இவரால் என்ன செய்ய முடியும்.

மார்ட்டின் லூதர் கிங், கறுப்பினத்தவரின் விடுதலைப்போராளி. ஜம்பது வருடங்களிற்கு முன் ஒரு கனவு கண்டான். தோலின் நிறத்திற்காக ஒதுக்கப்படும் தன் இனத்தவரின் நிலை குறித்து வேதனையால் வெதும்பி ஒரு கனவு கண்டான். இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த பேச்சுக்களில் ஒன்றாக அது கணிக்கப்படுகிறது. "எனக்கு ஒரு கனவு இருக்கிறது. கறுப்பினத்தவர்கள் தங்களது நிறத்திற்காக இல்லாமல் அவர்களினது குணங்களிற்காக மதிக்கப்படும் ஒரு காலம் வரும்".

இன்று அமெரிக்காவின், உலகின் ஒற்றை வல்லரசின் அதிபர் பராக் ஒபாமா ஒரு கறுப்பினத்தவர். உலகின் மிகவும் அதிகாரம் கொண்ட மனிதர். அவரால் தனது கறுப்பினத்தவர்களிற்கு என்ன செய்ய முடிந்தது. அமெரிக்காவில் இன்றும் மிகவும் ஏழ்மையில் வாழ்பவர்கள் கறுப்பின மக்களே. சேரிகளில் வாழ்க்கை, வேலையின்மை, மாளாத வறுமை, அதனால் மதுவிலும் போதையிலும் மயங்கி போதல், இவற்றின் தவிர்க்க முடியாத விளைவான சமுகவிரோத செயல்கள், அதன் காரணமாக அமெரிக்காவிலே அதிகளவில் சிறைகளில் அடைபடுபவர்கள் என்று கறுப்பினத்தவர்கள் வாழ்கிறார்கள். ஒபாமாவால் எதுவும் செய்ய முடியாது, ஏனென்றால் அவர் கறுப்பராக இருக்கலாம், ஆனால் அவரது பதவி கறுப்பின மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்டதல்ல. ஏழைமக்களின் வாழ்க்கையை வளம்படுத்த ஏற்படுத்தப்பட்டதல்ல. அவரது பதவி அமெரிக்க முதலாளிகளின் நலன்களிற்கு என்று மட்டுமே அமைக்கப்பட்டது.

உலகின் சர்வவல்லமை படைத்த மனிதன் என்று சொல்லப்படுபவரே முதலாளிகளின் கைப்பாவையாக இருக்கும் போது, அதிகாரம் எதுவும் அற்ற அமைப்பின் நவநீதம் பிள்ளையால் என்ன செய்ய முடியும். வானத்திலிருந்து தேவதூதர்கள் வந்து நம்மை காப்பாற்றுவார்கள் என்று மக்களை பேய்க்காட்டும் கூட்டமைப்பினரிற்கு இன்னும் கொஞ்ச காலம் மக்களை ஏமாற்ற இவரது வருகை பயன்படும். தமிழர் என்பதால் இவரும், ஜ.நா.வும் தமிழர்களிற்கு சார்பாகவே செயற்படுவார்கள் என்று சிங்கள மக்களிடையே இனவாதத்தை மேலும் பரப்ப மகிந்துவிற்கு இவரது வருகை பயன்படும்.

ஆனால் பொய்களால் என்றைக்கும் உண்மைகளை மறைக்க முடியாது. இன்று இலங்கையின் எல்லா மக்களையும் ஒடுக்கும் பாசிச அரசின் இனவாதப்பொய்களை மக்கள் கண்டு கொள்ள தொடங்கியிருக்கிறார்கள். வெலிவேரியாவில் சிங்கள மக்களை கொல்ல அரசு ஒரு கணமும் தயங்கவில்லை என்பதை கண் முன்னே கண்டிருக்கிறார்கள். ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும் என்றான் அய்யன் வள்ளுவன். யாழ்ப்பாணத்து புழுதி மண்ணிலே புரண்டு அழுத அன்னையின் கண்ணீரும், களனி கங்கையின் கரைகளிலே தன் குழந்தையை தேடி அழுத அன்னையின் கண்ணீரும் கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு வெட்டிச் சாய்க்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.