Mon06142021

Last updateSun, 19 Apr 2020 8am

அதிசயம், ஆனால் உண்மை. ஒரு பெண்ணிற்கு குழந்தை பிறந்திருக்கிறது.

அறுவைதாசன், அய்யாமுத்து வீட்டிற்கு போனபோது அய்யாமுத்து தமிழ் தொலைக்காட்சி ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தான். அய்யாமுத்து தமிழ் கலாச்சாரத்தை கட்டிக்காப்பவன். அதனால் சண் ரீ.வி, ஸ்ரார் ரீ.விக்கு காசு கட்டி தமிழ் கலாச்சாரத்தையும், தமிழ் மொழியையும் இனிதே வளர்த்து வந்தான். அறுவைதாசன் எட்டிப்பார்த்த போது தொலைக்காட்சியில் அரை அடி அளவிற்கு முகத்தில் பவுடர் அப்பியிருந்த ஒருவன் நிகழ்ச்சி ஒன்றை நடத்திக்கொண்டிருந்தான். குழந்தைப்பிள்ளைகள் தாளில் கிறுக்கி விளையாடுவது போல அவனது முகத்தில் இருந்த முடியில் எல்லாம் விதம்விதமாக வெட்டியிருந்தது. ஒரு இளம் பெண்ணிடம் அரவம் என்றால் என்ன என்று அவன் ஒரு கேள்வி தொடுத்தான். சார், வன்மோர் ரைம் சொல்லுவீங்களா, பிளீஸ் என்று அவள் கெஞ்சினாள். குயஸ்ரன் ரொம்ப கஸ்டம் தான், ஆனா ட்ரை பண்ணி ஆன்ஸர் பண்ணுங்கோ என்று அவன் செந்தமிழில் செப்பினான். பாவம், அந்த பைந்தமிழ்பாவைக்கு மறுமொழி தெரியவில்லை. அரவம் என்றால் பாம்பு என்றான் அவன். அதுவும் அந்த பெண்ணிற்கு விளங்காமல் விழிகளை விரித்தபடி உதட்டை பிதுக்கினாள். பாம்பென்றால் ஸ்னேக் என்று அவன் சொல்ல ஓ, அதுவா என்று சிரித்தாள் அவள். பாவம், இந்தப்பெட்டை இவ்வளவு வயதாகியும் ஒரு பாம்பையும் பார்க்கவில்லை போலே என்று அறுவைதாசன் கவலைப்பட்டான்.

தொலைக்காட்சியில் திடீரென்று World exclusive, Breaking news என்று எழுத்துக்கள் தமிழ்ப்பட கதாநாயகன் சண்டைக்காட்சியில் பாய்ந்து, பாய்ந்து எல்லாப்பக்கமும் துள்ளிக்குதிப்பது போல் திரை முழுக்க ஓடித்திரிந்தன. இளவரசன் வில்லியமிற்கும், இளவரசி கேற்றிற்கும் குழந்தை பிறந்து விட்டது என்று தொலைக்காட்சியில் ஒரு பெண் கத்தினாள். உலகமகா அதிசயம் ஒன்று நடந்து விட்டது என்பது போல அவள் சொன்ன விதம் இருந்தது. போதும் போதாதிற்கு அய்யாமுத்துவும் தனக்கே குழந்தை பிறந்து விட்டது போல சந்தோசத்தில் துள்ளிக் குதித்தான். அறுவைக்கு மண்டை குழம்பி விட்டது. எம்.ஜி.ஆர் ஒரு முறை டாக்டர்கள் மருத்துவமனைகளிற்கு போகாது வேலை நிறுத்தம் செய்த போது நானும் ஒரு டாக்டர், நான் சட்டசபைக்கு வர மாட்டேன் என்று அடம் பிடித்தது போல அய்யாமுத்துவும் ஆண்டபரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை என்று உளறித்திரிபவன். எம்.ஜி.ஆர் டாக்டர் என்ற மாதிரி அய்யாமுத்துவும் ஆண்டபரம்பரை அரசபரம்பரைக்கு சொந்தம் என்று துள்ளிக்குதிக்கிறானோ என்று சந்தேகப்பட்டான். இன்னும் என்ன லூசுத்தனம் பண்ணப் போறானே என்று ஆழ்ந்த கவலையில் மூழ்கிப் போனான்.

அறுவை சலனம் இல்லாமல் இருப்பதை பார்த்து விட்டு அய்யாமுத்து "கேற்றிற்கு குழந்தை பிறந்து விட்டது, நீ பேசாமல் இருக்கிறாய்" என்று கேட்டான். ஏண்டா அந்த பொண்ணு குஞ்சு பொரிச்சுதா இல்லை குட்டி போட்டிச்சுதா. இல்லை குழந்தை வாயாலே பிறந்திச்சுதா. உலகத்திலே எல்லாத்தாய்மாரிற்கும் பிறந்த மாதிரி இவங்களிற்கும் பிறந்திருக்கு. ஒரு பெண்ணிற்கு குழந்தை பிறப்பது சந்தோசமான விசயம், ஆனால் அரச குடும்பத்திற்கு பிறந்ததினால் உலகமகா அதிசயம் ஒன்று நடந்தது போல துள்ளிக் குதிப்பதை பார்க்கும் போது எரிச்சல் தான் வருகிறது என்றான் அறுவை. இந்த அடிமைப் புத்தியால் தான் உங்களது அரசியலும் பிற்போக்குத்தனமாக இருக்கிறது. ஒபாமாவிற்கான தமிழர் இயக்கம், பிரித்தானிய தொழிற்கட்சிக்கு ஆதரவு, லோக்கலில் ஜெயலலிதா ஈழத்தாய் என்று லூசுத்தனமாக திரிகிறீர்கள், தான் முடி சூட்டி அறுபது ஆண்டுகள் ஆனதை குறித்து நடந்த நிகழ்ச்சிக்கு தமிழின படுகொலையாளி மகிந்துவை கூப்பிட்ட பிரித்தானிய அரசி எலிசபெத்திடம் பொதுநலவாய மாநாட்டிற்கு அரச பரம்பரையினை போகக்கூடாது என்று கெஞ்சுகிறீர்கள்.

அய்க்கிய நாடுகள் சபை, பொதுநலவாய நாடுகளின் அமைப்பு போன்றவை வலிய நாடுகளின் கைப்பொம்மைகள். அவர்களின் நலன்களிற்காக அமைக்கப்பட்டவை என்ற சிறுவிடயம் கூட தெரியாமல் சர்வதேசம் மயிர் புடுங்கும் என்று அரசியலாய்வுகள் செய்கிறீர்கள். பிரித்தானியா தான் அடிமைகளாக வைத்திருந்த நாடுகள் சுதந்திரம் பெற்ற பிறகும் தனது கையை விட்டு போகக்கூடாது என்பதற்காக தொடங்கிய சங்கம் தான் பொதுநலவாய நாடுகளின் அமைப்பு. உனக்கு விளங்குற மாதிரி சொல்லுறதென்றால் மகிந்து தமிழ்மக்களை இனப்படுகொலை செய்து விட்டு தானே அதை விசாரிக்க விசாரணைக்குழு அமைத்தது மாதிரித்தான் இது.

இரண்டாம் மேதகு கே.பி தொடக்கம் இளையதளபதி கருணா வரை மகிந்து நல்லவர், வல்லவர் என்று நாக்கூசாமல் பொய் சொல்லி அடிமைத்தனத்தை காட்டுகிறார்கள். அதே மாதிரி இந்தியா சுதந்திரம் பெற்ற போது அடிமை இந்தியாவின் ஆங்கில கவர்னராக இருந்த மவுண்ட் பேட்டனையே சுதந்திர இந்தியாவின் கவர்னராக தொடர்ந்தும் இருக்க வைத்து காலில் விழுந்தார்கள். General Sir Frank Walter Messervy, General Douglas David Gracey என்று இரு ஆங்கிலேயர்கள் தான் சுதந்திர பாகிஸ்தானின் முதலிரு இராணுவத் தளபதிகள். இந்து, முஸ்லீம் என்று மக்களை பிரித்தவர்கள் இந்தியா, பாகிஸ்தான் என்று நாட்டைப் பிரித்தவர்கள் லட்சக்கணக்கான மக்கள் பிரிவினையின் போது எழுந்த கலவரங்களில் பலியாக காரணமாக இருந்தவர்கள் சுதந்திரத்திற்குப் பிறகும் வெள்ளையின கிறிஸ்தவர்களை தலைமை பதவிகளில் இருக்க வேண்டும் என்று அடி பணிந்து தொழுவதற்கு எள்ளவும் தயங்கவில்லை.

வரலாறு முக்கியம் அய்யாமுத்து. இல்லாவிட்டால் இப்படித்தான் ஆண்ட பரம்பரை, அரச பரம்பரை என்று விளக்கம் இல்லாமல் திரிய வேண்டும் என்ற அறுவைதாசனை கவனிக்காமல் அய்யாமுத்து திருமண வாழ்த்து அட்டை ஒன்றை வைத்து எழுதிக்கொண்டிருந்தான். யாருக்கு வாழ்த்து எழுதிறாய் என்று கேட்டான் அறுவை. செந்தமிழன் சீமானிற்கு என்று மறுமொழி வந்தது அய்யாமுத்துவிடம் இருந்து. ஏறக்குறைய முழுவழுக்கையாக வந்து கொண்டிருந்த மண்டையில் மிஞ்சி இருந்த நாலு முடியையும் புடுங்கி எறிந்தான் அறுவை.