Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

எமது பெண் போராளிகளை நாம் எம்நெஞ்சில் தாங்கிக் கொள்வோம்!

அவருடைய புலன்கள் இருட்டில் துல்லியமாக விழிப்புடன் செயற்பட்டதால், தூரத்தில் பல பெண்கள் அலறும் குரல்களை கேட்டதாக சொன்னார். "அண்ணை எங்களைக் காப்பாற்றுங்கள், அண்ணை எங்களைக் காப்பாற்றுங்கள்!" என்ற குரல்கள். பெண் புலிப்போராளிகளை வன்புணர்ச்சி செய்த போது அலறிய குரல்கள் அவை என்று நேரியன் நிச்சயமாக சொல்கிறார். பயத்தால் உறையச் செய்த குரல்கள். அதைப்பற்றி இப்போது தான் முதல்முதலாக சொல்கிறேன்" என்றார். அந்தக் குரல்களை அவர் நினைவில் மீட்டபோது பயத்தால் விறைத்தது போலவே காணப்பட்டார்.

முள்ளிவாய்க்காலின் முடிவில் இராணுவத்திடம் பிடிபட்ட நேரியன் என்ற போராளி அந்த சித்திரவதை முகாமில் இராணுவத்திடம் வதைபட்ட பெண் போராளிகளைப் பற்றி பிரான்சிஸ் காரிசனிடம் கூறியதை அவர் தனது "சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்" நூலில் ஆவணப்படுத்தியுள்ளார். இவ்வாறு இராணுவத்தின் வன்புணர்விற்கு உள்ளாகி மரணமடைந்த, மரணத்தில் வாழும் ஆயிரம் ஆயிரம் பெண் போராளிகளைத்தான் சிவகாமி சொற்களால் பாலியல் வன்முறை செய்கிறார். இறுக்கமான, பிற்போக்கான சமுதாயத்தில் இருந்து போராட வந்தவர்களை, தமது தனிப்பட்ட வாழ்வை துறந்து சமர் புரிய வந்தவர்களை இன்னொரு பெண்ணால் எப்படி இழிவு செய்ய முடிந்தது.

தமது அரசியலிற்கு மாறானவர்களை பாலியல் நிந்தனை செய்வது தமிழ்ச்சமுதாயத்திலும், ஈழவிடுதலை இயக்கங்களிலும் எவ்விதமான தார்மீகமும் இன்றி, எவ்வித கூச்சமும் இன்றி செய்யப்படுகிறது. ஊர்மிளா என்ற பெண்ணிற்கும், உமாமகேஸ்வரன் என்ற ஆணிற்கும் இடையேயான காதல், காமம் ஒரு பொதுப்பிரச்சனையாக, அரசியல் பிரச்சனையாக உருவாக்கப்பட்டு ஒரு போராட்ட இயக்கமே பிளவுபடுவது தமிழ்ச்சமுதாயத்தில் மட்டுமே சாத்தியமான ஒரு விடயம்.

இயக்கங்களில் இருப்பவர்கள் காதலிக்க கூடாது, திருமணம் செய்யக்கூடாது என்று மடமை மிகுந்த மதங்கள் போல இயற்கைக்கு மாறான விதிகள் இயக்கங்களிலே இருந்தன. காதலிக்கக் கூடாது என்ற பிரபாகரனின் வாழ்வில் பசியைப் போல், தாகத்தைப் போல் காதலும் இயற்கையாக வந்த போது அவர் தன் கொள்கையில் இருந்து, இலட்சியத்தில் இருந்து விலகி விட்டார் என்று பல வரட்டுவாதிகள் கூக்குரலிட்டனர். பிரபாகரன் - மதிவதனி காதல், திருமணம் குறித்து எத்தனையோ கதைகள் உலா வந்தன. புலிகளால் ஈழவிடுதலை புரட்சிகர முன்னணி (E.P.R.L.F) தடை செய்யப்பட்டு தாக்கப்பட்ட போது முகாம்களிலே பெருவாரியான ஆணுறைகள் இருந்ததாக வதந்திகள் கிளப்பி விடப்பட்டன. கருணா பிரிந்த போதும் கருணாவின் பாலியல் தொடர்புகள் பற்றிய கதைகள் களமிறக்கப்பட்டன. மூன்றாந்தர மஞ்சள் பத்திரிகைகள் பெண்களின் பாலியல் தொடர்புகளை பற்றி கீழ்த்தரமாக எழுதுவது போலவே இயக்கங்கள் நடந்து கொண்டன.

போரிலிருந்தும், மரணத்திலிருந்தும் தப்பிய பெண் போராளிகளால் கூட சமுதாயத்தில் இருந்து தப்ப முடியவில்லை. வறுமையிலிருந்து தப்ப முடியவில்லை. அரச பயங்கரவாதத்தின் அச்சம் காரணமாக குடும்பத்தவர்கள், உறவினர்கள் கூட அவர்களிற்கு உதவி செய்ய முடியாத நிலையில் தற்கொலைக்கும், மனமுறிவிற்கும் தள்ளப்படுகிறார்கள். தாங்கிக் கொள்ள வேண்டிய சமுதாயம் அவர்களை தள்ளி விடுகிறது. இலங்கையில் இருந்து இன்னொரு போராட்டம் மீண்டும் எழக்கூடாது என்பதில் இலங்கை அரசும், இந்திய அரசும் கவனமாக இருக்கின்றன.

ஒருபுறம் தேர்தல்கள், அபிவிருத்திகள் என்று போராட்டங்களை திசை திருப்புகிறார்கள். இன்னொரு பக்கத்தில் சமுதாயத்தின் சிந்தனைகளை திசை திருப்புவதற்காக மது, போதை, பண்பாட்டுச்சீரழிவுகளை பரப்புகிறார்கள். உளவியல் போரின் ஒரு அம்சமாக பெண் போராளிகளை பற்றிய அவதூறுகளை, பாலியல் நிந்தனைகளை பரப்புவதன் மூலம் பெண்களை இன்னொருமுறை போராட வரக்கூடாது என்று பயப்படுத்துகிறார்கள். பாரிசில் இருந்து சிவகாமிக்கு சொல்லப்பட்டது என்னும் பெண் போராளிகள் பற்றிய கட்டுக்கதையும் அதன் ஒரு அங்கம். புலம்பெயர் நாடுகளில் அடையாள அரசியல் பேசுகின்ற கும்பல்கள் இலங்கை அரச ஆதரவுடன் இத்தகைய கீழ்த்தரமான அவதூறுகளை பரப்பி வருகின்றன. இனப்படுகொலை அரசுடன் இணைந்து கொண்டு தமிழ் மக்களிற்காகவும், சாதி ஒடுக்கு முறைக்கெதிராகவும், பெண் விடுதலைக்காகவும் அவர்கள் குரல் கொடுக்கிறார்களாம். பொய்களும் புனைவுகளும் போராட்டங்களை தள்ளிப் போக செய்யலாமே தவிர தடுத்து நிறுத்த முடியாது.