Mon06142021

Last updateSun, 19 Apr 2020 8am

சங்கராச்சாரி கொலை செய்தால் குற்றமில்லை!

காஞ்சி காமகோடி ஜெயேந்திரனை, சங்கரராமன் வழக்கில் இருந்து போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் விடுதலை செய்திருக்கிறது நீதிமன்றம். சங்கரராமன் பெரிய, சின்ன சங்கராச்சாரிகளின் ஊழல்களையும், பாலியல் முறைகேடுகளையும் எதிர்த்து வந்தவர். அதனால் ஆத்திரமடைந்த ஜெயேந்திரன் கூலிப்படையை வைத்து கொலை செய்ததாக அடியாட்கள், அடியாட்களை ஒழுங்கு செய்த ரவி சுப்பிரமணியம் எல்லாம் சாட்சி சொல்லியிருந்தனர். இந்த வழக்கில் நீதிபதியாக இருந்த ராமசாமி என்பவருடன் சங்கராச்சாரியும், ஒரு பெண்ணும் பணம் தருவதாக பேரம் பேசிய உரையாடலின் ஒலிப்பதிவு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் அடிப்படையில் ராமசாமி இந்த வழக்கிலிருந்து மாற்றப்பட்டார். அப்படி இருந்தும் ஜெயேந்திரனிற்கு விடுதலை கிடைத்திருக்கிறது.

"என் கணவர் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாதவர். பாவிகள் அவரைத் துள்ளத்துடிக்க அவர் வேலை செய்த கோயிலிலேயே வெட்டிக் கொன்னாங்க. கொலையில சம்பந்தப்பட்டவங்க பெரிய இடம்னு தெரிஞ்ச பிறகும் விடாம வழக்கை நடத்த ஒத்துழைப்பு தந்தோம். ஒருநாள், விசாரணைக்காக போனபோது நீதிமன்ற வளாகத்திலேயே வெச்சி மூணு பேர், 'சாட்சியத்தை மாத்தி சொல்லலைன்னா உன் பிள்ளைங்களை ஆசிட் தொட்டியில வீசிடுவோம். அடையாளம் தெரியாம போயிடுவாங்க’னு மிரட்டினாங்க. கோயில்ல வெச்சி ஒரு உயிரைப் பறிக்கத் துணிஞ்சவங்க. இதையும் செய்திடுவாங்கங்கன்னு பயந்து போனேன். அவருதான் போயிட்டாரு. என் பிள்ளைகளையாவது காப்பாத்துவோம்னு நீதிமன்றத்துல மாத்திச் சொல்ல வேண்டியதாகிடுச்சி" என்ற பத்மாவின் கண்களில் கண்ணீர் கொட்டுகிறது. ( சங்கரராமனின் மனைவி ஜூனியர் விகடனில்).

சங்கரராமனை இவர் கொலை செய்யவில்லை என்றால் சங்கரராமன் தன்னை தானே வெட்டிக் கொண்டு இறந்திருக்க வேண்டும். அல்லது சங்கராச்சாரி மீது பொய்ப்பழி சுமத்தியதிற்காக ஆராவது அவதாரம் எடுத்து வந்து கொன்று இருக்க வேண்டும். ஜெயேந்திரனின் மேல் கொலைக்குற்றம் வரவேண்டும் என்பதற்காக ஜெயேந்திரனது எதிரிகள் யாரோ தான் சங்கரராமனை கொலை செய்திருக்கிறார்கள் என்று பார்ப்பனிய அறிவுக்கொழுந்துகள் உளறுவதை விட மேலே சொன்னவை நடந்திருக்கலாம்.

அராஜகமும், ஊழலும் நிறைந்த முதலாளித்துவ நாடுகளின் நீதிமன்றங்களில் ஏழைகளிற்கு என்றும் நீதி கிடைப்பதில்லை. தூக்குகயிற்றில் ஊசலாடுகின்ற பேரறிவாளனின் வழக்கு அதன் எண்ணற்ற உதாரணங்களில் ஒன்று. "பேரறிவாளனின் வாக்குமூலத்தில் ஒரு கட்டத்தில் சிவராசன் பேட்டரி வாங்கி வரச்சொன்னார் நான் வாங்கிக் கொடுத்தேன். ஆனால் அது எதற்காக என்பது எனக்குத் தெரியாது என்று சொன்னார். நான் வாங்கிக் கொடுத்தேன் என்று மட்டும் எழுதினேன். இப்போது அவரது உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் போது என் மனசு மிகவும் வருந்துகிறது" என்று முன்னாள் சிபிஐ எஸ்.பி தியாகராஜன் இன்று சொல்கிறார். ஆனால் இன்று வரை பேரறிவாளனிற்கு நீதி கிடைக்கவில்லை. ராஜிவ் காந்தி கொலை வழக்கு விசாரணை முழுக்கவே இப்படி பொய்யும், புனைவும் நிறைந்ததாகவே நடந்தது. எய்தவர்கள் தான் விசாரணை நடத்தினார்கள். மரண தண்டனை விசாரணைக்கு முன்பே முடிவாகி விட்ட தீர்ப்பு.

ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிற்கு மரணதண்டனை என்றால் ராஜிவ் காந்தியால் இலங்கையில் கொல்லப்பட்டவர்களிற்காக ராஜிவை எத்தனை முறை தூக்கிலே போட்டிருக்க வேண்டும். துணையை இழந்தவர்கள், குழந்தைகளை பறி கொடுத்தவர்கள், தாய் தந்தையர் ஆக்கிரமிப்பு படையினரால் கொல்லப்பட்டதால் அநாதைகளாக்கப்பட்ட பிஞ்சுகள், அங்கங்களை இழந்தவர்கள் என்று எத்தனை எத்தனை ஆயிரம் பேரை அழ வைத்ததிற்கு எந்த நாய் வந்து நீதி வழங்கியது.

வைகுண்டராசன் என்னும் கொள்ளையன் தென்தமிழ்நாட்டின் கடற்கரை முழுக்க தாதுமணல் அள்ளுவதன் மூலம் சுற்றுச்சூழல் சீர்கெடுகிறது. கடற்கரை கிராமமக்கள் புற்றுநோயினால் இறப்பது அதிகரித்துள்ளது. இதை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை ரெளடிகளை வைத்து மிரட்டுகிறான் இவன். இவனின் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்திற்கு மத்திய அரசின் இரசாயனப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் "தலை சிறந்த ஏற்றுமதியாளர்" விருது வழங்கப்படவுள்ளது. சூழலை நாசமாக்கினால் என்ன, மக்களை கொன்றால் என்ன, ரெளடிகளை வைத்து அராஜகம் செய்தால் என்ன பணம் வந்தால் சரி. இது தான் முதலாளித்துவ அரசுகளின் நீதி.

சங்கராச்சாரியாரிற்காக முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமனில் இருந்து சூனா சாமி வரை அத்தனை பார்ப்பனர்களும் ஊளையிட்டார்கள். சங்கராச்சாரிக்கு விடுதலை கிடைத்த பிறகு கூட சங்கரராமனிற்கு என்ன நீதி என்று யாருமே கேட்கவில்லை. இரண்டு காரணங்கள். முதலாவது சாதி, சமயம் எல்லாமே பணம் உள்ளவனோடு தான். அதிகாரம் உள்ளவனோடு தான். இரண்டாவது காரணம் சங்கரராமனிற்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால் சங்கராச்சாரியை உள்ளே போட வேண்டும். பிறகு ஏன் அவர்கள் வாய் திறக்க போகிறார்கள்.