Mon06212021

Last updateSun, 19 Apr 2020 8am

ஜனநாயகத்திற்கு ஆபத்தாம், எல்லோரும் ஓடி வாங்கோ!

அண்மையில் ஒரு பத்திரிகையின் பிரதிகள் லண்டனின் சில பகுதிகளில் ஒரு நிறுவனத்தால் தூக்கிச் செல்லப்பட்டனவாம். குறிப்பிட்ட அந்த நிறுவனத்தின் இலங்கை அரசுடனான வியாபாரத் தொடர்புகளை அந்த பத்திரிகை விமர்சித்ததாம். அதனால் தான் அவர்கள் கருத்துச் சுதந்திரத்தின் கழுத்திலே கத்தியை வைத்ததாக அந்த பத்திரிகை கண்ணீர் விட்டு கதறுகிறது. முதலாளித்துவத்திற்கும், தமிழ் மக்களைக் காட்டிக் கொடுப்போருக்கும் எதிராக போர் தொடுத்த அந்தப் பத்திரிகைக்கு நடந்த அராஜகத்தை, ஜனநாயக மறுப்பை கண்டு சில இணையங்கள், சில கருத்து கந்தசாமிகள் பொங்கியெழுந்து அறிக்கை அணுகுண்டுகளை வீசித் தள்ளியிருக்கிறார்கள்.

தேசிய விடுதலைப்போராட்டம் என்ற ஒரு முகமூடியைப் போட்டுக்கொண்டு இது போன்ற பத்திரிகைகள் என்ன செய்கின்றன. தமிழ்மக்கள் சமுதாயத்தில் உள்ள அத்தனை பிற்போக்குத்தனங்களையும் வளர்த்து விடுகின்றன. உடைத்தெறிய வேண்டிய அத்தனை சீர்கேடுகளையும் தூக்கிப் பிடிக்கின்றன. தலைவர்களின் மண்டையை சுத்தி ஒளிவட்ட பல்ப்பு கொழுவி விட்டு தலையின் தாழ் பணிவோம் என்று மக்களை மந்தைகளாக்கும் அரசியல் செய்வது, தமிழ்மக்களின் மரணங்களையும், இழப்புக்களையும் மேற்கு நாடுகள், இந்தியா, அய்க்கிய நாடுகள் சபை போன்ற அயோக்கியர்கள் தங்கள் வியாபாரங்களிற்காக அவ்வப்போது சர்வதேசவிசாரணை, போர்க்குற்றங்கள் என்று பேசினால் உடனே புல்லரிச்சுப் போய் அடுத்த மாதமே மகிந்துவிற்கு தூக்குத்தான் என்று மக்களை ஏமாற்றுவது. இவங்கள் தானே மகிந்தாவோடை சேர்ந்து தமிழ்மக்களை கொன்றவர்கள், இப்பவும் சேர்ந்து வியாபாரம் செய்கிற கூட்டுக்களவாணிகள் என்று யாராவது கேட்டால், "ஆர் குற்றினாலும் அரிசியானால் சரி" என்று பம்முவது போன்ற சுத்துமாத்துகள் தான் இதுகளின் அரசியல்.

தமிழர்களின் மிகப்பெரிய இழிவான, மனித குலத்திற்கே அவமானமான சாதியை வளர்த்தல். நாங்கள் சாதியை எங்கே தூக்கிப் பிடிச்சோம் என்று சின்னப்பிள்ளைத்தனமாக இதுகள் கேட்ககூடும். சாதியின் பிறப்பிடமான சைவசமயத்தை எந்தவிதமான விமர்சனங்களும் இல்லாமல் போற்றிப்பாடும் போது சாதி வளர்க்கப்படுகிறது. பிராமண குலக்கொழுந்துகள் மட்டும் தான் பூசை செய்ய முடியும் என்னும் போது அவங்களுக்கு தங்கத்திலே செய்து வைச்சிருக்கு, அதாலே அவனுகள் பெரிய சாதி. நாங்கள் குறைந்த சாதி என்று இதுகள் ஒத்துக் கொள்ளும் போது சாதி வளர்க்கப்படுகிறது. அந்த இந்துமதத்திற்கு இந்த வியாபாரிகள் கோவில்கள் கட்டுகிறார்கள். தங்கள் பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்கிறார்கள்.

இலங்கை முழுவதும் காணாமல் போனவர்களிற்காகவும், குறிப்பாக காணாமல் போன தமிழ்மக்களிற்காக குரல் கொடுத்த லலித்தும், குகனும் கொலைகார இலங்கை அரசினால் கடத்தப்பட்டு இரண்டு வருடங்களிற்கு மேலாகி விட்டன. உடல், பொருள், ஆவி அத்தனையும் விடுதலைக்கு என்று வீரவசனம் பேசிக்கொண்டிருந்த பலர் வாயை மூடிக்கொண்டிருந்த நேரத்தில் மகிந்த அரசின் கடத்தல்களிற்காக, கொலைகளிற்காக வடபகுதியில் முதலில் குரல் கொடுத்தது, அதற்காக வேலை செய்தது தோழர்கள் குகனும், லலித்தும் மட்டுமே. அவர்கள் காணாமல் போனது குறித்து இவர்கள் ஒரு வரி கூட எழுதியதில்லை. காதல் கணவனை பறிகொடுத்து விட்டு வறுமையிலும், அரசின் அச்சுறுத்தல்களிற்கும் நடுவில் வாழும் குகனில் மனைவியின் துயரம் இவர்களின் காசைக் கண்டால் மட்டும் விரியும் கண்களிற்கு தெரிவதில்லை. தோழர்கள் குகனும், லலித்தும் கடத்தப்பட்டது குறித்து நடாத்தப்பட்ட ஒரு கூட்டமேடையில் அப்பாவைப் பற்றி கேட்டபோது அடக்கமுடியால் அழுகையை மட்டுமே மறுமொழியாக சொன்ன சின்னஞ்சிறு குழந்தை சாரங்காவின் கதறல்கள் இவர்களின் காதுகளிற்கு கேட்பதில்லை.

இரப்பர் தோட்டத்தில் வேலை செய்யும் ஏழைத்தொழிலாளர்களான தாய், தந்தையரின் மகனான தோழர் லலித் வீரராஜ் திறந்த பல்கலைக்கழகத்தில் வேலை செய்தவர். தான், தனது குடும்பம் என்று வாழ்ந்திருக்கலாம். வேலையை உதறித் தள்ளி விட்டு காணாமல் போனவர்களிற்கு நீதி கேட்டு போராட யாழ்ப்பாணம் வந்த போது தோழர் குகனுடன் சேர்த்து கடத்தப்பட்டார். அவரின் இழப்பு குறித்து இவர்கள் வாய் திறப்பதில்லை.

சிதம்பரம் கோயிலை பிராமண தீட்சிதர்களிடம் கொடுக்காதே, பொதுக்கோவிலாக்கு என்று பிரச்சாரம் செய்த மக்கள் கலை இலக்கிய கழகத்தின் தோழர்களை ஜெயலலிதாவின் அடிமைநாய் ஒன்று பாண்டிசேரியில் வைத்து அடித்தது. அந்த முட்டாளின் அராஜகத்தை இவர்கள் கண்டித்தது கிடையாது. ஜெயலலிதாவை ரொம்ப நல்லவ, ஈழத்தாய் என்று சொல்லும் இவர்கள் எப்பிடி குரல் எழுப்ப முடியும்.

இந்த தேசபக்தி வியாபார ஊடகங்கள் வலதுசாரி கும்பல்கள். அவர்கள் வர்க்க விடுதலை என்று பேசுபவர்களை எதிரிகளாக பார்ப்பவர்கள். ஆனால் தங்களைத் தாங்களே இடதுசாரிகள் என்று சொல்லிக் கொள்ளும் சில ஊடகங்களும் தோழர்கள் லலித், குகனின் கடத்தலை பற்றி ஒரு செய்தியாகக் கூட போடுவதில்லை. தோழர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டது ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாக தெரியவில்லை. இந்த வலதுசாரி, வியாபாரப் பத்திரிகையை யாரோ சிலர் எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள் என்றவுடன் மாத்திரம் கருத்துச் சுதந்திரத்திற்கு வந்த சோதனையை நினைத்து கண்ணீர் விடுகிறார்கள். சில நேரங்களில் ஞாபக மறதி வரும், சில நேரங்களில் மண்டை ஒழுங்காக வேலை செய்யும் செலெக்டிவ் அம்னீசியா வியாதி இது தான் போலே.

இந்த பத்திரிகையை முதலாளித்துவ நிறுவனம் ஒன்று எடுத்துக் கொண்டு போனதால், இவர்கள் இனி மேல் முதலாளித்துவத்திற்கு எதிராக குரல் கொடுக்க கூடும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவர்களோ லைக்கா இல்லையென்றால் லிபரா என்று பத்திரிகை நடத்துகிறார்கள். எத்தனையோ இணையத்தளங்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகளை முற்போக்கு இடதுசாரி தோழர்கள் தமது அயராத உழைப்பின் மூலம் ஒரு விளம்பரமும் இல்லாமல் கொண்டு வருகிறார்கள். எல்லாம் தேசவிடுதலைக்கே என்று சொல்லும் இவர்களினது பத்திரிகைகளில் விளம்பரம் இல்லாமல் ஒரு பக்கம் கூட பதிப்பிக்கப்படுவதில்லை. அது சரி தேசவிடுதலை, தமிழ்மக்களின் துயரங்களே இவர்களிற்கு பெரும்வியாபாரமாக இருக்கும் போது பத்திரிகையில் விளம்பரம் போட்டு காசு வாங்குவது மட்டும் ஒரு பொருட்டாகவா இருக்கப் போகிறது.