Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

இறந்த மனிதரைக் கூட இழிவுபடுத்தும் இந்துமத சாதிவெறி!

தமிழ்நாட்டின் மயிலாடுதுறை நகரத்திற்கு அருகே இருக்கும் திருநாள்கொண்டச்சேரி என்னும் கிராமத்தில் மரணமடைந்த செல்லமுத்து என்னும் இந்துமதத்தினால் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவரின் உடலை அவர்களின் சேரிக்கு பக்கத்தில் இருக்கும் வழுவூர் என்னும் ஊரின் பொதுப்பாதை வழியாக மயானத்திற்கு எடுத்துச் செல்ல முற்பட்ட போது அவர்களைத் தடுத்து அந்த ஊரின் ஆதிக்கசாதி வெறியர்கள் ஊளையிடுகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் ஆற்றங் கரையோரமாக நெடுந்தூரம் நடந்து சென்று மரணமடைந்தவர்களை மயானத்திற்கு கொண்டு சென்றிருந்தார்கள். சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் பெய்த பெருமழையினால் இந்த பாதையை பாவிக்க முடியாமல் போனதாலேயே அவர்கள் ஊரின் நடுவே செல்லும் பொதுப்பாதையினால் செல்லமுத்து அவர்களின் உடலை எடுத்துச் செல்ல முயன்றார்கள்.

அந்த ஏழை மனிதர்கள் சாதிவெறியர்களை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்காக உடலை ஊரின் நடுவில் கொண்டு செல்லவில்லை. வெள்ளத்தினால் சிதைந்து போன பாதையினால் நடக்க முடியாது என்ற ஒரே காரணத்திற்காகவே அந்தப் பாதையினால் சென்றார்கள். அதைக் கூட இந்த மண்டை கழண்ட சாதிவெறி நாய்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்தியா சனநாயக நாடு என்கிறார்கள். இந்தியாவில் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு பலகாலம் ஆகி விட்டது என்கிறார்கள். வழுவூர் இந்தியாவில் தான் இருக்கிறது. அங்கு மன்னர்கள் எவரும் இருப்பதாகவும் தெரியவில்லை. ஆனால் ஊரின் பொதுப்பாதை வழியாக இறந்த மனிதரின் உடலைக் கொண்டு செல்ல அனுமதி இல்லை. பொதுப்பாதையினால் செல்வதற்கு உலகத்திலேயே பெரிய சனநாயக நாட்டின் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அனுமதி வாங்க வேண்டிய அவலத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் இருக்கிறார்கள்.

ஆனால் சாதிவெறியர்கள் நீதிமன்றத்தீர்ப்பை காலில் போட்டு மிதித்தார்கள். நீதிமன்ற ஆணையை நடைமுறைப்படுத்த வேண்டிய தமிழ்நாட்டு காவல்துறை பொதுப்பாதையில் போனால் கலவரம் உண்டாகும் என்று சொல்லி ஒடுக்கப்பட்ட மக்களை நடக்க முடியாத ஆற்றங்கரை பாதை வழியாகவே போகச் சொல்லி மிரட்டினார்கள். தமிழ்நாட்டு காவல்துறையின் சாதிவெறியர்களிற்கு ஆதரவான அநியாயத்தை மக்கள் எதிர்த்ததினால் இறுதியில் காவல்துறையே செல்லமுத்து அவர்களின் உடலை ஆற்றங்கரைப் பாதை வழியாக எடுத்துச் சென்று சாதி என்னும் மனிதவிரோதக் கொடுமைக்கு சேவகம் செய்தார்கள். (பி.பி.சி தமிழோசை செய்தி, 07.01.2016)

தமிழ்நாட்டு பொலிசிற்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. தமிழ் நாட்டு பொலிசு அரசியல்வாதிகளிற்கு காலும், பிறவும் கழுவி விடும். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களிற்கு பாதுகாப்பு கொடுத்து தீயாக பணிவிடை செய்யும். கட்டப்பஞ்சாயத்துக்காரர்கள் தமது கடமையைச் செய்ய காவல்நிலையத்திலேயே அலுவலகம் அமைத்துக் கொடுக்கும். கள்ளர்கள், காடையர்கள் தமது தொழிலில் கவனம் குறைத்தால் வீடு தேடிப்போய் "கடமையைச் செய், பலனை எதிர்பாராதே, நீ விட்டு விட்டாலும் வேறு ஒருவன் களவெடுக்கத்தான் போகிறான், எனவே களவெடுத்து எங்களிற்கு தர வேண்டிய லஞ்சத்தை ஒழுங்காகத் தா" என்று கீதா உபதேசம் செய்யும். இப்போது இறுதிப் பயணத்திற்கான சேவையையும் செய்கிறது.

இந்துமதம் என்னும் இழிவுகளின் குப்பையில் மாடு புனிதமானது. ஆனால் சகமனிதன் அவன் இதே இந்து மதத்தில் இருந்தாலும் சாதிவெறிமயிர்களினால் தீண்டப்பட தகாதவன் என்று ஒதுக்கி வைக்கப்படுவான். அந்த லூசுகளின் ஊர்களில் நாய் நடக்கலாம், நரி நடக்கலாம் ஆனால் சக மனிதன் நடக்க முடியாது. உலகில் உள்ள எந்த மதத்திலும் அந்த மதத்தை படித்து, பயிற்சிகளை முடித்தவர்கள் அந்த மகுருவாக முடியும். ஆனால் இந்த இழிமதத்தில் மட்டும் அது முடியவே முடியாது. நீங்கள் பிராமணராக பிறந்திருந்தால் மட்டுமே இந்த மதத்தில் குருமாராக வர முடியும்.

இந்துமத ஆகம பயிற்சி பெற்ற பிராமணர் அல்லாதவர்கள் கோவில்களில் பூசை செய்ய முடியாது என்று இந்திய உச்சநீதிமன்றமே சாதிக்கொடுமைக்கு ஆதரவாக தீர்ப்பு கொடுக்கிறது. கருவறையில் வைத்து பெண்களைக் கெடுத்த தேவநாதன் பூசை செய்யலாம், கோயிலில் வைத்து கொலை செய்த சங்கராச்சாரி குருவாக முடியும். இந்த அயோக்கியர்களினால் கெடாத புனிதம் பிராமணர்கள் அல்லாதவர்கள் பூசை செய்தால் கெட்டுவிடும் என்ற பிதற்றல்களிற்கு நீதிமன்றம் சட்டம் மூலம் அங்கிகாரம் கொடுக்கிறது. மன்னர்கள் காலம் தொட்டு மக்களாட்சி என்னும் பெயரில் ஆளும் கொள்ளையர்களின் இன்றைய ஆட்சிகளின் காலம் வரை அரச ஆதரவுடன் இந்த பார்ப்பனியக் கொடுங்கோன்மை சமுதாயத்தின் எல்லாமட்டங்களிலும் புற்றுநோய் போல் பரவி ஊடுருவுகிறது.

துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று

இந்நான் கல்லது குடியும் இல்லை;

என்று மாங்குடி கிழாரின் புறநானூற்றுப் பாடல் சொல்கிறது. துடி என்பது பறையைக் குறிக்கிறது. திராவிடமொழிகளில் ஒன்றான கன்னடத்தில் இன்றும் பறையை துடி என்றே சொல்கிறார்கள். (சோமன துடி, சோமனின் பறை என்ற தேசியவிருது பெற்ற கன்னடப்படத்தை ஞாபகம் கொள்க). துடியர்கள், பறையர்கள் பறை முழங்கினார்கள். பாணர்கள் பாடல்களை பாடினார்கள், இசைக்கருவிகளை மீட்டினார்கள். கடம்பர் ஆரம்ப காலங்களில் கடலாட்சி செய்த இனத்தவர்கள் என பதிற்றுப்பத்தில் குறிப்புகள் உள்ளன (விக்கிப்பீடியா). இப்பழம் பாடலில் எங்கும் சாதி குறித்த உயர்வு, தாழ்வு பேசப்படவில்லை. பிராமணர்கள் பூணூல் போட்டுக் கொண்டு இரு பிறப்பாளர்களாக சமுதாயத்தின் தலையாக இருந்தார்கள் என்று பழம்பாடல்களில் எங்கும் பேசப்படவில்லை.

இயற்கையையும், தாய்வழிபாட்டையும் கொண்டிருந்த மக்களிடம் இப்படியான பைத்தியக்காரத்தனமான கதைகள் என்றைக்கும் இருந்ததில்லை. பிராமண மதம் அல்லது அன்றைக்கு வட இந்தியாவில் இருந்த பெயரான சனாதன தர்மம் (நிரந்தர தர்மம்) என்ற உழைக்கும் மக்களிற்கு எதிரான சோம்பேறி, அயோக்கியர்களின் மண்டை கழண்ட சிந்தனைகள் அன்றைக்கு தமிழ் மண்ணில் தமது நச்சுவிதைகளை விதைத்திருக்கவில்லை. இடையில் வந்து சேர்ந்த இந்துமதம் என்னும் பயங்கரவாதத்தை முறியடிப்போம். பிறப்பை வைத்து மனிதரைப் பிரிக்கும் நால்வருணம் என்னும் பார்ப்பனப்பயங்கரவாதச் சட்டங்களை வேரோடு கொழுத்துவோம்.

இல்லையென்றால், இந்த சாதிக்கொடுமையை வளர விட்டால் திருநாள்கொண்டச்சேரியில் இறந்த மனிதரின் உடலிற்கு நடந்த அவமரியாதை சம்பிரதாயம், ஆகமம், வேதநெறி என்னும் பெயரில் இந்திய நீதிமன்றங்களினால் அங்கீகரிக்கப்படும். மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலில் கொடிமரத்தை ஒளித்து வைத்த சாதிவெறிநாய்கள் தமது சதித்தனத்தை யாழ்ப்பாண தேசவழமைச்சட்டம் என்று சான்றுகள் காட்டுவார்கள். சக்கிலியர்கள் என்று இந்துசாதி பேய்களினால் அழைக்கப்படும் துப்புரவுத் தொழிலாளர்கள் வழமையான மனிதர்கள் அல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த திருகோணமலை நகரசபை உபதலைவரான சேனாதிராஜா ஸ்ரீஸ்கந்தராஜா என்ற நாய் இட்ட ஊளை சாதிவெறித் தமிழர்களின் தேசிய கீதமாகலாம். இந்த மனிதகுல விரோதிகளையும், அவர்களின் பைத்தியக்கார மதங்களையும் துரத்தியடித்து சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் மனிதரின் அடிப்படையான நற்குணங்களை எமது சமுதாயத்தில் மறுபடியும் மலரச் செய்வோம்.

நீதி என்பதை சுருக்கமாகச் சொல்வது என்றால்; நீதி என்பது சுதந்திரம், நீதி என்பது சமத்துவம், நீதி என்பது சகோதரத்துவம். - சமுகப் போராளி அம்பேத்கார்