Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

நல்லூர் கந்தசாமியும், பாவாடை- தாவணியும்

அரசியல்வாதிகள் கொலைக்காரர்களாகவும், கொள்ளையர்களாகவும் இருக்கின்ற அதே போது கோமாளிகளாகவும் இருக்கின்றார்கள். வறுமையினாலும், வன்முறையினாலும் இறுகிப் போயிருக்கின்ற மக்களது வாழ்விலே; இவர்களின் கோமாளித்தனம் தான் ஒரே ஒரு ஆறுதலாக மனம் விட்டு சிரிக்கக் கூடிய மாதிரி நகைச் சுவையாக இருக்கின்றது. நல்லூர் கந்தசாமி கோயில் திருவிழாவினை ஒட்டி யாழ்மாநகர அம்மா விடுத்த அறிக்கையில் கோயிலிற்கு வரும் பெண்கள் தமிழ் பண்பாட்டின் படி பாவாடை- தாவணி, சேலை அணிந்து வர வேண்டும் என்று குறிப்பிட்டது அரசியல்வாதிகளின் சின்னப் பிள்ளைத் தனத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

மாறும் என்ற சொல்லைத் தவிர எல்லாம் மாறும் என்பது இயங்கியலின் அடிப்படை விதி. மனிதர்கள் தாம் வாழ்ந்த சூழலிற்கு,  கால நிலைகளிற்கு ஏற்ப தமது உடை உணவு போன்றனவற்றினை மாற்றிக் கொண்டு வந்தார்கள். இன்றும் இவை மாறிக் கொண்டே இருக்கின்றன. பெண்கள் தமக்கு ஏற்ற விருப்பமான உடையாக பாவாடை- தாவணி, சேலை, பர்தா என்று எந்த உடையையும் அணியும் போது எவரும் அதனை கேள்விக்கு உள்ளாக்க முடியாது. ஆனால் அதனையே பண்பாடு மதம் என்று கூறித் திணிக்கும் போது பெண்களின் உடையணியும் சுதந்திரத்தினை மறுக்கும் போது கேள்விகள் எழுகின்றன. இன்றைய சமுதாயம் தந்தை வழி ஆணாதிக்க சமுதாயமாக இருப்பதனால் பெரும்பாலான சந்தர்பங்களில் ஆண்கள் தான் பெண்கள் என்ன உடையணிய வேண்டும் என்பதனைத் தீர்மானிக்கிறர்கள்.

இதை இருவகையாகச் செய்கின்றார்கள. பெண்களை சிறுவயது முதல் கண்ணியம் பண்பாடு,  மதம் மற்றும் குறிப்பிட்ட வகையான உடைகள் அணிதல் என்று ழூளைச் சலவை செய்வதன் ழூலம் பெண்களாகவே இவ்வுடைகளை ஏற்றுக் கொள்ள செய்கின்றனர். இப் போதனைகளை  ஏற்றுக் கொள்ளாத பெண்களை வலுக்கட்டாயமாகவும்,  நடத்தை கெட்டவள் போன்ற பழிச் சொற்களை கூறியும், அவமானப்படுத்தியும் அணிய வைக்கின்றனர். பெண்களை காக்கவே இப்படியான உடைகளை உடுத்த செய்கின்றோம் என்று கூறும் மதவாதிகளின் நாடுகளில் தான் பெண்கள்  மீதான பாலியல் வன்முறைகள் கூடுதலாக நடக்கின்றன. இஸ்லாமிய மதச் சட்டத்தின் படி ஆட்சி நடக்கும் சவுதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப் பெண்களாக செல்பவர்கள் அனுபவிக்கும் பாலியல் வன்முறைகள் எண்ணிலடங்காதவை.

ஆடைகள் மறைக்காத கைகள், முகங்களிலே இருக்கும் அதே தோலும், தசையும் தான் உடலின் எல்லாப் பாகங்களிலும் இருக்கின்றன. அவற்றினை மறைக்கச் சொல்வதன் ழூலம் அங்கே என்ன இருக்கும் என்று ஆண்களின் ஆசையினை தூண்டி விட்டு பெண்களை போகப் பொருளாக்கும் இழி செயலைத் தான் இந்த மதவாதிகள்  செய்கின்றார்கள். பிறப்பு உறுப்புகளிற்கு மர்ம உறுப்புகள் என்று பெயர் வேறு வைத்திருக்கின்றார்கள். அங்கே என்ன மர்மம் ஒழித்திருக்கின்றது என்று இன்று வரை புலனாய்வு  செய்து கொண்டிருக்கிறார்கள் போலே இருக்கிறது.

உலகின் மிகப் பழைய குகை ஓவியங்களில் சிலர் நிர்வாணமாகவும், சிலர் இலை குழைகள், விலங்குகளின் தோல்கள் என்பனவற்றினை ஆடைகளாக அணிந்து கொண்டிருக்கிறார்கள். இன்றைய பழங்குடி மக்கள் இடையேயும் அவர்களினது சூலழிற்கும், கால நிலைக்கும் ஏற்ற ஆடைகளே உண்டு. இந்த மதவாதிகளின் கருத்துப்படி பார்த்தால் அரை நிர்வாணமாகவோ, முழு நிர்வாணமாகவோ வாழும் இந்த ஆண்களும் பெண்களும் காமவெறி தலைக்கேறி நாள் முழுவதும் காமக் கலவியைத் தவிர வேறு வேலையேதும் இல்லாமல் இருக்க வேண்டும். கண்ணில் தென்படும் பழங்குடிப் பெண்களை குறைவான உடை அணிந்திருக்கிறார்கள் என்பதனால், பழங்குடி ஆண்கள் காம வெறி கொண்டு வன்புணர்ச்சி செய்ய வேண்டும்.  பழங்குடி மக்களிடம் பாலியல் வன்முறை பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம். அவர்களது மொழிகளிலே பாலியல் வன்முறை, கற்பழிப்பு என்பன போன்ற சொற்களே கிடையாது என மொழியியலாளர்கள் கூறுகின்றனர்.

சங்கராச்சாரி,  நித்தியானந்தா,  சிறுவர்களைக் கெடுக்கும் கத்தோலிக்க பாதிரிகள், ஈராக்கிலும் ஆப்கானிஸ்த்தானிலும் வன்புணர்ச்சி செய்யும் புரட்டஸ்த்தாந்து ஆங்கில அமெரிக்க ராணுவத்தினர்கள், வீட்டு வேலைக்கு வருகின்ற ஏழைப் பெண்களை பாலியல் வன்முறை செய்யும் ஜந்து முறை தொழுகை செய்யும் அரவு முஸ்லீம்கள்,  தமிழ் பெண்களை வன்புணர்ச்சிக்குள்ளாக்கும் இலங்கையின் பௌத்த பேரினவாத்தின் ராணுவத்தினர் என முழுதாக உடை உடுத்தும் இந்த ஈனப் பிறவிகள் தான் பெண்களை கேவலப்படுத்துகின்றனர்.

காலச்சுவடு இதழ் ஒன்றில் இன்றைய சட்டமன்ற உருப்பினரான ரவிக்குமார் பெரியார் வெளிநாட்டுப் பயணத்தின் போது நிர்வாண சங்கங்களிற்கு சென்று வந்தார் என்பதை பெரும் பாவச் செயல் போன்று எழுதுகின்றார். நிர்வாணச் சங்கங்களை காமக்களியாட்ட விடுதிகள் என கற்பனை செய்யும் பொதுப்புத்தி தான் சிந்தனையாளர் எனக் கூறப்படும் இவரிடமும் உள்ளது. இயற்க்கைக்கு மீண்டும் செல்லத் துடிக்கும் மனிதர்களின் சிறு தீவுகள் தான் நிர்வாணச் சங்கங்கள். இங்கு மனிதர்கள் இணைகளாக, குழந்தைகளுடன் குடும்பங்களாக வாழ்கின்றார்கள் அல்லது தமது ஓய்வு நேரங்களில் வந்து போகின்றார்கள்.

நான் நெதர்லாந்திலுள்ள நிர்வாணச் சங்கம் ஒன்றிற்கு சென்றிருந்தேன். வண்டுகள் மொய்க்கும் பூக்கள் விரிந்த வாவி ஒன்றின் கரையிலே அச் சங்கம் அமைந்திருந்தது. அங்கு ரவிக்குமார் ஆசைப்பட்ட படி ஆண்களும், பெண்களும் காமக் களியாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டீருக்கவில்லை. புத்தகங்கள் படித்துக் கொண்டும், வாவியில் நீந்திக் கொண்டும், குடும்பமாக குழைந்தைகளுடன் விளையாடியும் உணவருந்திக் கொண்டும் இருந்தனர். உண்மையான வாழ்வினை விளங்கிக் கொண்ட பகுத்தறிவாளன் என்ற படியால் தான் பெரியார் அங்கே சென்றிருந்தார். முன்னோக்கிய சிந்தனையினை கொண்டிருந்ததனால் தான் ஒரு கலகக்காரனாக, புரட்சியாளனாக இன்றைய தலைமுறைக்கும் ராமசாமி என்ற அந்தக் கிழவனின் சிந்தனைகள் தொடருகின்றன. பெரியாரை கேள்வி கேட்கும் ரவிக்குமார் மானாட மார்பாடும் கருணாநிதியுடனும், காங்கிரஸ் கள்வர்களுடனும் கூட்டு வைத்திருக்கின்றார்.

அறையும் பறையொலியோடு,  குமிழ்சூழ் வெளிச்சத்தில் நல்லூர் கந்தசாமிக்கு திருவிழா நடந்தது. தேர்த் திருவிழாவின் போது சுவாமி எழுந்தருளப் பண்ணும் உருளையிலே,  வைரவரிற்கு ஆடு பலியிட்டு தேரினை இழுத்தார்கள் என யாழ்ப்பாண சைவ வேளாளர்களின் தத்துவசிரியரும், மதியுரையாளருமான நல்லூர் கந்தப்பிள்ளை ஆறுமுகம் கவலைப்பட்டுக் கொள்ளுகிறார். வேதாகம முறைகள் பின்பற்றப்படவில்லை என்னும் கவலை அவரிற்கு. தமிழ் வழிபாட்டின் தொடர்ச்சி இருந்திருக்கின்றது என்பதனை இது காட்டுகின்றது. ஆனால் இக் கோவில் இன்று முற்று முழுவதுமாக பிராமணமயமாகி விட்டது. இதைப் பற்றி யாழ் நகர அம்மா கவலைப்படவில்லை. தமிழர்களின் கடவுளிற்கு சமஸ்கிருதத்திலே பிராமணர்கள் பூசை செய்வது ஏன் என்று கேள்வி கேட்கவில்லை.

கொலைகாரன் மகிந்தாவின் தமிழ் கூட்டணிகளின் கட்சியைச் சேர்ந்த மாதாவிற்கு தமிழ் பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்படுவது தெரியவில்லை. தமிழ் மக்களின் வாழ்வினை,  சிந்தனை முறையினை சீரழிப்பதற்காக போதைமருந்துகள், மது வகைகள்,  நீலப் படங்கள் அரசினால் வெள்ளமாக பாயவிடப்படுவது தெரியவில்லை. தமிழ் பெண்களின் பாவாடை எவ்வளவு உயரத்தில் இருக்க வேண்டும் என்பதே அவரது கவலையாக இருக்கின்றது.

யாழ்நகர ஆச்சி  இந்த வேட்டி,  சால்வை, பாவாடை- தாவணி பண்பாட்டை ஒவ்வொரு நாள் வாழ்விலும் கொண்டு வரலாம். அவரின் கடசியின் தலைவர் அடுத்த முறை வெளிநாட்டிற்கு வரும் போது வேட்டியை கட்டிக் கொண்டு சந்தனம் பூசிய மார்பிலே சால்வையை கடடிக் கொண்டு தமிழனின் பண்பாட்டினை தரணியெங்கனும் பரவிடலாம். குறிப்பாக குளிர் காலத்தில் பண்பாட்டினைப் பரப்ப வந்தால் இன்னும் மிக நல்லது.