Mon06142021

Last updateSun, 19 Apr 2020 8am

கீற்று இணையம் கண்டு பிடித்த கோயில் கட்டும் புரட்சியாளர்கள்

கீற்று இணையத் தளத்தில் மினர்வா என்பவரால் எழுதப்பட்ட ஆதிக்க சாதியினரின் புலித் தீண்டாமை என்ற கட்டுரையை வாசித்த போது பெரியார் சொன்ன பின்பொறியால் சிரிக்க வேண்டிய விடயங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது. மிகவும் தவறான தகவல்களுடனும் திசை திருப்பல்களுடனும் இக் கட்டுரை எழுதப்பட்டு இருக்கிறது.

 

தவறான தகவல்களிற்கு  உதாரணமாக இலங்கையில் கரையார்கள் தீண்டத்தகாத சாதியினர் என்று எழுதியிருப்பதை பார்க்கலாம். இலங்கையில் மீன் பிடிச்சமுதாயங்களான கரையார், திமிலர், முக்குவர், பரம்பர், பரவர்கள் சாதியமைப்பின் இடைநிலையில் உள்ளார்கள். இலங்கையின் சாதியமைப்பில் மிகக் கீழ் நிலையில் பஞ்சமர்கள் எனப்படும் பள்ளர், பறையர், நளவர், வண்ணார்,அம்பட்டர் என்பவர்களே அடங்குவர். பிரபாகரனின் வல்வெட்டித்துறையில் பணம் படைத்தவர்கள், உத்தியோகம் பார்ப்பவர்கள், கடத்தல் தொழில் செய்பவர்கள் தம்மை மேலோங்கி கரையார்கள் என்றும்; மீன் பிடிக்கும் கடற் தொழிலாளர்களை தம்மை விடக் கீழானவர்கள் என்றும் சொல்லிக் கொள்வார்கள். கீற்றின் தகவல் பிழைகளை சுட்டிக் காட்டவே இவைகளைக் குறிப்பிட்டேன். பிரபாகரன் எந்தச் சாதியில் பிறந்தார் என்பது தேவையில்லாத விடயம். பிரபாகரனினதும், புலிகளினதும் அரசியலும் நடைமுறைகளுமே இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள். புலிகளை சாதியடிப்படையில் கீற்று விளக்க முயல்வது மிகவும் ஆபத்தான போக்கு.

சோபாசக்தி, சுசீந்திரன் போன்ற வெள்ளாள புலியெதிர்ப்பாளர்கள் பிரபாகரனையும் புலிகளையும் எதிர்ப்பதற்கு சாதிவெறியே காரணம் என்று எழுதப்பட்டிருக்கின்றது. இவர்கள் புலிகளை எதிர்ப்பதற்கு சாதிவெறி தான் காரணம் என்ற கருத்தின் உண்மை, பொய் நமக்குத் தெரியாது. ஆனால் புலிகளை எதிர்ப்பவர்கள் எல்லோருமே சாதிவெறி காரணமாகவும், இலங்கையின் இனவெறி அரசிற்கு சார்பாகவும் தான் எதிர்க்கிறார்கள் என்றெரு மிகப் பெரும்,பொய்யை கொஞ்சமும் நேர்மையின்றி சொல்கின்றார். புலிகள் போராட்டத்தினை சீரழித்து, தமிழ் மக்களை பலி கொடுத்ததைப் பற்றி எந்தவிதமான கேள்விகளும் கேட்கக் கூடாது என்பது தான் அவரின் உண்மையான நோக்கமாகும்.

ஆதிகார வர்க்கத்தினர் எல்லாச் சாதிகளிலும், எல்லாச் சமயங்களிலும், எல்லா இனத்திலும் இருக்கின்றார்கள். கரையோரச் சிங்களவரான பண்டாரநாயக்கா, வண்ணார் குடியில் பிறந்த பிரேமதாஸா, இசை வேளாளரான கருணாநிதி, தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த மாயாவதி போன்றோரை உதாரணமாகக் காட்டலாம். சாதியமைப்பின் கொடுமைகளை இவர்கள் அனுபவித்திருப்பார்கள் என்ற போதிலும்; சாதி என்ற ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு இவர்கள் செய்த ஊழல்களை, வன்முறைளை, மக்கள் விரோதப் போக்குகளை நியாயப்படுத்துவது அயோக்கியத்தனத்தின் உச்சக்கட்டம்.

பிராமணர்களாலும், முன்னாள் மன்னர்களாலும் தமது மீட்பர் என்று கொண்டாடப்பட்ட, குலக்கல்வி திட்டம் என்ற சாதியடிப்படையில் கல்வி என்கின்ற கள்ளத் திட்டத்தை கொண்டு வந்த, காங்கிரஸின் வலதுசாரிப் போக்கு போதாது என்று சுதந்திராக் கட்சியை தொடங்கிய ராஜாஜியுடன் கூட்டு வைத்த போதும்,  காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி என்று கூட்டு வைத்து, மந்திரிப் பதவிகளை பெற்றுக் கொண்ட போதும்; இக் கட்சிகளின் உயர்சாதி தலைமைகளை கேள்வி கேட்காத கருணாநிதி, தமது ஆட்சிக்கு இவர்களால் ஆபத்து வரும் போதும், தனது ஊழல்கள் அம்பலப்படும் போதும் சூத்திரன் என்பதால் என்னை குறிவைக்கின்றார்கள் என்று புலம்புவார். ஜெயலலிதா, சுப்பிரமணியசுவாமி போன்ற உயர்சாதி வெறியர்கள் கருணாநிதியை எதிர்க்கிறார்கள் என்பதற்க்காக; கருணாநிதியை எதிர்ப்பவர்கள் எல்லோரும் சாதிவெறியினால் தான் எதிர்கிறார்களா?.

தொழிலாளர்களின் தொழிற்சங்க சந்தா பணத்தினாலும், தொழிலாளர்களின் போராட்டங்களை முதலாளிகளிற்கு காட்டிக் கொடுத்த பணத்தினாலும், பதவிகளாலும் பெரும் பணக்காரர்களான தொண்டைமான்கள் இடைநிலைக் சாதியை சேர்ந்தவர்களே. கோயிலும், கள்ளுக் கடையும் மட்டுமே திறக்க அனுமதி இருந்த ஆங்கிலேயர் காலத்து மலையக தோட்டக்காடுகளில்;  தொழிற்சங்கங்கள் அமைக்க போராடியவர் நடேசய்யர். கீற்றின் முடிவுகளின் படி தொண்டைமான்களை எதிர்ப்பவர்கள் சாதிவெறியர்கள். நடேசய்யரின் தொழிற்சங்க பணிகளை நினைவு கொள்பவர்கள் உயர்சாதி அபிமானிகள்.

விடுதலைப்புலிகள் ஈழத்தில் சாதியை ஒழித்து விட்டார்களாம். புலிகளது போராட்டம் வெறும் அரசியல் போராட்டம் மட்டுமல்லாது, சமுகப் போராட்டமும் தானாம் கீற்று எழுதுகிறது. புலிகள் சாதி பார்க்கவில்லை என்பது உண்மை தான். ஆனால் சாதி ஒழிப்பை, அதன் அடிப்படையான இந்து சமய மறுப்பை அவர்கள் என்றுமே செய்யவில்லை. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் பிராமணர்கள் சமஸ்கிரிதத்தில் பூசை செய்தனர். எந்தச் சாதியிலும் பிறந்தவர்கள் பூசை செய்யலாம், மக்களின் மொழியான தமிழில் தான் வழிபாடுகள் செய்ய வேண்டும் என்ற சீர்திருத்த சிந்தனைகள் கூட இவர்களிடம் என்றைக்குமே இருந்ததில்லை.

பிரபாகரன் உட்பட திருமணம்  செய்த எல்லாப் புலிகளும் சமய முறைப்படியே திருமணம் செய்தனர். யாராவது ஒரு புலி உறுப்பினரையோ, ஆதரவானவரையோ எந்த சமய சடங்குகளையும் எதிர்த்து நின்றவர் என்று  கீற்றினால் இனம் காட்ட முடியுமா?. புலிகளில் சாதி, சமயம் குறித்த எந்தவிதமான சிந்தனைகளும் இல்லாதது மட்டுமல்லாமல் சாதி, சமய மறுப்பிற்கும் தமிழீழத்திற்கும் என்ன தொடர்பு என்று ஒரு கேள்வி வேறு கேட்பார்கள் என்ற அளவில் தான் அவர்களது சமுதாயச் சிந்தனைகள் இருக்கின்றன.

புலம் பெயர்நாடுகளில் பெரும்பாலான கோவில்கள் கீற்று இனம் காட்டும் சழூகப் புரட்சியாளர்களான புலிகளால் தான் நடத்தப்படுகின்றன. இங்கும் அய்யரும், சமஸ்கிருதமும் தான். ழூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டிய நீங்கள் ஏன் கோவில் கட்டுகிறீர்கள் என்று வினவினால், நாங்கள் கோவில் கட்டாது விட்டால் வேறு யாராவது கோவில் கட்டி அந்தப் பணம் தனிப்பட்டவர்களின் கைகளிற்கு போய்விடும். அதனால் தான் நாங்கள் புதிய கோவில்களை கட்டியும்,  பழையவற்றை பொறுப்பெடுத்தும்  அந்தப் பணத்தை எடுக்கிறோம் என்கின்றனர்.

எனக்கு தள்ளாத வயதிலும்,  ழூத்திரச் சட்டியை கையில் பிடித்தக் கொண்டு சாதி இல்லை, சமயம் இல்லை, கடவுளை நம்புபவன் முட்டாள் என்று பிரச்சாரம் செய்து திரிந்த ஈரோட்டுக் கிழவனின் ஞாபகம் வந்தது. கீற்றுவின் கட்டுரையை படித்தால் அவன் எப்படிச் சிரிப்பான் என்று யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.

விஜயகுமாரன்

15/02/2011