Mon06212021

Last updateSun, 19 Apr 2020 8am

விட்டு விடுதலை ஆகி


ஒரு கம்யுனிஸ்ட்டு சாதி, மதம், மொழி கடந்தவன் அல்லது கடந்தவள். அவர்களிற்கு தேசங்கள் எல்லைக்கோடுகள் போட முடியாது. அவர்கள் சர்வதேசியவாதிகள். ஆர்ஜென்டினாவில் பிறந்து கியூபப்புரட்சியாளர்களுடன் தோள் சேர்த்து போராடி, புரட்சியின் வெற்றிக்கு பிறகு கிடைத்த பதவியை துச்சமென தூக்கி எறிந்து விட்டு பொலிவியாவின் போராளிகளுடன் சேர்ந்து போராடும் போது சி.ஜ.ஏ கொலையாளிகளினால் சித்திரவதைப்படுத்தப்பட்டு மரணமடைந்த தோழன் சேகுவராவின் வாழ்வு ஒரு கம்யுனிசப் போராளியின், சர்வதேச மனிதனின் வாழ்விற்கான எடுத்துக்காட்டு.

 

அப்படியில்லாமல் தன்னை கம்யுனிஸ்ட்டு என்று சொல்லிக்கொள்பவன் தான் பிறந்த சாதி, மதம், மொழியை தூக்கிப்பிடித்து கொள்வான் என்றால் அவன் கம்யுனிஸ்ட்டு இல்லை. அவன் வெள்ளாளனாகவோ, சைவனாகவோ, தமிழனாகவோ தான் இருக்க முடியுமே தவிர அவனோ, அவளோ இடதுசாரி இல்லை. ஒரு ஊசியின் காதிற்குள்ளே ஒட்டகம் நுழைந்தாலும் நுழையுமே தவிர பணக்காரனால் கடைசி வரைக்கும் சொர்க்கலோகம் போக முடியாது என்று பெத்தலேகத்து தேத்தண்ணி கடைகளிலே நின்று யேசு நியாயம் பிளந்தது மாதிரியோ அல்லது சோவின் மண்டையிலே மயிர் முளைச்சாலும் முளைக்குமே தவிர வெள்ளாளனாக தன்னை நினைப்பவன் மார்க்சிஸ்ட்டு ஆக முடியாது.

வாழ்நாள் முழுவதும் தலையிலே மலம் சுமந்தவர்கள், சேற்று வயல்களிலே நாற்று நட்டவர்கள், நெஞ்சு முழுக்க இரத்தச் சிராய்ப்புக்களுடன் பனையேறியவர்கள், ஊராரின் ஊத்தைகளை எல்லாம் தன் கையாலே துவைத்து போட்டவர்கள், சிக்குப்பிடித்த தலைகளை சீர்படுத்தி முடி வெட்டியவர்கள், குளிர்காற்றிலும் கடல்நீரின் உப்பிலும் ஊறி நின்று மீன் பிடித்தவர்களை எல்லாம் இந்த இந்துமதம் என்னும் குப்பைத்தொட்டி கேவலப்படுத்தும் போது, அடக்கி ஒடுக்கும் போது அவற்றிற்கு எதிரான போராட்டங்கள் அவசியமாகின்றன. அவை ஒரு வர்க்கப்பார்வை கொண்ட கம்யுனிஸ்ட்டுக்கட்சியினாலே முன்னெடுக்கும் போது மட்டுமே சமுதாய விடுதலையுடன் பொருளாதார விடுதலையையும் நோக்கி முன் நகர முடியும். தெலுங்கானா புரட்சி, மத்திய இந்தியாவில் பழங்குடியினருடன் இணைந்து மாவோயிஸ்ட்டுக்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் என்று எத்தனையோ எடுத்துக்காட்டுக்கள். சாதி மறுப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு என்பவற்றை முதன்மையாக வைத்து போராடிய பெரியார் அதன் அடுத்த கட்டத்தை உணர்ந்ததினால் தான் கம்யுனிஸ்ட்டு கட்சியின் சிங்காவேலனாருடன் சேர்ந்து கம்யுனிஸ்ட்டுகட்சி அறிக்கையை தமிழில் முதன்முதலில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

மக்கள் விரோதம், ஊழல், வெளிநாட்டு முதலாளிகளிற்கு நாட்டை விற்று விடுவது என்று எல்லாவற்றிலும் சிங்கள உயர்சாதி கொய்கம ஜெயவர்த்தனாவிற்கும், சலவை தொழிலாளர்களின் குடும்பத்தில் பிறந்த பிரேமதாசாவிற்கும் எந்தவிதமான வேறுபாடும் இல்லை. பார்ப்பனிய ஜெயலலிதாவின் ஆட்சி என்றால் என்ன சூத்திரரான கருணாநிதியின் ஆட்சி என்றால் என்ன விவசாயிகள் எலிக்கறி தான் உண்கிறார்கள், ஏழைப்பெண்கள் வேறு வழி இன்றி உடலை விற்கிறாரர்கள், தமிழ்நாட்டு கடல்தொழிலாளர்களை இலங்கை கடற்படை கேட்டுக் கேள்வி இல்லாமல் சுட்டுக்கொல்கிறது.

 

தோழன் சந்ததியாரை கொன்றவர்கள் வேறு இனத்தவர்கள் அல்ல. தோழன் மனோ மாஸ்டரை கொன்றவன் ஒரு தமிழ்த்தாயிற்கு பிறந்தவன் தான். ஆதிக்க வர்க்கம் சாதி, மதம், இனம் பார்த்து ஒடுக்குவதில்லை. அது முள்ளிவாய்க்காலில் தமிழனின் இரத்தம் குடித்தது. நீர்கொழும்பில் சிங்களத் தொழிலாளர்களின் மேல் பாய்ந்து கடித்தது. இன்று புத்தளத்தில் விலையேற்றத்தை எதிர்த்து போராடிய பொதுமக்களை கொல்கிறது. ஒடுக்கப்படும் மக்கள் ஒன்றுபடுவதன் மூலமே இந்த இரத்தக் காட்டேரிகளை ஒழிக்க முடியும்.


மார்க்கசிய மந்திரத்தால் மாங்காய் விழ வைக்க முடியுமா என்று கேட்கிறார்கள். ஜக்கிய கள்ளர்கள் சபையிலே மகிந்துவிற்கு ஆதரவாக சீனா, ரஸ்சியா, கியூபா வாக்களிக்கும் போது சில வாலுகள் கம்யுனிச நாடுகள் தமிழர்களிற்கு எதிரானவர்கள் என்று கத்துவார்கள். சீனா, ரஸ்சியா, கியூபாவை எல்லாம் கம்யுனிசநாடுகள் என்று எந்த மடையனும் சொல்ல மாட்டான். எந்த மடையன் என்ன கருணா, பிள்ளையான் கூட சொல்லமாட்டான்கள். அவர்கள் தெரியாமல் சொல்லுகிறார்கள், மன்னித்து விடலாம். ஆனால் இவர்கள் தெரிந்தே கல்லெறிகிறார்கள். மார்க்கசியம் சர்வரோக நிவாரணியோ அல்லது அயினோமோட்டோவோ அல்ல, சுவை இல்லாத சாப்பாட்டிற்கு சுவை கூட்ட. அது சமுகவிஞ்ஞானம், ஒடுக்கப்பட்ட மக்களின் போர்வாள்.

விஜயகுமாரன்

18/02/2012