Sun10022022

Last updateSun, 19 Apr 2020 8am

தலைவன் வரவுக்காக நாம் காத்திருக்கலாமா..!?


இலங்கைத் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் இறுதியாக, பாரிய அளவில் நடந்து முடிந்த புலிகளின் போராட்ட அனுபவங்களே, இங்கு ஆரம்ப விமர்சனமாகின்றது. அந்த வகையில், கடந்த கால புலிகளின் தமிழீழ விடுதலை என்ற ஆயுத படைபலத்தின் வீழ்ச்சிக்கான சூட்சுமங்களைப் புரிந்தும் – புரியாமலும், அவர்களைத் தூக்கிப் பிடிக்கின்ற அனைவரும், உங்களின் நம்பிக்கை – தேடல் – சிந்தனை – கருத்து – காத்திருத்தல் மீதான சில கேள்விகளை, உங்கள் மனதுக்குள்ளேயே எழுப்புங்கள். அப்போது, இந்தப் போராட்ட வீழ்ச்சியின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ள முடியும்.

இக் கருத்துக்கள் மூலமாக யாருக்கும், எதனையும் திணிப்பதல்ல இதன் அடிப்படை. ஆனாலும் எமது தமிழ்ச் சமூகத்தின்  ஆவல்களும் – தேடல்களும், ஓர் சிறிய வட்டத்துக்குள் சுழல்வதாகவே அல்லது நிறுத்தி நிற்பதாகவே தெரிகின்றது. அதாவது எங்களுக்கான ஒரு மேய்ப்பன் தானாக வருவானென, இத்தனை படிப்பினைகளுக்குப் பின்பாகவும், இன்றும் பலர் நம்புகின்றனர். இவர்கள் உண்மையான விடுதலைப் போராட்டம் பற்றிய தெளிவற்று, நடைபாதைக்கு தடையாக  முளைத்து வளர்ந்த புளியமரத்தை, துணிவோடு தறிக்கப் பயந்து, அதில் பேயை ஏற்றியது போல், பேரினவாதத்தை எதிர்க்கப் பயந்து, தமது அழிவுச் சமூகத்தின் பாதுகாப்புத் தேவைகருதி, தான் தோன்றிகளாக மக்களுக்கு ஏதோ படம் காட்டுகின்ற ஒரு சிலரை நம்பி, அவர்களை தமது அரசியல் தலைவராக்கும் வாழ்வியலை எப்போதும் ஏற்கின்ற நிலைக்கு பழக்கப்பட்டதனால், இந்த மக்களை ஏமாற்றும் வித்தைகளை தெரிந்து கொண்டோர், எமது தமிழுக்குள் பெரும்பான்மையான மக்களை, தொடர்ந்தும் ஏமாற்றிப் பிளைக்கின்றார்கள் என்பதே உண்மை.

இந்த வகையிலே தான் இலங்கைத் தமிழினத்தை, முல்லை நிலப்பரப்பில் கொன்று குவித்த சிங்களப் பேரினவாதம், இது தான் அனைத்துத் தமிழினத்தின் இறுதியென, நந்திக் கடலோரம் புலிகளின் போராட்டத்தை திசைமறித்தான். அதற்காக இந்தியக் கொள்ளைக் கும்பலான காங்கிரசும், மாவோவின் வரலாறுகளைச் சீர்குலைத்த சீனத்துத் திரிபுவாதிகளும், மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்ராலின் என அனைவரின் சிந்தனைகளையும் அழிவுக்குட்படுத்திய ரஷ்ய திரிபுவாதிகளும், அமெரிக்கப் பால்குடியான பாக்கிஸ்தானும், இன்னும் சிறிலங்காவின் குட்டிகளுக்கும் – புட்டிகளுக்குமாக, இலங்கைத் தமிழினத்தை ஆணிவேரோடு அழிக்க, உதவியாய் – உந்துகோலாய் இருந்த ஐரோப்பிய யூனியன் – அமெரிக்கா – யப்பான் – நோர்வே உட்பட இன்னும் அணிசேரா நாடுகளும் இருந்தன. இதற்கு இந்தச் சர்வதேசத்து அரசுகளின் (spin doctor – political advisors)அரசியல் ஆலோசகர்களை  தேடிப் பிடித்து, இலங்கைத் தமிழ் மக்களின் விடுதலைபற்றிய எதிர்க் கருத்துக்களை – பரப்புரைகளை அவர்களுக்கு வழங்கி, பெருமளவிலான துணைகளை சிறிலங்காவின் பேரினவாதம் சிறப்பாகவே தேடிக்கொண்டது எனலாம்.

இப்படியான அரசியல் பரப்புரைத் திட்டத்தினை, தனித் தமிழீழ விடுதலை என்ற கோசத்தை, உலகுக்கு முன் வைத்தவர்கள், போராட்டத்துக்கான நேர்மையுடன் அரசியல் பரப்புரை செய்தார்களா என்றால், இல்லை என்றே தெரிகிறது. மாறாக, புலம் பெயர்ந்த உலகு வாழ் தமிழர்களால், சுயமாக இயக்கப்பட்ட சங்கங்கள் – மத நிறுவனங்கள் – செய்தி ஊடகங்கள் – கருத்தாளர்கள் – எழுத்தாளர்கள் – கவிஞர்கள் – அரசியலாளர்கள் – கல்விமான்கள்…, என அனைவரையும் புலியாக்க முனைந்த வகையில், த.ஈ.வி.புலிகள் என்ற பெயருக்காக – ஊருக்காக – தலைமையின் உறவுக்காக வால் பிடித்தோர், அரசியல் என்றால் என்னவென்று புரியாதோரின் (வக்கற்ற) சண்டித்தனப் போக்குகளாலும், பொலிஸ் வேலைகள் பார்த்த வகையிலும், தமக்கு அடியாட்கள் தேவையென்று கருதி, இந்தப் புலம் பெயர் மண்ணிலே வாழ்கின்ற பல்லினச் சமூகங்கள் வெறுக்கின்ற வகையில், தமது சொந்தப் பிள்ளைகளையே சமூக விரோதிகளாய் வளர்த்திருக்கின்ற நிலையை நாம் பல இடங்களிலும் பார்க்கின்றோம்.

இந்த நிலையில் தான், சர்வதேச சதுரங்க அரசியலுக்குள் சிக்கி, சின்னஞ்சிறிய முள்ளிவாய்க்காலில் செத்துப் போச்சு புலித்தலைமை. அதற்குக் காரணமாக உலகுசார் சூக்கும அரசியலைப் புரிந்துகொள்வதில், தமிழீழத் துண்டுவெட்டப் போராடிய எவருமே, சிறப்புமிகு சமூக விடுதலைக்கான அரசியலை வெறுத்தொதுக்கி, அதன் மீது மக்களுக்கு களங்கம் கற்பித்த, ஆயுதமே தமது வேதமென்ற, அவர்களின் அடிப்படைப் போர்க் கட்டுமானத்தின் பற்றாகும். இதனால், இலங்கையின் அனைத்துச் சமூகக் கட்டமைப்பிலும் இருக்கின்ற வர்க்க – சாதிய – பிரதேசவாதச் சமச்சீருக்கான கல்வி – பொருளாதார – அரசியல் முன்னெடுப்புகளில் மாற்றம் காணாமையும், சர்வதேச சூழ்ச்சிகளுக்கு இடையேயான அரசியற் போக்கினைக் கண்டறியாத தொக்கு நிலையும், ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான போராளிகளாக, அரசியல் அறிவுக்குள்ளால் தங்களை மாற்ற முயலாது, தொடர்ந்தும் ‘சர்வதேசக் குற்றவாளிகள்’ என்ற பட்டத்தினைப் பலமுறை பெற்றதுடன், அதற்கும் அப்பால், அவர்களுக்கு ‘சர்வதேசப் பயங்கரவாதிகள்’  என்ற பட்டங்கள் கிடைத்தபோதெல்லாம் அவற்றினைத் தமது மகுடமாய் – சுய அரசியலாய் ஏற்றுவாறு, அப்படியே தொடர்ந்து செயற்பட்டு, மக்கள் – போராளிகள் – மாற்றுக் கருத்தாளர் மீதான சண்டித்தனத்தையும் – அழிப்புகளையும் நடாத்தினர். வேற்று இன – மத – கலாச்சார பண்பியல்சார் மக்களினை மனிதராகவே மதிக்காத, இந்துத் தமிழ்த் தேசியத்தை போற்றிவந்தனர். அதாவது..,

1.    கருத்தைக் கருத்தாகப் பார்க்காமல், மாற்றுக் கருத்துக் கூறியோரை வதைத்தும், சுட்டும் கொன்றமை.


2.    அறிவியலாளரை அழித்துத் தொலைத்து சமூகத்தின் புதிய தேடல்களை, தலைமைத்துவங்களை தோற்கடித்தமை.


3.    இளையோரைச் சிந்திக்கவிடாது ஏமலாந்திகளாக்கி, அவர்களது உடலில் குண்டுகட்டிக் கொன்று தொலைத்தமை.


4.    உள்முரண்பாடுகளை துவக்கு முனையில் தீர்த்துக்கட்டியமை.


5.    இவர்களைவிட்டு பிரிந்து போனோர்களை மட்டுமல்லாது, அவர்களின் குடும்பங்களையும் கொலை செய்து பழிவாங்கியமை.


6.    பணப் பங்களிப்பாளர்கள் – அல்லாதோர் என பதிவு இலக்கங்கள் வழங்கிப் பழிவாங்கியமை.


7.    அன்றாடம் வாழ வழியில்லாத சிறு உழைப்பாளிகளிடமுங்கூட வரி அறவிட்டமை.


8.    ஆழிப்பேரலை அனர்த்தங்களால் சீரழிந்த மக்களுக்கென, புலம்பெயர் மக்களால் சேர்த்துக் கொடுத்த நிதித் திரட்டுக்களில் மாபெரும் ஊழல் செய்தமை.


9.    தாங்கள் பயங்கரவாதத் தவறுகளைப் புரிந்தவாறே, மக்களின் சிறிய தவறுகளுக்கும், அவைக்கான அர்த்தமற்றோருக்கும், சமூகச் சீர்திருத்தங்கள் என ஏதோ சட்டங்களால் தண்டனைகள் வழங்கியமை.


10.    தங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக, சமூகச் சீரழிவு என்ற பொதுக் குற்றங்களைச் சுமத்தி, தண்டனை வழங்கிப் பழிவாங்கியமை.


11.    தாங்கள் சார்ந்த மதத்தில் காணக்கூடிய மூடநம்பிக்கைகளை – ஒடுக்குமுறைகளை களையாது, அவற்றை சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு போற்றி வந்தமை.


12.    பணமும் – ஆயுத பலமும் – தாக்குதல் தந்திரமும் – குண்டுகள் சுமந்து தங்களை வெடிக்கும் இளம் போராளிகளும், தங்களிடம் மிகையாக இருக்கென்ற மனிதாபிமானமற்ற திமிர்த்தனப் போக்குகளை மட்டும், உலகுக்கு துல்லியமாக வெளிப்படுத்தியமை.


13.    அதிசிறந்த – மிகப்பயங்கரமான – அறிவாற்றல் மிக்க – உலகப் போராட்ட இயக்கங்களிலேயே முதன்மையான – யாராலும் அழிக்கவோ, நெருங்கவோ முடியாத – பன்முகப்படுத்தப்பட்ட இராணுவ கட்டமைப்புகளைக் கொண்ட அமைப்பு என, சர்வதேசம் இவர்களைக் கூறிக் குசியேத்தி, சர்வதேசத்தின் வல்லாண்மை அரசியல் வலைக்குள் இவர்களை மாட்டிய வேளைகளைப் புரியாத அசமந்தப் போக்குடன் இருந்தமை.


14.    தமிழீழம் தவிர்ந்த வேறு எந்தவித தீர்வுத் திட்டங்களையும் ஏற்றுக்கொள்ளாமை.


15.    வெளிநாட்டினர் எமது மண்ணுக்கு வந்து, எம்மை அடிமையாக்கி காலனித்துவம் செய்தமைக்கு முன்பும், பின்பு அவர்கள் எமது மண்ணை விட்டு வெளியேறி, தங்களின் சொந்த நாடுகளில் இருந்தவாறே, எமது மக்களில் தமக்கான சிலரைத் தெரிவுசெய்து, எம்மவர்கள் மூலமாகவே எமது வளங்களைச் சுரண்டுகின்ற நவகாலனித்துவ அமைப்புக்குள்ளும், மற்றும் அமெரிக்கா – இந்தியா – சீனா – ஜப்பான் – ஐரோப்பிய ஒன்றியத்தின் விருப்புகளுக்கு அமைய, எமது நாட்டின் அரசியல் வாதிகள் முதல் – கடந்தகால ஆயுதப் போராட்ட தலைமைகள் வரை, சொந்த மக்களை ஏய்த்து, தங்களுக்கான இருப்புகளை காத்த தன்மைகளை நாம் நன்கு உணரவேண்டும். இதற்குள் அமைந்ததான.., ஒரே பாசறையில் ஒன்றாக வளர்ந்தோர் மீது பாரிய பழிகளைச் சுமத்தி, வதைகள் செய்து, மரண தண்டனை வழங்கி கொன்று தொலைத்தமையும், சொந்தப் பிறப்புகளான மாற்றுக் கருத்தாளரை – போராளிகளை துவம்சம் செய்தமையும், அதே பாசறையில் பொறுப்புகளுடன் செயற்பட்டவாறே, எந்தவித விமர்சனங்களுமின்றி, பேரினவாத எதிரியுடன் உடன்பட்டு, தமது தலைமையை காட்டிக் கொடுத்தமையும், இன்னும் சாதிய – மத – சமூக – பிரதேச பிரிவினைகளை, தமது இருப்புகளுக்காக பாவித்தமையென, இவை இப்படியே நீண்டு செல்லும்.


16.    தீவிரமாக நடக்கும் ஒரு போராட்ட காலத்தில் ஜனநாயகத்தினை முழுமையாக எதிர்பார்க்க முடியாதுதான். ஆனாலோ பேரின வாதத்தின் தமிழின அழிப்பினை விடவும் புலிகள், மாற்றுக் கருத்துக்கொண்ட இயக்கங்களை அடக்கி – ஒடுக்கி – சுட்டெரித்து – அழித்த பாசிசத்தினை எந்த மக்களுக்கான ஜனநாயகத்தில் வைத்துப் பார்ப்பது.


17.    மக்களின் – கருத்தாளரின் கோரிக்கைகளை இறுதிவரை ஏற்காமலே, எருமை முதுகில் மழை பெய்ததுபோல, அவர்களை போர்நிலையின் பகடைக்காய்களாக மட்டுமே நகர்த்தப் பாவித்தமை.


இப்படி எத்தனையோ விடையங்களை அடுக்கிச் செல்லலாம். புலிகளின் போராட்டம் என்பது எந்த வகையான அடிப்படையில் ஆரம்பித்ததோ, அதேவகை அழிவாலேயே முடிந்திருக்கின்றது. அதாவது வினை விதைத்தவன் அதனையே அறுப்பான் என்பது இதைத்தான் எனலாம்.


முக்கியமாக, தமிழீழ விடுதலைப் புலிகளாகிய எமது போராட்ட வடிவங்கள் பற்றியும் – எம்மை நம்பிய அனைத்து மக்களின் எதிர்காலம் பற்றியும், எதுவித தயவு தாட்சண்யங்களும் இன்றி விமர்சியுங்கள், என ஒரு சுயாதீன ஆய்வுக் குழுவினை அமைக்க அல்லது அப்படியொன்றை ஏற்கும் மனோநிலை புலித்தலைமையிடம் காணப்பட்டதா?


மாறாக, புலிகளுக்குப் பின்னாலிருந்து செயற்பட்ட அந்நிய உளவு நிறுவனங்களே, இன்று புலித் தலைமையை அழித்தமை என்பது அனைவரின் நேரடிப் பார்வையாகும். இதிலும் புலிகளோடு தந்திரோபாயச் செய்திகளைப் பரிமாறி, அந்தப் போராளிகளை வஞ்சகமாக அழித்து, பெருந்தொகையான தமிழ் மக்களைப் படுகொலை செய்ததும், அப்படிச் செய்;த வகைக்கு இடம் கொடுத்த புலித் தலையினால், இலங்கை சார்ந்த தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, அனைத்துலக ஒடுக்கப்பட்ட பல்லின மக்களின் எதிர்பார்ப்புகள் – அபிலாசைகள் யாவும், அரசியல் ரீதியாக அந்நியப்படுத்தப்பட்டு சிதைக்கப்பட்டுள்ள நிலையும் உள்ளது. இவை அனைத்தும் ஒரு முப்பது வருட அடைகாப்பின் முட்டை பொரிப்பிலே..!? முள்ளிவாய்க்கால் முட்டுச் சந்தில் முடக்கி அழிக்கப்பட்டிருக்கின்றது.
இனி நாம் என்ன செய்யவேண்டும்..?


இப்படியான தலைவன் வருகைக்காக மீண்டும் நாம் காத்திருக்கலாமா..?
இலங்கைவாழ் தேசிய இனங்களின் ஜனநாயக வாழ்வுக்கான விடுதலைக்காக, நாம் அனைவரும் என்ன செய்யவேண்டும்..?

- மாணிக்கம்.

14/04/2011