Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

எங்களை வெளியில் அனுப்பும் வரை அரசில் இருந்து வெளியே​ற மாட்டோம்!

altமுஸ்லிம் காங்கிரஸ் என்பது அதிகாரத்துக்கு எதிரான சதிகார கட்சியல்ல. அரசுக்கு விசுவாசமான ஒரு பங்காளிக் கட்சி. பிடரியில் பிடித்து வெளியே தள்ளும்வரை அரசில் இருந்து கொண்டே சமுதாய நலனுக்காக நான் போராடிக்கொண்டே இருப்பேன். இவ்வாறு தெரிவித்தார் அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கண்டி மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் உரையாற்றிய போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார்.

மூவின மக்களும் கலந்துகொண்ட இங்கு அவர் மேலும் பேசுகையில்,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒரு சிறந்த அரசியல் இராஜதந்திரி, தெளிவான சிந்தனை கொண்டவர். சுயமாக சிந்தித்து செயலாற்றும் திறன் படைத்தவர். எனவே அவரது அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தும் நோக்கம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு இல்லை.

முஸ்லிம் காங்கிரஸ் என்பது அதிகாரத்துக்கு எதிரான சதிகார கட்சியல்ல. அரசுக்கு விசுவாசமான ஒரு பங்காளிக் கட்சி. உள்நாட்டு சக்திகளுக்கு உடந்தையாக இருந்தோ அல்லது சர்வதேச சதிகளின் பக்கம் சார்ந்திருந்தோ நாட்டைக் காட்டிக்கொடுத்து பலவீனப்படுத்த வேண்டிய அவசியம் எமது கட்சிக்கு இல்லை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வற்புறுத்தல்களுக்கு அடிபணிந்து கொள்கையை விட்டுக் கொடுக்கும் கட்சியோ தலைசாய்க்கும் கட்சியோ அல்ல.

பதின்மூன்றை பூதாகாரமாக்கி சிலர் பயமுறுத்த நினைக்கிறார்கள். இரு மாகாணங்களின் இணைப்பை மாகாண சபைகளால் மேற்கொள்ள முடியாது. பாராளுமன்றத்தின் அங்கீகாரம் அதற்கு அவசியம். பெரும்பான்மை இனத்தவரையே பெரும்பான்மையாகக் கொண்ட பாராளுமன்ற அதிகாரம் ஒருபோதும் அதற்கு இடமளிக்கப் போவதில்லை.

நாற்பது வருட கால அரசியல் அனுபவம் வாய்ந்த ஜனாதிபதியின் கைகளைப் பலப்படுத்துவதால் தான் சிறுபான்மை உரிமைகளைப் பேண வழி ஏற்படும். எவரின் தேவைக்காகவும், எவரின் கொந்தராத்துகளுக்காகவும், சதிகளுக்கும் பணிந்து நான் அரசைவிட்டு வெளியேறத் தயார் இல்லை.

பிடரியில் பிடித்து வெளியே தள்ளும்வரை அரசில் இருந்து கொண்டே சமுதாய நலனுக்காக நான் போராடிக்கொண்டே இருப்பேன்’ என்றார்.

--lankaviews