Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இலங்கை முஸ்லிம்கள் தேசிய இனப்பிரச்சினையும் – அடக்குமுறையும்: எம்.பௌசர்

faw-p 01இலங்கை முஸ்லிம்கள் மீதான இன, மத அடையாளங்கள் சார்ந்தநெருக்கடிகள் புதிதாக தோன்றிய ஒன்றல்ல. அப்படியானதொரு தோற்றப்பாட்டை உருவாக்கிக் கொள்வது அரசியல் பார்வை வழியில் இலகுவானதொன்றுமல்ல. காலம் காலமாய் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாதமும் அடக்குமுறைகளும் கட்டமைக்கப்பட்ட வடிவத்தில்தான் இருந்து வந்துள்ளது.

சிங்கள, தமிழ் இன முரண்பாடு தீவிரம் பெற்றதை அடுத்து முஸ்லிம்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அடக்கி வாசிக்கப்பட்டு வந்துள்ளது. சிங்கள தேசத்திற்கும் தமிழ் தேசத்திற் குமிடையிலான யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதும், அவ்வெற்றியின் இனத்துவப் பெருமையும் அரசியல் களிப்பும் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகிவிட்டது. இதன் வெளிப் பாடுதான் திட்டமிட்ட வகையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளாகும். இத்தகைய நிலை குறித்த அகமும் புறமுமான விடயங்களை மிகச் சுருக்கமாக பேசுவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

sl_populationஇலங்கையில் வாழ்கின்ற மொத்த முஸ்லிம் மக்களில்; மூன்றில் இரண்டு பகுதியினர், சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். மிகுதியான மூன்றில் ஒரு பகுதியினர் வடக்குக் கிழக்கில் வாழ்கின்றனர். வடக்குக் கிழக்கில் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம் கள் தமிழ் குறுந்தேசிய ஆயுதப்போராட்டக்காரர்களால் மிக மோசமாக ஒடுக்கப்பட்டு இனச் சுத்திகரிப்பு, இனப்படுகொலைகளை எதிர்கொண்டவர்களாகும். 2010ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து மொத்த முஸ்லிம்களில் மூன்றில் இரு பகுதியினர் சிங்கள ஆதிக்க சக்திகளால் மோசமான அச்சுறுத்தலையும் பாதுகாப்பின் மையையும் எதிர் கொள்கின்றனர். இப்பிரதேசங்களில் வாழ்கின்ற முஸ்லிம்களுள் பெரும்பான்மையானோருக்கு என்ன நடக்கிறது? இதன் உள்ளார்ந்த அடிக்கட்டுமாணங்கள் என்ன? இவற்றினை எப்படி எதிர் கொள்வது குறித்த திகைப்பும் கலக்கமும் ஏற்பட்டுள்ளது. இது இயல்பானதே, ஏனெனில் இவர்களில் பெரும்பான்மையானோர் நேரடியான இனத்துவ அடக்குமுறையின் வடிவத்தையும் அதன் கோர முகத்தையும் இதுவரை எதிர் கொண்டவர்கள் அல்ல. பெரும் பான்மையானோருக்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது. ஓட்டு மொத்தமாக இம்மக்கள் அச்சமும் நெருக்கடியுமிக்க சூழலை ஒவ்வொரு நாளும் எதிர்கொள்கின்றனர். இந்த நிலைமையை புரிந்து கொள்வதற்கு இதுவரை இலங்கையின் இனத்துவ அரசியல் வரலாறு பற்றிய பார்வை அவசியமாகிறது.

இந்த பிரச்சினையின் தன்மையானது இனத்துவ அரசியல் சார்ந்தது. ஒரு தேசிய இன மக்களின் இருப்போடும் வாழ்வோடும் சம்பந்தப்பட்டது. இது ஒரு அரசியல் பிரச்சினை. இந்த அடக்குமுறை வடிவத்தை கட்டிக்காப் பதிலும் அதனை தீவிரமாக்குவதிலும் இன்றைய இலங்கை அரசிற்கு முக்கிய பாத்திரம் இருக்கிறது. இலங்கை முஸ்லிம்களின் இன, மத, கலாசார, பொருளாதார அம்சங்களை வலுக் குறைப்பு செய்வதற்கும், சிங்கள பெரும்தேசியவாதத்தின் மேலாதிக்கத் தினை ஆழ வலுப்படுத்தி நிலை நிறுத்துவதனை இலக்காகக் கொண்டு அரசு காரியமாற்றுகிறது. இந்த உண் மையை விளங்கிக் கொள்ளாது இதன் உள்ளடக்கத்தை வெறும் உதிரிச்சம்ப வங்களாக குறைத்து மதிப்பிடுவதானது பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பைத் தராது.

சிறுபான்மை தேசிய இனங்கள் மீது திட்டமிட்ட வகையில் ஒவ்வொரு கால கட்டத்திலும் இனம் சார்ந்தும் மதம் சார்ந்தும் பொருளாதார நலன் சார்ந்தும் பேரினவாதிகள் ஒரு தொடர்ச் சியான அரசியல் குரோதத்தையும் அடக்கி ஒடுக்குதலுடனான அச்சுறுத்தல் களையும் மேற்கொண்டு வந்திருக்கின்றனர். இந்த செய்கையின் பின்னால் சிங்கள மக்களின் நலனும் பாதுகாப்பும்; தேசப்பற்றும் உள்ளது என சிங்கள மக்களுக்குள் அர்த்தம் கற்பித்து வந்திருக்கின்றனர். இப்போது முஸ்லிம்கள் மீதான அடக்குமுறையை தீவிரப்படுத் தும் நேரம். சிங்கள மக்களுக்குள் இந்த செய்தியையே ஆளும் அரசும், அதன் கருத்தியல் நிறுவனங்களும் கொண்டு செல்கின்றன. இதில் கணிசமான வெற்றியையும் அது கண்டுவருகிறது.

இலங்கை முஸ்லிம்கள்

மொத்த சனத்தொகையில் மூன்றாவது இன எண்ணிக்கையினரான முஸ்லிம்கள், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்றனர். அம்பாறை, திருக்கோண மலை போன்ற இரு மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களில் சிறு பான்மையினராக காணப்படுகின்றனர்.

மாவட்டமொத்த சனத்தொகையில் இரண்டாவது இனப் பெரும்பான்மையினராக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மன்னார், மட்டக் களப்பு, குருநாகல், புத்தளம், அனுராதபுரம், பொலநறுவை, கேகாலை ஆகிய 14 மாவட்டங்களிலும், மாவட்ட மொத்த சனத் தொகையில் மூன்றாவது இனப் பெரும்பான்மையினராக மாத்தளை, யாழ்ப்பாணம், வவுனியா, பதுளை மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களிலும், மொத்த சனத்தொகையில் நான்காவது இனமாக, நுவரெலியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, இரத்தினபுரி போன்ற 4 மாவட்டங்களிலும் வாழ்கின்றனர்.

மாவட்ட அடிப்படையில் இப்படி நோக்கினாலும் கூட, ஒவ்வொரு மாவட்டத்தின் மொத்த சனத்தொகை யில் மிகச் சிறுபான்மையினராகவே முஸ்லிம்கள் வாழ்கின்றனர். 10 சத வீதத்திற்கு மேல் முஸ்லிம்கள் வாழும் மாவட்டங்களாக மட்டக்களப்பு (25.48), புத்தளம் (19.32), மன்னார் (16.24), கண்டி (13.95), கொழும்பு (10.50) ஆகிய 5 மாவட்டங்களே உள்ளன. 5 வீதத்திற்கும் 10 வீதத்திற்கும் இடையில் முஸ்லிம்கள் வாழும் மாவட்டங்களாக களுத்துறை (9.22), மாத்தளை (9.14), அனுராதபுரம் (8.20), பொலன்நறுவை (7.20), குருணாகல் (7.05), கேகாலை (6.92), வவுனியா (6.82), பதுளை (5.65) ஆகிய மாவட்டங்களே உள்ளன. மிகுதி யான மாவட்டங்களான கம்பஹா (4.16), காலி (3.64), மாத்தறை (3.12), நுவரெலியா (2.46), மொனராகல (2.13) ரத்தினபுரி (1.99), முல்லைத்தீவு (1.91), ஹம்பாந்தோட்டை (1.09), கிளிநொச்சி (.6), யாழ்ப்பாணம் (0.36) உள்ளனர். (பார்க்க அட்டவனை I a,b)

நிலத்தொடர்பற்றும் சிதறியும் பெரிய, சிறிய நகரங்களிலும் கிராமங்களிலும் வாழ்கின்ற முஸ்லிம்கள் (ஓரளவு கிழக்கு மாகாணம் தவிர) ஏனைய மாவட்டங்களில் சிங்கள, தமிழ் மக்க ளின் குடியிருப்புக்கள் சூழவே தமது வாழ்விடங்கள், தொழில் துறைகளைக் கொண்டிருக்கின்றனர். விகிதாசார தேர்தல் முறையின் ஊடாக தமக்கான பாராளுமன்ற அரசியல் பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய மாவட்டங்களாக அம்பாறை, மட்டக்களப்பு, திருக்கோணாமலை, மன்னார், வவுனியா, கொழும்பு, கண்டி, கேகாலை, களுத்துறை, இரத்தினபுரி, கம்பஹா ஆகிய மாவட்டங்களே இருக்கின்றன. (இரத்தினபுரி, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் இம்முறை பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை)

இலங்கை முஸ்லிம்களை ஒரு வர்த்தக சமூகமாகவும் சுரண்டல் சமூகமாகவும் காட்டும் பிரச்சாரப் போக்கு தொடர்ச் சியாக நீடித்து வருகிறது. இலங்கையின் பெரும் முதலீட்டு, வாணிபத்துறையில் முஸ்லிம்களின் சதவீதம் இரு வீதத்திற்கும் குறைந்ததே. குறிப்பிட்டு சொல்லத்தக்க ஒரு சில தேசிய முதலீட்டு வாணிப நிறுவனங்களை வைத்துக் கொண்டு முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அளவிடுவது மிகத் தவறான ஒரு கற்பிதமாகும்.

சிறு வாணிபமும் விவசாயமும் அரச உத்தியோகமும் வெளிநாட்டு வேலைவா ய்ப்பும் கடற்தொழிலுமே முஸ்லிம்களின் வருவாய்த் துறைகளாகும். இலங்கையின் மொத்த சனத்தொகையில் 9.22 வீதத்தினைக் கொண்ட முஸ்லிம்கள் தமக்கே உரித்தான பங்கைத்தானும் மேற்கண்ட துறைகளில் இன்னும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. மத்திய கிழக்கு நாடுகளுக்கான வேலைவாய்ப்பில் மட்டுமே அவர்கள் இந்த வாய்ப் பினைப் பெறுகின்றனர். விவசாயநிலம், தொழிலகம், முதலீட்டு உதவி, அரச தொழில் வாய்ப்பு, கல்வி வளம், பல்கலைக்கழக அனுமதி போன்றவற்றில் அரசு முஸ்லிம்களுக்கான உரிய இடத் தை வழங்கவில்லை. குடிவாழ்க்கைக் கான நிலத்தைப் பெறுவதில் மிக மோசமான நெருக்கடியை முஸ்லிம்கள் எதிர்கொள்கின்றனர். அரச நிலங்களை பகிர்ந்தளிப்பதில் முஸ்லிம்களுக்கு அதிக பாரபட்சம் காட்டப்படுகிறது. பெருகும் சனத் தொகைக்கேற்ப முஸ்லிம்கள் குடி யிருப்பு நிலத்தைப் பெறமுடியாது இறுக்கமான வாழ்விற்குள் தள்ளப்பட் டுள்ளனர்.

முஸ்லிம் மக்களுக்குள் உள்ள ஏற்றத் தாழ்வான வள வாய்ப்புகள், பெருளா தாரம், அவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் பிரதேசத்திற்கு பிரதே சம் வேறுபட்டது. பொருளாதார மேல் நிலையாக்கம் பெற்ற பிரிவினர் என்பது முஸ்லிம்களுக்குள் சொற்பமானவர்களே. 1980களில் ஏற்பட்ட உலகமயமாக்க லின் விளைவான “நடுத்தர வர்க்க” உருவாக்கம் இலங்கை முஸ்லிம்களுக் குள்ளும் தாக்கத்தை நிகழ்த்தியுள்ளது. நடுத்தரவர்க்க நிலைக்கு கீழ் வாழும் அடித்தட்டு மக்களை பெரும்பான்மையானதாகக் கொண்ட சமூகம்தான் இலங்கை முஸ்லிம்கள். உலகமயமாக்கல் சூழலில்; நடுத்தர வர்க்கமாகும் பொருளாதார இலக்கை அடைந்து கொள்ள பெருமளவிலானோர் ஈடுபாடும் ஆர்வமும் காட்டுவது வெளிப்படையானது. போட்டா போட்டியான பொருளாதாரச் சூழலும் அடையாள அரசியலும் நிலைமையை சிக்கலாக்கு வதில் பெரும் பங்கினை வகிக்கிறது.

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள்

வடக்கு கிழக்கிற்கு வெளியே முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் 2011ம் ஆண்டிலிருந்து தீவிரமடைந்து வருகிறது. மத அடையாளங்களை குறிவைத்தும், வணிக நிறுவனங் களைக் குறிவைத்தும் குடியிருப்பு பிரதேசங்களைக் குறிவைத்தும் இத்தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் தொடர் கின்றன. (பார்க்க அட்டவனை II a,b,c) மத, கலாசார அடையாளம், பொருளாதாரம், கல்விவாய்ப்பு, குடிப்பரம்பல், குடியிருப்புகள் என்பன முஸ்லிம்களுக்கு எதிரான ஆதிக்க சக்திகளின் நோக்காக இருக்கின்றன. இவ் அம் சங்கள் மீதான எதிர்ப்புணர்வும், அடக்கு முறையும், அச்சுறுத்தலும் எந்தளவிற்கு ஒரு இனக் குழுமத்தின் சுயா தீனத்தையும் அதன் இயல்பான இருப்பையும் பாதிக்கும் என்பது நம் எல்லோரும் அறிந்ததே.

புனித பிரதேசங்களின் பெயரால் நீண்டகால ஸ்தாபிதத்தைக் கொண்ட பள்ளிவாசல்களை அகற்றுதல், சுவீகரித்தல், பாங்கு ஒலிப்பதை தடைசெய்தல், கலாசார ஆடை அணியும் முஸ்லிம் பெண்களை, ஆண்களை அச்சுறுத்துதல், அவற்றினை அணியக்கூடாது என நிர்ப் பந்தித்தல், முஸ்லிம் வர்த்தக நிறுவனங்களை புறக்க ணித்தல், வர்த்தக இலக்குகள் மீது தாக்குதல் நடாத்துதல், சூறையாடுதல், தீவைத்தல், முஸ்லிம்களுக்குள் பயங்கர வாதம், அடிப்படைவாதம் தலைதூக்குகிறது என பிரச்சாரப்படுத்துதல், எச்சரித்தல், முஸ்லிம்கள் மீது காழ்ப்பையும், விரோதத்தையும் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக ஆர்ப்பாட்ட பேரணிகளையும், பொதுக் கூட்டங்களையும் மாநாடுகளையும் நடாத்துதல், இத்த கைய பிரச்சாரங்களுக்கு ஊடகங்களைப் பாவித்தல், முஸ்லிம்களின் பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து அம் மக்களை வெளியேறுமாறு எச்சரித்தல் என நிலைமைகள் தொடர்கின்றன. 2011ம் ஆண்டிலிருந்து இதுவரை 100க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதை எம்மால் திரட்டப்பட்ட ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

incidentsColombo Telegraph, Secretariat For Muslim (SFM) தகவல்களை முன்வைத்து கடந்த ஏப்ரல் மாதம் நடாத்தப்பட்ட (2013 ஜனவரி தொடக்கம் மார்ச் வரையான சம்பவங்கள்) ஆய்வில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மட்டக் களப்பு, பதுளை, அனுராதபுரம், இரத்தினபுரி மாவட்டங் களில் முஸ்லிம்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அதிகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதை அவ்வாய்வு உறுதிப்படுத்து கிறது. அத்துடன் இந்த விடயங்கள், பொதுப் பேச்சுக்கள் (Public Speech) உடல் ரீதியான தாக்குதல்கள், எச்சரிக்கை விடுத்தல் தேசியரீதியான சுவரொட்டிப் பிரச்சாரம், ஊடக அறிக்கைகள், ஊடகப் பிரச்சாரம் என்பவற்றின் வழியே அதிகம் மேற்கொள்ளப்படுவதாகவும் இதன் பெறுபேறாக சிங்கள, முஸ்லிம் மக்களுக்கிடையிலான பிளவுகள் அதிகரித்திருப்பதாகவும், முஸ்லிம்கள் தொடர்பாக சிங்கள மக்களுக்குள் எதிர்ப்புணர்வுகள் வளர்வதாகவும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான வன்முறைகள், இஸ்லாம் மதத்திற்கு எதிரான தாக்குதலாகவும் வடிவம் கொள்வதாக அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மாற்றுக் கொள்கைகளுக்கான ஆய்வகம் கடந்த ஏப்ரல் ஆரம்பத்தில் நிகழ்த்திய கருத்துக் கணிப்பொன்றில் 1983 ஜூலை கலவரம் போன்று முஸ்லிம்களுக்கு எதிராக நாடளவிய ரீதியில் கலவரம் ஒன்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதை சுட்டிக் காட்டி உள்ளது.

தேசிய இனப்பிரச்சினை – இலங்கை அரசு

கடந்த பல தசாப்தங்களாக இலங்கை ஏகாதிபத்திய நாடுகளினதும் பல்தேசிய நிறுவனங்களினதும் நலன்களுக் குள்ளும் சுரண்டலுக்குள்ளும் சிக்குண்டு கிடக்கிறது. அந்நிய முதலீடுகளின் பெயரிலும், பிராந்திய நலன்களின் அரசியல் காரணமாகவும் இலங்கைக்குள் சமாதானமும் சகவாழ்வும் நிலவுவது குறித்த விடயத்தில், பெரும் சவால்கள் உள்ளன. யுத்த காலப்பகுதியில் நீடித்த இந்த நிலைமை யுத்தத்தின் பின்பும் தொடர்கிறது.

தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடு நீடிப்பதற்கும் அது தொடர்வதற்குமான முழுப்பொறுப்பையும் இதுவரையான இலங்கை அரசாங்கமும் சர்வதேச சக்திகளுமே பொறுப்பேற்க வேண்டும். தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாது நீடிப்பதற்கு, காலத்திற்கு காலம் வந்த இலங்கையின் சிங்கள அரசுத் தலைமைகள் பிரதான காரணமாக இருந்திருக்கின்றன.

சுதந்திரத்திற்கு பின்னான இலங்கையின் வரலாறே இனத்துவ மேலாதிக்கத்தினை பின்புலமாகக்கொண்ட வழியாகவே நகர்ந்துவந்துள்ளது. தேசிய இனப்பிரச்சினை என்பது சிங்கள, தமிழ் பிரச்சினையாகவும், 1985க்கு பின் வடக்கு, கிழக்கு பிராந்தியங்களில் தமிழ் முஸ்லிம் பிரச்சினையாகவுமே இதுவரை அடையாளப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இனப்பிரச்சினையின் பரிமாணமே நான்கு தேசிய இனங்கள் சம்பந்தப்பட்டதுதான்.

முஸ்லிம்களை முன்வைத்து வடக்கு கிழக்கில் நிலவிய தேசிய இனப்பிரச்சினையானது தமிழ், முஸ்லிம் பிரச்சினை மட்டுமன்று அது சிங்கள, முஸ்லிம் பிரச்சினையும்தான். இந்த இரண்டாவது விடயம், அன்று முதலாவது விடயத்தின் உடனடி விளைவால் மறைக்கப்பட்டிருந்தது. ஆளும் குழுமத்தால் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் அன்று மோசமாக பாதிக்கப்பட்டிருந்தனர். கிழக்கு மாகாண முஸ்லிம்கள் சிங்கள குடியேற்றத்தாலும் அரசின் மொழிக்கொள்கை தொடக்கம், அனைத்துவகைகளிலுமான பாராபட்சம் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தனர். இலங்கை ஆளும் குழுமத்தின் இரு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்ற கட்சிகளில் இம்மக்கள் நம்பிக்கை இழந்திருந்தனர். எம்.எச்.எம். அஷ்ரப் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தோற்றத்திற்கும் ஸ்தாபிதப் பலத்திற்கும் தமிழ் முஸ்லிம் பிரச்சினை, முரண்பாடு மட்டுமல்ல, முஸ்லிம்களிடையே ஏற்பட்டிருந்த சிங்கள ஆளும் குழுமத்தின் மீதான நம்பிக்கையீனமும், எதிர்ப்புணர்வும் காரணமாக இருந்திருக்கிறது. இன்றைய நிலைமையில் தேசிய இனப்பிரச்சினையானது முப்பரிமாணத்தின் வடிவத்தைப் பெருகிறது. போருக்குப் பின் மிக வெளிப்படையாக சிங்கள முஸ்லிம் முரண்பாடாக அது கூர்மையடைகிறது.

இலங்கையின் இன்றைய அரசிற்கு நாட்டிற்கு உள்ளும் வெளியேயும் எதிரிகள் தேவை. ஒரு சில தருணங்களில் அது அமெரிக்காவை, மேற்கை எதிர்ப்பதாக பாசாங்கு செய்யும். இதன் மூலம் அமெரிக்க எதிர்ப்பு நாடுகளின் ஆதரவை அது பெற்றுக்கொள்ளும். சீனாவைக் காட்டி இந்தியாவுடனும், இந்தியாவைக் காட்டி சீனாவுடனும் காய்களை நகர்த்தும். சர்வதேச தளத்தில் மட்டுமல்ல உள்நாட்டிலும் அரசு சொந்த மக்களையே எதிரிகள் போல்தான் நடாத்துகிறது. ஜனநாயக மறுப்பு, ஒரு குடும்பத்தின் சர்வதிகார ஆட்சி, ஊழல், அதிகார துஷ்பிரயோகம் என அது தன்னை வெளிப்படுத்தி நிற்கிறது. சிங்கள மக்கள் மத்தியில் உற்ற நண்பனாக தன்னைக் காட்டிக்கொண்டு அவர்கள் மத்தியில் நிலவு கின்ற அரசியல் சமூக பொருளாதாரப் பிரச்சினைக்கு தமிழர்களும், முஸ்லிம்களும் காரணமானவர்கள் என்ற தோற்றப்பாட்டை வளர்க்கிறது. சிங்கள மக்கள் சகல சௌபாக்கியமும் பெற்று வாழவில்லை. பெருமளவிலான ஏற்றத்தாழ்வுகளும் மிக வறிய பிரிவினரும் சிங்கள மக்களுக்குள் உள்ளனர். இவற்றிற்கு இதுவரையான ஆளும் சிங்கள அரசே காரணமாகும்.

இதனை மூடி மறைப்பதற்காகவும் சிங்கள மக்களுக்குள் எழும் அதிருப்திகளையும் எதிர்புணர்வுகளையும் திசை திருப்பவும் சிங்கள தமிழ் முரண்பாட்டை இதுவரை கையாண்டு வந்தது போல், தற்போது சிங்கள முஸ்லிம் முரண்பாட்டை ஏற்படுத்துகிறது. தமது அதிகாரத்தை நீடித்து, நீண்ட காலத்திற்கு தக்கவைப்பதற்காக இனவாதத்ததையும் மதத் தீவிரவாத்ததையும் மேலும் வளர்க் கிறது. அதனை ஊட்டி வளர்க்க பல கிளை நிறுவனங்களை உருவாக்கி போசித்தும் பாதுகாத்தும் வருகிறது. இத்தகைய பண்பு கொண்ட அரசு, இனங்களிடையே மதங்களிடையேயான முரண்பாட்டை தணிக்கும் என நம்புவது கானல் நீராகும். மேலும் மேலும் இந்த நெருக்கடி நிலை அதிகரிக்கவே அரசு துணை செய்யும்.

முள்ளிவாய்க்கால் வெற்றியின் பின், இலங்கையின் இன்றைய அரசு பெற்றுள்ள பண்பு மாற்றமானது மிக மிக ஆபத்தானது. சிங்கள தேசிய இனத்தை இறுகிய பேரினவாதமாகவும் பௌத்த மதத்தை தீவிரமதமாகவும் பண்பு மாற்றம் செய்து அதனை ஒரு கருத்தியல் கொள் கையாக முன்வைத்து இயங்குகிறது. இந்த விடயத்தில் முஸ்லிம்களுக்குள் தோன்றுகின்ற எதிர்ப்புணர்வு குறித்து அரசுத் தலைமைக்கு கிஞ்சித்தேனும் அக்கறையுமில்லை. ஏனெனில் அது முஸ்லிம்களில் தங்கியிருக்கின்ற ஒரு அரசும் இல்லை. அப்படிச் சொல்வதனை அது விரும்பக் கூடியதுமில்லை. இலங்கை தீவிர சிங்கள பௌத்தர்களின் நாடு, அதன் இலக்கும் கடமையும் சிங்கள நாட்டையும் பௌத்த மதத்தையும் பாதுகாப்பதேயாகும். அதற்கு மிகச் சரியான தேர்வு இன்றைய அரசுத் தலைமைதான் என்பதே சிங்கள மக்களுக்குச் சொல்லப்படும் தெளிவான செய்தியாகும்.protest-muslim-Sri-Lanka-Religious-Protest-.JPEG-05aed

முஸ்லிம்கள் செய்யவேண்டியது என்ன?

இந்த இக்கட்டான நிலைமையில் முஸ்லிம்கள் தமக்குள்ளும், தமக்கு வெளியேயும் ஆற்றவேண்டிய பணிகள் நிறையவே உள்ளன. இந்நிலையை எதிர் கொள்வதற்கு முஸ்லிம் மக்கள் ஒரு ‘அரசியல் சமூகமாக” மாறவேண்டியது முன் நிபந்தனையாகும். முஸ்லிம்களுக்குள் இந்த விடயங்களையிட்டு பரந்துபட்ட வகையில் ஆக்கபூர்வமான உரையாடல்கள் தொடங்கப்படுவது அவசியமானதாகும். சிவில் சமூகம் உறுதியான நிலைப்பாடுகளை எடுக்கவேண்டி உள்ளது. ஜனநாயக ரீதியாக வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. முஸ்லிம் மக்களுக்குள் உள்ள இயக்கக் கொள்கைகள் சார்ந்த மத நிறுவனங்களை ஐக்கியப் படுத்தவேண்டியுள்ளது. முஸ்லிம் அரசியல் தலைமைகளை செயலூக்கம் நோக்கி தள்ளவேண்டியுள்ளது. முஸ்லிம் மக்களை உணர்ச்சி சார்ந்த அரசியலிலிருந்து வெளியே எடுத்து உணர்வுபூர்வமானதும், ஜனநாயக ரீதியானதுமான தெளிவான அரசியல் களத்திற்கு இட்டுச்செல்ல வேண்டியுள்ளது.

புற ரீதியாக முஸ்லிம்கள், சிங்கள தமிழ் மக்கள் மத்தியில் இனவாதத்திற்கெதிராக வேலை செய்யவேண்டியுள்ளது. அம்மக்களை நோக்கி முஸ்லிம்கள் மீதான நம்பிக்கை யினைக் கட்டி எழுப்ப வேண்டியுள்ளது. அதற்கு முஸ்லிம் சமூகம் தன்னை சுயவிமர்சனம் செய்து தயாராக வேண்டியுள்ளது. பல இனங்களுடன், சமூகங்களுடன் கடந்த காலங்களில் பொதுவிடயங்களில் கூட்டிணைந்த வேலைத்திட்டங்களை பரந்துபட்ட வகையில் செய்யாமையும், அவர்களின் துன்பங்களில், பாதிப்புக்களில் ஒதுங்கியிருந்த போக்கும் முஸ்லிம்களை தனிமைப்படுத்துவதற்கு காரணமாக இருந்துள்ளது என்பதனை உணரும் முக்கியமான காலகட்டம் இது.

உண்மையில் 40 ஆண்டுகளுக்கு மேலான இலங்கைச் சமூகங்கள், மக்கள் இனவாதத்துக்குள் தள்ளப்பட்டு வந்திருக்கிறார்கள். தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிங்கள மக்களை இனவாதமயப்படுத்தி இந்த நெருக்கடிகளையும் தொடர்ச்சியான அரசியல் போக்கினையும் வளர்ப்பதே இதற்கு பின்னுள்ள சக்திகளின் வேலைத் திட்டமும் நிகழ்ச்சி நிரலுமாகும். இதனை எதிர்கொள் வதற்கான வழி சிங்கள தமிழ் மக்கள் மத்தியிலும், சிங்கள, தமிழ் முற்போக்காளர்கள் மத்தியிலும் முஸ்லிம்கள் இணைந்து வேலை செய்வதேயாகும்.

முடிவாக ஒடுக்குதலுக்குள்ளாகின்ற அனைத்து தேசிய இனங்கள், சமூகங்கள் தொடர்பிலான பிரச்சினைகள், நெருக்கடிகளில் ஈடுபாடும் அக்கறையுமற்று இருப்பதும், அவர்களது இருப்பு, நலன்கள் மீது முஸ்லிம்களின் கரிசனைக் குறைபாடும் புறக்கணிப்பும் மிகவும் பிற்போக்குத்தனமானது என்பதுடன் முஸ்லிம் மக்களை தனிமைப்படுத்தி அடக்குதலுக்குள்ளாக்குவதற்கு பெரும் வாய்ப்பாகவும் அமைந்துவிடும் என்பதையிட்டு ஆழ்ந்த கரிசனை கொள்ளவேண்டிய முக்கிய தருணம் இது.

நன்றி- http://samukanookku.net