Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

நான் உமர் காலித், ஆனால்..... தீவிரவாதியில்லை!

(ஜே என் யு - JNU மாணவர் சங்கமான DSU தலைவரான உமர் காலித், தீவிரவாத தொடர்புடையவர் எனக் குற்றம் சாட்டப்பட்டார். தேசத்துரோக குற்றச் சாட்டுக்கும் உள்ளானவர். மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். அவரது குடும்பத்திற்கு பல அச்சுறுத்தல் வந்த நிலையில், சரணடைவதற்கு முன்னால், JNU வில், ஜேஎன்யு மாணவர்களுக்காக அவர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்.)

கடந்த சில நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவ தோழர்களுக்கும், ஆசிரிய தோழர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த போராட்டம் ஐந்தாறு மாணவர்களுக்கான போராட்டம் கிடையாது. இன்று இந்த போராட்டம் நம் அனைவருக்குமான போராட்டமாகும். இந்த போராட்டம் இந்த ஒற்றை பல்கலைக்கழகத்தின் போராட்டம் மட்டுமல்ல, நாடெங்கிலும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் போராட்டமாகும். இது சமூகத்திற்கான போராட்டம் ஆகும். வருங்காலத்தில் நாம் எப்படியான சமூகத்தை படைக்க விரும்புகிறோம் என்பதற்கான போராட்டமாகும்.

கடந்த பத்து நாட்களாக என்னை பற்றி எனக்கே தெரியாத பல விசயங்களை என்னால் கேட்க முடிந்தது. நான் இரண்டு முறை பாகிஸ்தான் சென்று வந்ததாக கேள்விப்பட்டேன். என்னிடம் பாஸ்போர்ட் இல்லையென்றாலும், நான் பாகிஸ்தான் சென்று வந்ததாக அறிந்தேன். ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் சிறந்த அறிவாளிகள் என்றாலும், நான்தான் மாஸ்டர் மைண்ட் என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது. 18 பல்கலைக்கழகங்களில் நான் இந்த (அப்சல் குருவைத் தூக்கு தொடர்பான ஒருங்கிணைப்பு) நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க முயற்சி செய்தேனாம். எனக்கு இந்த அளவுக்கு ஆற்றல் உள்ளது என்று எனக்கே தெரியாது.

கடந்து இரண்டு மூன்று மாதங்களாகவே நான் இதற்கு திட்டமிட்டு வந்தேனாம் . கடந்த சில நாட்களில் மட்டும் 800 போன் கால்களை பேசியிருக்கிறேனாம். ஊடகங்களுக்கு இது குறித்து எந்த ஆதாரமும் தேவையில்லை. பொய்யென்றாலும் அதை உண்மை போல உறுதியாக சொல்கின்றன. காஷ்மீருக்கு, வளைகுடாவுக்கு என்று தொடர்ந்து சொல்கிறார்கள். ஒரு ஆதாரத்தையாவது காட்ட வேண்டாமா? அப்படி கால் செய்திருந்தால் ஒன்றும் நிகழப்போவதில்லை என்பது வேறு விசயம், ஆனால், செய்திருந்தால் ஒற்றை ஆதாரத்தையாவது காண்பிக்க வேண்டாமா? விசாரணையில்லாமல், ஆதாரமில்லாமல் எதை வேண்டுமானாலும் இவர்கள் சொல்வார்கள். அதாவது இவர்களுக்கு வெட்கம் என்பது வருவதேயில்லை. அவர்களுக்கு வெட்கம் வர வேண்டும் என்று எதிர்பார்த்தோமேயானால், நம்மை நாமே முட்டாள்களாக்குவதற்கு சமம்.

நம்மை தவறாக சித்தரிப்பதற்காகவே இந்த ஊடகங்கள் நடத்திய விசாரணை, அரசாங்க தரப்பிலிருந்து மொஹம்மதோடு எந்த தொடர்பும் இல்லை என்று வந்த பிறகும், மன்னிப்பு கேட்க வேண்டுமென்று இவர்களுக்கு தோன்றவே இல்லை. இப்படி மிகக்கேவலமாக சொல்லப்பட்ட இந்த பொய்களால், ஊடகங்கள் நாங்கள் அடங்கிவிடுவோம் என்று நினைத்தால், அது நடக்காது. ஆதிவாசிகள் என்றால் மாவோயிஸ்டுகள் என்பதும், இஸ்லாமியர் என்றால் தீவிரவாதிகள் என்பதும் என்ற தொடர் பரப்புரையில் அரசு இயந்திரமும், ஊடகமும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இப்படியான குற்றச்சாட்டுகளில் அகப்படுகிற அப்பாவிகளின் குரல் பல நேரம் வெளியில் கேட்பதில்லை. ஆனால், இந்த முறை தவறான இலக்கை அவர்கள் தேர்வு செய்து விட்டார்கள். ஜேஎன்யூ மாணவர்கள் இதற்கு சரியான பாடம் கற்பிப்பார்கள். ஒவ்வொரு ஊடகமும் இதற்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும் .

நான் என்னை பற்றி கவலைப்பட்டதில்லை. நீங்கள் ஆயிரக்கணக்கில் என்னோடு இருப்பீர்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால், என் சகோதரி மற்றும் தந்தையின் பேட்டிகளை படித்த பிறகுதான் எனக்கு பதட்டம் தொற்றிக் கொண்டது.

எனக்கு ஏராளமான சகோதரிகள் இருக்கிறார்கள், அவர்களையெல்லாம் சமூக வலைதளங்களின் வழியாகவும் மற்ற வழிகளிலும் வன்புணர்ந்துவிடுவோம் என்றும், அமிலம் ஊற்றி விடுவோம் என்றும், கொலை செய்து விடுவோம் என்றும் கேவலமான முறையில் தொடர்ந்து மிரட்டி வந்திருக்கின்றனர். பஜ்ரங் தள் கூட்டம் கந்தமாலில் கிருஸ்துவ சகோதரியை வன்புணர்ச்சிக்குள்ளாக்கிய போது பாரத் மாதா கி ஜெய் என்றுதான் முழக்கமிட்டார்கள்.தோழர் கண்ஹையாவின் அன்றைய உரையை நினைவுப்படுத்த விரும்புகிறேன். உங்கள் பாரத மாதாவில் எங்கள் அன்னையும், சகோதரியும் இல்லையென்றால், அதை எங்கள் பாரத மாதாவாக ஏற்றுக் கொள்ள முடியாது. இப்படி சொல்வதில் எங்களுக்கு எந்த வெட்கமும் இல்லை.

என் தந்தையிடம் விசாரணை என்ற பெயரில் அவரது பழைய செயல்பாடுகளை எடுத்து, அதை வைத்து என் மீது முத்திரை குத்த முயற்சி செய்கிறார்கள். அதாவது, எப்படியாவது குற்றம் சுமத்திவிட வேண்டும் என்ற முனைப்பு. சிலர் ஜீ நியூசில் இருக்கிறார்கள், டைம்ஸ் நவ்வில் ஒரு அண்ணன் இருக்கிறார், அவரின் பெயரை நான் இங்கே குறிப்பிட விரும்பவில்லை மேலும் சில ரிப்போர்ட்டர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஜேஎன்யூ மாணவர்கள் மீது இவ்வளவு வெறுப்பும், கோபமும் எங்கிருந்து வந்தது என்பது புரியவில்லை. இவ்வளவு வெறுப்பை எப்படி வந்தது?

என் மேல் நடந்த மீடியா விசாரணையை பற்றி ஒரு சிறிய விசயத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த வளாகத்தில் அரசியல் செய்து வருகிறேன். ஒரு கணம் கூட என்னை இஸ்லாமியனாக உணர்ந்தது கிடையாது. என்னை முஸ்லீமாக வெளிப்படுத்தியதும் கிடையாது. நான் புரிந்து கொண்டவரையில் சமூக ஒடுக்குமுறை என்பது இஸ்லாமியர்கள் மீதும் மட்டும் இல்லை, தலித்துகளின் மீதும், பழங்குடிகளின் மீதும் இருக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்து வரும் எங்களை போன்றவர்கள், உடனடி அடையாளத்திலிருந்து வெளிவந்து, அனைத்து பிரச்சினைகளையும் முழுமையாக பார்த்து புரிந்து கொள்ள வேண்டிய தேவையிருக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக இஸ்லாமியனாக எண்ணாத எனக்கு கடந்த பத்து நாளில்தான் நான் இஸ்லாமியன் என்று தோன்றியது. ரோஹித்தின் சொல்லில் கூற வேண்டுமானால், நான் என் உடனடி அடையாளத்தில் சுருக்கப்பட்டு இருக்கிறேன். என்னை பாகிஸ்தானின் ஏஜெண்ட் என்று சொல்கிறார்கள். நான் பாகிஸ்தான் கவிஞர் ஒருவரின் ஓரிரு வரிகளை இங்கே கூற ஆசைப்படுகிறேன்.

”இந்துஸ்தானும் எங்களது,
பாகிஸ்தானும் எங்களது,
இரு நாட்டின் மீது அமெரிக்காவின் கரம் இறுகியுள்ளது,
நீங்களோ அந்த கரம் பற்றிக் கொண்டு அலையும்
அமெரிக்காவின் தரகர்கள் ஆவீர்கள்”

தரகர் வேலையைத் தவிர ஒன்றுமே அறியாத இவர்கள், அரசாங்கம் என்ற பெயரில் அமர்ந்து கொண்டு, அமெரிக்காவின் காலை நக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் கனிம வளங்களை, இயற்கை வளங்களை, மனித வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்று வருகிறது. கல்வியை விற்கிறது. உலக வர்த்தக ஒப்பந்த மாநாட்டில் மண்டியிட்டு நிற்கிறது. இவர்கள்தான் தேசபக்தி என்றால் என்ன என்று எங்களுக்கு பாடம் எடுக்கிறார்கள்.அவர்கள் நம்மை தேசவிரோதிகள் என்கிறார்கள். உலக தேசவிரோதிகளே ஒன்று சேருங்கள். மக்களின் மீதான பிரியத்தில் ஊன்றி நின்று, மக்களின் உரிமைகளுக்காக போராடுங்கள். நமக்கு எல்லைகள் கிடையாது, கட்டுகள் கிடையாது. உலகெங்கிலும் இருக்கிற அரச ஆளும் வர்க்கத்திற்கு எதிராக திரள்வோம். இதுபோன்ற இழிவான உத்திகளால், அவர்கள் எம்மை அச்சுறுத்த முடியாது. எங்களை மெளமாக்க முடியாது.

தோழர்களே, உங்களுக்கு நான் ஆலோசனை கூற வேண்டிய தேவையில்லை. நாம் அஞ்ச வேண்டிய, பதட்டப்பட வேண்டிய தேவையில்லை. அவர்களிடம் பெரும்பான்மை இருக்கலாம், நாடாளுமன்றத்தில் நிறைய சீட்டுகள் இருக்கலாம், அரசு இயந்திரம் காவல்துறை, இராணுவம் இருக்கலாம், இருந்தும், அவர்கள் கோழைகள். அவர்கள் நம்மை கண்டு அஞ்சுகிறார்கள். அவர்கள் நமது போராட்டங்களை கண்டு அஞ்சுகிறார்கள். நாம் சிந்திக்கிறோம் என்பதே அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.

எனது தோழன் நிர்பான் பிப்ரவரி 10-ஆம் தேதி ஊடகங்களில் கூறினார் “தேசவிரோதியாவது அனைத்திலும் எளியது. நீங்கள் சிந்திக்க தொடங்கிவிட்டாலே உங்களுக்கு தேசவிரோதி முத்திரை விழுந்துவிடும்.” ஒருவேளை இப்படியான வழிமுறைகளின் வழியாக எங்களை அச்சுறுத்திவிடலாம் என்று நினைத்தார்கள் என்றால், அவர்கள் பெரிய மாயை ஒன்றில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் பொருள்.

நான் ஏற்கனவே கூறியதை போல, தவறான பல்கலைக்கழகத்தில் கை வைத்துவிட்டீர்கள் ஏற்கனவே, பல்வேறு பல்கலைக்கழகங்களை அச்சுறுத்த முயன்று வருகிறீர்கள். திரைப்பட கல்லூரியாகட்டும், ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்ததாக இருக்கட்டும், ரோஹித் வெமுலா மற்றும் அவரது தோழர்களுக்கு நிகழ்ந்த அடக்குமுறைகளாகட்டும், ரோஹித் வெமுலா கொலை செய்யப்பட்டதாக இருக்கட்டும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சந்தீப் பாண்டேக்கு நேர்ந்ததாக இருக்கட்டும்...அனைத்து போராட்டங்களிலும் நாங்கள் தோளோடு தோள் நின்று போராடியிருக்கிறோம்.

ஒவ்வொரு போராட்டத்தையும் தெருவுக்கு, மக்களிடம் எடுத்து சென்றிருக்கிறோம். எங்களுக்கு எங்கள் கடமை என்ன என்பது புரிந்துதான் இருக்கிறது. ஜேஎன்யூ போராட்டங்களில் முன்னணியில் நிற்கிறது என்பதற்காக ஜேஎன்யூவை ஒழித்து கட்டுவோம் என்று முடிவு செய்திருந்தீர்கள் என்றால், உங்களை போல பலர் வந்து சென்றார்கள், அவர்களே முடிந்து போனார்கள் என்பதை உங்களுக்கு சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

ஒருவேளை, நீங்கள் இந்திரா காந்தியை மறந்திருக்கக் கூடும். எமெர்ஜென்சிக்கு பிறகு இந்த பல்கலைக்கழகத்திற்கு வந்த போது, அவர் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை. நீங்கள் மன்மோகன்சிங்கை மறந்து போயிருக்கக் கூடும். அவர் நேருவின் சிலையை திறந்து வைக்க வந்திருந்தார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து இதே பல்கலைக்கழகம் போராடியது. ப.சிதம்பரம் இந்த பல்கலைகத்திற்கு வந்த போது, மாணவர்கள் அவரை வரவேற்பார்கள் என்று கருதினார். ஆனால், மாணவர்கள் யார் பக்கம் என்பதையும், அவருடைய இடம் எது என்பதையும் மாணவர்கள் அவருக்கு புரிய வைத்தார்கள். ஜேஎன்யூ என்றுமே விளிம்பு நிலையில் இருக்கும் மக்களின் பக்கம்தான் நிற்கும். உங்களின் கீழ்த்தரமான உத்திகளால் நாங்கள் அஞ்சிவிடப்போவதில்லை.

தோழர்களே, இவை அனைத்தும் நம்மை உளவியல் ரீதியாக சீண்டி பார்க்கும் திட்டம் கொண்டது. அவர்கள் நாம் பயந்து விடுவோமோ என்று சோதித்துப் பார்க்கிறார்கள். அவர்களின் சவாலை நாம் ஏற்றுக் கொண்டு, நாம் அஞ்சமாட்டோம், மாறாக, எதிர்த்து போராடுவோம் என்பதை அவர்களுக்கு உறுதியாக தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம். நாங்கள் அனைத்து முனைகளிலிருந்து உங்களை எதிர்ப்போம்.

எந்தவித அச்சமும் இல்லாமல், அனைத்து பிரச்சினையிலும், எந்த வித கருத்தையும் தெரிவிக்க வேண்டும். தோழர்களே, இவர்கள் பெரும் கோழைகள். அவர்களின் மாணவர் அமைப்பு அகில பாரதிய வித்யா பரிஷத், இந்த வளாகத்தின் குரங்கு படை. அவர்களுக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. உங்களது செயல்திட்டம் முன்னுக்கு வரவில்லையா? குழப்பம் விளைவியுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழக துணை வேந்தர், ரிஜிஸ்டிரார், காவல்துறை, எம்.பி என அனைவரும் உங்கள் பக்கம் நிற்பதை நாங்கள் உறுதி செய்வோம் என்று அவர்களுக்கு உறுதி வழங்கப்பட்டிருக்கிறது.

அப்பாராவுக்கு பதிலாக ஜக்தீஷ் குமாரை நியமித்ததாகட்டும், தத்தாத்ரேயாவுக்கு பதிலாக மகேஷ் கிரியை நியமித்ததாகட்டும் அவர்களுடைய செயல்வடிவம் ஒன்றே ஒன்றுதான்.

இனிமேலும், ரோஹித்துக்கு நடந்தது எங்கும் நடக்காது. நாங்கள் எங்கள் உடனடி அடையாளத்தோடு சுருங்கமாட்டோம். நாங்கள் இதற்கு தொடக்கமாக இருப்போம், சிறகு விரித்து பறப்போம், எதிர்கொள்வோம். நாங்கள் எதனால் உருவாக்கப்பட்டோம் என்பது எங்களுக்கு தெரியும். இந்த பல்கலைக்கழகத்தை நாங்கள் நேசிக்கிறோம். இந்த சுதந்திர வெளி நாங்கள் உருவாக்கியது. அதில் ஒரு இன்ச் இடத்தைக் கூட உங்களுக்கு தர மாட்டோம். நீங்கள் இந்த வெளியை அழிப்பதை அனுமதிக்க மாட்டோம்.

ஏபிவிபி-க்கு ஒரு விஷயம் நன்றாக தெரியும், அவர்களால் மக்களிடம் சென்று, மக்களை அணி திரட்ட முடியாது. கடந்த பத்து நாட்களாக ஊடகங்களின் வழியாக, இத்தனை ஊடக விசாரணைக்கு பிறகும், பிரச்சாரங்களுக்கு பிறகும், பத்து நாட்களுக்கு முன் உறங்கி கிடந்ததை போல தேசபக்தியை எழுப்ப எடுக்கப்பட்ட முயற்சிக்கு பிறகும், அவர்களுக்கு ஆதரவாக நடந்த போராட்டம் மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால், நமக்கு ஆதரவான போராட்டங்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கெடுக்கிறார்கள். இங்கே பதினைந்தாயிரம் பேர் திரண்டார்கள். ராகுல் காந்தி இந்த வளாகத்திற்கு வந்திருந்த போது ச்சீ(ஜீ) நியூஸ் தொலைக்காட்சி, மாணவர்களிடையே பிளவு ஏற்பட்டுவிட்டது என்று சொன்னதை கவனித்தேன். ஆனால், இந்தப்பக்கம் 3000 பேரும், அங்கே பத்து பன்னிரெண்டு பேரும்தான் இருந்தார்கள் என்று அதற்கு பிறகுதான் தெரியவந்தது.

செய்திகளை திரிப்பதற்கு கொஞ்சம் கூட வெட்கமின்றி எப்படி பொய் சொல்ல வேண்டும் என்ற திறன் இவர்களுக்கு நன்றாகவே வாய்த்திருக்கிறது. தோழர்களே, இந்த பல்கலைக்கழகம்தான் நமக்கு கற்பித்திருக்கிறது. இங்கிருந்துதான் மாணவர் போராட்டங்களை நடத்தினோம். நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், எந்த பல்கலைக்கழகம் மாற்று கருத்துக்கு இடமளிக்க மறுக்கிறதோ, அது பல்கலைக்கழகம் அல்ல, அது சிறை. நம் பல்கலைக்கழகங்களை சிறைக்கூடங்களாக மாற்றும் இவர்களின் செயல்திட்டங்களை நாம் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக நின்று கண்டிப்பாக தோற்கடிப்போம்.

நாம் நம்மிடையே உள்ள அமைப்புகளுக்குள் இருக்கும் மாற்றுக் கருத்துகளை எப்படி எதிர்கொள்வது, எப்படி விவாதித்து முடிவை எட்டுவது என்பது நமக்கு தெரியும். தோழர் அசுதோஷ், தோழர் அனந்த்தின் அமைப்பு ஏதாவதொரு நிகழ்ச்சி நடத்தும் போதோ, அல்லது நாம் ஏதாவதொரு நிகழ்ச்சி நடத்தும் போதோ, நமக்குள்ளேயே எதிரெதிராக நிகழ்ச்சிகளை நடத்தினாலும், எந்த நிகழ்ச்சியிலும் புகுந்து குழப்பம் விளைவிக்க வேண்டிய தேவை நமக்கு இல்லை. ஏனென்றால், மக்களை சந்திப்பது எப்படி என்பது நமக்கு தெரியும். இவர்களின் உத்திகளுக்கு நாம் கண்டிப்பாக அடிபணிய மாட்டோம்.

இந்த தாக்குதல் பல்கலைக்கழத்திற்கு எதிரானது மட்டும்தான் என்று புரிந்து கொள்ள வேண்டாம். என் உரையை முடிக்கும் முன்னர் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நாடு முழுக்க பல்வேறு தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஹோண்டா தொழிலாளர்கள் மீதும், சோனி சோரியின் மீதும், ஜக்தல்பூர் சட்ட உதவிக் குழுவின் மீதும் நடத்திய தாக்குதல்களை எதிர்க்கும் அனைத்து போராட்டங்களையும் ஒருங்கிணைத்து நாம் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் பக்கம் நிற்க வேண்டும். ஜேஎன்யூவின் இந்த கலாச்சாரத்தை உயர்த்தி பிடிக்க வேண்டும்.

நன்றி!

Thanks: சரவணன் வீரய்யா