Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மலசலகூடம் கழுவுவது "இழிவானது - தீட்டுக்குரியது" என்பதே வெள்ளாளியச் சிந்தனைமுறை

"இழிவானது - தீட்டுக்குரியது" என்பது, யாழ் மையவாத வெள்ளாளிய சிந்தனை முறையே ஓழிய, தனிப்பட்ட விக்னேஸ்வரனுக்குரிய தனித்;த சிந்தனையல்ல. இங்கு முன்னாள் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வெள்ளாளிய சிந்தனையிலான சமூகத்தின் பிரதிநிதியாக முன்னிலைப்படுத்தவே "வெளிநாட்டில் மலசலகூடம் கழுவுவதிலும் பார்க்க உள்நாட்டில் தலைநிமிர்ந்து வாழலாம்" என்கின்றார்.

விக்னேஸ்வரனின் இந்த வெள்ளாளியக் கண்ணோட்டம் என்பது, சாதிய இழிவையும் - தீண்டாமையையும் அடிப்படையாகக் கொண்ட பண்பாட்டு கலாச்சாரக் கூறுகளைக் கொண்டது. கக்கூஸ் கழுவுதல் என்பது வெள்ளாளியச் சிந்தனையில் இழிவானது, தீட்டுக்குரியது. சாதியரீதியில் ஓடுக்கப்பட்டவர்களின், சாதிக்குரிய தொழில். புலம்பெயர்ந்த வெள்ளாளிய சிந்தனையிலான சமூகத்தின் கோபம், நாங்கள் ஓடுக்கும் சாதி என்ற அகங்காரத்துடன் விக்னேஸ்வரனின் கூற்றை எதிர்கொள்கின்றனர்.

உடனே விக்னேஸ்வரனுக்கு எதிராக புலம்பெயர்ந்த தமிழர்கள், எங்களை எப்படி கூறலாம் என்றே கொந்தளிக்கின்றனர். நாங்களும் உங்களைப் போல் ஓடுக்கும் வெள்ளாளிய சிந்தனையிலான சாதி சமூகத்தின் பிரதிநிதிகள் தானே என்ற, எதிர்மறையான கோபம்.

ஓடுக்கும் எங்கள் சாதியப் பிரதிநிதி என்றுதானே உங்களுக்கு வாக்குப் போட வைத்தோம், பணத்தை எல்லாம் தந்தோம். எங்களை எப்படி "இழி" சாதியாக கூறமுடியும். இந்த வெள்ளாளிய சிந்தனையிலான சாதியப் பின்னணியில் நின்று

1.புலத்தில் கக்கூசைக் கழுவாத எங்களை எல்லாம் எப்படி பொதுமைப்படுத்தலாம் என்ற பெரும்பான்மையினரது கோபம் 

2. வெள்ளாளிய சிந்தனையே வாழ்க்கைமுறையாகக் கொண்ட, கக்கூஸ் கழுவும் ஓடுக்கும்  தமிழர்களுக்கு, எங்களை எப்படி இப்படிச் சொல்லலாம் என்ற கோபம்.

விக்னேஸ்வரனின் ஓடுக்கும் வெள்ளாளிய சிந்தனை மீது கோபம் வரவில்லை. மக்களைச் சாதிரீதியாக பிரித்து, ஒடுக்கும் சாதிகளின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்தும் சாதிய வெறிக்கு எதிராக கோபம் வரவில்லை.

மாறாக தங்களின் காசைப் பெற்றுக் கொண்டு, வாக்கைப் பெற தங்கள் ஆதரவைப் பெற்றுக்கொண்டு, தங்கள் மேல் சாதிய “இழி” வைப் புகுத்துவது தான் கோபமாக கொப்பளிக்கின்றது. புலம்பெயர்ந்த தமிழன் வெள்ளாளிய சிந்தனையிலான சமூகப் பண்பாட்டை பாதுகாக்கும், சாதிப் பன்னாடைகள் தான் என்று, விக்னேஸ்வரனுக்கு விளக்க முற்படுகின்றனர். பணத்தைக் கொடுக்க கூடாது என்கின்றனர்.

புலம்பெயர்ந்த தமிழன் சாதிக்குரிய "இழிதொழிலை" செய்வதை விட, அதைச் செய்யாத உள்நாட்டவராகி நீங்கள் சாதிரீதியாக உயர்ந்தவர்கள் என்று கூறுவதன் மூலம், ஒடுக்கும் "உயர்" சாதிக்கு முன் தன்னை மிகச் சிறந்த சாதியப் பிரதிநிதியாக காட்ட முன்னிறுத்துகின்றார். அடுத்த தேர்தலில் ஒடுக்கும் சாதிய வாக்குகளைப் பெறுவதை இலக்காகக் கொண்டு, புலம்பெயர்ந்த தமிழனின் தொழில் சார்ந்து இழிந்த "சாதிக்குரிய" ஓன்றாகப் பிரகடனம் செய்து, தன்னை ஒடுக்கும் சாதியின் பிரதிநிதியாக பிரகடனப்படுத்தியுள்ளார். முன்பு புலிகள் காலத்தில் புதுவை இரத்தினதுரை புலம்பெயர்ந்த தமிழரை "நாய்ச் சாதியினர் – நாயிலும் கீழானவர் - வீரமில்லாதவர் - கோழைகள்" என்று கூறி, புலம்பெயராத தமிழர்கள் அஞ்சா நெஞ்சமுள்ள வீரர்கள் என்று கூறி, புலிக்கு ஆள்பிடித்த அதே உத்தியையே விக்னேஸ்வரன் மீளக் கையாளுகின்றார்.