Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

கொண்டாடப்பட வேண்டிய சின்னத்தம்பியும்- இருட்டடிப்போடு கூடிய - சீர்கெட்ட விமர்சனங்களும்

1.

2009-இற்கு பின் வாசித்த இலங்கைப்பின்னணி கொண்ட எழுத்தாளர்களினால் எழுதப்பட்ட இலக்கிய படைப்புக்குகளில் , என்னை மிகவும் சந்தோசப்பட, பெருமைப்பட, சிந்திக்க, தலைமைப் பாத்திரத்துடன் நெருக்கமாக உணரவைத்த நாவல், ஜீவமுரளி எழுதிய லெனின் சின்னத்தம்பி.

இஸ்கண்டிநேவிய இலக்கியம் மற்றும் ஓரளவுக்கு ஐரோப்பிய இலக்கிய வாசனை உள்ள எனக்கு -எனது வாசிப்பு அனுபவத்தில் நான் வாசித்திருந்த ஐரோப்பிய - இஸ்கண்டிநேவிய நாவல்களுக்கு இணையாக - அவைக்கு நெருக்கமாக இருந்தது லெனின் சின்னத்தம்பி. 

இதற்கான மிக முக்கிய காரணம் : லெனின் சின்னத்தம்பியின் " உலகளாவிய தன்மை " /the universal character of literature . லெனின் சின்னத்தம்பியை ஐரோப்பிய மொழிகளில் எந்த மொழிக்கு நீங்கள் மொழிபெயர்த்தால் , அந்த புத்தகத்தின் உள்ளடக்கத்தை , பாத்திரங்களை, கதை சொல்லப்படும் வெளியை, பிரதிபலிக்கும் உணர்வுகளை, உளவியல் போக்குகளை , அந்தந்த மொழியை சேர்ந்தவர்கள் எந்த தடையுமின்றி தமது சொந்த வாழ்வின் - வாழ்கை சூழலின்- அதன் உள்ளடக்கத்தின் கதையாக உணர்ந்து கொள்வர். 

அடுத்தது : இக் கதையானது , உலக இலக்கிய வரலாற்றில் மிகவும் பிரபலமான தொழிலாளர் உலகம் சார் இலக்கியம் / Proletarian literature univers என்ற பாரம்பரியத்துக்குள் நுழைய முயல்கிறது. இப் பாரம்பரியத்தின் தலைமக்களாக: எல்லோருக்கும் தெரிந்த கோர்கி, அமெரிக்க /இஸ்கண்டினேவிய பெண்ணிய எழுத்தாளர் தில்லேர் ஊல்சென், ஆங்கிலேயர்களான ஜாக் லண்டன், ஜோன் ப்ரெய்ன் , ஐரோப்பாவுக்கு வெளியில் ,பிரேசில் நாட்டை சேர்ந்த ஜோர்ஜ் அமாடோ போன்ற பல நூறு எழுத்தாளர்கள் உள்ளனர். இன்று இந்த பாரம்பரியமென்பது 80.களில் ஏற்பட்ட "வீட்சிக்கு " பிறகு மறுபடியும் தன்னை வளர்த்துக்கொண்டு செல்கிறது. பெண்ணிய இலக்கியம், "கருப்பு " இலக்கியம், "பாலியல்" சிறுபான்மை இலக்கியம் போன்றவையும் இது போட்ட குட்டிகள் அல்லது இதிலிருந்து பிரிந்து போன கிளைகள் எனலாம்.

இந்த தொழிலாளர் உலகம் சார் இலக்கியமென்பது: மூலதனத்துக்கு - உழைப்புக்கும் இடையிலேற்படும் முரண்பாடுகளை - அதன் பால் விரிந்து செல்லும் உலகத்தை - மனிதம் சார்ந்த அக உணர்வுகளை, மனிதங்களுக்கு இடையிலான அந்நியப்படுதலை, தனி மனிதம் தனக்குத்தானே அந்நியப்படுதலை- அதன் விளைவாய் ஏற்படும் ஆத்தும அழுத்தங்களை- தனிமனிதத்தின் இருப்பை பரிசோதனை செய்வது, வாழ்வின் அபத்தங்களை விபரிப்பது போன்ற பல அடுக்குகளை கொண்டது .

முரளியின் லெனின் சின்னத்தம்பியும் இந்த அடுக்குகளில் பலவற்றை தொட்டுச் செல்கிறார்.

முரளியின் நாவலில் இந்த தன்மைகள் எவற்றையும் புலப்பெயர்எழுத்தாளர்கள் - அதி உச்ச கதை சொல்லிகள் என்று சிலர் முதுகு சொரியும் எவரும் எழுதவில்லை. கிசு கிசு பாணியில் , மித்திரன் வாரமலர் பாணியில் 80.களில் நடந்ததாக சொல்லப்படும் புலியெதிர்ப்பை மட்டுமே வைத்துப் புனைந்த "நெடுங்கதைகதைகளை " கொண்டாடும் வெறுமசக்திகள், லெனின் சின்னத்தம்பியை புரிந்து கொள்ள முடியாது போனதும் - லெனின் சின்னத்தம்பியை இருட்டடிப்புச் செய்ததும் இயல்ப்பான விடயமே !

2.

இலக்கிய சந்திப்பு நடத்துகிறோம் என்று ஒரு கூட்டம் 90.களில் தமிழீழ அரசியல் செய்து பின் புலிக்கு விளக்குப் பிடித்தது. அதன் பின் அதைக் குத்தகைக்கு எடுத்தோர் இலங்கை அரசுக்கு விளக்குப் பிடித்தார்கள். முரளியும் , இந்த புத்தக வெளியீட்டில் பங்காற்றியவர்களும் கூட இவர்களுடனேயே இணைந்து நின்றார்கள். அது அவர்களில் அரசியற் தெரிவு . அதுவல்ல எனது அங்கலாய்ப்பு . இவர்களின் இந்த அரசியல் நிலைப்பாடுகளே லெனின் சின்னத்தம்பி கொண்டாடப் பாடாமல் போனதற்கான காரணம் என்பது எனது திடமான கருத்து . நிற்க .

*******

ஈழத்துக்கு இலக்கிய - மற்றும் விமர்சனப் பாரம்பரியத்தை இல்லாதொழிக்க வேண்டுமென்று கொஞ்சப்பேர் திரியுறாங்கள் . அவங்கள் சொல்லுறது என்னவென்றால்,இதுவரை உருப்படியாக எந்த இலக்கிய , விமர்சன முறையும் ஈழத்தில் - புகலிடத்தில் வளரவில்லை என்பதாகும். இதை முற்று முழுதாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், "இலக்கிய விமர்சனம் " என்ற பெயரிலே வைக்கப்டுகிற சில விடையங்களை கவனிக்கும் போது, போதும் ஈழஇலக்கியம் பற்றி இந்திய -ஜெயமோகன் ஆதரவாளர்கள் கூறுவது சரியாது போலவே படுகிறது. 

ஜீவமுரளி எழுதிய லெனின் சின்னத்தம்பி என்ற நாவல் எனக்கு மிகவும் பிடித்த ஒரு புத்தகம். மார்க்சிஸ , இருப்பியல், -இரண்டும் கலந்த அழகியல் பரவிக்கிடக்கும் - "அந்நியமாதலை " சித்தரிக்கும் ஒரு நாவல். இந்த புத்தகத்தை சுவிஸில் நடந்த ஒரு நிகழ்வில் ஒருவர் விமர்சனம் செய்கிறார் . (வ கீழே வீடியோ முதலாவது பின்னூட்டத்தில் காணலாம் ) இந்த விமர்சனத்தை பார்த்தால் அழுகை தான் வருகிறது ... 

Name-dropping , சுயபுராணம், சம்பந்தா சம்பந்தமில்லாமல் , salvador dali ,sigmund freud, surrealism போன்ற பல சொற்களும் , பெயர்களும் இந்த "விமர்சனத்தில்" தூவப்படுகிறது. இது விமர்சகர் தனது "மேட்டிமை" தனத்தை பறை சாற்ற உதவுமென நினைத்தாராகும்.... இடையிடையே, நாவலின் கதையை சொல்லும் விமர்சகர். .... எந்த கட்டத்திலும் அவர் லெனின் சின்னத்தம்பி பற்றிய இலக்கிய விமர்சனத்தை முன் வைக்கவேலையில்லை ... ம்... அவங்கள் சொல்லுறது சரி தான் போல கிடக்கு . 

-- 

1. எனது இந்த குறிப்பு சார்ந்து யாரவது பொங்கி எழுத்தால் அதை வரவேற்கிறேன் !!! பெங்கியெழும் நீங்களாவது , லெனின் சின்னத்தம்பிக்கு நியாயம் சொல்ல வேண்டும் !

2. லெனின் சின்னத்தம்பிக்கு ஓரளவுக்கேனும் சரியான விமர்சனத்தை முன் வைத்தவர் ரயாஹாரன் என்பதை நான் இருட்டடிப்பு செய்யாமல் நினைவூட்டுகிறேன்.