Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தென்னிந்திய திருச்சபையின் பின்னணியில் (தமிழ்) இடதுசாரி அரசியல்

1980 களில் புலிகள் தொடங்கி இன்றைய கூட்டமைப்பு வரை, தென்னிந்திய திருச்சபையின் அனுசரணை பெற்ற அரசியல் தலையீடு, தமிழ் அரசியல் திசைவழியைத் தீர்மானித்து வந்திருக்கின்;றது. இயக்கங்களின் ஜனநாயக மறுப்புக்கு எதிரான ஜனநாயக அரசியல் திசைவழியை தீர்மானிப்பதிலும் கூட, தீர்க்கமாக தலையிட்டு வந்திருக்கின்றது. இவை அனைத்தும் மேற்கு சார்பு அரசியலை முன்னிறுத்தியதுடன், மேற்கு தலையீடுகள் மூலம் அரசியல் தீர்வு என்னும் நம்பிக்கையை வழிகாட்டியது, வழிகாட்டுகின்றது,

இந்த வகையில் வலது முதல் இடது வரையான, தமிழ் மொழி அரசியலில், தென்னிந்திய திருச்சபையின் அனுசரணை பெற்ற தலையீடுகளும் - வழி நடத்தலும் சமூகத்தை பின்நோக்கி நகர்த்தி வந்திருக்கின்றது. இன்று இலங்கை தமிழ் இடதுசாரியத்துக்குள் புகுந்துள்ளனர்.

தமிழ் மொழியிலான இலங்கை இடதுசாரியமானது, வர்க்கப் புரட்சியை முன்வைக்கும் வர்க்கக் கட்சியாக இல்லாத அதன் வர்க்க அரசியல் வறுமையை பயன்படுத்தி, அதற்குள் ஊடுருவி வருகின்றது. அதாவது புரட்சிகரக் கட்சிக் கொள்கை, புரட்சிகரமான வர்க்க நடைமுறை, புரட்சிகரமான அமைப்பு வடிவத்தைக் கொண்டு இருக்காத தமிழ் சூழலை, தென்னிந்திய திருச்சபையின் பின்னணி கொண்ட தனிநபர்களின் ஆதிக்கத்துக்குள்ளாகி வருகின்றது. கட்சி முதல் கட்சி அல்லாத உதிரிகள் வரை, அதன் செல்வாக்கில் சிக்கி வருகின்றனர். இடதுசாரியம் பேசுவதன் மூலமும், தன்னார்வ நிறுவனங்கள் மூலமான ஆய்வுகள் முதல் தங்களிடத்தில் உள்ள நடைமுறை வளங்களைக் கொண்டும், பொருளாதார பலம் மற்றும் பௌதிக வளங்களை கொண்டும், இடதுசாரியத்தை தன்வசப்படுத்தி வருகின்றது.

இந்த தென்னிந்திய திருச்சபையின் பின்னணியென்பது, அமெரிக்காவின் நலனைப் பேணிப் பாதுகாக்கும் அரசியல் பின்னணியையும், அதற்கான பலத்தையும் கொண்டது.

தென்னிந்திய திருச்சபையானது 1947 ஆண்டில் தொடங்கப்பட்டது. தென்னிந்தியாவில் இயங்கிக் கொண்டிருந்த லண்டன் மிசனெரி சங்கம், மதுரை அமெரிக்கன் மிசன், மற்றும் யாழ்ப்பாணம் அமெரிக்கன் மிசன் சபை… ஒன்றுசேர்ந்து உருவாக்கியது. அதாவது தென்னிந்திய ஆங்கிலிக்கம், மெதடிஸ்ட், பிரெஸ்பிட்டேரியன் மற்றும் புரட்டஸ்தாந்து ஆகிய திருச்சபைக் குழுக்களை இணைத்து உருவாக்கப்பட்டது. இது இலங்கையில் இரண்டாவது மிகப்பெரிய கிறிஸ்தவ குழுவாகும். பாரிய பணபலப் பின்னணியைக் கொண்டுள்ளதுடன், இலங்கையில் 187 பாடசாலைகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கின்றது.

இலங்கை கிறிஸ்துவமானது பல பிரிவுகளைக் கொண்டது. 2012 புள்ளிவிபரத் தரவுகளின்படி இலங்கை மக்கள் தொகையில் 7.63 சதவீதத்தைக் கொண்டது. இதில் ரோமன் கத்தோலிக்கர்கள் 6.19(12.61 லட்சம்) சதவீதமாகவும், புரட்டஸ்தான் (வடக்கில் தென்னிந்திய திருச்சபை) 1.43(2.91 லட்சம்) சதவீதமாகவும், பிற கத்தோலிக்கர்கள் 0.1 வீதமாகவும் உள்ளனர். இங்கு 0.1 சதவீதத்திலுள்ள மதப் பிரிவுகளில் தான், யெகோவா தொடங்கி வெவ்வேறு சிறு சிறு குழுக்கள் காணப்படுகின்றது.

இன்று இலங்கையில் மதமாற்றமும், அரசியல் பின்னணியில் கத்தோலிக்க தலையீடுகள் என்பது, எதிர்ப்புரட்சிகரமான பாத்திரத்தை வகிக்கின்றது. இதில் எல்லா கிறிஸ்தவ பிரிவுகளும் ஈடுபடுவதில்லை. மத மாற்றத்தில் சிறு குழுக்கள் ஈடுபடுவதுடன், பிற கிறிஸ்தவ மதப் பிரிவுகளையும் கூட மதமாற்றம் செய்கின்றது. அரசியல் தலையீட்டில் தென்னிந்திய திருச்சபையைச் சேர்ந்த அறிவுத்துறையினரும், ஏகாதிபத்திய தன்னார்வ சம்பளப் பட்டியலில் உள்ளவர்களும் ஈடுபடுகின்றனர்.

இந்த பின்னணியில் இலங்கையில் மதமாற்றம் என்பது, கூடிவாழும் மக்களை பிரித்து நஞ்சை ஊட்டுவது தான். இந்த மதமாற்றமானது பாரிய பணப் பின்புலத்தின் பின்னணியில் அரங்கேறுகின்றது. யுத்த சிதைவுகளையும், மனித அவலங்களையும் தமக்கு சாதகமாக்கி, மதம் மாற்றுகின்றனர். அது இந்து மதத்தை மட்டுமல்ல, பெரும்பான்மையாக உள்ள கத்தோலிக்கர்களையும் மதமாற்ற, மத வெறியை ஊட்டுகின்றது. இந்துத்துவம் இலங்கையில் காலூன்றுவதற்கு ஏற்ற, நெம்புகோலாக மதமாற்றம் மாறி இருக்கின்றது.

இன்று கூட்டமைப்பின் அரசியலை வழிநடத்தும் தலைமைத்துவத்துக்கு பின்னணியில் தென்னிந்திய திருச்சபையைச் சேர்ந்த நபர்கள் இருப்பதால், கூட்டமைப்பின் அரசியலுக்கு எதிரான கருத்தியல் மூலம் இந்துத்துவம் மெதுவாக தலை தூக்குகின்றது.

வெள்ளாளிய இந்துத்துவ மத அடிப்படைவாதம் சுயமான நிறுவனமாகக் கூடியதல்ல. ஏனெனின் வெள்ளாளிய இந்துத்துவமானது சாதியத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதால், தனக்குள்ளாள ஒடுக்குமுறையை முன்னிறுத்தி ஒருங்கிணைவதற்கு சுய தகுதியற்றது. இதனால் பிற மதங்களைச் சொல்லித்தான், இந்துத்துவத்தை முன்னிறுத்துகின்றது. இந்த பின்னணியில் சிவசேனை முதல் அனைத்து இந்துத்துவமும், சமூக அரங்கில் நுழைகின்றது. இந்துத்துவ அடிப்படைவாதத்தை வளர்த்துவிடுவதில், தென்னிந்திய திருச்சபையின் அரசியல் செயற்பாடுகள் முதல் கிறிஸ்துவ மதமாற்றத்தை செய்கின்ற பின்னணியானது, மக்கள் விரோத அடிப்படையைக் கொண்டது.

தனிமனித வழிபாடு என்பது தனிமனிதவுரிமையைக் கடந்து விடும் போது, அது சமூகத்துக்கு கேடு விளைவிக்கின்றது. இன்று தமிழ் பகுதிகளில் நடக்கும் கிறிஸ்துவ மதமாற்றங்கள்;, அரசியல்ரீதியான தலையீடுகள் என்பது, எரிகின்ற வீட்டிற்கு எண்ணை ஊற்றுவது தான்.

இலங்கையின் அரசியல் அதிகாரமானது பேரினவாதமாக மட்டுமின்றி, பௌத்தத்தை முன்னிறுத்தியிருக்கின்றது. இதேபோல் தமிழ் இனவாத அரசியல் மேலாண்மையென்பது, வெள்ளாளியச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டது.

இந்த அரசியலதிகாரத்தின் மேலாண்மைக்கு நிகராக, அதன் இருப்புக்கு போட்டியாக கத்தோலிக்க அடிப்படைவாதமும் மனிதர்களை பிளக்கின்றது. தமிழ்மக்களை மதரீதியான அடிப்படைவாதத்துக்குள் இட்டுச் செல்வதில், கத்தோலிக்கம் முக்கியமான ஒரு பங்கை வகிக்கின்றது. இலங்கையில் மதமாற்றம் என்பது, கத்தோலிக்கத்தை தவிர பிற எந்த மதமும் செய்வதில்லை. கத்தோலிக்கத்துக்கு மதம் மாற்றவும், அரசியல் தலையீடுகளை செய்யவும் அன்னிய நாடுகளில் இருந்து பணம் வருகின்றது. மதமாற்றத்தின் போது பிற மதங்களுக்கு எதிரான பிரச்சாரங்களை செய்வது, முதல், பிற மதங்களை பின்பற்றுவர்களை இழிவானவராக சித்தரிப்பது என்பது, செயலூக்கமுள்ள இழிவான பாத்திரத்தை வகிக்கின்றது.

இங்கு கத்தோலிக்க மற்றும் புரட்டஸ்தான் பிரிவுகள், ஒப்பீட்டளவில் மத அடிப்படைவாதத்தையோ, மத மாற்றத்தையோ செய்வதில் முனைப்பு காட்டுவதில்;லை. மாறாக அந்த மதங்களைச் சேர்ந்தவர்களைக் கூட, கிறிஸ்தவ பிற குழுக்களாலேயே மதமாற்றத்துக்கு உள்ளாக்கப்படுவது அரங்கேறுகின்றது.

இலங்கையில் பெரும்பான்மையாக வாழும் பாரம்பரிய ரோமன் கத்தோலிக்கமானது (புரட்டஸ்தான், அமெரிக்க மிசனரி உட்பட), ஐரோப்பிய மரபு வழியாக வந்தது. ஜரோப்பிய முதலாளித்துவ ஜனநாயக புரட்சியை அடுத்து, அங்கு எப்படி கத்தோலிக்கம் நிலைநிறுத்தப்பட்டதோ, அதே மரபுகள் தான் இலங்கையில் பின்பற்றப்பட்டது. சமூகப் பணிகள் மற்றும் எளிமையான நேர்மையான வாழ்க்கை மூலம் கட்டமைக்கப்பட்ட கடந்தகால பிம்பம், வடகிழக்கில் இன்று சிதைந்து வருகின்றது. சமூகப் பணிகள் மற்றும் எளிமையான நேர்மையான வாழ்க்கை மீதான மதிப்பு, மதம் கடந்த சமூக உணர்வாக தமிழ்மொழி பேசும் மக்களிடையே இருந்தது. யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நம்பிக்கையான ஒரே தரப்பாக "குருமார்கள்" இருந்ததுடன், அதற்காக பெருமளவு பணத்தை புலம்பெயர் சமூகம் கொடுத்தது. இது வடகிழக்கு "குருமார்கள்" இயல்பை மாற்றியதுடன், பண மோசடியுடன் கூடிய சொகுசான வாழ்க்கைக்குள் மூழ்கடித்துவிட்டது. அன்றாடம் உழைத்து வாழும் ரோமன் கத்தோலிக்க ஏழை ஏளிய மக்களில் இருந்து அன்னியமாகியதுடன், அதை மூடிமறைக்க மதவெறியையும், யாழ்மையவாத வெள்ளாளியச் சிந்தனையிலான சாதிய சமூகப் பிளவைக் கொண்டு, கத்தோலிக்கர்களைப் பிளந்து வருகின்றது.

இலங்கை கத்தோலிக்கமானது ((புரட்டஸ்தான், அமெரிக்க மிசனரி உட்பட) எளிமை, நேர்மை, சமூகப் பணி என்ற முந்தைய வடிவிலில்லை. வடகிழக்கில் மோசமாக சீரழிந்துள்ளதுடன், மத நம்பிக்கை என்பது மதவெறியாகி வருகின்றது. பௌத்தம், இந்துத்துவம், இஸ்லாம் போன்றவற்றில் மதவெறியென்பது எப்படி உள்ளதோ, அதேபோல் இலங்கை கத்தோலிக்கமும் பயணிக்கத் தொடங்கி இருக்கின்றது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிதி ஆதாரம் கொண்ட ஜெகோவா போன்ற மதவெறிக் குழுக்கள், யுத்தத்திற்கு முன் இலங்கையில் இருந்ததில்லை. யுத்த சூழலில் ஊடுருவி, இன்று பிற மத வெறுப்பை பிரச்சாரமாக கொண்டு தன்னை நிலைநிறுத்தியுள்ளது. புலம்பெயர் தமிழ் சமூகத்தில் பாரிய மதமாற்றங்களை செய்துள்ளதுடன், பணம்பலம் கொண்டு சமூக நஞ்சாக மாறியிருக்கின்றது. இது போல் பல சிறுசிறு குழுக்குள் தோன்றி இருப்பதுடன், அன்றாட உழைப்பில் குறைந்தது 10 சதவீதத்தை அறவிடுகின்ற வியாபாரிகளே "போதகராக" இருப்பதுடன், பணபலத்தைக் கொண்டு சமூகத்தை இரையாக்க குறிவைக்கின்றது.

இதேபோல் தென்னிந்திய திருச்சபையானது அமெரிக்காவின் வழிகாட்டலைக் கொண்ட மதப்பிரிவு. பணப் பலம், அறிவுப் பலம், அதிகார பலத்தைக் கொண்டது. குறிப்பாக தமிழ் அரசியலில் தலையிடுகின்றது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பின்னால் செல்லுமாறு வழிகாட்டுகின்றது. இன்று தமிழ் மொழி இடதுசாரியம் முதல் இலக்கியம் வரை, அரசியல் கருத்துரையாளராக, மார்க்சியம் கற்பிப்பவராகவுள்ளனர்.

1980 களில் புலிகள் தோன்றிய போது, தென்னிந்திய திருச்சபையைச் சேர்ந்த நபர்களே புலியின் அரசியல் கொள்கை வகுப்பாளராக இருந்தனர். புலிகளை அமெரிக்காவின் பின் நகர்த்தியவர்களும்; இவர்களே. நிர்மலா, புலிக்காக லண்டனில் வேலை செய்த ரஜனி திரணகமா.. போன்ற பலர், தென்னிந்திய திருச்சபையின் அனுசரணையில் இருந்து வந்தவர்கள் தான். யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கூட இந்த மதப் பின்னணியை அனுசரணைiயாகக் கொண்டிருந்தது. புலிகளால் கொல்லப்பட்ட வெளிவிவகார அமைச்சர் கதிர்காமரின் பின்னணியும் இதுதான். இன்று சுமந்திரனின் பின்னணியும் இதுதான். எதையும் விட்டுவைக்காத தென்னிந்திய திருச்சபையின் அனுசரணை பெற்ற அரசியல் தலையீடுகள் அனைத்தும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக பயணித்து வருகின்றது.

இன்று தமிழ்மொழி மூலமான இலக்கியம், இடதுசாரியம் - கம்யூனிசக் கூட்டங்களில், முக்கிய கருத்துரையாளராக தென்னிந்திய திருச்சபை அனுசரணை பெற்றவர்களைக் காணமுடிகின்றது. அதேநேரம் கணிசமானவர்கள் ஏகாதிபத்திய தன்னார்வ நிறுவன சம்பளப்பட்டியலில் இருக்கும் அதேநேரம், ஆய்வாளராக, சமூக சேவையாளராக இருக்கின்றனர். இன்று தமிழ் மொழியின் முக்கிய கருத்தாளராகவும் இருக்கின்றனர். "கம்யூனிச" வகுப்புகளைக் கூட எடுக்கின்றவராக இருக்கின்றனர்.

தமிழ்மொழி மூலமான இலக்கியம், இடதுசாரியத்தை வழி நடத்துகின்ற கருத்தியல் மற்றும் பௌதிக வளங்களை வழங்கும் புரவலர்களாக இருக்கும், தென்னிந்திய திருச்சபை பின்னணி என்பது எதிர்ப்புரட்சிகரமான பாத்திரத்தை வகிக்கின்றது. தமிழ் இலக்கிய - அரசியல் அரங்கில் நுழைந்துள்ள, இடதுசாரிய வர்க்க அரசியல் கூறுகளை அழிக்கும் எதிர்ப்புரட்சிகர நகர்வுகள் தான், இன்றைய சமூக அரசியல் மேடையாக மாறி இருக்கின்றது. மக்கள் அதிகாரத்தை மானுட விடுதலையாக காணும் புரட்சிகர சக்திகள், இதை இன்று இனம் கண்டுகொண்டு போராடுவது அவசியமானதாகியுள்ளது.