Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இஸ்லாமிய பயங்கரவாதம் மீதான எமது அரசியல் நேர்மை குறித்து!?

இஸ்லாமிய பயங்கரவாதம் இலங்கையில் நடத்திய தாக்குதலின் பின்னணி குறித்து, அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் நாங்கள் கதைக்க முற்பட்ட போது, புதிய ஜனநாயகக் கட்சி எங்கள் அரசியல் நேர்மை குறித்து கேள்வி எழுப்பி இருக்கின்றது. அதாவது "உங்களை மிகக் கேவலமாக வெளிப்படுத்திக் கொண்டீர்கள். உங்கள் அரசியல் நேர்மை பற்றி இருந்த சந்தேகங்கள் தீர்ந்தன." என்கின்றனர். இதற்கு அவர்கள் கட்சியைச் சேர்ந்த பலர் லைக் போட்டு பாராட்டி இருப்பதன் மூலம், தங்கள் இந்தக் கருத்தை உறுதி செய்துள்ளனர். நாங்கள் எங்களை நோக்கியும் உள்ளீடாக ஆராய மறுப்பவர்கள் அல்லர். விமர்சனம் சுயவிமர்சனம் என்ற நெறிமுறை வழி மாற்றங்களை எமக்குள் விளைவித்துக் கொண்டிருப்பவர்கள். அதுவே தான் அரசியல் நேர்மை. அதேநேரம் நாங்கள் எழுப்பிய அரசியல் எப்படி நேர்மையற்றது என்று சொல்ல முடியாத அளவுக்கு, அரசியல்; நேர்மையற்று வக்கற்றுக் கிடப்பது நீங்கள் என்பதே உண்மை.

நாங்கள் "கேவலமாக" "நேர்மையற்ற" அரசியலாக முன்வைத்தது என்ன?

1.இஸ்லாமிய பயங்கரவாதமானது திட்டமிட்ட முறையில் தமிழ் மக்களை இலக்காக்கி உள்ளது

2.இஸ்லாமிய தீவிரவாதிகளினால் பாதிக்கப்பட்ட தமிழ் மனிதருக்காகவும் - தேசிய இனத்துக்காகவும் குரல் கொடுங்கள் என்று கோரியதும்

3.பாதிப்புகளை - அழிவுகளை அனுபவிக்கும் தமிழ் மனிதருக்காக - தேசிய இனத்துக்காக குரல் கொடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்ததும்.

இதைத்தான் நாங்கள் "கேவலமாக" கூறினோமாம். இது அவர்களின் அரசியலுக்கு "கேவலமாக" இருக்கின்றது. இதுவே எமது அரசியல் "நேர்மையீனமானது" என்று சுட்டிக்காட்ட காரணமாக இருக்கின்றது. இது ஏற்கனவே இருந்த, அவர்கள் எம் மேற்கொண்டிருந்த "சந்தேகத்தை உறுதி செய்கின்றது".

இப்படி புதிய ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறுவதும், அவர்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதனைப் பாராட்டுவதும், வரலாற்று ரீதியான வர்க்க அரசியல் வரலாற்றில் தற்செயலானதல்ல.

ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்காக அன்று முதல் இன்று வரை, புதிய ஜனநாயகக் கட்சி போராடிய வரலாறு கிடையாது. இதுதான் உண்மை. மதில் மேல் பூனையாக, தங்கள் கட்சி வரலாற்றைக் கடத்தியவர்கள். மனிதப் பிணங்களும், மனித அவலங்களும் நிரம்பிய எங்கள் தேசத்தில் கட்சியாக இருந்து, கட்சி என்ன செய்தது? முடிந்தால் அதைச் சொல்லுங்கள். கட்சியாக இல்லாத தனிமனிதர்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து போராடி இருக்கின்றார்கள். பலர் உயிரைக் கூட இழந்திருக்கின்றனர். நீங்கள் என்ன செய்தீர்கள்? ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், வர்க்கத்துக்கும் செய்த வரலாற்றுத் துரோகம் குறித்த சுயவிமர்சனமாவது இருக்கிறதா எனின், இல்லை. அப்படி இருக்க, எப்படி திடீரென புரட்சிகர வர்க்கக் கட்சியாக மாறிவிடும்?

இக்கட்சி இலங்கையில் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்காகவும், வர்க்கத்துக்காகவும் போராடிய வர்க்கக் கட்சியல்ல. 1960 களில் சண் தலைமையிலான கட்சியின் வரலாற்றுப் போக்கில், புதிய ஜனநாயகக் கட்சி 1970 களின் பின் உருவானது. இக் கட்சி வெவ்வேறு பெயரை தன் வரலாற்றில் கொண்டிருந்த போதும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வர்க்க கட்சியாக போராடிய, சுய வரலாறு புதிய ஜனநாயகக் கட்சிக்குக் கிடையாது.

1960 களில் சண் தலைமையிலான கட்சியின் வரலாற்றுப் போக்கில் தோன்றிய ஜே.வி.பி முதல் இன்றைய முன்னிலை சோசலிசக் கட்சி வரை, தியாகங்களுடன் கூடிய வர்க்க கட்சியாக இருக்க முனைந்திருக்கின்றது. அதேநேரம் ஒடுக்கப்பட்ட தேசிய இனவொடுக்குமுறைக்கு எதிராக தன்னை ஒரு வர்க்க கட்சியாக முன்னிலைப்படுத்தாமல், அவை சிங்கள கட்சியாகவே இருக்க முடிந்தது.

இதுதான் 1970 க்கு பிந்தைய இலங்கை வர்க்கக் கட்சிகளின் வரலாறு.

இந்த வகையில் புதிய ஜனநாயகக் கட்சி 1970 – 1980 களில் கூர்மையடைந்த இனவொடுக்குமுறைக்கு எதிராக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய வரலாறு கிடையாது. தமிழ் கட்சியாக இருந்து வந்த இந்தக் கட்சி, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் ஜனநாயக கோரிக்கைகளை கையில் எடுக்காத மதில் மேல் பூனைக் கட்சியாகவே இருந்தது. இதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயகக் கோரிக்கையை, வலதுசாரிகளின் கைகளில் தாரைவார்த்தார்கள். இந்த வலதுசாரிய போக்குக்கு எதிராக புதிய இடதுசாரிய கூறுகள் எழுந்தபோதும் கூட, அதை வழிநடத்தி செல்வதற்;கு கூட வக்கற்ற கட்சியாகவே இருந்தது. இதன் பொருள் வர்க்கத் தன்மையற்ற, பூர்ஸ்சுவா குணாம்சத்தைக் கொண்ட கட்சியாக இருந்தது. புலிப் பாசிசம் ஒட்டுமொத்த சமூகத்தின் ஜனநாயகக் கூறுகளை ஒடுக்கிய போதும், அதற்கு எதிராக மக்களை வழிநடத்தியது கிடையாது. திண்ணையில் அமர்ந்து, மதில் மேல் பூனையாக இருந்தபடி, சொந்த மக்களின் வாழ்வுடன் சம்மந்தமில்லாத மார்க்சியத்தைப் பேசுவதையே, கட்சி நடைமுறையாகக் கொண்டு இருந்தனர்.

ஓடுக்கப்பட்ட மக்களுக்கும், வர்க்கத்திற்கும் கட்சியாக இருந்தபடி, துரோகத்தைச் செய்தனர். 2009 பின் அதில் எந்த மாற்றமும் இல்லை.

தமிழ் இனவாதக் கட்சிகள் செய்வதைப் போன்று, தன்னெழுச்சியாக நடக்கும் போராட்டத்தில் புகுந்து, தம்மை காட்டிக் கொள்வதைத் தவிர, ஒடுக்கப்பட்ட மக்களை வர்க்கத்தின் தலைமையில் அணி திரட்டியது, திரட்டுவது கிடையாது.

இதனால் தான் நாங்கள் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் மற்றும் அவர்களின் பிரச்சனையை கதைக்கும் போது, அது அவர்களுக்கு கேவலமாக இருக்கின்றது. இப்படி கதைப்பது நேர்மையற்ற தனமாக இருக்கின்றது. அதாவது ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக கதைப்பது என்பது, அவர்களின் அரசியலுக்கு எதிர்மறையானதாகவும், இருப்புக்கு எதிரானதாகவும் இருக்கின்றது.

இதன் பொருள் புதிய ஜனநாயகக் கட்சி என்பது, வர்க்கத்தின் கட்சியாக இல்லை. மாறாக பூர்ஸ்சுவாவாத கட்சியாக நீடிக்கின்றது. கட்சியின் பண்பாட்டுத் தளத்தில் வெள்ளாளியச் சிந்தனைமுறையைக் கூட மறுதளிக்காத சாதியச் சடங்குகள், சம்பிரதாயங்கள் முதல் கட்சி உறுப்பினர்கள் சாதி பார்த்து திருமணங்களை செய்வது வரை செய்வதால், புரட்சிகர தன்மை கொண்ட கட்சியாக கூட தன்னை முன்னிறுத்தியது கிடையாது.

சமூக அக்கறையுடன் கட்சிக்கு வந்த புதிய தலைமுறையைக் கூட, தன் பாரம்பரிய பூர்சுவா வழியில் சீரழித்திருக்கின்றது. இஸ்லாமிய மதப் பயங்கரவாதத்தை வர்க்கமற்ற தங்கள் அரசியல் கண்ணோட்டத்தில் இருந்து அணுகுவதுடன், தமிழ் சமூகம் வர்க்க அடிப்படையில் அணுகுவதை தடுக்க முனைகின்றனர். வர்க்க அடிப்படையை கேவலமான அணுகுமுறையாகவும், நேர்மையற்ற தனமாகவும் சித்தரித்து, பூர்சுவாத்தனமான அணுகுமுறையைக் கோருகின்றனர். இது மட்டுமே வர்க்கப் புரட்சியை முன்வைக்காத, கட்சியாக நீடிக்க உதவும்.