Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

வடக்குக்கிழக்கில் சம்பந்தர் பாதம்பட்டதெப்போ ?

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு, இந்தியா ஆதரவளிக்காவிட்டால் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவர்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

 

கூட்டமைப்பு தமிழ்மக்களின் பாரிய அழிவின் பின்னரும் வாக்கு வேட்டைக்காக வடகிழக்கில் சூறாவளிப்பிரச்சாரம் செய்து மக்களின் அரச எதிர்ப்பை ஏகப்பிரதிநிதித்துவமாக மாற்றிக்கொண்டதும்,  தலைநகரில் குடியேறிக் கொண்டார்கள். அங்கிருந்தபடியே இராஜதந்திர நகர்வு அறிக்கைகளுடன் இந்தியா ஆதரவளிக்காவிட்டால் தமிழ்மக்கள் பாதிக்கப்படுவர் என்பதற்காகவா உங்களிற்கு வாக்குப்போட்டார்கள். இந்திய ஆதரவுக்கரத்தால் ஈழத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் கசக்கிப்பிழியப்பட்டுள்ளது. இலங்கை, இந்திய அரசுகளால் உங்கள் அந்நிய மோகத்தால் மக்கள் பட்ட துன்பத்தில் எள்ளு அளவேனும் வெள்ளை உடுப்புக்களில் குண்டு சிதறியெழுந்த மண்துகளும் பட்டிருக்காது.

தமிழ்மக்கள் மட்டுமல்ல ஒட்டு மொத்த இலங்கை மக்களும், பாராளுமன்ற கட்சிகள் மீதான எதிர்ப்புணர்வுடன் தான் இன்று உள்ளனர். இந்த  பாராளுமன்ற அரசியல்வாதிகளின் மக்கள் நலனற்ற போக்குகள் குறித்தும், ஏகாதிபத்திய விசுவாசம் குறித்தும் மக்களை அரசியல் அறிவூட்டி ஒருங்கிணைக்க வேண்டிய தளத்தை நோக்கிய நகர்வின் தேவையே பரந்துபட்ட மக்களின் நல்வாழ்வின் மீட்சிக்கான மாற்றாகும்.

-முரளி 17/03/2012