Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

EPDP யினால் கடத்தப்பட்ட குகனின் குடும்பத்திற்கு ராணுவ அச்சுறுத்தல்!!

யாழிலிருந்து விசேட செய்தி:

கடந்த வருடம் டிசம்பர் 9ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்தப்பட்ட மனித உரிமை செயர்பாட்டாளர் முருகானந்தன் குகனின் வீட்டுக்குச் சென்ற படையினர், அவருடைய மனைவியிடம் சிங்களத்தில் உள்ள பத்திரம் ஒன்றில் கையொப்பம் இடும்படி கேட்டுள்ளனர்.

 

இச்சம்பவம் இன்று பிற்பகல்(23 .03 .12 ) 4 மணியளவில் யாழ்ப்பாணம் அச்சுவேலியில் உள்ள குகனின் வீட்டில் இடம்பெற்றுள்ளது. ஜீப்வண்டியில் 4 படையினர் சென்றுள்ளனர். இருவர் வாகனத்தில் இருக்க, மற்றைய இருவரும் குகனின் மனைவியிடம் பெயர், முகவரிகளைக் கேட்டு எழுதியுள்ளனர்.

பத்திரம் சிங்களத்தில் இருப்பதனால், எனது கணவர் இல்லை, எனக்கும் சிங்களம் தெரியாது. என்னால் இதனை நிரப்பித்தர முடியாது என்று குகனின் மனைவி தமிழில் மறுத்துப் பேசியுள்ளார். தரம் 4இல் கல்வி பயிலும் குகனின் மகளுடன், குகனின் மனைவியையும் படையினர் புகைப்படம் எடுத்துச் சென்றுள்‌ளதாக குகனின் மனைவி தெரிவித்தார். குகனின் மனைவியும் மகளும் அவ்வீட்டில் தனியாக இருப்பதனால், இச்செயல் பீதியை ஏற்படுத்தியுள்ளதாக குகனின் மனைவி தெரிவித்தார்.


கடத்தப்பட்ட மனித உரிமை செயர்பாட்டாளர்ள் லலித்குமார் வீரராஜ் மற்றும் முருகானந்தன் குகன் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல அறிவித்திருந்தார். காணாமல்போன இவர்கள் மீது சம்பந்தப்பட்டவர்கள் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இம்மாதம் 30ஆம் திகதி இவ்வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல, இராணுவத்தளபதி உள்ளிட்ட சிலரை நீதிமன்றத்துக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

23/03/2012