Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

ஐ நா தீர்மானம் குறித்து ஜெ வி பி கருத்து

இலங்கைக்கு எதிராக ஐநாவின் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானமானது இலங்கைக்குப் பெரும் அச்சுறுத்தலாகும் என்று ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இன்று வவுனியாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கின்றார்.

 

இருந்த போதிலும், இலங்கையில் இறுதி யுத்த மோதல்கள் இடம்பெற்ற வேளை மட்டுமல்லாமல், அதற்குப் பின்னரான காலப்பகுதியிலும் நாட்டில் ஜனநாயகம் அருகிச் செல்வதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். அதே நேரம் மனித உரிமைகள் குறித்து பதில் செல்ல வேண்டிய கடமை அரசுக்கு உண்டு என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு எதிரான ஐநா மன்ற மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானமானது, இலங்கை மக்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டதல்ல. அது இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவே கொண்டு வரப்பட்டுள்ளது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்திருக்கின்றார்.

எனினும், ஐநா மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை அரசுக்கும் நாட்டு மக்களுக்கும் எதிராகவே கொண்டு வரப்பட்டுள்ளது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சருமாகிய விமல் வீரவன்;ச கூறியிருக்கின்றார். இந்தப் பிரேரணையை நிறைவேற்றியதன் மூலம் அமெரிக்கா வெற்றியடைந்திருந்தாலும், அந்தப் பிரேரணையை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.