Wed04242024

Last updateSun, 19 Apr 2020 8am

மிரட்டல்கள் குறித்து ஐ நா கவலை

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத்திற்காக கொழும்பில் இருந்து வந்திருந்த மனித உரிமை செயல்பாட்டாளர்களை இலங்கைத் தூதுக் குழுவினர் மிரட்டியதாக ஐ நா மனித உரிமை பேரவையின் செயலாளர் நாயகம் நவி பிள்ளை குற்றம் சாட்டியுள்ளார்.

 

அதே நேரம் ஜெனிவாவில் இருக்கும் இலங்கைத் தூதரின் அலுவலகத்திற்கு அநாமதேய மிரட்டல் கடிதம் வந்துள்ளதாகவும் அது குறித்து காவல் துறை விசாரிப்பதாகவும் நவி பிள்ளையின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் போன்றோரை இலங்கையில் அமைச்சர் ஒருவரும் அரசு ஊடகங்களும் மிரட்டுவதாக பரவலாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்தப் புகார்களை பேரவையின் தலைவர் நவி பிள்ளை எப்படிப் பார்க்கிறார் என்று ஐ நா மனித உரிமைகள் பேரவையின் செயலாளர் நாயகம் நவி பிள்ளை அவர்களின் பேச்சாளர் ரூபர்ட் கோல் வில் அவர்களிடம் பிபிசியின் சார்பில் கேட்கப்பட்டபோது, "இது போன்ற ஒன்றை நாங்கள், ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலின் சமீபத்திய வரலாற்றில் கண்டதேயில்லை. இந்த அளவுக்கு அச்சுறுத்தல்கள்…. அரசாங்க பிரதிநிதிக்குழுவின் அளவு உட்பட, அதில் 71 பேர் இருந்தார்கள். இதை விட மிகவும் சங்கடமான விஷயம், இலங்கைக்குள்ளேயே நடத்தப்பட்டுவரும் ஒரு அவதூறு பிரச்சாரம்தான். பத்திரிகைகள், இணைய தளங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகள் வரை பட்டியலிடலாம். சில தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சிகளின் வாசகத் தொகுப்பை நான் படித்துப் பார்த்தேன். அவைகள் உண்மையில் அதிர்ச்சி தருவதாகவே இருக்கின்றன" என்றார் அவர்.

அருவருக்கத்தக்க கட்டுரைகள்

இலங்கை அமைச்சர் மெர்வின் சில்வா, மனித உரிமை ஆர்வலர்கள் பாக்கியசோதி சரவணமுத்து, நிமல்கா பெர்னாண்டோ போன்றோரைப் பற்றி குறிப்பிட்ட கருத்துக்களை நீங்கள் கேட்டீர்களா அது குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்டபோது, "சில நிமிடங்களுக்கு முன்னர்தான் அதைப் பார்த்தேன். ஆனால் இந்த குறிப்பிட்ட சம்பவம், இலங்கையில் நீண்ட காலமாக தொடர்ந்து அரச அதிகாரிகளாலும், செய்தியாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களாலும், எழுதப்பட்டு வரும், மிக மோசமான அருவருக்கத்தக்க கட்டுரைகளின் தொடர்ச்சியாகவே தெரிகிறது என்றார்.

"செய்தியாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் என்று வேண்டுமென்றேதான் சொல்கிறேன் ஏனென்றால் இங்கே ஐ.நா மன்ற மனித உரிமை அமைப்புகளில் இருக்கும் நாம், பத்திரிகை சுதந்திரத்தை மிகவும் பலமாக ஆதரிப்பவர்கள், அது வேண்டும் என்று நம்புபவர்கள் . ஆனால் இலங்கையில் எழுதப்பட்டு வரும் இது போன்ற கட்டுரைகளில் பெரும்பாலானவை, வன்முறையைத் தூண்டும் வகையிலானவை. இதன் விளைவுகளை நீங்கள் அதன் வாசகர்கள் எழுதியிருக்கும் பின்னோட்டத்திலேயே பார்க்கலாம். சிலர், இந்த மனித உரிமை ஆர்வலர்களின் வீடுகளைக் கொளுத்தவேண்டும் என்று எழுதியிருக்கிறார்கள். சிலர் அவர்கள் கொல்லப்படவேண்டுமென்று கூட நேரடியாகவே கூறுகிறார்கள்." என்றார் ஐ நா அதிகாரி.

இந்த புகார்களை ஐநா மனித உரிமைக் கவுன்சில் கண்காணிப்பதாகவும் அவர் கூறினார். தமது கவலைகள் குறித்து இலங்கை அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஐ நா அதிகாரி தெரிவித்தார்.