Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

பாசிச மஹிந்த அரசின் பொய்களும், புலிப்பினாமிகளின் ஏமாற்று வித்தைகளும்

கீழ்வரும் செய்திகள் இரண்டும் இலங்கை அரசின் ஊடகங்களிலும், பின் புலம்பெயர் அரச எடுபிடிகளின் இணையதளங்களிலும் வெளியாகி உள்ளன. இப்போ பினாமி புலி ஊடகங்களும், ஏதோ மாபெரும் ஈழப்போராட்டம் திரும்பவும் நடைபெறப்போவது போல இச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

"இலங்கைக்கு வந்ததாக சந்தேகிக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களையும் ஏனைய ஆயுதக்குழுக்களையும் சட்டவிரோத ஆயுதங்களையும் கண்டுபிடிக்கும் முகமாக கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருகோணமலை அன்புவழிபுரம், திருகோணமலை – அநுராதபுரம் சந்தி ஆகிய பகுதிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவரின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர் ஒருவர், இந்தியாவிலிருந்து தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இலங்கை வந்திருப்பதாக கூறியதைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவ்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன."


"தமிழ் நாட்டில் மூன்று இரகசிய இடங்களில் பயங்கரவாத முகாம்கள் இயங்குவதாக இலங்கைப் பத்திரிகையொன்றில் வெளியான செய்தியை, கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் முற்றிலும் தவறானது எனக்கூறி நிராகரித்துள்ளது. இலங்கையில் சீர்குலைவு நடவடிக்கைகளுளுக்காக இந்தியாவிலிருந்து புலிகள் திரும்பி வந்ததாக இலங்கைப் புலனாய்வுத்துறையை மேற்கோள் காட்டி வெளியான செய்தி தொடர்பாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் இன்று விடுத்த ஊடக அறிக்கையொன்றிலேயே மேற்படி மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் 3 இரகசிய இடங்களில் பயங்கரவாதிகள் பயிற்சி பெறுவதாக வெளியான செய்தி தவறானதும் அடிப்படையற்றதுமாகும். இரு நாடுகளினதும் சம்பந்தப்பட்ட முகவர் நிறுவனங்கள் தொடர்ந்து ஒத்துழைப்புகளை மேற்கொள்கின்றன. அத்தகைய தகவல் எதுவும் இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது."


இப்படியான செய்திகளை வெளியிடுவதன் மூலம் மஹிந்த பாசிச அரசு தன் இராணுவ கெடுபிடியை தமிழ் பிரதேசங்களில் நிலைத்து வைத்திருக்க முயல்கிறது. இப்படியான பொய் காரணங்களை கூறுவதன் மூலம் இறந்த  புலிக்கு உயிர் கொடுத்து, சர்வதேச அழுத்தங்களை குறைப்பதும், சிங்கள மக்களை புலிப்பூச்சாண்டி காட்டி தொடர்ந்தும்   தனது இனவாத அரசியலை நிலை நிறுத்துவதும் மஹிந்த பாசிச அரசின் திட்டமாகும். 

நாம் பல தடவைகள் கூறியது  போல பினாமிப்புலிகளுக்கும் இப்படியான செய்திகள் தேவைப்படுகின்றன. அதன் மூலம் தான்  "திரும்பவும் தலைவர் வாரார், பெரும்படையோட வாரார், இந்தமுறை அமெரிக்காவோட ஆசீர்வாதத்தோட, இந்தியாவட அனுசரணையோட வாரார் "  எனக்கூறி   புலம்பெயர் மக்களை ஏமாற்றி     தொடர்ந்தும் பணம் பறிக்க முடியும்.              

--கார்த்திகேசு கலியுகவரதன்  02/04/2012